புதன், 17 ஜூலை, 2013

புறநானூற்று அறிவியல் வளம்

புறநானூற்று அறிவியல் வளம்



புறநானூற்று அறிவியல் வளம்
  
  அண்மை நூற்றாண்டுகளில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்மைகள் பலவும் சங்க இலக்கியங்களில் உள்ளன.  சங்கக் காலத்தில் பிற நாட்டினர் அறியாத அறிவியல் உண்மைகள் பலவற்றையும் பழந்தமிழறிஞர்கள் அறிந்திருந்தனர். ஆனால், நமக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த (ஏன், பின்னரும் இருந்த) அறிவியல் நூல்கள் கிட்டில. ஆனால், இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் உண்மைகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. உண்மைகளை உவமைகளாகவும் எளிய எடுத்துக்காட்டுகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள இலக்கியச் செய்திகள், அறிவியல் உண்மைகளைத் தமிழ் மக்களும் நன்கு அறிந்திருந்தனர் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புரிய வைக்கின்றது. சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகை  நூல்களுள் ஒன்றான புறநானூறு தெரிவிக்கும் அறிவியல் உண்மைகள்  சிலவற்றைப் பார்ப்போம்.
  ஒரு பொருளை விளக்குவதற்கு உதவுவதே உவமை. எனவே, உவமை என்பது தெரிந்த ஒன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதனுடன் ஒப்புமையாகக்  கூறப்படும் பொருள் அல்லது பொருள்கள் நமக்குப் புரியும். பேராசான் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் உவமைஅணியில் சிறந்திருந்தமையால்தான் அச்சிறப்புமிகு அறிஞர் பெருமகனார், உவமஇயல் என அதற்கெனத் தனி இயலை வகுத்துள்ளார். எனவே, அறிவியல் உண்மைகளை உவமையாகப் புலவர்கள் கையாண்டுள்ளனர் என்றால் இவ்வறிவியல் உண்மைகள் மக்கள் எளிதில் புரியக்கூடிய உண்மைகளாக விளங்கும் சிறப்பைப் பெற்றிருந்தன எனலாம். எளிய பொது மக்களிடையேயே அறிவியல் உண்மைகள் மண்டிக்கிடந்தன எனில் தமிழர் அறிவியலின் ஆழம் அளக்கவியலாததாக இருந்திருக்கின்றது என்பதே உண்மை.
 மாற்றுச்சக்கரம்
   ஊர்திகளுக்கான மாற்றுச்சக்கரத்தை இஃச்டெப்னி(stepney)  என்கிறோம். ஆனால், இச்சொல் தெருவின் பெயராகும். இங்கிலாந்திலுள்ள  இஃச்டெப்னி (stepney) தெருவில்  20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் மாற்றுச்சக்கரம் ஒன்றை  வால்டர் தேவீசு (Walter Davies) என்பவரும் தாம் (Tom) என்பவரும்  ஏற்பாடு செய்து தந்தனர். இத் தெருவில் கண்டறியப்பட்ட இம்முறைக்கு  இஃச்டெப்னி(stepney ) என்னும் பெயர் நிலைத்து விட்டது. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர்கள்  மாற்றுச் சக்கரங்களின் தேவை உணர்ந்து அதை உருவாக்கி உள்ளனர் என்னும் பொழுது அவர்களின் அறிவியல் அறிவு வியப்பளிப்பதாக உள்ளது. ஔவைப் பிராட்டியார், கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன   (புறநானூறு 102) என உவமையைக் கையாள்கிறார்.  ஊர்திச் சக்கரங்களில் ஏதும் பழுது ஏற்பட்டால் பயணம் நிற்காமல் தொடருவது பற்றிச் சிந்தித்துள்ளனர் நம் தமிழ் முன்னோர்கள். அப்பொழுது உருவாக்கப்பட்டதுதான் சேம அச்சு. சக்கரம் பழுதடையும் பொழுது பயன்படுத்துவதற்காகக் கூடுதலாக வண்டியில்  சேமத்திற்காக - பாதுகாப்பிற்காக- இணைக்கப்படுவதே சேம அச்சு. இத்தகைய சேம அச்சு போன்று மக்களுக்கு இடர் வரும் பொழுது அதனைக் களையும் சேம அச்சாக மன்னன் விளங்குகின்றான் என இப்பாடல் அடி மூலம்  ஔவைப்பிராட்டியார் விளக்குகிறார்.
  மன்னரைப் பாராட்டப் பயன்படுத்திய இவ்வடி மூலம் நமக்குப்  பழந்தமிழரின் அறிவியல் உண்மை ஒன்று கிடைத்துள்ளது.
காற்றறிவியல்
   பஞ்ச பாண்டவர்களில் பீமன் குந்திக்கும் வாயுக்கும் பிறந்தவன் என்பதும் வாயுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான்  என்பதும் ஆரியப் புராணம்.  ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றை, இயற்கையாக எண்ணாமல் அறிவியல் உணராதவர்களாகவே இருந்துள்ளனர்.
  கிரேக்கர்கள் ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கருதினர்.  அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும்(Night) பிறந்த மகன் காற்று; இவன்  பகலின் (Hemera ) உடன்பிறப்பு என்றும் விண்கடவுளின் (Uranus) மகன் என்றும்  உரோமர்கள் துயரத்திற்கும்(Chaos) இருளிற்கும் (Caligo) பிறந்த மகன் என்றும்  கருதினர்.   இவ்வாறு ஒவ்வொரு நாட்டினரும் கடவுள்களின் அல்லது தேவதைகளின் குழந்தையாகக் கருதினர். இயற்கையாக மேனாட்டார் கருதாக் காலத்திலேயே காற்றின் பல் வேறு தன்மைகளைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
காற்றோடு எரி நிகழ்ந் தன்ன செலவின்
எனக் காற்று கலந்தால் தீ விரைவாக எரியும்  அறிவியல் உண்மையை உவமையாகக் கூறுகிறார் ஆசிரியர் கோவூர் கிழார்.
  அண்மை நூற்றாண்டுகளில்தான் காற்றின் அடிப்படையில் விண்மண்டிலத்தைப் பிரித்தனர் பிற நாட்டு அறிவியலாளர்கள்.   மேலே செல்லச்  செல்லக் காற்றின் அளவு குறைவதைக் கொண்டு அடிவளி மண்டிலம்(troposphere), மீவளி மண்டிலம்(Stratosphere), இடைவளி மண்டிலம்(mesosphere), வெப்பவளி மண்டிலம்(thermosphere),  மேல்வளி மண்டிலம்(exosphere) எனப் பகுத்தனர். நம் தமிழ் முன்னோரும், காற்று வழங்கும் பரப்பிற்கேற்ப, கொண்மூ, கணம், செல், மை, கார், விண்டு, முதிரம், மஞ்சு, விசும்பு, எழிலி எனக் காற்றை வகைப்படுத்திப் பெயரிட்டனர். காற்று இல்லாத மண்டிலமும் இருந்ததை உணர்ந்தனர்.
  அண்மைக்கால அறிவியலின் வளர்ச்சியாகக் காற்றில்லா மண்டிலத்தைக் கண்டறிந்தது  குறித்து உலகம் மகிழ்கிறது. ஆனால், உண்மையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விண்வெளியில் காற்று  இல்லாதபகுதி உள்ளதை நம் தமிழ்முன்னோர் நன்கு அறிந்துள்ளனர் என்பது அவர்களின் அறிவியல் முன்னோடித் திறனை உணர்த்துகிறது அல்லவா?
   வரி விதிப்பை நீக்குவதற்கு அறிவுரை கூறும்  புலவர் வெள்ளைக்குடி நாகனார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் வேந்தனிடம்  வரி விதிப்பை நீக்குமாறு வேண்டினார். அப்பொழுது அவர்,  பழந்தமிழ்நாட்டு எல்லையையும் மூவேந்தர் சிறப்பையும் குறிப்பிடும் வகையில், கடல்களால்  சூழப்பெற்று, காற்று வழங்காத வானத்தின் கீழ் உள்ள நிலத்தை ஆளும் மூவேந்தர் என்கிறார்.
நளிஇரு முந்நீர் ஏணி யாக,
வளியிடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்தைக் தண்தமிழ்க் கிழவர்  (புறநானூறு: 35: 1-3)
என்னும் பாடலடிகளில்தான் புலவர், இவ்வாறு, காற்று  பயன்பாட்டில் இல்லாத வான் மண்டிலத்தைக் குறிப்பிட்டுள்ளார். (நளி இரு - நீர் செறிந்த; முந்நீர் - கடல்; ஏணி- எல்லை)
 மார்க்கண்டேயனார் என்னும் மற்றொரு புலவர்,  இடம்  விட்டு இடம் பெயரும் காற்று இல்லாத வானம் என்பதை,
மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக
இயங்கிய இருசுடர் கண்எனப் பெயரிய
வளியிடைவழங்கா வழக்கரு நீத்தம்
எனக் கூறுகிறார். (புறநானூறு : 365: 1-3)
  நில மண்டிலமும் நீர் மண்டிலமும் தீ மண்டிலமும் வளி மண்டிலமும் கடந்து நிற்கும் விசும்பு நீத்தம் எனப்பட்டது. .... … …இதன்கண் வளி வழங்குதலின்மையின் வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம் எனப்படுவதாயிற்று என உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் விளக்குகிறார்.
 வளிமண்டிலம் சூழ இருப்பது ஞாலம் ஆதலின் அதனைக்கடந்து நிற்கும் விசும்பை நீத்தம் என்றார்   என நீத்தம் என்பதற்கான விளக்கத்தையும் அளிக்கிறார்.  எனவே, காற்று இல்லாத பகுதியை விசும்பு என அழைத்துள்ளனர் என்பதையும் காற்று நீங்கி இருத்தலால் நீத்தம் எனப் பெயர் பெற்றது என்பதையும் அறியலாம்.
  விண்ணறிவியலிலும் காற்றறிவியலிலும் சிறந்திருந்த தமிழ் முன்னோர், உயரச் செல்லச் செல்லக் காற்றின் பயன்பாடு குறைந்து செல்வதை உணர்ந்திருந்தனர். இதனையே புறநானூற்றுப்பாடல்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன.
புலவர் குறுங்கோழியூர்க்கிழார்,  வளிவழங்கு திசை ( புறநானூறு 20:3) எனக் காற்று வழங்கும் திசை பற்றிக் குறிப்பிடுகிறார். புலவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
வளி திரிதரு திசை(புறநானூறு 30.4) பற்றி அறிந்தவர் பண்டுதொட்டே இருப்பதைக் குறிப்பிடுகின்றார்.
புலவர் மாங்குடி மருதனார், கப்பலை இயக்கும் ஆற்றலைக் காற்று பெற்றிருந்ததை,
வளிபுடைத்த கலம் போல (புறநானூறு 26.2.) என்னும் உவமையில் குறிப்பிடுகின்றார்.
புலவர்  ஐயூர் முடவனார், வளிமிகின், வலியும் இல்லை(புறநானூறு 51.3) எனக் காற்றுப் புயலாக மிகும் பொழுது அதன் வலிமையைத் தடுக்க இயலாது எனக் குறிப்பிடுகின்றார்.
புலவர் மதுரை மருதன் இளநாகனார்
கடுவளி தொகுப்ப ஈண்டிய
வடுஆழ் எக்கர் மணலினும் பலவே! (புறநானூறு 55.22-23)
என மணலினும் பலவாக வாழுமாறு வாழ்த்தும் பொழுது, காற்று மணலைக் கொண்டுவந்து கொட்டும் அளவு வலிமையாகக் கடற்காற்று வீசுவதைக் குறிப்பிடுகின்றார்.
 புலவர் வெண்ணிக் குயத்தியார், வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! (புறநானூறு 66.2.) என வாழ்த்தும் பொழுது காற்றின் இயல்பையும் இயக்கத்தையும் அறிந்து, ஆளுமை பெற்ற மரபில் வந்த மன்னன் எனத் தொன்மைக்காலத்திலிருந்தே காற்றறிவியலைத் தமிழர்கள்அறிந்திருந்த உண்மையைக் குறிப்பிடுகின்றார்.
புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், வரைவளி(புறநானூறு  133.4) என மலைக்காற்று பற்றிக் குறிப்பிடுகின்றார்.
புலவர் கழாத் தலையார், வளிவழக் கறுத்த வங்கம் போல(புறநானூறு 368.9) என்னும் உவமையில் கடற்பகுதியில் காற்று இயங்கா நிலை உள்ளதையும் குறிப்பிடுகின்றார்.
புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர். விண்ணில் உழலும் காற்றையும்  தீயைப் பற்றிப் பரவச் செய்யும்  அதன் ஆற்றலையும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும், (புறநானூறு 2.4-5) என்னும் அடிகளில்
குறிப்பிடுகின்றார்.
புலவர் கோவூர் கிழார், காற்று நெருப்புடன் இணைந்து அழிக்கும் ஆற்றலைக்,
காற்றோடு
எரிநிகழ்ந் தன்ன செலவின்(புறநானூறு 41.16-17)
என்னும் அடிகளில் குறிப்பிடுகின்றார்.
இவற்றால், காற்றறிவியல் பழந்தமிழர் நன்கு அறிந்த ஒன்று என உணரலாம்.
நிலா
  ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் மக்கள், நிலா(Mawu) மேற்கில் வாழும் மூதாட்டி என்றும் இரவு குளிர்ச்சியைத் தரும்  பெண்தெய்வம் என்றும்  பகல் கடவுளான இலிசா(Liza) உடன் இணைந்து உலகத்தை உருவாக்கியதாகவும்  நம்பினர்.
மெக்சிகோவைச் சேர்ந்த அசுடெக்(Aztec) மக்களின் தொன்மத்தின்படி, நிலவின் பெயர் பொன்மணிகள்(Coyolxauhqui); பூமித் தெய்வத்தின் (Coatlicue) மகள்; சூரியக்கடவுளின்(Huitzilopochtli) உடன் பிறப்பு; தாயின் இழிசெயலுக்காக  அவரைக் கொல்வதற்குத் தன் நானூறு இருபால் உடன்பிறப்புகளையும்  ஊக்கப்படுத்தியவள்; எனப் பலவாறான கருதுகோள்கள் இருந்தன.
சீனர்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நிலா என மொத்தம் 12 நிலாக்கள் உள்ளதாகக் கருதினர்.
  தமிழ் மக்கள்  நிலவைப் பிற நாட்டார் போல் பகுத்தறிவிற்கு ஒவ்வாத வகையில் கருதவில்லை. அதன் இயற்கைத் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். எனவேதான், நிறைமதி, தேய்மதி, வெள்ளுவா (பௌர்ணமி), காருவா(அமாவாசை), வளர்மதி, பிறைமதி, எட்டாம் நாள் திங்கள், மறுக்கொண்ட மதி, அரவு வாய்மதி, வைகறை மதி, பக்கமதி, நிலவு, மீன்சூழ் மதி, குழவித் திங்கள், திங்கள் குழவி, மதி அரும்பு, என நிலவின் பல்வேறு தோற்றங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.  நிலவாகிய மதியை அடிப்படையாகக் கொண்டே மதி  அல்லது திங்களின் பெயரில்  மாதம் அல்லது திங்கள் எனக் காலத்தைப் பகுத்துள்ளனர். எனவே, திங்கள் சுற்றும் கால அளவை உணர்ந்த அறிவியல் தலைமக்களாக நம் முன்னோர் இருந்துள்ளனர். புறநானூற்றிலும் திங்களின் இயற்கை  பற்றிய பாடல் இடம் பெற்றுள்ளது.
மூவைந்து - பதினைந்து - நாள்களில் முறை முறையே வளர்வதும் தேய்வதுமாகிய   முழு வெண்ணிலவைப்  போல என உவமையாகப் புலவர் கோவூர் கிழார்
மாக விசும்பின் வெண் திங்கள்
மூவைந்தான் முறை முறைக்
கடல்நடுவண் கண்டன்ன     (கோவூர் கிழார்: புறநானூறு : 400 : 1-3)
என்னும் பாடல்  அடிகள்  மூலம்,  விளக்குகிறார்.
பிறப்பு, வளர்ச்சி, தாழ்ச்சி, இறப்பு முதலான உலகியல் நிலையாமை குறித்துத் திங்களின் வளர்வது, தேய்வது, மறைவது ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் புலவர் கூறுகிறார்.
தேய்த   லுண்மையும்  பெருக லுண்மையும்
 மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
 அறியாதோரையும் அறியக் காட்டி
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து 
என்னும் பாடலடிகள் திங்களின் பல்வகைத் தோற்றம், தோற்றமின்மை குறித்து விளக்குகின்றன.
விண்மீன்கள் நடுவே திங்கள் உலா வருவதை உவமானமாகக் கூறுவதன் மூலம்
பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்  என்று புலவர்கள் கூறுகின்றனர்.
வெண்மையான  விரிந்த கதிர் ஒளியுடையது நிலா என்பதை, விரிகதிர்   வெண்டிங்கள் என்னும் பாடலடி விளக்குகிறது.
 மேலும் திங்களின் குளிர் தன்மையுடன் ஒப்பிட்டுப் பண்புகளை விளக்கும் பாடலடிகளும் உள்ளன.
இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை (புறநானூறு 394.6)  எனக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், நிலா மறைந்து பகல் வருவதை விளக்குகிறார்.
புலவர் திருத்தாமனார், நிலா மறையும் பொழுதில் வெள்ளி முளைப்பதை,
மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர, (புறநானூறு 398.1) என விளக்குகிறார்.
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்,
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை  (புறநானூறு  67.2-5)
எனப் புலவர் பிசிராந்தையார், வெற்றிவாகைசூடும் மன்னனின் முகம்போல நிலா விளங்குவதாக அதன் காட்சி பற்றிக் கூறுகின்றார்.
புலவர்  ஔவையார்
திங்கள்
நாள்நிறை மதியத்து அனையை(புறநானூறு  102: 6-7)
எனத் துன்ப இருள்  போக்கும் முழுநிலா போன்றவன்  அதியமான் நெடுமான் அஞ்சி எனப் போற்றுகையில், இருள்நீக்கும் நிலவின் தன்மையைக் குறிப்பிடுகின்றார்.
புலவர் பெருஞ்சித்திரனார் நிலவைக் காட்டிப் பிள்ளைகளுக்குச் சோறு ஊட்டும் பழக்கத்தைக் குறிப்பிடுகின்றார்(புறநானூறு 160.22)  நிலா நிலா ஓடி வா என நிலவைக் காட்டிக் சோறு ஊட்டும் பழக்கம் பன்னெடுங்காலமாக இருப்பதை, நிலா பற்றிய ஈடுபாட்டைக் குழந்தைபருவத்தில் இருந்தே உருவாக்கி வந்துள்ளர்  நம் தமிழர்கள்  என்பதை இப்பாடல் மூலம் நாம் அறியலாம்.
மனைஅமைப்பியல்
  நகர அமைப்பிலும் வீடுகள் அமைப்பிலும் தமிழர் நாகரிகமே உலகத்தில் சிறந்ததாக உள்ளது என்பதை அரப்பா, மொகஞ்சதாரோ எச்சங்கள்  விளக்குகின்றன.  தாமரைமலர் போல் அமைந்த மதுரை நகரின்  சிறப்பு நகர அமைப்பிற்கு மற்றொரு சான்றாகும்.
  புறநானூற்றுப் பாடல்கள்  மூலமும் நாம் பழந்தமிழர் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டான நகர அமைப்பை அறிந்து கொள்ளலாம். நகரம் என்பது பொதுவாக சிறப்பாகக் கட்டப்பெற்ற வீட்டையே குறித்துள்ளது. இதன் மூலம் வீடுகள் கட்டப்பட்ட சிறப்பை அறியலாம். வீடுகள் பற்றிய குறிப்புகள் அனைத்தும் அக்காலத்தில் கட்டட அறிவியலில் தலை சிறந்து நம் தமிழ் முன்னோர்கள் விளங்கினர் என்பதை மெய்ப்பிக்கின்றன.
நெடுநகர் ( புறநானூறு 23.9 ; 280.3;281.6; 285.8)  என்ற சொல்லாட்சி  சிறப்பான நெடுமனைகள் கட்டப்பட்டிருந்தன என்று  அறிய  வைக்கிறது.
வினைபுனை நல்லில் ( புறநானூறு 23.10) என்ற  தொடர்  வினைத்திறனுடன் சிறப்பாக புனையப்பெற்ற நல்ல இல்லங்கள் அன்றிருந்தன என்பதற்கு எடுத்துக்காட்டாகும். புனையப்பெறுதல் என்னும் பொழுது, கதவுகள், தூண்கள், மாடங்கள், சுவர்கள் முதலான வீட்டு உறுப்புகள் சிறப்பாக அழகுபடுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன என நாம் அறியலாம்.
செல்வச் செழிப்பிற்கு ஏற்றாற்போல் நெல்  குவித்துச் சேமித்து வைக்கத்தக்க வகையிலும்  பொன்மாடங்கள், பொன்தூண்கள் எனப் பயன்படுத்தப்படும் சிறப்பிலும்  வீடுகளும் தெருக்களும்  அமைக்கப் பட்டிருந்தன  என,  நெல்மலிந்த மனை பொன்மலிந்த மறுகின் (புறநானூறு : 338.2) என்னும் அடியில் புலவர் குன்றூர்க்கிழார் மகனார் கண்ணத்தனார் விளக்குகிறார்
 நெல் சேமிக்கும் வகையில் இருந்தால் மட்டும்  போதுமா? பிற கூலங்களையும் பொருள்களையும் சேமித்து வைக்க வேண்டாவா?  வீடு எது, ஓடம் எது என்று தெரியாத அளவிற்கு மீன்வகைகளும் பிற பொருள்களும் மிளகு மூட்டைகளும் குவிக்கப்பட்டுச்  சேமிக்கப்படும் வகையில் பெரிய அளவில் வீடுகள் அமைந்திருந்தமையைப் புலவர் பரணர்,
மிசைஅம்பியின் மனைமறுக்குந்து
மனைக்குவைஇய கறிமூடையால் (புறநானூறு : 343.2) எனக்
குறித்துள்ளார். (மிசை அம்பி உயர்வான படகு; குவை-குவியல்; கறி மிளகு)
குடும்பத்தினருக்கு மட்டும் ஏற்ற வகையில் வீடுகள் அமைந்திருந்தால்  பணியாளர்கள் எங்கே இருப்பர்?   புலவர் குன்றுகட் பாலியாதனார், மனைக் களமர் (புறநானூறு 387.25) என்னும்  அடி மூலம் வீடு நிறையப் பணி செய்யும் உழவர்கள் இருந்தனர் என்பதை விளக்குகிறார்.  எனவே, உழவர்கள் நிறைந்திருக்கும் அளவிற்கு வீடுகளும் பெரிய அளவினதாகக் கட்டப்பட்டுள்ளன; மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் அமைந்த சிறப்பான நகரமைப்பைப் பழந்தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதைப் புறநானூறு மூலமும் நாம் அறிய முடிகிறது. 
புலவர் கோவூர்கிழார்,  கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் சேமித்து வைக்கப்பட, தை மாதத்தில் பொய்கை குளிர்ந்திருப்பதைப் போலக் குளிர்ச்சியாகவும் அகலமாகவும் வீடுகள் கட்டப்பெற்றிருந்தன என்பதைத்,
தைஇத் திங்கள் தண் கயம் போல கொளக்
கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறநானூறு : 70.7) என்கிறார்.
புதிதாய்த் தோன்றிய பிறைநிலா போன்று வெண்மையான சுதையால் செய்யப்பெற்ற மாடத்தையும் குளத்திலுள்ள பனிநீர் போன்று குளிர்ச்சியையும் உடைய அரண்மனையைப் புலவர் ஊன்பொதி பசுங்குடையார்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் (புறநானூறு : 378.7) என்கிறார். (சுதை-
சுண்ணாம்பு; பனிக்கயம் குளிர்ந்த நீர்நிலை) பொருள்களைக் கெட்டுப்போகாமல் காக்க, இன்றைக்குத் தண்கலன்கள் உள்ளன. அன்றைக்கோ தண்மனைகள் இருந்துள்ளன என்பது வியப்பாக உள்ளது அல்லவா?
செல்வச்சிறப்பு மிக்க மாளிகைகள் நிறைந்தமையாலேயே இப்பட்டினம் திருநகர் என குறிக்கப்பெற்றுள்ளது. எனவே, நகரங்கள் சிறப்பார்ந்த கட்டடங்கள் மிகுந்து இருந்தன  என்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன.
அரணும் மதிலும் சிறப்பும் மிகுந்த அரண்மனையையும் நகர் என்றே குறித்துள்ளனர். சான்றுக்குச் சில பார்ப்போம்.
புலவர் உறையூர் ஏணிச்சேரி  முடமோசியார், முரசு பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயிலாகிய அரண்மனையை, முரைசு கெழு செல்வர் நகர் (புறநானூறு : 127.10) என்கிறார். புலவர் ஆலந்தூர்க்கிழார், நீண்ட மதிலுடன் பாதுகாப்புடன் விளங்கும் அரண்மனையை, நெடுமதில் வரைப்பின் கடுமனை (புறநானூறு : 36.10) என்கிறார்.
எந்திரவியலிலும் பழந்தமிழர்கள் சிறந்திருந்தனர். கோட்டை வாயில், அரண் முதலான பலவும் இயந்திர நுட்பத்துடன் அமைக்கப்பட்டிருந்தன. அக்காலக்கட்டத்தில் அத்தகைய  எந்திர நுட்பம் வேறு எந்த நாட்டிலும் இருந்ததில்லை. எந்திர ஊர்தி இருந்ததாகவும் குறிப்புகள் உள்ளன. கரும்பாலை இயந்திரம் போன்றவையும் எந்திரஇயலின் நுட்பத்தால் உருவானவையே. புறநானூற்றிலும் இது குறித்த பாடலடி இடம் பெற்றுள்ளது.
தமரெனின்    யாவரும்  புகுப
அமரெனின் திங்களும் நுழையா
எந்திரப்     படு புழை  (புறநானூறு 177 )
என்கிறார் புலவர் ஆவூர் மூலங்கிழார்.
   நாட்டிற்குரியவர்கள் அனைவரும் தடையின்றி நுழையும் வண்ணம்   கோட்டைவாயில் அமைக்கப்பட்டிருந்தது.  அதே நேரம், போர்க்காலத்தில் பகைவர் எவரும் நுழைய முடியாதபடி, திங்கள் ஒளியும்கூட உள்ளே நுழைய இயலாதபடி, எந்திரப் பொறிகளை உடைய இட்டி வாயிலை உடையதாக இருந்துள்ளது என இப்பாடலடிகளில் புலவர் தெரிவித்துள்ளார். இத்தகைய எந்திரச் சிறப்பு குறித்துப் பிற பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்புகள் உள்ளன. இவைபோல் புறநானூறும் தெரிவித்துள்ளது.
நெடுநகர் வரைப்பு ( மாறோக்கத்து நப்பசலையார் 280.3 ; அரிசில் கிழார் 281.6;) நெடு நகர் (அரிசில் கிழார்  285.8), கூடு விளங்கு வியன் நகர் ( நெற்கூடு விளங்கும் அகலிய  நகரின்கண்-பரணர்:148.4), ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் (விளங்கியவாளையுடைய வேந்தரது  ஒள்ளிய விளக்கத்திணையுடைய உயர்ந்த கோயிற் கண் - ஆவூர் மூலங்கிழார் :177.1), வளம் கெழு திருநகர்( செல்வம் பொருந்திய அழகிய நகர்-ஆவூர் மூலங்கிழார்: புறநானூறு 261.6; தாயங்கண்ணியார் 250.6;),நெல்லுடை நெடுநகர் (சாத்தந்தையார் 287: 9), கபில நெடுநகர் (கபிலர்  337.11), திருநகர் (உலோச்சனார் 377.3), அருங்கடி வியன்நகர் (மாறோக்கத்து நப்பசலையார் 383) என்னும் தொடர்கள்,  வீடுகள் இக்காலம் போலவே மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டிருந்தன என்பதை விளக்குகின்றன.
காவற்சிறப்புடன் நகரங்களும் மனைகளும் அமைக்கப்பட்டிருந்தன என்பதை,காவலர்  கனவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர் (390), கடியுடை வியன்நகர் (272.4)என்னும் அடிகள் விளக்குகின்றன.
செல்வச் செழிப்பை வெளிப்படுத்தும்வகையில் நகரங்களும் மனைகளும்  உருவாக்கப்பட்டன என்பதைச் செழுநகர்(391), முரைசு கெழு செல்வர் நகர் (127.10), பொன்னுடை நெடுநகர்(198.16) முதலான தொடர்கள் எடுத்துரைக்கின்றன.
  வானியல், உடையியல், ஒப்பனையியல், மருந்தியல், பொறியியல், ஊர்தி்யியல், படையியல், பயிரியல், விலங்கியல், பறவையியல், உடலுறுப்பியல், காற்றியல், தோலியல், புவியியல், பூச்சியியல், நீந்துவனவியல், கடலியல்  முதலான பல்வேறு அறிவியல் துறைச்செய்திகள் புறநானூறு முதலான சங்க இலக்கியங்களில் உள்ளன. சான்றுக்குப் புறநானூற்றில் இருந்து சில துறைக் குறிப்புகள் சிலவற்றைப் பார்த்துள்ளோம். இவற்றை இலக்கியக் குறிப்புகளாக எண்ணாமல் அறிவியல் உண்மைகளாக அறிவியல் பாடங்களிலும் படித்துத் தமிழ் அறிவியலை வளர்த்தெடுப்போம்!
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (குறள் 352)என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
எல்லா அறிவியலும் மேனாட்டிற்குரியனவே என்னும் அறியாமை நீங்கி நடுநிலையுடன் ஆராய்ந்தால் பன்னெடுங்காலத்திற்கு முன்பே நம் தமிழர் அறிவியல் வளத்தில் சிறந்திருந்ததை உணரலாம்.
புறநானூற்றைப் பரப்புவோம்! 
தமிழ்அறிவியல் வளத்தை மீட்டெடுப்போம்!
 - இலக்குவனார் திருவள்ளுவன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக