திங்கள், 19 டிசம்பர், 2011

இலங்கை அறிக்கை பற்றி மனித உரிமை அமைப்புகள் கண்டனம்


கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 டிசம்பர், 2011 - 16:36 ஜிஎம்டி
நல்லிணக்க ஆணைக்குழு
நல்லிணக்க ஆணைக்குழு
இலங்கையில் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டு யுத்தம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி மகிந்தவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை சர்வதேச மனித உரிமை  அமைப்புக்கள் கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டுள்ளன.
இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்றும் அந்த அமைப்புகள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளன.
போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கைப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல்களை எதனையும் திட்டமிட்டு நடத்தவில்லையென்று கூறியிருக்கின்ற நல்லிணக்க ஆணைக்குழு, விடுதலைப்புலிகள் மீது நேரடியாக பல உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கை, இலங்கையில் மோசமான மனித உரிமை பிரச்சனைகள் இருப்பதாக ஒப்புக்கொள்கின்ற போதிலும், அங்கு நடந்துள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் முழுமையாக கவனத்தில் எடுக்கவில்லையென அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு விசனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆணைக்குழு ‘ஒருபக்கச் சார்பானது என்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் அக்கறை செலுத்தத் தவறுகிறது என்றும்’ ஏற்கனவே தமக்கிருந்த அச்சத்தை இந்த அறிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் ஆசிய பசுபிக் பிராந்திய இயக்குநர் சாம் சரீஃபீ சுட்டிக்காட்டினார்.
இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் அடுத்த அமர்வின்போது இலங்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார்.

'சர்வதேச விசாரணை தேவை'

இதேவேளை, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஐசிஜி என்கின்ற சர்வதேச நெருக்கடிகள் தொடர்பான குழு ஆகிய அமைப்புகளுடன் சேர்ந்து நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதை நிராகரித்த ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த இந்த அறிக்கையில் புதிய விடயங்கள் எதுவும் இல்லையென்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
போர்க் குற்றங்களுக்கான பொறுப்பாளிகளை இலங்கை அரசின் இந்த ஆணைக்குழு கண்டறிய வேண்டும் என்பதற்காக கடந்த 18 மாதங்களாக ஐநாவும் உலக நாடுகளும் காத்திருந்ததாகவும் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய விவகாரங்களுக்கான இயக்குநர் ப்ராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் இந்த இயலாமைகளும் தவறுதலுகளுமே சர்வதேச விசாரணையொன்றுக்கான தேவையை வலியுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த அறிக்கையை ‘ஒரு பூசி மெழுகும் செயல்’ என்று இலங்கை தொடர்பில் பிரிட்டனிலிருந்து இயங்கும் சமாதானத்திற்கும் நீதிக்குமான அமைப்பு வர்ணித்துள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக