வெள்ளி, 15 மார்ச், 2013

தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதே அழகு

தமிழ்நாட்டின் முதல்வராக   இருப்பதாலும் தமிழ் மக்களின் கட்சித் தலைவராக இருப்பதாலும் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதே தமக்கு  அழகு என்பதை முதல்வர் உணர வேண்டும். அணுக்கத்தில் இருப்போர் அதை உணர்த்த வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

புலிக்குட்டிகளுக்கு ப் பெயர் சூட்டல்











முதல்வர் இன்று (15.3.2013) காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இரண்டு ஆண் வெள்ளைப் புலிக்குட்டிகளுக்கு அர்ஜூனா, ஆத்ரேயா என்றும், இரண்டு பெண் வெள்ளைப் புலிக்குட்டிகளுக்கு காவேரி, சித்ரா என்றும், மூன்று பெண் புலிக்குட்டிகளுக்கு நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்றும், மொத்தம் ஏழு புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார்கள். மேலும், 21 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பல்வேறு கட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 1 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 602 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பூங்காவில், 45 வகை பாலூட்டி இனங்கள், 70 வகை பறவையினங்கள் மற்றும் 29 வகை ஊர்வன இனங்கள் என மொத்தம் 144 வன உயிரினங்களைச் சார்ந்த 1398 விலங்குகள் பார்வைக்கு உள்ளன. இந்த உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி, சிங்கவால் குரங்கு போன்ற அழிந்துவரும் நிலையில் உள்ள வன உயிரினங்கள் இனவிருத்தி செய்யும் மையம் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இங்கு வருகை புரிகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு முதல்வர் இன்று நேரில் வருகை தந்து ஏழு புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார்கள். இரண்டு ஆண் வெள்ளைப் புலிக்குட்டிகளுக்கு அர்ஜூனா, ஆத்ரேயா என்றும், இரண்டு பெண் வெள்ளைப் புலிக்குட்டிகளுக்கு காவேரி, சித்ரா என்றும், மூன்று பெண் புலிக்குட்டிகளுக்கு நேத்ரா, வித்யா, ஆர்த்தி என்றும் பெயர்கள் சூட்டப்பட்டன.
 மேலும், 27.9.2011 அன்று முதல்வரால் பெயர் சூட்டப்பட்ட ராமா என்ற ஆண் வெள்ளை புலிக்குட்டியையும், சந்திரா என்ற பெண் வெள்ளை புலிக்குட்டியையும்; பூங்காவில் உள்ள யானைகள் இருப்பிடத்தில், தாயினால் கைவிடப்பட்ட அசோகன் (18 மாதம்), கிரி (3 வயது), உரிகம் (3-1/2 வயது), சரவணன் (5 வயது) ஆகிய நான்கு ஆண் யானைக் குட்டிகளையும்; நீர்யானைகள் இருப்பிடம் சென்று அங்குள்ள வாம்புரி (14 வயது – ஆண்), சௌந்தர்யா (14 வயது – பெண்), பிரகதி (6 வயது – பெண்) மற்றும் திரிஷா (1 வயது – பெண்) ஆகிய நான்கு நீர் யானைகளையும் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 7 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தலைமை நிர்வாகக் கட்டடம் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் விடுதிக் கட்டடம்; 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அரிய வன உயிரினங்களின் இனப்பெருக்க அறிவியல் ஆராய்ச்சி மையக் கட்டடம்; காஞ்சிபுரம் மாவட்டம், நன்மங்கலத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு உயிர்ப் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட தலைமை அலுவலகக் கட்டடம்; நன்மங்கலத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வனவியல் விரிவாக்க செயல் விளக்க மையக் கட்டடம்; கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வனஉயர் பயிற்சியகத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நூற்றாண்டு நினைவு மண்டபம்; என மொத்தம் 21 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
மேலும், சென்னை, வேளச்சேரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்திய வனப்பணி அலுவலர்கள் உணவக விடுதி கட்டடம்; திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வனச்சரக அலுவலகக் கட்டடம்; திருத்தணியில் 11 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வனச்சரக அலுவலகக் கட்டடம்; திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வனச்சரக அலுவலகக் கட்டடம்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேட்டை தடுப்பு முகாம் கட்டடம்; நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேட்டை தடுப்பு முகாம் கட்டடம்; என மொத்தம் 1 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக