வெள்ளி, 22 ஜனவரி, 2010

நிருவாகத்தில் கன்னடத்தை பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: முதல்வர்



பெங்களூர், ஜன.21: அரசு நிர்வாகத்தில் கன்னட மொழியைப் பயன்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா எச்சரிக்கை விடுத்தார்.கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் கர்நாடக அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு கன்னட மொழியை பேச, படிக்க, எழுதப் பயிற்சி வழங்கும் முகாமை பெங்களூரில் வியாழக்கிழமை துவக்கி வைத்தார் எடியூரப்பா. அதன் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:ஆட்சி நிர்வாகத்தில் கன்னட மொழியை பேசவும், எழுதவும் பயன்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், இனிமேல் கன்னட மொழியை பயன்படுத்த தவறும் அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.கன்னட மொழியை ஆட்சி மொழியாகப் பயன்படுத்த தவறும் அதிகாரிகளுக்கு சலுகைகள் கிடைக்காது. அவர்களது சேவைப் பதிவேட்டில் கன்னடத்தை பயன்படுத்தாதவர் என்று கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர். கடைகளின் முன்பகுதிகளில் துறை, நிறுவன, கடைகளின் பெயரை கன்னடத்தில் பெரிதாக எழுத வேண்டும் என்றார் அவர். இந்த பயிற்சி முகாமைத் தொடர்ந்து கன்னட வளர்ச்சி ஆணையத்தின் மாநிலம் தழுவிய விடியோ கான்பரன்சிங் பயிற்சி முகாமையும் முதல்வர் துவக்கி வைத்தார். கன்னட வளர்ச்சி ஆணையத் தலைவர் மந்திரி சந்துரு, தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக