அகரமுதல 137, வைகாசி 23, 2047 /சூன் 05,2016
மன அமைதிக்கு மருந்து : நூல்களின் பங்கு 2/2
சிறந்த அரசியல் தலைவர்கள், அறிஞர்கள் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள்
- இரண்டாயிரம் ஆண்டுகட்குமுன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த மாமேதை சாக்ரடீசுக்கு மரணத் தண்டனை அறிவிக்கப்பட்டது. இளைஞர்களைச் சிந்திக்க வைத்த அந்த மேதை நஞ்சு அருந்தி இறக்க வேண்டும் என்பது தண்டனை. சாக்ரடீசு அதற்காகக் கவலைப்படவில்லை. தண்டனை நிறைவேற்றும் நாள் நெருங்கிவந்தது. சிறையில் இருந்த சாக்ரடீசு அந்நாட்டின் ஒரு கவிஞர் எழுதிய கவிதைகளைத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். அனைவரும் வியந்து அவரிடம் படிப்பதற்கான காரணத்தைக் கேட்டனர். அதற்குக் கவலைப்படாமல் சொன்னார் சாக்ரடீசு,. “எனக்குச் சாவு பயமில்லை. கிரேக்கத்தின் சிறந்த கவிதைகளைப் படிப்பதன் மூலம் இறப்பதற்கு முன் கூடுதலாக சிலவற்றைப் படித்திருக்கிறேன்‘ என்ற பெருமை கிடைக்கும்” என்று. சிறிது நேரத்தில் உலகை விட்டு போகிறோம். எதற்குப் படிப்பது என்று எண்ணாமல் படிப்பதால் கிடைக்கும் கூடுதல் அறிவுடன் சாகலாம் என்ற எண்ணமே அவரது மனத்தில் மேலோங்கியிருந்தது.
- சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து என்ற தலைப்புகளில் இராமாயணம் மகாபாரதம் ஆகிய தொன்மங்களைத் தமிழில் எழுதிய இராசாசி எனது மனம் சஞ்சலப்பட்டுள்ளது என்ன செய்யலாம்? என்று காஞ்சிப் பெரிய சங்கர(ஆச்சாரியா)ரைக் கேட்டார். அதற்கு அவர், “இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் படியுங்கள்” என்றார். “நானே தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளேனே? எதற்குப் படிக்க வேண்டும்?” என்று கேட்டார். இன்னமும் படிக்க வேண்டியன சிலவுள்ளன. அதைப்படித்தால் இந்த சஞ்சலம் இருக்காது என்றாராம்.
பட்டிமன்றம் – ஒரு பார்வை
புராணங்கள், தொன்மங்கள் தொடர்பான
பட்டிமன்றங்களைத் தமிழ் இலக்கியத் துறையிலோ, இறைநெறித் துறையிலோ தம்மை
முழுமையாக ஆட்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமே இன்புற்றுக் கேட்கலாம்.
இவற்றிற்கு மாற்றாக அன்றாடம் குமுகாயம் சந்தித்து வரும் முதன்மைச்
சிக்கல்கள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். விவாதங்கள் பட்டிமன்றத்தில்
ஈடுபட்டால் மன்பதையில் எழும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஒரு வழி
காணலாம். பல பட்டிமன்ற நிகழ்கள் அனைத்தும் பார்க்கும் போதும், கேட்கும்
போதும் இருக்கும் ஈர்ப்பு விரைவில் அகன்று விடுகின்றன. காற்றோடு
கலந்துவிடுகின்றன. சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக மக்களிடம்
சரியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக சிறந்த தலைப்புகளில் அரசியல்
கலப்பில்லாமல், அளவான நகைச்சுவையோடு மக்கள் தெளிவு பெறும் வண்ணம்
தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து விவாதத்தை முன் வைக்கும் பட்டிமன்றங்கள்தான்
தேவையாக உள்ளன.
அத்தகு பட்டிமன்றங்கட்குச் சென்று கேட்போர்க்கே அவ் விழிப்புணர்வு வரும்.
அறிவு வளர்ச்சிக்கு நூல்களின் பங்கு
ஏப்பிரல் 24ஆம் நாள் உலகப் புத்தக
நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் நூலகங்களை
உருவாக்கி, சிறியோர் முதல் பெரியோர் ஈறாக அனைவரும் படிப்பதற்கு ஏதுவான
நூல்கள் இடம் பெற்று, நூலகக் கண்காணிப்பாளர் உதவியுடன் இலவசமாகத் தந்தால்
அனைவரும் சென்று படிக்க இயலும். ஆனால் அறிவு வளர்ச்சிக்கும் எதிர்காலச்
சந்த்தியினரின் உயர்வுக்கும் வழிகாட்டும் நூலக அறைகளைப் பலர் வீடுகளில்
கட்டுவதில்லை. குமுகாய எழுச்சியை உருவாக்கும் நூல்களுக்குச் சிறிய
அளவிலாவது அறையை வீடுகளில் கட்டிப்பயன்பெற வேண்டும். பயனுள்ள நூல்களைச்
சேர்க்க வேண்டும். பெற்றோர்கள், வாரத்தில் 4, 5 நாட்கள் 30 மணித்துளிகளாவது
நூலக அறையில் சென்று போய்ப் படித்தல் என்பதை நெஞ்சில் நிறுத்தி, தாம் ஒரு
முன் மாதிரியாகத் திகழ்ந்து குழந்தைகட்கு வழிகாட்டலாம். நேரம் இருப்பின்
தாமே படித்து, குழந்தைகட்கு விளக்கலாம்.
பெற்றோர். ஆசிரியர்கள் பள்ளி மாணவ,
மாணவியர்கள் நூல்களால் அடையும் அறிவு வளர்ச்சிகட்குக் கருவிகளாய் இருந்து
செயற்பட வேண்டும். வகுப்பில் பாடம் கேட்பதால் மட்டுமே எந்த ஒரு மாணவனும்
முழுமையாக வெற்றியடைய முடியாது அல்லவா? படிக்காமல் கேட்டே திறமை
பெறுபவர்கள் நூறாயிரத்துள் ஒருவர் இருப்பர். கல்வி, கேள்வி இரண்டுமே
கண்கள்தான். கேட்டு அறிதல் கற்பதற்கு இணை என்பர். வள்ளுவரோ கற்றிலன்
ஆயினும் கேட்க, அஃதொருவர்க்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை என்பர். ஆயினும்
என்பதில் தொக்கி நின்ற உம் என்ற இடைச்சொல் கற்க இயலவில்லை என்றால் கேட்க
என்ற பொருளைத் தருவதை நோக்க வேண்டும்.
புத்தகத் திருவிழாக்கள்
எல்லா ஊர்களிலும் ஆண்டிற்கு 6 முறைகள்
நடக்க வேண்டும். படிக்கும் பழக்கம் வருவதற்கான நல்ல அடையாளம் நூலகங்களைப்
பயன்படுத்துவதே. எனவே, நூலகங்கட்கான பங்குத் தொகை அளிக்கப்படுதலை அரசு
மறந்துவிடக்கூடாது.
சங்கக் காலத் தமிழ் நூல்களில் இன்றைய
காலத்திற்கு வேண்டுவன இல்லை என்பார், நூல்களைச் சரியாகப் படித்து
உணராதார். புதிய அறிவியல் நுட்பங்கள் எவ்வளவோ இடம் பெற்றுள்ளன என்கிறார்
இசுரோ அறிவியலர் வளர்மதி. அவர்கள் காலமறிந்து சொல்லிய அறிவுரைகள்
புத்தகங்களில் .இடம் பெறுகின்றன. உழைப்புக்கு முதன்மை தந்த முன்னாள்
குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர் மறைவுக்குப் பிறகு அவர் அறையில்
விட்டுச் சென்றவை பெரும்பாலும் பல துறை நூல்கள்தான் என்பதை உணர்ந்தால்
நெஞ்சம் பெருமிதம் அடைகிறது. இத்துணை அறிவார்ந்த எளிய மனிதர் நாம் வாழும்
காலத்தில் இருந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பெருமை கொள்ளலாம்.
ஒரு மனிதன் ஆண்டிற்கு இரண்டாயிரம்
பக்கங்கள் படிக்க வேண்டும் என ஆய்வுகள் கூறுகின்றன. நூலகம் என்பது பெற்ற
அன்னைக்கு ஈடாகும். ஒருவர் நண்பர்கள்கூட இல்லாமல் இருந்துவிடலாம். அவன்
மேசைமேல், அவன் கையில் ஒரு புத்தகம்கூட இல்லையெனில் அவன் அரைமனிதன் ஆவான்.
நூலக வாசகர் வட்டம் ஒவ்வோர் ஊரிலும்,. சில பகுதிகளில் மட்டுமே
செயல்படுகின்றன. நூலகத்திற்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கை உயர்ந்த சில
பரிசுப்பொருள்கள், ஆழ்ந்த அறிவுடைய நூலகங்கள் (நூல்கள் படித்து அவற்றின்
பெருமையை உணர்ந்தவர்கள்) இருந்து அவற்றை தெளிவாகச் சொல்ல வேண்டும். வளரும்
சமுதாயமான மாணவர்களுக்கு நூலகத்தின் பயன்களை எடுத்துச் சொல்லவேண்டும்.
காலவரையறை
காலத்தை அறிந்து செயல்படுத்தத்
தெரிந்தவர்களுக்கு ஞாலம் கைகூடும் என்கிறது தமிழ்வேதம். கொடுத்த பொருள்
திரும்ப வரலாம். காலத்தை மீட்க முடியாது. காலத்தின் அருமை அறிந்தவர்கள்
அதிகம் பேசமாட்டார்கள்.பேச்சு, நேரத்தை வீணாக்காமல் தெரிந்த பேச்சாக,
பயனுள்ளதாக அமையுமானால் வரவேற்கலாம். பேச்சைக் குறைத்தால் சிந்தனையை
உருவாக்கலாம். அதனை நூல்கள் படிக்கும் செயலுக்கு உரியதாக்கலாம்.
அப்போதுதான் விடியலுக்கான வெளிச்சமும் கிடைக்கும்.
. தி.வே.விசயலட்சுமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக