ஞாயிறு, 16 அக்டோபர், 2011

Prof.Dr.S.Ilakkuvanr article about thamizh, mother of indial lagnuages: வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10: தமிழும் ஆரியமும்! - பேராசிரியர் சி.இலக்குவனார்

இந்தக் கட்டுரையை வெளிப்படுத்தியதன் மூலம் தினமணி ஆசிரியர்  குழுவினர் தங்கள் தமிழ்ப்பற்றையும்  தமிழே இந்திய மொழிகளின்தாய் என்னும் உண்மையை வெளிப்படுத்தும் ஆர்வத்தையும் வெளிப்படுததி உள்ளனர். செந்தமிழ் மாமணி பெரும்பேராசிரியர்  முனைவர்  சி.இலக்குவனார் அவர்கள் கட்டுரையை வெளியிட்டமைக்குத்  தினமணிக்குப் பாராட்டுகள். இக் கட்டுரை பாட நூல்களில் இடம் பெறுவது மொழி ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அன்புடன்  பொறுப்பாளர்க்ள, இலக்குவனார் இலக்கிய இணைம் &  இலக்குவனார் இலக்கிய மன்றம்.

வேருக்கு நீர் வார்த்தவர்கள்-10: தமிழும் ஆரியமும்!

First Published : 16 Oct 2011 02:43:18 AM IST


மக்கள் நன்மைக்காக மக்களாற் படைத்துக் கொள்ளப்பட்டவற்றுள் மாண்பு மிக்கு விளங்குவது மொழியொன்றே. மக்களை விலங்குகளினின்றும் வேறுபடுத்தி உயர்த்துவதும் மொழியே. மக்களை மக்களாக வாழச்செய்வதும் மொழியே. மொழியின்றேல் உலகில் ஒன்றுமே இன்று (இல்லை) எனக் கூறலாம்.  ஆரியர்கள் இந்நாட்டிற்கு வருவதற்கு முன்னர், இமயம் முதல் குமரி வரை வழக்கில் இருந்த மொழி "தமிழ்'தான் என்பது நடுநிலை தவறாத ஆராய்ச்சியாளர் நூல்களால் அறியப்படும் உண்மையாகும். ஆரியம் தமிழோடு கொண்ட கலப்பின் பயனாகவே இன்று நம் பரதகண்டத்தில் உலவும் மொழிகள் உருவாகி வளர்ந்துள்ளன. ஆதலின், இந்திய மொழிகளின் தந்தையாக ஆரியத்தையும், தாயாகத் தமிழையும் ஆராய்ச்சியாளர் சிலர் உருவகப்படுத்திக் கூறுவர். ஆரியத்தைத் தந்தையென அழைத்து அதற்கு முதன்மை கொடுப்பதாக எண்ணி மகிழ்ந்தாலும், "இந்திய மொழிகளின் தாய் - தமிழ்' என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது; ஆரியமே இந்திய மொழிகளின் அன்னை என்ற கொள்கை உண்மைக்கு மாறுபட்டது என்பது வெளிப்பட்டுவிடுகின்றது.  ""சதுர்மறை ஆரியம் வருமுன்  சகமுழுது நினதாயின்  முதுமொழி நீ அநாதியென  மொழிகுவதும் வியப்பாமோ''  என்னும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை அவர்கள் கூற்று, மொழிப்பற்று மிக்க புலவர் கூற்று எனப் புறக்கணித்துவிடல் இயலாது. பரதகண்டம் முழுவதும் பரவி வழங்கிவந்த பழந்தமிழோடு, ஆரியம் கலப்புற்றுப் பல்வேறு கிளைமொழிகள் உருவாகியுள்ளன. வடஇந்திய மொழிகள் தமிழ்க்குழு மொழிகளோடு வேறுபட்டன போல் தோன்றினும், தமிழ்மொழி அடிப்படையிலேயே அவை உருவாகி வளர்ந்துள்ளன என்பது நுணுகி ஆராய்வார்க்குத் தெள்ளிதிற் புலனாகும்.  ""வடாது பனிபடு நெடுவரையும், தெனாது உருகெழு குமரிக்கடலும்'' எல்லைகளாகக்கொண்டு வழங்கிவந்த பழந்தமிழ், ஆரிய மொழிக் கலப்பால் சிதைவுண்டு காலப்போக்கில் பல்வேறு கிளைமொழிகளாகக் கிளைத்தது. ஆரிய மொழித்தன்மை மிகுந்துள்ள மொழிகள் "ஆரியக் குடும்ப மொழிகள்' எனவும், தமிழ்த்தன்மை மிகுந்த மொழிகள் "தமிழ்க் குடும்ப மொழிகள்' (திராவிடக் குடும்ப மொழிகள்) எனவும் அழைக்கப்படுகின்றன. ஆரிய மொழிகளும் அதனைச் சார்ந்துள்ள மொழிகளும் தமிழ்த் தன்மைகளை மிகுதியான அளவில் இன்றும் கொண்டு விளங்குகின்றன. அன்றியும் ஆரிய மொழி, எழுத்துக்களைப் படைத்துக் கொண்டதே அது தமிழோடு தொடர்பு கொண்ட பின்னர்தான் என்பது இருமொழி எழுத்துக்களையும் நுணுகி ஆராய்ந்தால் தெள்ளிதின் புலனாகும்.  இரு மொழிகளும் வேறுபட்ட இனத்தனவாயிருந்தும் இரண்டிலும் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒü என்னும் பத்து உயிர்களும்; க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம, ய, ர, ல, வ, ள என்னும் பதினைந்து மெய்யெழுத்துக்களும் ஒத்திருக்கின்றனவே! எதனால் இவ்வொற்றுமை? ஒன்றைத் தழுவி இன்னொன்று அமைத்துக் கொண்டாலன்றி இவ்வொற்றுமை ஏற்பட இயலாதன்றோ? எதனைத் தழுவி எது அமைத்துக் கொண்டது?  வடமொழியில் உள்ள ஐவ் வருக்கங்களை நோக்கினால், தமிழினைத் தழுவித்தான் ஆரியமொழி தன் எழுத்துக்களை அமைத்துக்கொண்டது என்பது புலனாகும். ஐந்து வருக்கங்களிலும் முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் இரண்டு மொழிகளிலும் ஒன்றே. இடையில் உள்ள மூன்று எழுத்துக்களும் ஆரியம் மிகுதியாகப் பெற்றுள்ளது. தமிழிலும் அவ்வொலிகள் உண்டு. ஆனால், அவ்வொலிகளைக் காட்டும் தனி வரி வடிவங்கள் இல்லை. கடன் பெற்ற கூர்த்த மதியுடைய ஆரியம், புதிய வரி வடிவங்களைப் படைத்துத் தன் நெடுங்கணக்கினை விரிவுபடுத்திக் கொண்டது; வரி வடிவக் குறைபாடற்ற மொழியாகிவிட்டதாகக் காட்டிக்கொண்டது. நன்றாகச் செய்யப்பட்டது "சமஸ்கிருதம்' - என்று தன்னை அழைத்துக் கொண்டது.  ஏன்? தமிழ்மொழி ஆரியத்தைத் தழுவித் தன் நெடுங்கணக்கை அமைத்துக் கொண்டது என்று கூறினால் பொருந்தாதோ எனின், முற்றிலும் பொருந்தாது. கடன் கொடுப்பான் ஒருவன் வேண்டியன பெற்றுக்கொள் என்று உரிமையளிக்குங்கால், குறைவாகப் பெறுவார் இருப்பாரோ? இரார். அங்ஙனமே தமிழ் ஆரியத்தினின்றும் கடன் பெற்றிருக்குமேல் குறைபாடுடைய முறையில் கடன்பெறக் காரணம் இல்லை. ஆரிய நெடுங்கணக்கைப்போல் அமைத்துக் கொண்டிருக்கலாமே. தமிழினின்றும் உருமாறிப் பிரிந்த தெலுங்கு, மலையாளம் பிற்றை நாளில் அவ்வாறு செய்துகொள்ளவில்லையா? ஆதலின் தமிழ் நெடுங்கணக்கைக் கண்டபின்னரே அமைத்துக்கொண்டது என்பதே சாலப் பொருந்தும்.  ஆரியர் இந்நாட்டுக்கு வந்த காலம் கி.மு.2000 முதல், 1500 வரை என்பார்கள். அக் காலத்திலேயே தமிழ்மொழி எழுத்துக்களைப் பெற்றிருந்த "செம்மொழி'யாகும். தமிழ் எழுத்துக்களைக் கண்டே ஆரியமும், பொனீஷியர் மொழியும், எகிப்தியர் மொழியும் எழுத்துக்களை அமைத்துக்கொண்டன என்று கூறுதலே பொருந்தும். இதற்கு மாறாகச் சிலர் கருதுவது உண்மைக்கு மாறானதாகும்.  குமரியொடு வடவிமயத்து ஒருமொழியாய் வழங்கி வந்த தமிழ், ஆரியத்தின் கலப்பால் பல மொழிகளாகப் பிரிந்தது. தொல்காப்பியர் காலமாம் கி.மு. 7-ஆம் நூற்றாண்டு அளவில் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடையே தமிழ்' எனும் பெயருடன் தனியே நிலவியது.  குமரியென்று கூறப்படுவது இப்பொழுதுள்ள குமரிமுனை (கன்னியாகுமரி) அன்று எனவும், இலங்கைக்குத் தெற்கே பூமையக் கோட்டை ஒட்டியிருந்த குமரி மலையெனவும், குமரியாறெனவும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அன்றுள்ள தமிழின் நிலையைத் தொல்காப்பியத்தின் துணைகொண்டு நன்கு அறியலாகும்.  தொல்காப்பியத்தின் நூற்பாக்கள் இருவகையாக அமைந்திருக்கக் காணலாகும். சில விதிகளைத் தொல்காப்பியர் தாமே கூறுவதுபோல் அமைந்திருப்பது ஒரு வகை; பிறர் கூற்றினை மேற்கொண்டு கூறுவதுபோல் அமைந்திருப்பது இன்னொரு வகை. தமக்கு முன்பு நிலவிய வழக்கைக் கூறுங்கால் பிறர் கூற்றாகவே கூறுவார். தமிழுக்கு எழுத்துக்கள் முப்பது என்பதும், அவை அகர முதல் னகர இறுவாய் எண்ணப்பட்டு வந்தன என்பதும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள செய்திகள் என்பது அவர் நூற்பாவால் அறியலாம்.  ""எழுத்தெனப் படுப அகரமுதல்  னகர இறுவாய் முப்பது என்ப''  என்று கூறுவதை நோக்குமின். ஆனால், வடமொழிச் சொற்கள் தமிழில் கலக்குங்கால் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்று கூறும்போது தாமே கூறுவதுபோல் நூற்பா அமைந்துள்ளது.  ""வடசொற் கிளவி வடவெழுத்து ஒரூஇ  எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே''  என்னும் நூற்பாவில், "என்ப', "என்மனார்' போன்ற சொற்கள் இல்லாமையால், வடசொற்கள் தமிழில் கலக்குங்கால் வடவெழுத்துக்குரிய ஒலியால் எழுதப்பட வேண்டும் என்று விதி வகுத்தவர் தொல்காப்பியரேயாவார். இன்றும் இவ்விதி, பிறமொழிச் சொற்களை எவ்வாறு எடுத்தாளவேண்டும் என்பதற்கு நமக்கு வழிகாட்டுகின்றது.  ஆரியம், தமிழைக் கண்டு தம் ஒலி வடிவ எழுத்துக்களை அமைத்துக் கொண்டமையால் இருபத்தைந்து எழுத்துக்கள் இரண்டிலும் ஒன்றாய் உள்ளன. தமிழில் உள்ள எழுத்துக்கள் இருபத்தைந்தையும் ஏற்றுக்கொண்டு எ, ஒ, ற, ன, ழ என்னும் ஐந்து எழுத்துக்களை விட்டுவிட்டது ஆரியம். ஆகவே, எ, ஒ நீங்கிய உயிர் பத்தும்; க-ங, ச-ஞ, ட-ண, த-ந, ப-ம முதலிய பத்தும்; ய, ர, ல, வ, ள முதலிய ஐந்தும் ஆக, இருபத்தைந்தும் இரண்டுக்கும் பொதுவாம். தொல்காப்பியர் காலத்தில் எ, ஒ என்ற இரண்டும் புள்ளி பெற்று எழுதப்பட்டு வந்துள்ளன. எழுதுங்கால் புள்ளி விட்டும் எழுதியிருப்பர். அதனால், ஆரியர் குறில்களை விடுத்து, நெடில்களை அமைத்துக்கொண்டனர் போலும். தமிழ் மொழியின் ஈரோசைச் சட்ட இயல்பு அறியாது, ஒரு வரிவடிவம், ஒரே ஒலியைத்தான் குறிப்பிடவேண்டுமென்று கருதி, ஐவருக்கங்களிலும் மும்மூன்று எழுத்துக்களையும் பிற எழுத்துக்களையும் படைத்துக் கொண்டனர்.  இரு மொழிக்கும் உரிய பொதுவெழுத்துக்களால் ஆன சொற்கள் இரண்டு மொழிகளிலும் தடையின்றிப் பயிலத் தொடங்கின. தமிழ்ச் சொற்கள் பல ஆரியத்துள் சென்றன. ஆரியச் சொற்கள் தமிழிலும் புகுந்தன. ஆரியர்கள் செல்வாக்கு இந்நாட்டில் பெருகப் பெருகத் தம் மொழியில் புகும் தமிழ்ச் சொற்களை உருமாற்றி வடமொழிச் சொற்கள் எனக் கருதுமாறு ஆக்கிக்கொண்டனர். வடமொழியைக் கடவுள் மொழி (தேவ பாஷை) என்றும், ஏனைய மொழிகளைப் பேய்மொழிகள் என்றும் (பைசாச பாஷை) அழைத்தனர். வடமொழியானது கடன் கொடுக்குமேயன்றிக் கடன் கொள்ளாது என்றும் பறைசாற்றினர். தமிழ்மொழியாளர்கள் வடமொழியாளர்கள் மருட்டலில் மயங்கி, வடசொற்களைக் கலந்து பேசலே நாகரிகத்தின் உயர்வுக்கு அறிகுறி என்று தமிழ்மொழியில் வடசொற்களைக் கலந்து பேசலை மகிழ்ந்து ஏற்றனர். ÷தொல்காப்பியர் விதியையும் மறந்தனர். ஆரியத்தைக் கற்று அதில் நூல்களையும் இயற்றினர். ஆரியர்கள் இந்நாட்டு மக்களில் சிறுபான்மையினராக இருந்தமையால், இந்நாட்டு மக்கள் மொழியை அழித்துவிட முடியவில்லை. இந்நாட்டு மக்கள் ஆரிய மொழியின் சொற்களைத்தான் ஏற்றுக்கொண்டனரேயன்றி, மொழியின் அடிப்படை அமைப்பை மாற்றிக்கொண்டாரிலர். இந்நாட்டு மொழியமைப்பில் ஆரியமொழிச் சொற்கள் மிகுந்து புதுமொழிகள் தோன்றின. ஆனால் ஆரியம் மறைந்துவிட்டது. வட இந்திய மொழிகள் தமிழின் அமைப்பின் மீது வடசொற்களைக் கொண்டு கட்டப்பட்டவைகளாம். தென்னிந்திய மொழிகள் ஆரிய மொழியைப் பின்பற்ற முயன்றபோதும் தம் சொற்களை இழந்துவிடவில்லை. ஆதலின் தமிழ்த் தன்மை மிகுந்துள்ளன. வடஇந்திய மொழிகளினின்றும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.  வடஇந்திய மொழிகளும் தென்னிந்திய மொழிகளும் இன்று ஆரியக் குடும்ப மொழிகள் என்றும், திராவிடக் குடும்ப மொழிகள் என்றும் மொழிநூலாரால் அழைக்கப்படுகின்றன. எல்லாம் தமிழ்த் தாயினின்றும் தோன்றியனவேயாம். ஆரியம் உலக வழக்கழிந்து ஒழிந்ததுபோல் தமிழ் ஒழியாது. தமிழுக்குரியோர் இந்நாட்டு மக்கள். எங்கும் பெரும்பான்மையினராய் உள்ளனர். பெரும்பான்மையினர் மொழியை - இலக்கண அமைப்பும் இலக்கிய வளமும் கொண்ட மொழியை-  சிறுபான்மையினர் மொழி அழித்தல் இயலாது. ஆகவே, தமிழும் அதன்வழிப் பிறந்த மொழிகளும் ஒருநாளும் அழியா.  இன்று இந்தியாவின் ஆட்சிமொழியாக இருப்பதற்கு உரிமையுடையது தமிழேயாகும். இந்தி அதன் சொற்களால் ஆரியத்தின் வழிமொழியே என்றாலும், கட்டமைப்பால் தமிழேயாகும். கலப்பு மொழியாகும். அதற்குள்ள உரிமை தாய்மொழியாம் தமிழுக்கு இல்லையே! தமிழுக்கு முழு உரிமை அளிக்காது போயினும், இந்தியோடு வீற்றிருக்கும் சம உரிமையாவது அளிக்கலாம் அன்றோ? ஆகவே, இந்திய அரசின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாகத் தமிழையும் ஆக்குதல் வேண்டும்.  இந்தியர்கள் அனைவரும் தமிழைக் கற்பதற்குரிய வசதிகளையும் கல்வித் திட்டத்தில் ஏற்படுத்துதல் வேண்டும். வட இந்தியர்கள் தமிழையும் தென்னிந்தியர்கள் வடமொழியையும் கற்றல் வேண்டும். தமிழும் ஆரியமும் கற்கப்பட்டால் வடக்கு தெற்கு என்ற வேறுபாடு மறைந்து அனைவரும் ஒற்றுமையுற்று வாழும் நிலை தோன்றும். தமிழே "இந்திய மொழிகளின் தாய்' என்றும், ஆரியக் கலப்பால்தான் தமிழ் இவ்வாறு பல மொழிகளாகக் கிளைத்தது என்றும் அறியும் நிலை ஏற்படும். இருவேறுபட்ட இனத்தைச் சார்ந்த இரண்டும் இணைந்து தன்னியல் மாற்றம் உறாமல் தனித்தனியே வளர்ச்சியுற வழியமைத்தல் வேண்டும். குமரியொடு வட இமயத்து ஒரு மொழியாய் வாழ்ந்த தமிழ், ஆரியத்தால் அழிவுண்டது; ஆரியம் மறைந்துவிட்டது. அழிவுற்று உரிமையிழந்த தமிழை அரியணையில் ஏற்றுவதற்கு ஆவன செய்தல் அனைவர்க்கும் உரிய கடனாகும்.
(இக்கட்டுரை வெளியான ஆண்டு 21.8.1961).
-  பேராசிரியர் சி.இலக்குவனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக