ஞாயிறு, 26 ஜனவரி, 2014

இந்தி எதிர்ப்புச்சிறப்பிதழ் 01


இந்தி எதிர்ப்புச்சிறப்பிதழ் 01

indhi ethirppu03
  இந்தித்திணிப்பு எதிர்ப்பு அல்லது இந்தி முதன்மை எதிர்ப்பு என்பனபோல் கூறாமல் ‘இந்தி எதிர்ப்பு’ என்றே கூற விரும்புகிறோம். ஏனெனில், இதுவரை நாம் அவ்வாறு அழைத்தும் கல்விமொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி, ஆட்சிமொழி முதலான போர்வைகளில் இந்தி நம்மை இறுக்கிக் கொண்டே உள்ளது. இருப்பினும் அதை உணராமலும்  அதில் இன்பங் கண்டும் நாம் தமிழுக்கு அழிவு தேடிக் கொண்டிருக்கிறோம். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1967 இல் ஆட்சியை மாற்றியது. அப்பொழுது ஓட ஓட விரட்டப்பட்ட பேராயக் கட்சி இன்னும் தமிழகத்தில் எழ முடியாமல் தவிக்கின்றது. அதே நேரம் இது குறித்த பாடங்கள் இடம்  பெறாக் காரணத்தால் இன்றைய தலைமுறையினருக்குத் தமிழே அயல் மொழியாகும் சூழல் வந்து விட்டது. இந்நிலை நீடிக்கப்படக்கூடாது என்றால் எந்த வகையிலெல்லாம் இந்தித் திணிக்கப்படுகின்றது என்பது குறித்தும்  இதனால் ஏற்படும் மொழி அழிவு, இன அழிவு, நிலப்பரப்பு அழிவு குறித்தும் உணர வேண்டும்.
  1965 மொழிப்போரின் தந்தையாகிய பேராசிரியர் சி.இலக்குவனார், ‘இந்தி எதிர்ப்புப் படைத்தளபதி’ என்ற குற்றச்சாட்டில் சிறை சென்றவர்; பதவி இழந்தவர். அவரது ‘தமிழ்க்காப்புக்கழகம்’ இந்தி  எதிர்ப்புப் போர்ப்படையாகத் திகழ்ந்தது என்றும் அவரது ‘குறள்நெறி’ இதழ் இந்தி  எதிர்ப்புப் போர்வாளாகத் திகழ்ந்தது என்றும் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரன் அவர்கள்  தெரிவிக்கிறார்கள். இந்தி எதிர்ப்புக் கனலை  மூட்டிய ‘குறள்நெறி’ இதழில் இருந்து பாடல், கட்டுரை முதலான படைப்புகளும் பிற இதழ் படைப்புகளும் ‘அகரமுதல’ இணைய இதழில் இடம் பெறும். இன்றைய நிலை குறித்தும் கட்டுரை பின்னர் வெளிவரும். அன்பர்களும் எழுதி அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்.

 இந்தி எதிர்ப்புப் படைப்புகளைப் படிக்கவும் பகிரவும் பரப்பவும் அன்பர்களிடம் வேண்டுகின்றோம். இந்தி எதிர்ப்புப் படைப்புகள் குறித்த போட்டி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்!
ஏக இந்தியா என்று எந்தமிழை மாய்க்க வந்தால்
சாக இந்தியா என்று சாற்றிடுவோம்!
என்னும் பாவேந்தரின் வரிகள் மத்திய ஆளும்கட்சிகளின் செவிப்பறைகளைக் கிழிக்க வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘தமிழே தமிழர்க்கு ஆட்சிமொழி! கல்வி மொழி! இறைமொழி! பணிமொழி!’ என்னும் நிலைப்பாட்டைக் கொண்டுவருவோர்க்கே வாக்களிக்க  வேண்டும் என்னும் உறுதிப்பாட்டை நாம் எடுக்க வேண்டும்!
இனியும் நாம் உறங்கினால், தமிழினமே மீளாத்துயிலில் ஆழ்ந்து போகும்!
விழிப்போம்! செயல்படுவோம்! வாகைசூடுவோம்!

தை13, 2045 / சன26, 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக