காவல்துறையில் முதல் திருநங்கை சார் ஆய்வாளர்
இந்தியக் காவல்துறையின் முதல் திருநங்கை பிரித்திகா யாசினி!
இந்திய வரலாற்றில் முதல் முறையாக
காவல்துறையில் சார்ஆய்வாளராகத் திருநங்கை ஒருவர் சேர்ந்துள்ளார். சேலம்
மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி என்பவரே அவர். ஆனால்,
எளிதில் இந்தப் பதவி இவருக்குக் கிடைக்கவில்லை. ஆதலின் காவல்துறையையோ
அரசையோ பாராட்ட ஒன்றுமில்லை. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்தாம் பாராட்டிற்குரியவர்கள்.
திருநங்கை பிரித்திகா யாசினி சேலம்
மாவட்டம் கந்தம்பட்டியைச் சேர்ந்தவர். இவர் முதலில் காவல் சார் ஆய்வாளர்
பணிக்கு விண்ணப்பித்தபொழுது மூன்றாம் பால் என மறுக்கப்பட்டார்.
விண்ணப்பத்தை ஏற்பது முதற்கொண்டு பல்வேறு நிலைகளில் பல் வேறு தடைகள் வந்த
பொழுதும் மனம் தளராமல் விடாமுயற்சியுடன் எதிர்கொண்டார். சென்னை
உயர்நீதிமன்றத்தை நாடி நீதித்தேவைதையின் துணையைப் பெற்றார்.
திருநங்கை பிரித்திகா யாசினி,
காவல்துறையில் பணியாற்ற முழுத் தகுதி உடையவர் என்றும், அவருக்குக்
காவல்துறையில் சார் ஆய்வாளர் பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை
உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரே இவருக்குப் பணி ஆணை
வழங்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதுபோல்,
இவர் மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் செயல்படுவார் என
நாமும் எதிர்பார்க்கலாம்.
இத்தீர்ப்பும் இத்தீர்ப்பின்
அடிப்படையில் இவர், காவல் சார் ஆய்வாளர் பணியில் சேர்ந்துள்ளதும்
திருநங்கைகளுக்குப் புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்துள்ளன.
இவர் சட்டத்தின் துணையுடன் போராடிய
காலக் கட்டங்களில் எதிர்நோக்கிய சிக்கல்களையும் மன அழுத்தங்களையும்
குறித்துக் குறிப்பிட்டுள்ள, அவரின் வழக்கறிஞர் பவானி சுப்பராயன் யாசினியின் தன்னம்பிக்கையைப் பாராட்டினார்.
தான் காவல் சார்ஆய்வாளர் பணிக்குச்
சேர்ந்த பின், தனது பணியில் மிகச்சிறப்பான பங்களிப்பை அளிக்க, எத்தகைய
தடைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் உறுதிபட தெரிவித்தார்
பிரித்திகா யாசினி. உயர்நீதிமன்றம் வரை சென்று தனக்கான உரிமையை நிலைநாட்டிய
பிரித்திகா யாசினிக்குப் பல்வேறு தளங்களிலிருந்தும் பாராட்டுக்கள்
குவிகின்றன.
சேலம் மாவட்டத்தில் காவல்சார்
ஆய்வாளராகத் தேர்ச்சி பெற்ற 21 பேருக்குப் பணியமர்த்தல் ஆணை மாசி 03, 2047 /
15.02.2016 அன்று வழங்கப்பட்டது. மாநகரக் காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சியில், ஆணையர் சுமித்து சரண் இதனை வழங்கினார். அப்பொழுது
இவருக்கும் பணி யாணை வழங்கப்பெற்றது.
தற்பொழுது பணி ஆணை பெற்ற காவல் சார்
ஆய்வாளர்கள் சென்னையில் உள்ள காவல்துறைப் பயிற்சிக் கழகத்தில் ஓராண்டு
பயிற்சி பெறுவார்கள். அதன் பின்னரே காவல் நிலையங்களில்
பணிமயர்த்தப்படுவார்கள்.
பணி ஆணை பெற்ற திருநங்கை பிரித்திகா
யாசினி, “நாட்டிலேயே முதல் திருநங்கையாகத் துணைக் காவல் ஆய்வாளர் பணிக்குத்
தேர்வாகி உள்ளேன். பொதுமக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றுவேன்.
முன்மாதிரிக் காவல்துறை அலுவலராகப் பணியாற்றுவேன்.
திருநங்கைகளுக்குக் கல்வி,
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதற்காகச் சட்டப்படியான
நடவடிக்கைகளை எடுப்பேன். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, பெண் குழந்தைக்
கொலை ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து, இது போன்ற கொடுமைகளைத் தடுக்க
நடவடிக்கை எடுப்பேன். பதவி உயர்வு மூலம் இ.கா.ப. அலுவலர் (ஐ.பி.எசு.) ஆக
வேண்டும் என்பது எனது இலக்காகும்” என்று தெரிவித்துள்ளார்.
விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும்
இழக்காமல், மக்கள்நலனில் கருத்து செலுத்திப் பணியில் சிறந்து உயர்நிலை
எய்திட நாமும் காவல்சார் ஆய்வாளர் திருநங்கை பிரித்திகா யாசினியை
வாழ்த்துவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக