திங்கள், 10 ஜூன், 2013

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி கூடாது: கோ.க.மணி

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி கூடாது: கோ.க.மணி

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி கூடாது என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிக்கை ஒன்றில் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
இலங்கை ராணுவத்தை சேர்ந்த உயரதிகாரிகள் இருவருக்கு  நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரியில் மே 27&ஆம் முதல் பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்காக அந்நாட்டு அதிபர் இராஜபக்சே மற்றும் ராணுவ உயரதிகாரிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று ஒட்டு மொத்த தமிழகமும் வலியுறுத்தி வரும் நிலையில், சிங்கள அதிகாரிகளுக்கு தமிழகத்திலேயே ராணுவ பயிற்சி அளிப்பது தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.
 இலங்கையில் கடந்த 2009&ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி  தமிழர்களை சிங்களப் படையினர் படுகொலை செய்தனர். இலங்கை இனப்படுகொலையை நடத்திய சிங்களப் படையினருக்கு இந்தியா தான் பயிற்சி அளித்ததாக இலங்கை அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. தமிழக மீனவர்கள் மீதும் சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் படுகொலை செய்த சிங்களப் படையினருக்கு இந்தியாவில் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதை மதிக்காமல் கடந்த ஆண்டு சென்னை தாம்பரத்திலும், ஊட்டி வெலிங்டனிலும் சிங்களப்படையினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்ட போது அதைக் கண்டித்து தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதையடுத்து தமிழகத்தில் பயிற்சி பெற்று வந்த இலங்கை ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் பெங்களூர் மற்றும் டேராடூனுக்கு அனுப்பப்பட்டனர். அதுமட்டுமின்றி, தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து தமிழகத்தின் எந்தப் பகுதியிலும்  இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் இதை உறுதி செய்திருந்தார். அந்தோணி இவ்வாறு அறிவித்த அதே நாளில், அதே நேரத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு வெலிங்டனில் பயிற்சி தொடங்கப்பட்டிருப்பது மத்திய அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது. ஒருபுறம் தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாக கூறிக் கொண்டு,  இன்னொரு புறம் சிங்களப் படையினருக்கு பயிற்சி அளித்து தமிழக மக்களின் உணர்வுகளை மிதிப்பது கண்டிக்கத் தக்கதாகும்.
இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பது முறையல்ல. தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து, வெலிங்டனில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை நிறுத்தி அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும். இலங்கைப் படையினருக்கு  இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இனி பயிற்சி அளிக்கப்படாது என்று அறிவிப்பதுடன், இலங்கை ஆட்சியாளர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் மீது போர்க்குற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ளவேண்டும். அதுமட்டுமின்றி, இனப்படுகொலை பூமியான இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்றவும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் கோரிக்கை ஆகும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக