வெள்ளி, 27 ஜனவரி, 2012

பெற்ற பிள்ளைகள் மாதிரி தான் உயிரிகளும்!

பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள நாகராஜ்: எங்க கொள்ளுத் தாத்தா பொழுதுபோக்கிற்காக, குதிரைகள், புறாக்கள் வளர்த்திருக்கார். எங்க தாத்தா, புறாப் பந்தயத்தில் வெள்ளைக்காரர்களை ஜெயித்து, பதக்கங்கள் குவித்தவர். எங்க அப்பாவும், குதிரை, புறாப் பந்தயங்களில் பரிசுகளை அள்ளியவர். அடுக்கு மாடி குடியிருப்பெல்லாம் இல்லாமல், அப்போது ராயப்பேட்டை பகுதியே, மரம், செடி, கொடி என்று ரம்மியமாக இருக்கும். நான் விலங்கு, பறவைகள் என்று பார்த்தே வளர்ந்தவன். அதனால் தான், எவ்வளவு செலவானாலும், இவற்றை வளர்க்கிறேன். நாங்க இப்ப இட்லிக் கடை நடத்துகிறோம். அந்த வருமானத்தில் தான் இவற்றை எல்லாம் பராமரிக்கிறோம். அதனால், முன்பு போல், இப்ப குதிரைகளை நிறைய வளர்க்க முடியவில்லை. ஆனால், எங்களிடம் உள்ள புறா வகைகளை சரணாலயங்களில் கூட பார்க்க முடியாது; கர்ணம், ஓமர் என்று பல வகைகள் உள்ளன. கர்ணப் புறா அந்தரத்தில் பறக்கும் போது, கர்ணம் அடிப்பதைப் பார்க்க, பரவசமாக இருக்கும். ஓமர் புறா புத்திசாலி; டில்லியில் கொண்டு போய் விட்டாலும், வீட்டை சரியாகக் கண்டுபிடித்து வந்துவிடும். புறாப் பந்தயம்னா கண்டிப்பாக பங்கேற்போம். நடுவர்கள் காலையில், 8 மணிக்கு, வீட்டிற்கு வந்து புறாக்களுக்குத் தீனிப் போட்டு பறக்க விடுவாங்க; கீழே இறங்காமல், தொடர்ந்து எட்டு மணி நேரம் பறந்து, மாலை 4 மணிக்கு திரும்ப வேண்டும்; ஒரு நிமிடம் முன்பு வந்தால் கூடதோல்வி; இதுவரை, 25 பந்தயம் ஜெயித்துள்ளோம். காலையில், எங்க வீட்டு மாடியில், புறாக்களைப் பறக்க விடுவதைப் பார்ப்பதற்கு, அவரவர் வீட்டு மாடிகளில் கூடி நிற்கும் நிறைய ஆட்களைப் பார்க்கலாம். பிராணிகளுக்காக ஒரு நாளுக்கு, 500 ரூபாய் செலவழிக்கிறேன்; பெற்ற பிள்ளைகளுக்கு செலவு செய்வது போலத் தான் இதுவும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக