அன்பர் கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு!
குறள்நெறி மாசி 18. 1995 / 01.03.1964 இதழில், ‘பாரதம்’ எம்.சி.(இ)லிங்கம் என்னும் நண்பர் இந்தி குறித்துப் பின்வருமாறு எழுதி 7 வினாக்களைத் தொடுத்து விடை கேட்டிருந்தார்.
நான் பிறப்பால் தமிழன்! மொழியால் தமிழன்! என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!
சுருங்கக்கூறின் என் உடல், பொருள், ஆவி தமிழ்தான்!
எனினும் தேசியப்பற்று உடையவன். என் தேசம் இந்தியா! என் தலைவர் நேருசி, என் உரிமை காமராசர், என் சகோதர, சகோதரிகள் நாற்பது கோடி மக்களும்!
ஆக, மொழியால் தமிழையும், நாட்டால் இந்தியாவையும் விரும்புகின்ற நான் தங்கள் இதழான குறள்நெறியைத் தொடர்ந்து படித்து வருகிறேன்!
அதில் தாங்கள் மொழிபற்றிய கருத்துகளில் கையாளும் தன்மை அவ்வளவு மன நிறைவு தருவதாகத் தெரியவில்லை!
அதனால் எழுந்த சில கேள்விகள்தாம் கீழே தருகிறேன். அதற்குத் தாங்கள் தயவுகூர்ந்து விவரமாக விடை கூற வேண்டுமென்று நன்றிஉணர்வுடன் வேண்டிக் கொள்கிறேன்.
வினாக்கள்:
- இந்தியால் தமிழ் எந்த வகையில் அழிந்தது? அழிகிறது? அழியும்?
- நம்நாட்டில் உள்ள மாநிலங்களின் தொடர்பிற்கு உரியமொழிஇந்தி என்பதனை ஒப்புக் கொள்கின்றீர்களா?
- தமிழ்நாட்டில் இதுவரை எந்தெந்த இடங்களில் இந்தி புகுந்துள்ளது? அதனால் தனிமனித வாழ்வு யாருக்காவது பாதிக்கப்பட்டுள்ளதா?
- இந்தி மொழியால் எங்காவது ஓரிடத்தில் தமிழ் மொழி மறைந்திருக்கிறதா?
- பிறமொழிகளைக் கற்பதால்தான் ஒருவனின் தாய்மொழி உலகப் புகழ்பெற முடியும் என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறீர்களா? இந்த வகையில்தான் தமிழால் ஆகிய திருக்குறள் இன்று உலகப் புகழ் கண்டுள்ளது என்பதை மறைக்க இயலுமா?
- மொத்தத்தில் இந்தியால் நம் தமிழ் கிஞ்சித்துஞ் சிதைவுறாது என்று பசுமரத்தாணிபோல என் மனத்தில் பதிகிறது! இதில் உங்கள் மனச்சாட்சி என்ன?
- இறுதியாக தாங்களும் இன்னும் சிலரும் வேண்டாத இந்த மொழி விடயத்தில் இறங்கி இந்தி - தமிழ் எனப் பிரித்துப் பேசுவதால் அது ஒரு சில கட்சிகளுக்கு வளர்ச்சியாகவும் நம் இந்தியத் தேசத்தின் பற்றிலிருந்து ஒரு சிலரை வெளியேற்றுவதாகவும் அமைகிறது என்பதை உணருகிறீர்களா?
.ஐயா,
தாங்கள் இக்கேள்விகளுக்கு விரைவிலேயே விடை கூறவேண்டும் என்று விரும்புகின்றேன். தங்கள் விடை எனக்கு மனநிறைவு அளிப்பதாக அமைந்தால் மறுநாளே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலாவதாக இறங்கி விடுகின்றேன். இது உறுதி. சத்தியம்.
- ‘பாரதம்’ எம். சி.(இ)லிங்கம்
இவர் கேள்விகட்கு
விடை எழுதுவோர் எழுதலாம். விடைகள் அன்புடன் வரவேற்கப்படும். அன்பர்கள் கருத்துகளை எல்லாம் வெளியிட்ட பின்னர் ஆசிரியர் கருத்து அறிவிக்கப்படும்.
- ஆசிரியர்.
இவ்வாறு இடம் பெற்றவினா விடைகள் அகரமுதல இதழில் தொடர்ந்து வெளிவரும். எனினும் இக்காலச் சூ்ழலில் இன்னும் ஆழமான விடைகளை அன்பர்கள் எழுதி அனுப்பினால் அவையும் வெளியிடப்பெறும். அன்பர்கள் விடை தருவார்களாக! – ஆசிரியர்
---- அகரமுதல
-சா.வி. இராசேந்திரதாசன், தேனி
1937ஆம் ஆண்டில் தமிழ்ப் பெரியார் மறைமலை
அடிகள், பரிதிமாற் கலைஞர் தி.ருவி.க. பசுமலை பாரதியார் ஆகிய தமிழ்ப்
பெருமக்கள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தின் மணம், தமிழகத்து மூலை
முடுக்குகளில் உள்ளவர்களையெல்லாம் மொழியுணர்வு மிக்கவர்களாய் எழுச்சி பெறச்
செய்து தமிழ் மொழிக்கு மறுமலர்ச்சி அளித்தது. அன்றுதொட்டு இந்திமொழி
இந்நாட்டை ஆளத் தகுதியற்றது என மொழித்துறை அறிஞர் பலர் தம் கருத்துக்களைத்
தெளிவுபடுத்தி வந்துள்ளனர்.
நாடோறும் நல்ல தமிழ் வழங்கும் நாட்டம்
உடையவராய்த் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நண்பர் திரு. பாரதம்,
எம்.சி. இலிங்கம் அவர்கள் ‘குறள்நெறி’ ஆசிரியரின் முன்னர் ஏழு வினாக்களை
வைத்து அவற்றிற்குத் தக்க விடை வேண்டுமெனவும் விருப்பந் தெரிவித்துள்ளார்.
அவையனைத்தையும் உற்று நோக்கின் அவை ஒரே ஒரு மையக் கருத்தினை
வலியுறுத்துவதாகக் காண்கிறோம். அதுதான் இந்திய ஒற்றுமை. இந்திய
ஒற்றுமைக்காக இந்தி மொழியினை கற்க வேண்டும் என்ற எண்ணம் அவரது வினாக்களில்
ஊடாடுகின்றது. இந்திய ஒற்றுமைக்காக இந்தியை ஏற்க நம்மை வேண்டுகிற அரசினர்
தமிழுக்கும் பாதகம் விளைவிக்கும் நிலையினை உருவாக்குகின்றார்கள் என்பதனை
வினாத் தொடுக்க நண்பருக்கு முதற்கண் எடுத்துக்கூறி அவரது வினாக்களுக்கு
விடையிறுக்க விழைகிறேன்.
- இந்தியால் தமிழ் எந்த வகையில் அழிந்தது? அழிகிறது? அழியும்?
இவ்வினாவிற்கு விடையறிக்கப் புகுங்கால்
வேற்றுமொழியாளரின் ஆட்சி இந்நாட்டில் ஓங்கியிருந்த நேரங்களில் அவர்தம்
மொழிகளால் நந்தமிழ்மொழி சிகைவுற்று. எண்ணற்ற சொற்கள் வழங்கினின்று
நீங்கியநிலையினை எடுத்துக்காட்டாகக் கூறவிரும்புகின்றேன்.
முன்னாளில் இத்தமிழ் நிலத்தில்
முடிபுனைந்தாண்ட மூவேந்தரின் நட்பினைப் பெற்று அவர்களோடு கலந்துரையாடி,
தம்மொழி தெய்வீக மொழி என்று வடமொழியாளர் வடமொழியினை அறிமுகம் செய்வித்து,
அவர் தம் கலையினையும் நாகரிகத்தையும் நம் தமிழோடு கலப்புறச் செய்து, இறைவன்
உறையும் திருக்கோவிலின்பால் வழிபாட்டிற்குரிய மொழியாக வடமொழியினை ஆக்கி
வைத்துள்ளனர். நெஞ்சம் நெக்குருகிப் பாடவல்ல தேவாரத்திருவாசகங்களெல்லாம்
வடமறைக்குப் பின்னிற்கும் நிலையினை ஏற்றன. திருமண நேரத்தில் மணமக்களை
இணைத்து வைக்கும் நிகழ்ச்சியில் தேனமுதத் தமிழுக்குப் பதிலாக வடமொழி இடம்
பெற்றதை எவரும் மறக்க முடியாது.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களின் பெயர்கள்
வடமொழிப் பெயர்களாக மாற்றம் செய்யப்பட்டன. காட்டாக, திருமறைக்காடு
-வேதாரண்யம் என்றும், முதுகுன்றம் – விருத்தாசலம் என்றும் மாற்றப்பட்டதனைக்
குறிப்பிடலாம். எனவே வடமொழியின் கிளைமொழியான இந்தி இங்கு நுழைவதால்
இடையூறுகள் வராதென இயம்புவதெவ்வாறு?
ஆங்கில ஆதிக்கத்தின்போது எண்ணற்ற
தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்திருக்கின்றன. அவற்றிற்குப் பதிலாக ஆங்கிலச்
சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. நமது அன்றாட வாழ்க்கையின்போது புழக்கத்தில்
ஆங்கிலச் சொற்கள் இரண்டறக் கலந்துள்ள நிலையினைத் தெளிவாக அறிகின்றோம்.
ஆனாலும் அவற்றை நீக்கி நல்ல தமிழ் வழங்கும் முறையினை நாம் இன்னமும்
பெற்றோமில்லை.
இந்திய துணைக் கண்டத்துள்
வேற்றுமொழியாளர் நுழைந்து ஆங்காங்கு உயர்நிலைபெற்ற போதெல்லாம் அவர்களின்
மொழிச் சொற்கள் தமிழோடு கலந்து, தமிழிலிருந்து பிரித்தறிய இயலா
நிலையினையும் ஏற்படுத்தியுள்ளன. கால் அதர் இருக்க வேண்டிய இடத்தில் ‘ஜன்னல்’ இருக்கிறது. தண்டல் செய்தவனை விடுத்து ‘வசூல்’ செய்கிறோம். கைச்சாற்றுக்குப் பதிலாக ‘ரசீது’ கொடுக்கிறோம். திறவுகோலினை விட்டுவிட்டுச் ‘சாவி’யைக் கைக் கொள்கின்றோம்.
தமிழ்மொழி வழங்கும் மாநிலம்
குன்றியதற்கும் பிறமொழிக் கலப்பே காரணம். அம்மொழிகளுட் குறிப்பாகவும்
சிறப்பாகவும் இந்தியின் தாய்மொழியான வடமொழிக்கே பெரும்பங்குண்டென்றால்
மிகையாகாது. நல்ல தமிழ் வங்கிய நிலமனைத்தும் ஆந்திரமாகவுங் கருநாடகமகவுங்
கேரளமாகவும் மாறியதனை எவரேனும் மறப்பரோ? எனவேதான் பிறமொழிக் கலப்பால்
தமிழுக்கேற்பட்ட வடுவினை நீக்க முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியின்
மூலமாக இன்னொரு களங்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளாமல் முன் காக்கும்
முறையினைக் கடைப்பிடிக்க வேண்டியவர்களாயுள்ளோம்.
2. நம்நாட்டில் உள்ள மாநிலங்களின் தொடர்பிற்கு உரியமொழிஇந்தி என்பதனை ஒப்புக் கொள்கின்றீர்களா?
மாநிலங்களின் தொடர்பிற்கு ஒரு பொதுமொழி
வேண்டும் என்பதனை ஒப்புக் கொள்கின்றேன். ஆனால் அது இந்தியாக இருக்க
வேண்டுமென்பதனை வன்மையாக மறுக்கிறேன். ஏறத்தாழ எண்பது உட்பிரிவுகளைக்
கொண்டதும், இந்தியத் துணை கண்டத்து மக்களில் நூற்றுக்கு நாற்பத்திரண்டு
விழுக்காடுள்ள நான்கு மாநிலங்களைச் சார்ந்த மக்களால் வழங்கப்படுவதுமான
இந்தி மொழி மாநிலங்களின் தொடர்பிற்குத் தேவையில்லை என்று திட்டவட்டமாக
உரைக்க விரும்புகிறேன். முடியாட்சியின் கீழ் இந்தியத் துணைக்கண்டம் இருந்த
காலத்தில் ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் இருந்தது.
இன்றும் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியத் துணைக்கண்டத்து மக்களை
இணைத்த பெருமை அதற்குமிகவுமுண்டு. இந்தியைக் காட்டிலும் குறைந்த
எழுத்துக்களால் இயங்குவதாலும் எண்ணற்ற இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு
அறிவியற் றுறையில் உலகப் பெரு மொழிகளுள் ஒன்றாக அது வழங்கப் பெறுவதாலும்
மாநிலத் தொடர்பு மொழியாக ஆங்கில மொழியைக் கைக்கொள்ளல் தவறன்று.
3. தமிழ்நாட்டில் இதுவரை எந்தெந்த இடங்களில் இந்தி புகுந்துள்ளது? அதனால் தனிமனித வாழ்வு யாருக்காவது பாதிக்கப்பட்டுள்ளதா?
அஞ்சற்துறையின் எல்லாப் பிரிவுகளிலும்
இந்தியின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. நாணயங்களில் இந்திக்கே முதலிடம்
அளிக்கப்பட்டிருப்பதோடு அந்நாணயங்களின் பெயர்களும் இந்தி மொழியாலேயே
அழைக்கப்படுகின்றன. (எ.டு.: நயா பைசா, நாயே பைசே) புகை வண்டிக் கட்டணச்
சீட்டுக்களில் இந்தி இடம் பெற்றுள்ளது. மைய அரசினரின் அலுவலகங்கள்
அனைத்திலும் கொஞ்சம் கெஞ்சமாக ஆனால் வலுவாக இந்தி திணிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் இந்தி புகுத்தப்பட்டுள்ளது. அரசியல் மேடைகளிற் பேசும்பொழுது
இந்தியை மாணவர்கள் விருப்ப பாடமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர்கள்
கூறுகின்றனர். ஆனால் அதே சமயத்தில் மாணவர்கள் கட்டாயமாக இந்தித் தேர்வு
எழுத வேண்டுமென்று சட்டங் கொணர்ந்து ஆணை பிறப்பிக்கின்றனர்.
ஆட்சியாளர்களுக்கும் பிற அரசியல் கட்சியினருக்கு மிடையே மாணவமணிகள்
பகடைக்காய்களாக ஆட்டி வைக்கப்படுகிறார்கள் என்றால் அது அரசினரின்
திட்டவட்டமில்லாத மொழிக் கொள்கையின் கோளாறேயன்றி வேறெதுவாக இருக்க
முடியும்.
தனிமனித வாழ்வு
பாதிக்கப்பட்டிருக்கிறதா என்னும் விடைக்கு அண்மையில் திருச்சயில்
தீக்குளித்து மாண்ட சின்னச்சாமி என்னும் மொழியுணர்வுக்காளையின் தியாகத்தைச்
சுட்டிக் காட்டுவேன்.
4. இந்தி மொழியால் எங்காவது ஓரிடத்தில் தமிழ் மொழி மறைந்திருக்கிறதா?
கோடைக்கானல் குன்றுகளை நோக்கி
அடிவாரத்திலிருந்து ஐந்து அல்லது ஆறு கல் தொலைவு சென்றவுடன் அரசினரால்
அமைக்கப்பட்ட பூங்கா ஒன்றினைக் காணலாம். அந்த இடம் பெருங்கற்பாறைகள்
மிகுந்த இடம். அவ்விடத்திலிருந்து இயற்கைக் காட்சிகளின் எழிலைக் கண்டு
மகிழலாம். அவ்விடத்தின் பழைய பெயர் மயிலாடும் பாறை. மாலை வேளைகளில்
மாரிகண்டு தோகை விரித்தாடும் மஞ்சைக் கூட்டம் கூடிக் கலைந்தமையான் ஏற்பட்ட
பெயர் அது. ஆனால் அவ்விடத்தில் தற்போது பூங்கா அமைத்துள்ள அரசினர் ‘பர்வத் விஹார்’
என்ற பெயரினைச் சூட்டியிருக்கின்றனர். இந்திப் பெயர் சூட்டித்
தமிழழிக்கும் முயற்சிகளுள் இதுவும் ஒன்றென்றால் மிகையாகாது. வினாத்தொடுத்த
நண்பர் நேரிற் சென்று நிலையினை அறியுமாறு வேண்டுகிறேன்.
5. பிறமொழிகளைக் கற்பதால்தான் ஒருவனின் தாய்மொழி உலகப் புகழ்பெற முடியும் என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறீர்களா? இந்த வகையில்தான் தமிழால் ஆகிய திருக்குறள் இன்று உலகப் புகழ் கண்டுள்ளது என்பதை மறைக்க இயலுமா?
மொழிகளைக் கற்பதால் ஒருவனின்
தாய்மொழி உலகப் புகுழ் பெற முடியும் என்ற கருத்தினை ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் அந்தச் செயல் இந்தியினை ஆட்சி மொழியாகவும் மாநிலத் தொடர்பு
மொழியாகவும் ஏற்றுக் கொள்வதால் மட்டுமே ஆகுமென்றால் அதனை மறுக்கிறேன்.
திருக்குறள் உலகப்புகழ் எய்தியதன் காரணம் பிறமொழி கற்பதால் தானேயின்றி
பிறமொழியினை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொள்வதால் அன்று. எனவே இந்தி மொழியைக்
கற்றுக் கொள்வதைப் பற்றிக் குறையேதுங் கூற நான் விரும்பவில்லை. ஆனால் அது
ஆட்சி மொழியாக திணிக்கப்படுவதனையே வெறுக்கிறேன்.
6. மொத்தத்தில் இந்தியால் நம் தமிழ் கிஞ்சித்துஞ் சிதைவுறாது என்று பசுமரத்தாணிபோல என் மனத்தில் பதிகிறது! இதில் உங்கள் மனச்சாட்சி என்ன?
இந்தியால் தமிழ் அழியாது என்று
வேண்டுமானால் கூறலாம். ஆனால் சிதைவுறாது என்னும் கூற்றை மறுக்கிறேன்.
தமிழர் தம் வீர விளையாட்டுகளுள் ஒன்றான ‘சடுகுடு; விளையாட்டை
இந்திமொழிச்சொல்லான ‘கபடி’ என்ற சொல்லை இட்டு அழைக்குமாறு அரசினர் ஆணை
ஒன்றிருப்பதும், பள்ளி மாணவர்கள் அதனைக் ‘கபடி’ என்றழைக்க வேண்டுமென்பதும்
விதிமுறைகளாக்கப்பட்டிருப்பதை வினாத்தொடுத்த நண்பருக்குச் சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.
தமிழகத்தில் விளைந்த பொருட்களைக்
கொண்டு தமிழகத்தில் செய்யப்படும் பல பொருட்களுக்கு (எ.. உணவு விடுதி,
சிற்றுண்டி, இனிப்புப் பொருட்கள்) இந்திப் பெயர்கள் சூட்டப்படும் வழக்கினை
நகரங்களில் எங்கும் காணமுடிகின்றதே! ஒலி இயல் முறையில் மிக மிக நுண்மை
வாய்ந்த தமிழை அழிக்க இயலாது என்றாலும் இந்திமொழிச் சொற்களை கலந்து
சிதைவினை உண்டு பண்ண முடியும். அறவழி வாழ்க்கையில் நின்றொழுகவும், ஆட்சி
முறையினை நடத்தவும், வினை செயல் வகையினை விரைந்தாற்றி வெற்றி பெறவும்
வழிகாட்டக் கூடிய ஒப்பரிய கருத்துக் களஞ்சியங்களாகத் திகழும் இலக்கிய
நூற்களைத் தன்னகத்தே கொண்ட உயர் தனிச் செம்மொழியாம் நம் தமிழிருக்க,
எவ்வகையிலும் ஒப்பிட்டுக் கூறத் தகுதியற்ற இந்தி மொழி ஆட்சிப்பீடத்தில்
அமரக் கருதுவது நம்மால் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அன்னை மொழியாம் அமுதத் தமிழ்மொழி
ஆட்சிக்கோலேந்தி அரியணையில் வீற்றிருக்க வேண்டிய நிலையினை முழுமையாகப்
பெற்ற பின்னர் நட்பு மொழியாக இந்தி இங்கு நடமாட வந்தால் நமக்கேதும் நட்டம்
ஏற்படும் நிலை வாய்க்காது. விருந்தினரை வரவேற்பதைப் போல வரவேற்கலாம். ஆனால்
நிலையாக நம் நிலத்தில் தங்கி அன்னையின் அரியணையையும் ஆட்சிக் கோலையும்
கவர்ந்திட ஒருப்படோம்.
7. இறுதியாக தாங்களும் இன்னும் சிலரும் வேண்டாத இந்த மொழி விடயத்தில் இறங்கி இந்தி - தமிழ்
எனப் பிரித்துப் பேசுவதால் அது ஒரு சில கட்சிகளுக்கு வளர்ச்சியாகவும் நம்
இந்தியத் தேசத்தின் பற்றிலிருந்து ஒரு சிலரை வெளியேற்றுவதாகவும் அமைகிறது
என்பதை உணருகிறீர்களா?
இந்திமொழி வலுவில் திணிக்கப்படுவதாலேயே
இந்தி – தமிழ் என்று பிரித்துப் பேசும் நிலை ஏற்படுகிறது. இலக்கணமும்,
இலக்கியமும், சொல் வளமும் நிம்பிய தமிழ் மொழிக்கு உரிமையுடையவர்களாய் நாம்
இருப்பதால்தான் இந்தியின் தகுதிபற்றி எடைபோட முடிகிறது. இநதிமொழி
வழங்கப்படும் நிலப்பகுதியும் பேசும் மக்கள் தொகையினையும் விடக் கூடுதலாக
இருக்கலாம். ஆனால் அந்த ஒரே தகுதியும் இந்தி மொழியின் உட்பிரிவுகளை
நோக்குமிடத்து எவ்விதத்திலும் தகுதியற்றது என்றக் கருத்தினைத்
தெளிவாக்குகிறது. இந்திய தேசத்தின் பற்றிலிருந்து ஒரு சிலரை வெளியேற்றுவதாக
அமையும் நிலை அம்மொழிக்கு உண்டாகிறதென்று தெரிவதால் அம்மொழியின் மீது
அரசினர் கொண்டுள்ள கருத்தினை மாற்றிக் கொள்ளலாமே!
அம்மொழியின் நுழைவால் சில அரசியற்
கட்சிகளுக்கு வளர்ச்சியும் ஆட்சியாளர்களுக்கு தலைக் குனிவும் ஏற்படுகிறது
என்பதை ஒப்புக் கொண்டால் அம்மொழியை நீக்குவதன் மூலம் அந்த வளர்ச்சியைக்
குன்றச் செய்து ஆட்சியாளர் நிமிர்ந்து நடக்கலாமே!
ஆங்கிலத்திற்கு ஆட்சிப் பீடத்திலுள்ள
இணைமொழித் தகுதியை நீக்க என்ன காரணம் கூறப்படுகிறதோ அதே காரணத்தை நான்
இந்தியின்மீது சாட்ட விரும்புகிறேன். ஆங்கிலம் நமக்கு அயல்மொழி – அது அடிமை
வாழ்வின் அடையாளச் சின்னம் என்ற காரணத்தைத் தானே கூற முடியும்? இந்தியற்ற
பிறமொழியினைத் தாய் மொழியாகக் கொண்டவர்கட்கு இந்தியும் அயல் மொழிதான்.
ஆறாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள நாட்டவரின் மொழியான ஆங்கிலம் அயல் மொழி
என்றால் ஈராயிரம் மைல்களுக்கப்பால் உள்ளவர்களின் மொழியான இந்தி நமக்கு
அயல்மொழி என்பதில் தவறேதுமுண்டோ?
மாநிலத் தொடர்பு மொழியாகவும் மாநில
ஆட்சிப் பீடங்களில் இணை மொழியாகவுஞ் செயல்பட இந்தியைக் காட்டிலும் ஆங்கிலம்
எவ்வகைத்தும் தகுதி குன்றிய மொழியன்று. இந்தி ஆட்சி மொழியாயும் ஆங்கிலம்
இணை மொழியாகவும் இருக்கும் பொழுது இந்தி பேசும் மாநிலத்தவர் இருமொழிகளையும்
பிறமாநிலத்தவர் மூன்று மொழிகளையும் கற்க வேண்டியுள்ளது.
ஐரோப்பிய நாட்டில் உள்ள
பெரும்பான்மையான மொழிகட்கு ஒரே வகையான எழுத்துரு உள்ளது. அதுபோல இந்தியத்
துணைக்கண்டத்தின் கண்ணுள்ள, எல்லா மொழி கட்கும் தேவநாகரி எழுத்து
வரிவடிவத்தினைப் பயன்படுத்த வேண்டுமென வடக்கேயுள்ள இந்தி மொழிப்பற்றாளர்கள்
கருத்து தெரிவிக்கிறார்கள். இக்கருத்து பொருளற்றவாதத்தை எழுப்பப்
பயன்படுகிறதேயன்றித் துணைக்கண்டத்து ஒற்றுமைக்குக் கிஞ்சித்தும் பயன்
நல்குவதாய் அமையவில்லை.
இறுதியாக, . . .
தமிழகம் என்னும் வயற் பரப்பில்
விளைந்து வளங்கொழித்து நிற்கும் செந்தமிழ்ப் பயிரை இந்தி மொழி என்னும்
வெள்ளாடு அசைபோட வருகிறது. அதனைத் தடுக்கும்வேலியாகத் தமிழ்க் காப்புக்
கழகம் இயங்கி வருகிறதேயன்றி எங்கோ வழங்க வேண்டிய இந்தியினை ஒழிக்கும்
இயக்கமன்று இது என்று வினாத் தொடுத்த நண்பருக்கு விடையிறுக்க
விரும்புகின்றேன்.
செந்தமிழின் வாழ்வும் வளமுஞ்
சிதையாதிருக்கத் தமிழ்க் காப்புக்கழகம் என்னும் வேலி வேண்டும் அந்த
வேலியில் ஓர் உறுப்பாக நண்பர் திரு. பாரதம் எம்.சி. இலிங்கம் அவர்களைப்
பங்கேற்க வருமாறு அன்பழைப்பு விடுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக