காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு (பாடல்கள்). 1/2
மலேசியாவில் தமிழர் பண்பாடு பல காலமாக
வளர்ந்து வேரூன்றியது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்பண்பாடுகளில்
பல காலத்தால் அழிந்துவிட்டன. விடுதலைக்குப் பின்பு பல பண்பாடுகள் கால
ஓட்டத்தால் இருந்த சுவடு தெரியாமல் போய்விட்டன, இவற்றுள் குறிப்பிடத்தக்கது
தமிழ்ப்பள்ளிகளில் வழக்கத்திலிருந்த பல பண்பாட்டு நடவடிக்கைகளாகும்.
அவற்றுள் பாடல்கள், விளையாட்டுகள், பள்ளியின் அமைப்பு, பெற்றோர் ஆசிரியர்
ஈடுபாடு ஆகியன குறிப்பிடத்தக்கன.
இக்கருத்தாய்வில் அந்தக் காலத்தில்
பள்ளியில் பாடப்பெற்ற சில பாடல்களையும் பள்ளிகளில் மேற்கொண்ட சில
நடவடிக்கைகளையும் காண்போம். இந்த ஆய்வு குவந்தான் சாபோர்வெலி என்ற தோட்டத்தில் 1956 முதல் 1964 ம் ஆண்டு வரை தலைமையாசிரியராகப் பொறுப்பு வகித்த திரு பார்த்திபன் கேசவன் என்பவரிடமிருந்து பெறப்பட்டுத் தொகுக்கப்பட்டது.
தமிழ்ப்பள்ளிகளில் பாடல்கள் பாடப்படும்
நிலை இன்னும் வழக்கத்தில் இருந்தாலும், அந்தக் காலம் போல்
நடவடிக்கைகளுக்கேற்றவாறு அமைவதில்லை. இன்றைய காலத்தில் தமிழில் ஒன்று
அல்லது இரண்டு பாடல்களையே பெரும்பாலான பள்ளிகளில் பாட, வாய்ப்புகள்
ஏற்படுகின்றன. இந்தக் கூற்றை அலசி ஆராயவே மேற்குறிப்பிட்டப் பள்ளியின்
பாடல்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றன.
மொத்தம் நான்கு பாடல்கள் மாணவர்களால் இப்பள்ளியில் பாடப்பட்டுள்ளன.
இந்தப் பாடல்களின் வரிகளும் பாடப்பட்ட இடங்களும் பின்வருமாறு;
பாடல் 1 : நோக்கம்
பள்ளீயில் அவை கூடலின் போதும் கொடியேற்றும் போதும் பாடப்பட்டப் பாடல்
மலேசிய நாடும் தீந்தமிழ்மொழியும்
பாரினில் நிரந்தரம் வாழ்க
தீமைகள் நீங்க நன்மைகள் ஓங்க
தினம் பல புதுமைகள் எழுக – மலேசிய
தேசமெல்லாம் புகழ் பேசிடும் வண்ணம்
தினம் பல தியாகிகள் எழுக
திசைதோறும் நம்புகழ் சூழ்க
தீந்தமிழ் மொழியிது வாழ்க – மலேசிய
மலேசிய நாடும் தீந்தமிழ்மொழியும்
பாரினில் நிரந்தரம் வாழ்க
தேசமெல்லாம் புகழ் பேசிய வண்ணம்
தினம் பல தியாகிகள் எழுக – மலேசிய
தீமைகள் நீங்க நன்மைகள் ஓங்க
தினம் பல புதுமைகள் எழுக
திசைதோறும் நம்புகழ் சூழ்க
தீந்தமிழ் மொழியிது வாழ்க – மலேசிய
இந்தப்பாடலில் தமிழ்ப்பள்ளிகள்
வீற்றிருக்கும் மலேசியத் திருநாட்டை விவரிக்கின்றனர். இனிய தமிழ்மொழியைக்
காக்க வேண்டும் எனவும் வேண்டுகின்றார் பாடலாசிரியர், தமிழர்களின் புகழ்
உலகமெங்கும் பரவ வகை செய்தல் வேண்டுமெனவும் பாடல் வரிகள் பறை சாற்றுகின்றன.
இக்காலத்தில் இப்பாடல் பள்ளிகளில்
பாடப்படுகின்றதா என்பது கேள்விக்குறியே! அப்படியே பாடப்பட்டாலும் பாடல்
வரிகள் ஒரே மாதிரியாக அமைவது அரிது. இப்பாடல் சுயமாக வரிகள் எழுதப்பட்டு,
பாடப்பட்டதே இந்தப் பாடலின் சிறப்பு அம்சமாகும்.
பாடல் 2 : நோக்கம்
ஓய்வு நேரத்தின் போது (உணவு வேளையில்) பாடப்பட்டப் பாடல்
பாலும் தேனும் பாகும் பருப்பும்
நாளும் கலந்து நான் தருவேன் – உன்
கோவில் வருவேன் பாடல் புனைவேன்
குறைகளைத் தீர்ப்பாய் கணபதியே – என்
குறைகளைத் தீர்ப்பாய் கணபதியே – பாலும்
அப்பம் முப்பழம் அவலோடு பொரியும்
முதல்வா உனக்கு நான் தருவேன்
அற்புதக்கனியே கற்பகக் கனியே – கல்வியை
அருள்வாய் கயமுகனே எனக்கு கல்வியை
அருள்வாய் கயமுகனே – பாலும்
அன்னை பிதா முன்னறி தெய்வம்
அறிந்திடச்செய்தாய் அரும் பொருளே – உன்
ஞானப் பழத்தை நாங்கள் புசிக்க
தானம் தருவாய் ஐங்கரனே
தானம் தருவாய் ஐங்கரனே – பாலும்
பேழை வயிறும் பிறை போல் கோடும்
பானை வயிறும் உடையவனே – உன்
பாதச் சிலம்பின் நாதம் கொண்டு
வேதம் பயில்வோம் வித்தகனே
வேதம் பயில்வோம் வித்தகனே – பாலும்
இந்தப்பாடல் மாணவர்கள்
சிற்றுண்டிச்சாலையில் உணவு உண்ணும் வேளையில் பாடப்பட்டதாகும். கடவுளை
வேண்டி அவரின் அருளைப் பெறும் முயற்சியாக இப்பாடல் பாடப்படுகிறது. இன்றைய
நிலையில் பள்ளியில் உணவு வேளையில் பாடல்கள் பாடப்பட்டாலும் ஒரே மாதிரியான
பாடல்களாக இருப்பதில்லை.
(தொடரும்)
முத்துக்குமார் பழனிசாமி
காயத்திரி மனோகரன்
தமிழரசி இளங்கோவன்
தெங்கு அம்புவான் அப்சான் ஆசிரியர் கல்விக் கழகம், கோலாலிப்பிசு,
பகாங்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக