senthamizhchelvi
  திரவிடம் என்று வடமொழியாளர்கள் நம் செந்தமிழ் மொழிக்கு இட்ட பேரே நாளடைவில் ‘தமிழ்’ என உருத்திரிந்ததெனக் கூறி மகிழ்வர் ஒரு சிலர்.
  அஃது உண்மையற்ற வெற்றுரையென எவரும் எளிதில் அறிவர். செம்மொழியாம் ஒரு மொழி பேசும் நன்மக்கள் தங்கள் மொழிக்குத் தாம் வேறுபேரும் இடாது தங்கள் நாட்டிற் பின்வந்து குடியேறிக் கலந்தவரும், கலந்த அக்காலத்தும் தங்களால் நன்கு மதிக்கப்படாது அயலாராகக் கருதப்பட்ட வரும் ஆகிய வடமொழியாளர்கள் தம் மொழிக்கு இட்ட பேர் கொண்டே தம்மொழியைச் சுட்டினார்கள் எனின் அஃது எங்ஙனம் பொருந்தும்?
  அன்றியும் அது பொருளாயின் தமிழ் நன்மக்கள் தம்மொழி சுட்டும் குறியீடு ஒன்றும் பண்டைக்காலத்துப் பெற்றிலர் என்றேனும் அல்லது குறியீடு ஒன்று பெற்றிருந்தும் வடமொழியாளர் இட்டபேரே சாலும் எனக் கருதித் தம் குறியீட்டைக் கைவிட்டதனால் அது வழக்கு வீழ்ந்தது என்றேனும் கொள்ளல்வேண்டும்.
  அங்ஙனம் கொள்ளல் சாலுமா? தமிழ் நன்மக்கள் தம் மொழிக்குத் தாமே பேரிட்டு வழங்கினர் என்றும் அப்பேரே இன்றும் வழக்கில் உள்ளதெனக் கோடலே சாலும். மேலும், அக்கோளர் தம்மை ‘திராவிடம்’ தமிழ் என மாறியது யாங்ஙனம் என வினவுவார்க்கு, அவர் கூறும் விடை அவர்க்கே இனிமை பயக்குமல்லால் வேறெவர்க்கு உண்மையின் நழுவி வீழ்ந்ததாகக் காணப்படும்.
 தமிழ் என்பது இனிமை என்னும் பொருட்டு என்றும் இனிமை உடையதாந் தன்மைபற்றித் தமிழ் எனத் தம்மொழிக்குப் பெயரிட்டனர் தமிழர் என்றும் கூறுவர். தம் மொழியாந் தமிழ்மொழியின் இனிமை கண்டு உவந்து இனிமைக்கே தமிழ் எனப் பெயரிட்டனர் எனவே சாலப் பொருத்தமுடைத்து.
- செந்தமிழ்ச் செல்வி: சிலம்பு: 3-9