ஞாயிறு, 22 ஜனவரி, 2012

Parents should be Role Model : பெற்றோர் முன்முறையாக இருக்க வேண்டும்!

சொல்கிறார்கள்


குழந்தைகள் நல மருத்துவர் லதா சந்திரசேகரன்: முன்பெல்லாம், "என் குழந்தை ஒல்லியாகவே உள்ளது' என்ற கவலையுடன் தான், பெற்றோர் வருவர். குழந்தை ஒல்லியாக இருப்பதற்கான காரணம், போதிய சத்து நிறைந்த உணவுப் பொருளைச் சாப்பிடாமல் இருப்பது அல்லது குறைவாகச் சாப்பிடுவது தான். ஆனால், இப்போதுள்ள குழந்தைகளின் மிகப் பெரிய பிரச்னை, உடல் பருமன் தான்.பெற்றோர் வேலைக்குச் செல்வதால், பல வீடுகளில் மதிய உணவிற்கு நூடுல்சையும், குழந்தைகள் பள்ளி முடிந்து வீடு வந்ததும், சமோசா, சிப்ஸ் போன்றவற்றையும் கொடுத்து, அதையே ஒரு உணவுப் பழக்கமாக ஆக்கிவிடுவர். அடுத்த காரணம், "டிவி' பார்த்துக் கொண்டே, ஏதோ ஒன்றைச் சாப்பிடுவது."வெளியில் சென்று விளையாடுவதற்கு நேரமும் இல்லை; இட வசதியும் இல்லை' என்று காரணம் சொல்லி, கம்ப்யூட்டர், "டிவி'யுடன் குழந்தைகள் தங்கள் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால், சீக்கிரமே குண்டாகி விடுகின்றனர்.குழந்தைகள் குண்டாகாமல், சரியான உடல் பருமனுடன் இருக்க வேண்டுமானால், அதற்கு பெற்றோர் ஒரு நல்ல ரோல் மாடலாக இருக்க வேண்டும். தினமும் பெற்றோர் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்து தான், குழந்தைகளும் செய்ய ஆரம்பிப்பர்.சிறு வயதிலேயே, குழந்தைகளுக்கு உடல் பருமன் இருந்தால், தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கும். சில பெண் குழந்தைகளுக்கு, கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது.தினமும், நடைப் பயிற்சி, ஓடி ஆடி விளையாடுவது, எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்ணாமல் இருப்பது, ஐஸ்கிரீம், சாக்லெட் போன்றவற்றை அதிகம் சாப்பிடாமல், நிறைய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் பருமன் என்ற பேச்சிற்கே இடமில்லை.

                                          "ஏழைகளின் பிரிஜ்!'                           

களி மண்ணால் ஆன, "பிரிஜ்' தயாரித்துள்ள குஜராத்தைச் சேர்ந்த மன்சுக்பை பிரஜாபதி: 2001ல், குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, மார்பி பகுதியில் இருந்த அனைத்து மண் குடங்களும் உடைந்து விட்டன. அடுத்த நாள் செய்தித்தாளில், "ஏழைகளின் "பிரிஜ்' உடைந்து விட்டது' என்று தலைப்பிட்டு, உடைந்த பானையுடன் படங்கள் வெளியாகியிருந்தன. இதுவே, எனக்கு களிமண்ணால் ஆன, "பிரிஜ்' செய்ய தூண்டுகோலாக இருந்தது. மின்சாரம் இல்லாமல் இயங்கும் இதற்கு, பராமரிப்பு அறவே தேவையில்லை. இதில், காய்கறிகளை அதன் சுவை மாறாமல், ஐந்து நாட்களும், பாலை, 24 மணி நேரமும் கெடாமல் வைத்திருக்கலாம். மேலும், 20 லிட்டர் நீரைக் குளிர்விக்க முடியும். இதன் விலை, 2,500 ரூபாய் தான்! நம் பாட்டி காலத்தில், பானையில் மோர் ஊற்றி வைத்து, உச்சிவெயில் நேரத்தில், குளிர்ச்சியான மோர் குடிப்பர். அந்த கோட்பாடு, தான் இதற்கும். பிரிஜின் மேல்புறத்தில் உள்ள வெப்பம், நீராவி மூலம் வெளியேற்றப்படுவதால், அறையின் வெப்ப நிலை குறைவாக இருக்கும். இதில், இரண்டு பாகங்கள் உள்ளதால், மேல் பக்கத்தில் நீரையும், கீழே காய், கனி, பால் முதலியவற்றையும் சேமித்துக் கொள்ளலாம். இதுவரை நான் களிமண்ணால் ஆன, பிரஷர் குக்கர், நீர் வடிகலன் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளேன். என் கண்டுபிடிப்பைப் பாராட்டி, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், 2003ல் தேசிய விருது வழங்கினார். பல நாட்டைச் சேர்ந்த அறிஞர்கள், என் கண்டுபிடிப்பைப் பாராட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக