இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே
அதாவது ஆரியர் இந்திய நாட்டுள் நுழைவதற்கு முன்னமே தமிழர் தம் முன்னோர்
நாகரிகத்திற் சிறந்தராய் இருந்து நாகரிகம் இல்லா ஆரியர்க்கு நாகரிக
வாழ்க்கையினைக் கற்றுக் கொடுத்தாராதலால் அத்தகைய முன்னோரின் மரபில் வந்த
தமிழர்கள் தமது பழம்பெருமையை உணர்ந்து அதற்கேற்ப நடத்தல் வேண்டும்.
தமிழ் முன்னோர்கள் தமது தமிழ் மொழியைப்
பிறமொழிக் கலப்பின்றித் தூய்தாய் எல்லாவளனும் நிரம்ப வளர்த்து வழங்கி
வந்தவாறுபோல, இஞ்ஞான்றைத் தமிழருந் தமிழ்மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து
வருதல் வேண்டும். ஒவ்வொரு மக்கட்குழுவினருந் தமது மொழியைத் தம்முயினுருஞ்
சிறந்ததாக வைத்துப் பேணி வருகையில் இஞ்ஞான்றைத் தமிழர் மட்டும் தமிழ் மொழி
உணர்ச்சி சிறிதுமில்லாக் கயவர்களாய் இருக்கின்றனர். அவருள் அத்திபூத்தாற்
போல் தமிழ் கற்பார் சிலருந் தமது மொழிப் பெருமையை உணராமல், இறந்து போன
வடமொழிச் சொற்கள் சொற்டொடர்கள் கதைகளையும் நேற்று உண்டான நாகரிக மில்லா
மொழிகளின் சொற்கள், சொற்பொருட் வழக்குகளையும் ஒரு வரைதுறையின்றி யெடுத்துத்
தமிழிற் புகுத்தி அதனைப் பாழ்படுத்தி அவ்வாற்றால் தம்மை அப்பிற
மொழியாளர்களுக்கு அடிமைப் படுத்திக் கொள்ளுதலுடன் அவ்வடிமை வாழ்க்கையே
தமக்கொரு பெருமை வாழ்க்கையாகவும் பிழைபட நினைந்து இறுமாந்து ஒழுகுகின்றனர்.
தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுந் தறுகணன் போலத் தன்னை அறிவு பெற வளர்த்துப்
பெருமைப் படுத்திய தமிழைச் சீர்குலைக்கும் போலி தமிழ்ப் புலவரைப் பின்பற்றி
நடவாமல் தமிழை உள்ளன்புடன் ஓம்பித் தூத்தாய் வழங்கும் உண்மைத்
தமிழாசிரியர்களைப் பின்பற்றி நடத்தலில் தமிழ் நன்மாணவர் அனைவருங்
கருத்தாயிருத்தல் வேண்டும். தமிழர் அனைவரும் பண்டு போல் தமக்குந் தம்
இல்லங்களுக்குந் தம் ஊர்களுக்கும் பிறவற்றிற்குமெல்லாம்ந் தூய
தமிழ்ப்பெயர்களையே அமைத்தல் வேண்டுமன்றி வடமொழி முதலான வேற்று மொழிச்
சொற்களைப் பெயர்களாக அமைத்தல் கூடாது.
மேற்கூறிய சிறந்த அறங்களுந் பிறவுந்
திருக்கோயில்களின் வாயிலாக நம் தமிழ் மக்கள் நன்கு செய்து வந்திருக்கவும்,
அரசியல் மாற்றத்தாலுஞ் செவ்வனே மேற்பார்ப்பவர் இல்லா தொழிந்தமையாலும்
இவையெல்லாம் இன்னாளில் நடைபெறாதொழிந்துவிட்டன. தமிழ்மக்கட்கே உரிய…..
திருக் கோயில்களிலும் ஆரிய நடையைத் தழுவி பார்ப்பனர் புகுந்து மேற்காட்டி
அறங்கள் நடைபெறாமற் செய்து கோயிலின் வருவாய்ப் பொருளை எல்லாம் தமக்கே
உரிமையாக்கி வருகின்றார்கள். தமிழ் பொதுமக்கள் இனியும் உறங்கியிராமல் உடனே
விழித்தெழுந்து கோயில் வாயிலாக பழந்தமிழ் மக்கள் செய்து போந்த அறங்களை
மீண்டும் உயிர்ப்பித்து அவற்றை நன்கு நடை பெறச் செய்தல் வேண்டும்.
- தமிழ்க்கடல் மறைமலையடிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக