தலை்பபு-தன்னாட்சி காலத்தின் கட்டாயம், விக்கினேசுவரன் ; thalaippu_thannaatchi_kaalalthinkattaayam_1-3

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3

ஆசானே தெய்வம்!
எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே!
எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை மக்களே!
இந்தப் பேரணி வரலாறு காணாத பேரணி!
 ஆட்சியில் அல்லது செல்வாக்கில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி இல்லை  இது. நாம் எமது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை! சிங்கள உடன்பிறப்புக்களை எதிர்த்து நடாத்தவில்லை! பௌத்த சங்கத்தினரை எதிர்த்து நடாத்தவில்லை! ஏன், இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக் கூட நடாத்தவில்லை. கொள்கையளவில் அவர்கள் எம்மை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். பலர் எம்முடன் இங்கு வந்தும் இருக்கின்றார்கள். அவர்கள் (இப்படியொரு பேரணியை நடத்த) இந்தச் சூழல் சரியானதா என்றுதான் கேட்கின்றார்கள். அதில் எமக்குள் கருத்து வேறுபாடு, அவ்வளவுதான். இதுபற்றி நான் பின்னர்க் குறிப்பிடுவேன். ஆனால், ஒன்றை மட்டும் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.
  அதாவது, இன்றைய காலக்கட்டத்தில், நாடாளுமன்றத்திற்குத் தெரியப் படுவதாலோ மாகாண அவைகளுக்குத் தெரியப்படுவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் ஆற்றல் எமது அரசியல் பயணத்திற்கு இன்றியமையாதது. அதனால்தான் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை நான் ஏற்றேன். 2009ஆம் ஆண்டு மே மாதக் காலத்தின் அழிவுகளின் பின்னரான தமிழ் மக்களின் விடிவுக்கான தீர்வு தொடர்பாக ஏற்கெனவே எமது தேர்தல் அறிக்கைகள் பல கூறியுள்ளன. அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் பெரிய முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
  ஆகவே, சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிகளும் மக்கள் குமுகமும்(சமூகமும்) ஏற்றுக் கொண்டால் எல்லாரும் சேர்ந்து வேலை செய்வது கடினமாக இருக்காது. 2001ஆம் ஆண்டில் பல கட்சிகளை ஒன்றுபடுத்தும் ஆறு பேர் கொண்ட குழுவைக் கொழும்பில் அமைத்தபொழுது குடிமைக் குமுகம்(சிவில் சமூகம்) பெரும் பங்காற்றியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
 நான் அரசியலில் அப்பொழுது இல்லாதிருந்தும் அவ்வாறான ஒருங்கிணைதலை அப்பொழுதே வரவேற்றேன். மக்களும் மக்கள் சார்பாளர்களும்(பிரதிநிதிகளும்) சேர்ந்தால்தான் எங்களுக்கு மதிப்பு. ஆகவே, உங்கள் ஊக்கமும் ஆற்றலும் உறுதுணையும் மக்கள் சார்பாளர்களுக்கு ஊட்டத்தை (சத்து) வழங்குவன என்று நான் எதிர்பார்க்கின்றேன்.
  நாம் எமது தமிழ் பேசும் மக்களின் அக்கறைகளை, கவலைகளை ஆகக்கூடிய எமது கண்டனங்களை வெளிப்படுத்தி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே இந்தப் பேரணியை நடாத்தியுள்ளோம்.
  எம் வடக்கு – கிழக்கு மாகாணத் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் பெருத்த ஐயப்பாடுகளிலும்(சந்தேகங்களிலும்) மனக் குழப்பத்திலும் இருக்கின்றார்கள். அவர்களின் அந்த மனநிலையை, மனக்கசப்பை, ஊரறிய, நாடறிய, உலகறிய உரத்துக் கூறவே இங்கு கூடியுள்ளோம்.
எமது அக்கறைகள் என்ன?
  பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்தக் கோயில்களும் புத்தச் சிலைகளும் ஏன்? எம்மைச் சமயத்தின் ஊடாக வல்லாளுகை(ஆக்கிரமிப்பு) செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? எமது பகுதிகளின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா? இஃது எமது முதலாவது கவலை.
  சிறையில் உண்ணாநோன்பு இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்கும் கேட்காதது ஏன்? அவர்கள் இறந்தாலும் இறக்கட்டும் என்கிற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஆட்சிப் பீடத்தின் அடி மனத்தில் ஆழப் பதிந்துள்ளதா? போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னர்க்கூடக் கொடுமையான வன்கொடுமைத்(பயங்கரவாதத்) தடைச்சட்டத்தின் கீழ்த் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுவது எம்மால் தாள முடியாததொன்றாக இருக்கின்றது.
  புதிய நல்லாட்சி அரசின் கீழும் 17க்கு மேலான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால் எமது கூட்டான மனநிலைகளில் மாற்றம் ஏற்படவில்லையா என்று கேட்கத்தான் தோன்றுகின்றது.
  காணாமல் போனோர் பற்றி இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? காணாமல் போனவர் அலுவலகம் என்பது காலத்தைக் கடத்தும் கரவுத்(மறைமுகத்)திட்டமா? போர் முடிந்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னரே இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதுவும் பன்னாட்டு நெருக்குதல்களின் காரணமாக! இன்னும் எவ்வளவு காலம் சென்றால் படையினரிடம் கையளிக்கப்பட்ட, அடைக்கலம் அடைந்த அல்லது தஞ்சமடைந்த எம் மக்கள் பற்றித் தரவுகள் கிடைக்கப் பெறலாம்?
  போர்க்குற்ற உசாவல் (விசாரணை) தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட திடமான நடவடிக்கைகள் என்ன? எம் மக்கள் குழம்பிப் போயுள்ளார்கள். இதற்கான விளக்கங்களை யார் தருவார்கள்? அவற்றைக் கோரியே இந்தப் பேரணி.
  நாவற்குழியில், முருங்கனில், வவுனியாவில், முல்லைத்தீவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. இஃது எதற்காக? எமது தனித்தன்மை பேணப்படும், எமது உரிமைகள் வழங்கப்படும் என அரசு கூறி வரும் இவ்வேளையில் இவ்வாறான குடியேற்றங்கள் எமது மக்களுக்குக் குழப்பத்தை விளைவிக்கின்றன.
   இலங்கை விடுதலை அடைந்த பின்னர்ப் படிப்படியாக இலங்கை முழுவதும் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் – அடித்துத் துரத்தப்பட்டு வெளிநாடுகள் சென்றவர்கள் போகப் – பெரும்பாலானவர்கள் வடக்கு கிழக்கில் தங்கள் தாயகப் பகுதிகளில் தஞ்சம் புக, இங்கும் வந்து எமது இன அடையாளங்களை அழிக்கவும் குடிப் பரம்பலை மாற்றவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றால் இக்குழப்பத்தை யாராவது தீர்த்து வைப்பார்களா எனக் கேட்டு வைக்கவே இந்தப் பேரணி! இது யாருக்கும் எதிரானது இல்லை! ஆனால், எமது வட மாகாணத்தில் நடைபெறும் பல நடவடிக்கைகள்பற்றி நாம் அறிய விரும்புகின்றோம். அவற்றிற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள விரும்புகின்றோம். எடுத்துக்காட்டாக, ஏன் சிங்கள இசுலாமிய மக்களின் மீள் குடியேற்றத்திற்கு மத்திய அமைச்சர்களுடனான ஒரு செயலணி வேண்டியிருக்கின்றது? மற்றைய மக்களின் மீள் குடியேற்றத்திற்குச் செயலணி வேண்டாவா? இந்தியாவில் இருந்து வரும் எமது இடம் பெயர்ந்தோர் தொடர்பாகப் போதிய கவனம் செலுத்தியுள்ளோமா?
  • நீதியரசர் க.வி.விக்கினேசுவரன்,
    முதலமைச்சர்,
    வட மாகாணம்.
  • ‘எழுக தமிழ்’ நிகழ்வில் ஆற்றிய உரை
  • தரவு : இ.பு.ஞானப்பிரகாசன்