திங்கள், 26 ஆகஸ்ட், 2013

மிதியூர்திகளுக்குப் புதிய கட்டணம் : முதல்வர்

இதைவிட  ஒப்பு நோக்கில், வாடகை ஊர்திகளின் கட்டணம் குறைவாகவே உள்ளது. அழைப்பூர்திகளை வாடகைக்கு அமர்த்தும் பொழுது 5 நிமையத்திற்கு உரூ.4 வீதம், மணிக்கு 48 உரூ. மட்டும் வாங்குகின்றனர்.

பொதுவாக இக்கட்டண விகிதத்தைப் பின்பற்றினாலே ஊர்திகள் வசதி வாய்ப்பின் அடிப்படையில் குறைவாக உள்ளமையால், கை வண்டி, குதிரை  வண்டிகளை ஒழித்ததுபோல்  மிதியூர்திகளை  ஒழித்து விட்டு ஊர்தி வசதிகளையே ஏற்படுத்தித் தரலாம்.  அல்லது ஒருவருக்கு ஒன்றுக்குமேல் மிதியூர்தி உரிமம் தருவதில்லை என அரசு கடைப்பிடித்தால், இப்பொழுது வரையறுத்துள்ளதைவிடக் குறைந்த கட்டணத்திலேயே வாடகை மிதியூர்திகள் கிடைக்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/



++++++++++

சென்னையில் மிதியூர்திகளுக்குப் புதிய கட்டணம்  நடைமுறை: முதல்வர் உத்தரவு


சென்னையில் ஆட்டோகளுக்கான குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25 எனவும், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
திருத்தப்பட்ட கட்டண விகிதம் ஞாயிற்றுக்கிழமையே (ஆக.25) அமலுக்கு வந்துள்ளது. புதிய கட்டண விகிதத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்டோபர் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக, சென்னையில் உள்ள 77 ஆயிரம் ஆட்டோக்களுக்கும் ஜி.பி.எஸ். வசதி, டிஜிட்டல் பிரிண்ட்டருடன் கூடிய மீட்டர்கள் ரூ.80 கோடியில் இலவசமாகப் பொருத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 சதவீத கட்டணத்தை இரவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். காத்திருப்புக் கட்டணம் 5 நிமிஷங்களுக்கு ரூ.3.50 என்ற வீதத்தில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இதில் சென்னை நகரத்தில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் உள்ளன. இந்த ஆட்டோக்களுக்கான கட்டணம் 2007-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது.
எரிபொருள் விலை, உதிரி பாகங்கள் விலை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கான சம்பளம் ஆகியவை பல மடங்கு உயர்ந்துவிட்டதால் இந்தக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர் தொழிற்சங்கங்களும், நுகர்வோர் அமைப்புகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது.
இதற்கிடையில், ஆட்டோக்களுக்கான கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பான அனைத்து காரணங்களையும் பரிசீலித்து முடிவு எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, போக்குவரத்து அமைச்சர் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள், நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டம் சென்னையில் ஆகஸ்ட் 10-ல் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் ஆக.22-ம் தேதி நடைபற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் விரிவான விவாதத்துக்குப் பிறகு பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயனடையும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கான புதிய கட்டண நிர்ணயம் ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
திருத்தி அமைக்கப்பட்ட கட்டண விகித அட்டையை செப்டம்பர் 15-க்குள் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது அந்த அலுவலகத்தால் நடத்தப்படும் சிறப்பு முகாம் மையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
பயணிகளுக்கு ரசீது: சென்னையில் இயங்கி வரும் ஆட்டோக்களில் இடத்தைக் காட்டும் கருவிகள், அதாவது, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய டிஜிட்டல் பிரிண்ட்டர்கள் பொருத்தப்பட்ட ஆட்டோ மீட்டர்கள் ரூ.80 கோடி செலவில் இலவசமாகப் பொருத்தப்படும். இதன் மூலம் பயணித்த தூரம் மற்றும் அதற்கான கட்டணம் அடங்கிய ரசீது பயணிகளுக்கு வழங்கப்படுவதோடு மட்டுமில்லாமல், பயணிகளிடமிருந்து சரியான கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதிசெய்யப்படும். மேலும், ஆட்டோக்களின் இயக்ககங்களின் கண்காணிக்கவும் வழிவகை செய்யப்படும்.
ஆபத்துகால பட்டன்: ஆட்டோ மீட்டரில் புதிய பட்டனும் பொருத்தப்படும். ஆட்டோவில் பயணிப்போருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால், ஆட்டோ மீட்டருடன் பட்டனை (டஹய்ண்ஸ்ரீ ஆன்ற்ற்ர்ய்) பயணிகள் அழுத்தலாம். இதன்மூலம், பயணிகள் ஆபத்தில் இருப்பது கட்டுப்பாட்டு அறைக்கு தெரியவந்து, அதனடிப்படையில் காவல்துறையினர் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம், வாகன அனுமதி ரத்து: ஆட்டோக்களின் இயக்கங்களை போக்குவரத்துத் துறையும், காவல்துறையும் தீவிரமாகக் கண்காணிக்கும். மாற்றியமைக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அவர்களின் உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்படும். இதுதவிர, வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு மட்டுமில்லாமல், அதன் இயக்கம் முடக்கப்பட்டு, அனுமதி ரத்து செய்யப்படும்.
பொதுவான புகார் எண்: ஆட்டோவில் பயணிப்போர் புகார் அளிக்க ஏதுவாக, பொதுவான புகார் எண் உருவாக்கப்பட்டு, அந்த தொலைபேசி எண் ஒவ்வொரு ஆட்டோவிலும் பிரதானமாக எழுதப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
புதிய கட்டண விவரம்...
முதல் 1.8 கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ.25 - ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ.12
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோக்களில் பயணிப்போர் இரவுக் கட்டணமாக கூடுதலாக 50 சதவீதத்தைச் செலுத்த வேண்டும்.
காத்திருப்புக் கட்டணம் ஒவ்வொரு 5 நிமிஷத்துக்கு ரூ.3.50-- ஒரு மணி நேரத்துக்கு ரூ.42
புதிய கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய அக்.15 வரை அவகாசம்.
ஆட்டோ பயணிகளுக்கான பொதுவான புகார் தொலைபேசி எண் உருவாக்கப்படும்
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆட்டோ ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்படுவதோடு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அனுமதி ரத்து செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக