புதன், 23 மே, 2012

என் அம்மாவிற்காகப் படிப்பேன்!':

சொல்கிறார்கள்

என் அம்மாவிற்காகப் படிப்பேன்!'
:

 
வறுமையால், குழந்தைத் தொழிலாளியாக இருந்து, இன்று ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்துள்ள அம்சராஜ்: என் சொந்த ஊர், ஓசூர். அம்மா ஒரு தொழிற்சாலையில், மெஷின் ஆபரேட்டராக உள்ளார். என் அப்பா குடிகாரர். என் உடன்பிறந்தவர்கள் ஐந்து பேர்.
நான் ஆறாவது படிக்கும் போது, படிப்பை பாதியில் கைவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் இருந்து, 1,500 ரூபாய் பணத்தை திருடி விட்டதாக, என் மேல் பழி சுமத்தினார் அப்பா. என்னை குற்றவாளி போல் நடத்தியதை தாங்கிக் கொள்ள முடியாமல், அம்மாவிடம் 250 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, வீட்டை விட்டு ஓடினேன். ரயிலில், டிக்கெட் வாங்காமல், சென்னைக்கு வந்து விட்டேன்.
என் நிலையைப் பார்த்த சிலர், ஒரு டீக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டனர். அப்போது தான், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்களிடம் மாட்டிக் கொண்டேன். அவர்கள் எனக்கு, "கவுன்சிலிங்' கொடுத்தனர். நான் இருக்கும் இடத்தை, என் அம்மாவிற்கு தெரியப்படுத்தினர். என்னை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.படிப்பை பாதியில் விட்டு விட்டதால், அனைத்தும் மறந்து விட்டது. அந்த நிலையில் மீண்டும் படிக்க வேண்டுமெனில், சோம்பேறித்தனமாக இருக்கும். ஆனால், நான் சாதிக்க வேண்டும் என, முயற்சி செய்து படித்தேன்.
திருவொற்றியூரில் உள்ள, மாநகராட்சிப் பள்ளியில், பிளஸ் 2 படித்து, 787 மதிப்பெண்கள் எடுத்து, தேர்ச்சி பெற்றேன். என்னைப் போன்ற ஏழை மாணவர்களுக்கு, பாடம் கற்றுத் தர வேண்டும் என்பதே, என் விருப்பம். அதனால் தான் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்துள்ளேன்.எங்களுக்காகவே வாழும் என் அம்மாவிற்காகவாவது, நான் படிக்க வேண்டும்; நன்றாகப் படித்து அவரின் கஷ்டத்தைப் போக்க வேண்டும். பேராசிரியர் ஆக வேண்டும் என்பது தான், என் லட்சியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக