வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

Saraswathi vijabaskar expired: 'சரசுவதி' விசயபாசுகரன் காலமானார்


கோவை, பிப். 10: முதுபெரும் பத்திரிகையாளரும், எழுத்தாளருமான "சரஸ்வதி' வ.விஜயபாஸ்கரன் (85) கோவையில் புதன்கிழமை இரவு காலமானார்.இவர் தற்போதைய திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி வடிவேல் பிள்ளையின் மகன். பள்ளிக் கல்வியை தாராபுரத்திலும், கல்லூரிக் கல்வியை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். கல்லூரிப் படிப்பின்போது அகில இந்திய மாணவர் பெருமன்றச் செயலராக பொறுப்பேற்று மாணவர் இயக்கத்தை முன்னின்று நடத்தியவர். இதன் காரணமாகவே அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.பின்னர் தினத்தந்தி, நவஇந்தியா, ஹனுமான், அணில், சக்தி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார். சமரன், விடிவெள்ளி ஆகிய அரசியல் இதழ்களிலும் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் விஜயபாஸ்கரன்.தமிழக இலக்கிய உலகில் தனிமுத்திரையைப் பதித்த முற்போக்கு இலக்கியப் பத்திரிகையான "சரஸ்வதி'-யைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். இப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் அவரோடு, மூத்த எழுத்தாளர்கள் தொ.மு.சி.ரகுநாதன், எஸ்ஆர்கே என அழைக்கப்படும் எஸ்.ராமகிருஷ்ணன், சுந்தரராமசாமி, ஆர்.கே.கண்ணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.ஐம்பதுகளில் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன், கு. சின்னப்ப பாரதி போன்ற தமிழகத்தின் மிகச் சிறந்த படைப்பாளிகளை அடையாளம் காட்டிய சரஸ்வதியில் எஸ்.பொ., கணேசலிங்கன், அ.முத்துலிங்கம் போன்ற இலங்கை வாழ் தமிழ் எழுத்தாளர்களும் அறிமுகமாயினர்.மணிக்கொடி இதழுக்குப் பின் முழுவீச்சோடு வலம் வந்த இலக்கிய இதழ் சரஸ்வதி. விஜயபாஸ்கரன் மார்க்சிய அணுகு முறை கொண்டவராக இருந்தபோதிலும் அதற்கு மாறுபட்ட கருத்து கொண்ட எழுத்தாளர்களின் கதைகளும் அதன் இலக்கியத் தரத்துக்காக அதில் பிரசுரமாயின. எல்லா தரப்பு எழுத்தாளர்களையும் "சரஸ்வதி' ஆட்கொண்டாள்.வடஇந்திய எழுத்தாளர்கள் பிரேம்சந்த், கிஷன் சந்தர் உள்ளிட்ட பலரது படைப்புகளை தமிழாக்கம் செய்து சரஸ்வதியில் வெளியிட்டவர் விஜயபாஸ்கரன். சோவியத் நாடு பத்திரிகையின் தென்னக வெளியீடுகளில் 25 ஆண்டுகள் இணை ஆசிரியராகப் பணியாற்றினார்.இவருக்கு மனைவி சரஸ்வதி, மகன்கள் ரவீந்திரன், கார்த்திகேயன் ஆகியோர் உள்ளனர். கோவையை அடுத்த வடவள்ளி ஐஓபி காலனியில், தனது மகன்களுடன் வசித்து வந்த விஜயபாஸ்கரன் புதன்கிழமை இரவு காலமானார்.கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் எம்எல்ஏ-வும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலருமான எம்.ஆறுமுகம், கவிஞர் புவியரசு, எழுத்தாளர்கள் கோவை ஞானி, சி.ஆர்.ரவீந்திரன், ஓய்வு பெற்ற உதவி ஆட்சியர் சுப்பிரமணியம், கவிஞர் கவிதாசன், விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் உள்ளிட்ட பலர் விஜயபாஸ்கரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக