வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

foreign tamils welfare board: தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம் தொடக்கம்

பாராட்டுகள். எனினும்  இந்த வாரியம் ஈமச் சடங்கிற்கு நிதியுதவி வழங்கும் அமைப்பாக இல்லாமல், அயல்வாழ் தமிழர்கள் முழு உரிமையுடன் வாழவும் வாழ்விட ஆட்சியால் கொடுங்கோன்மைக்கு ஆளாகும் பொழுது காப்பாற்றி உதவவும் தமிழ்க்கல்வி பெறவும் தமிழர் தமிழராகத் தலைநிமிர்ந்து வாழவும் வழி வகை செய்ய வேண்டும். எடு பிடிகளுக்கு வாரியப் பொறுப்புகளைக் கொடுக்காமல்  கட்சி வேறுபாடின்றித் தமிழ் நலம் பேணுநருக்குப்  பொறுப்புகள் வழங்க வேண்டும். பிற வாரிய விதிகளை அப்படியே பின்பற்றியிருப்பதும்  இதற்குப் பொருந்தாது. அகவை வரமபும் கூடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம் தொடக்கம்


சென்னை, பிப். 10: தமிழகத்திற்கு வெளியே இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் வாழும் தமிழர்களின் நலனுக்காக ""தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியம்'' தொடங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேறியது.வெளி நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த இந்த வாரியம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இதற்கான அவசியம் பற்றி மசோதாவில் தெரிவித்துள்ள தகவல் :தமிழகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள், வேலையில் இருக்கும்போதும், அதன்பின்பும் தாயகத்திலும் வெளிநாட்டிலும் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த பிரச்னைகளையும் சட்ட பிரச்னைகளையும் அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.தமிழகத்தில் குறைந்த வருவாய் பெற்று வந்து, வெளிநாட்டில் வளமான எதிர்காலத்தை நோக்கி, தன்னைச் சார்ந்து இருப்பவர்களை விட்டு, வேலை நாடி செல்வோர் பல பிரச்னைகளை எதிர்நோக்குகின்றனர்.அவற்றிற்கு தாங்களே தீர்வு கண்டு, மீண்டும் நிலையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள இயலாமல் இருக்கிறார்கள்.எனவே, தமிழகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டியது முக்கியமாகும்.தமிழகத்தை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் இறந்தால், அவர்களது உடல்களைத் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப தேவைப்படும் நிதியுதவி வழங்குவதோடு, அதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய உரிமைகளைத் தீர்வு செய்தலும், தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்றாகும்.எனவே இந்த வாரியம் தொடங்கப்படுவது அவசியமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வசிப்போர், வெளிநாடுகளில் வசிப்போர் என இரு பிரிவாக இந்த வாரியத்தில் உறுப்பினராகச் சேரலாம். வெளிநாடுகளில் வாழ்வோர் மாதம் ரூ.300-ம்,வெளி மாநிலங்களில் வாழ்வோர் மாதம் ரூ.100-ம் இந்த வாரியத்துக்குச் செலுத்த வேண்டும்.இந்த இரு பிரிவினரும் திரும்ப தமிழகத்திற்கு வந்துவிட்டால் பிறகு மாதம் ரூ.50 செலுத்த வேண்டும்.வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம், இறப்பின் பேரில் குடும்ப ஓய்வூதியம், உடல் ஊனமுற்றால் உதவித் தொகை, நோயுற்றால் நிதி உதவி, பெண் உறுப்பினர்களின் மகள்களுக்கு திருமண உதவி, பெண் உறுப்பினருக்கு பேறுகாலச் சலுகை, வீடு கட்ட, வீடு பராமரிக்க, கல்விக் கடன் முன்பணம் போன்ற உதவிகள், சுயவேலை வாய்ப்பைத் தேட உதவி போன்ற திட்டங்கள் இந்த வாரியத்தால் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் உறுப்பினராகச் சேர பதிவுக் கட்டணம் ரூ. 200 செலுத்த வேண்டும். 18 வயது நிறைவடைந்த, 55 வயது நிறைவடையாதோர் இதில் உறுப்பினராகச் சேரலாம்.இந்தச் சட்ட முன்வடிவை உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர் இந்த மசோதா நிறைவேறியது.சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ், பாமக ஆகிய கட்சிகள் நன்றி தெரிவித்துள்ளன. பீட்டர் அல்போன்ஸ்: வெளிநாடுகளில் வேலைக்காகச் செல்லும் தமிழர்கள் மரணம் அடையும் சமயங்களில் அவர்களின் சடலங்களைக் கொண்டு வருவதற்கான செலவை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே ஏற்றுக் கொள்ளவும், இறப்புக்கான பணத்தை நிறுவனங்கள் அளிக்கத் தேவையான சட்ட உதவியை வழங்கவும் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பாமக கொறடா வேல்முருகனும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, வளைகுடா நாட்டில் மரணம் அடைந்த பாஸ்கரனின் குடும்பத்துக்கு உடனடியாக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக