மன அமைதிக்கு மருந்து –
நூல்களின் பங்கு 1/ 2
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு” (குறள் 783)
நூல்களைப் படிப்பவர்களுக்கு, அதிலுள்ள
நற்பொருள்கள் சிறுகச் சிறுக விளங்குவதுபோலப், பண்புள்ளவர்களுடன்
செய்துகொள்ளும் நட்பு, அவருடன் பழகப்பழக இன்பம் அளிக்கும்.
நூல் ஒரு சிறந்த நண்பன், சிறந்த
ஆசிரியர், சிறந்த அமைச்சரைப்போல் அறிவுரை கூறி வழிகாட்டும். நூல் என்பது
சிறந்த இலக்கிய நூல்களை மட்டும் சுட்டவில்லை. இறைநெறி நூல்கள், வரலாற்று
நூல்கள், உளவியல், தத்துவம், புதின நூல்கள், சிறந்த சிறுகதைத் தொகுப்புகள்,
சமய நூல்கள், சாதி மதங்களைக் கடந்த நூல்கள் எனப்பலவும் அடங்கும். நூல்கள்
புத்தகங்கள் எனச் சொல்லப்படுகின்றன.
மன அமைதிக்கு மருந்து
முதலில் புத்தகத்தைக் கையில்
எடுத்து ஓரிடத்தில் அமர்ந்தால் ஓக இருக்கை(யோகாசனம்) போன்ற நிலையில் உடல்
தானாகவே இருக்கும். அடுத்துப் பொறுமையாகப் படிக்கும்போது மூச்சு சீராகச்
செல்லும்; வேறு சிந்தனைகள் எழா; மனச்சோர்வு, கவலைக்கு இடமே இல்லை.
கவலைப்படும் எந்த மனத்தையும் அமைதிப்படுத்தும் வல்லமை புத்தகத்திற்கு
உண்டு.
ஒருமுறை மாக்கவி பாரதி காசியில் இருந்தார். அவரது மனைவி செல்லம்மா
எட்டயபுரத்தில் வசித்து வந்தார். விடுதலை வேட்கையை மக்களிடம்
தூண்டிவிடுவதால் பாரதியின் நடவடிக்கைகளை பிரித்தானியக் காவல் அதிகாரிகள்
கண்காணித்து வந்தனர். இதை அறிந்த பாரதியின் மனைவி செல்லம்மாபாரதி
கவலையுடன் மாக்கவிக்குக் கடிதம் எழுதினார். பாரதியிடமிருந்து மறுமொழி
வந்தது. “அன்புள்ள செல்லம்மாவுக்கு, என்று தொடங்கும் அம்மடலில்,
“என்னைப்பற்றிய கவலையும், அச்சமும் ஏற்பட்டால் நம் வீட்டில் உள்ள இலக்கிய
நூல்களைப்படி- கவலை மறையும்“ என்று கூறி துணிவு ஊட்டுகிறார். தன்னம்பிக்கை,
துணிவிற்குப் புத்தகம்தான் சரியான துணை என்பது பாரதியின் திடமான
நம்பிக்கை.
இயல்பான நிலையில் புத்தகத்தைப் படிக்கும்போது இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன.
புத்தக விற்பனைத் தொழில்
எழுதுதல், வெளியிடுதல், விற்பனை
செய்தல் மிகப்பெரிய தொழிலாக, வணிகமாக ஆகிவிட்டது. ஆரூடம்(சோதிடம்),
அறிவியல், இலக்கியம் என்று ஏராளமான தலைப்புகளில் நாள்தோறும் அச்சிடப்பட்டு
நூல்கள் மலைபோல் குவிகின்றன. அவற்றில் இப்போதெல்லாம் சமையல் கலை, பொருளாதார
மேம்பாடு, தன் முன்னேற்றம், மனையிடவியல் ஆகிய தலைப்புகளில் அதிக நூல்கள்
விற்பனையாகின்றன.
மனையிடவியலில்(வாஃச்து சாத்திரத்தில்)
வாசல் படுக்கைஅறை, சமையல் அறை, பூசையறை எப்படி அமைய வேண்டும், எப்படி
பார்க்க வேண்டும், எங்கே இருக்க வேண்டும் என்றெல்லாம்
குறிப்பிடப்படுகின்றன. ஆனால் எந்த மனையிட நூலும் வீட்டில் நூல்களை எங்கே வைத்திருக்க வேண்டும், நூலகம் எங்கே அமைக்க வேண்டும் என்று சொல்வதில்லை. இது நாம் செய்த தவக்குறைவே. நூல்களின் இன்றியமையாமையைக் குறித்து அரசு சில செயற்பாடுகளை மேறகொள்ளலாம்.
அவையாவன:
- புத்தகம் படிப்பது குறித்து மக்களிடம் தீவிரமாகப் பரப்புரை செய்ய வேண்டும்.
- தொலைக்காட்சி நாடகத் தொடர்கள், வாழ்க்கைக்கு வேண்டாத செய்திகள் காட்டுதலைக் குறைத்தல் வேண்டும். இன்று புத்தகம் படிக்கும் ஆர்வத்தைக் குறையச் செய்ததில் தொலைக்காட்சி பெரும்பங்கு வகிக்கிறது என்பது மிகையில்லை. விழாக்கள் நடைபெறுகின்றன என்றால் அவற்றின் பயன்பாட்டு ஈர்ப்புச் சக்தி தெற்றென விளங்கும். புத்தகம் படிப்பதன் இன்றியமையாமையை விளக்கும் தொடர்கள், விளம்பரங்கள் தொலைக்காட்சியில் காட்டுதலுக்கு அரசு வழி வகுக்க வேண்டும்; ஆணையிடவும் வேண்டும்.
- மக்கள் பயணம் செய்யும் தொடர் வண்டியில் பசியைத் தீர்க்க உணவகம், நிம்மதியாக உறங்க இடம் உண்டு. மருத்துவ வசதிக்குக் கூட ஓரளவு வழி கிடைக்கிறது. ஆனால் பயணிகள் படிப்பதைத் தூண்டும் வகையில் படிப்பகம் தொலைவிட வண்டிகளில் முன்பு இருந்தன. இப்பொழுது இல்லை. எல்லாத் தொடர் வண்டிகளிலும் படிப்பகம் இருக்க அரசு வழி செய்ய வேண்டும்.
- பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் அல்லாத ஏனைய பொது அறிவை வளர்க்கும் நூல்கள், அறிவுக் கதை நூல்கள் படிப்பதற்குத் தனி வகுப்புகள் ஒதுக்க வேண்டும். ஒரு மாணவன் எத்தனை புத்தகம் ஒரு திங்களில் படித்தான் என்பதற்குத் தனித்தேர்வு நடத்தி அதற்குச் சிறப்பு மதிப்பெண்கள் கொடுக்கும் நிலை ஏற்பட வேண்டும்.
- புத்தகங்கள் வாங்குவதைத் திங்கள் தோறும் வரவுக் கணக்கில் எழுதுமாறு செய்தல் வேண்டும்.
ஏனெனில் புத்தகங்கள் நிரம்ப்பப் படிப்போரின் மனநிலை சீராவதால், பல சிக்கல்கட்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
தி.வே.விசயலட்சுமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக