ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 79 : இலெனின் சுப்பையா

 




(தோழர்தியாகுஎழுதுகிறார்  78 தொடர்ச்சி)

இலெனின் சுப்பையா என்று சொன்னால்

எங்கள் விடுதலைக் குரல் என்று சொல்வோம்!

1985 நவம்பர்க் கடைசியில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த நேரம் நண்பராகக் கிடைத்த ளம் வழக்கறிஞர் திரு இராசுகுமார். சட்ட சமூக ஆராய்ச்சி மையம் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். அவருக்காக மொழிபெயர்ப்பு போன்ற சிலவற்றில் உதவுவேன். சிறைப்பட்டோர் விடுதலை தொடர்பான சில வழக்குகளை அவரிடம் கொடுத்து நடத்தச் சொல்வேன்.

இராசுகுமார் வழியாக எனக்கு அறிமுகமானவர்தான் தோழர் இலெனின் சுப்பையா. சென்னையிலும் புதுவையிலும் மனிதவுரிமை தொடர்பான நிகழ்வுகளில் பாடுவார். அவை கருத்துச் செறிவுமிக்க பாடல்களாக இருக்கும். அவரே பாடல் இயற்றி இசையமைத்துப் பாடவும் செய்வார். பக்க வாத்தியம் இருந்தாலும் இல்லா விட்டாலும் கவலைப்படாமல் எடுப்பான குரலில் உணர்ச்சி பொங்கப் பாடுவார்.

சிலநேரம் நான் கலந்து கொள்ளும் நிகழ்வில் அவர் இருக்கக் கண்டு அழைத்துப் பாடச் சொல்வேன். மறுப்பே சொல்லாமல் பாடுவார். பாடிமுடித்த பின் “தோழர், நல்லாப் பாடினேனா?” என்று கேட்பார். “அருமை” என்று பாராட்டுவேன், ஒரு முறை அவர் அப்படிக் கேட்கும் போது, “சரியில் லை தோழர்” என்ற போது அதிர்ந்து போனார்.

பிறகு தனியாக அழைத்து விளக்கினேன். அந்தப் பாட்டு பார்ப்பனியப் பண்பாட்டுடன் பாட்டாளியப் பண்பாட்டை ஒப்பிட்டுப் பாடுவது. அடுக்கடுக்கான வரிகளில் இந்த ஒப்பீடு வரும். நீ அப்படிச் சொன்னால் நான் இப்படிச் சொல்வேன் என்று ஒவ்வொன்றுக்கும் எதிராக மாற்றைச் சொல்லிப் பாடுவார். கலை, இலக்கியம், இசை ஒவ்வொன்றாக எடுத்து இரு பண்பாடுகளையும் ஒப்பிடுவார்.

அந்த வரிசையில் வசவுச் சொற்களை ஒப்பிடும் போது “நீ அபிசுட்டு என்று சொன்னால் நான் “…….” என்று சொல்வேன் என்று வரும். அது ஒரு கெட்ட வார்த்தை. அக்கா அம்மா என்று இணைத்துத் திட்டுகிற முறைதான் அதற்கு அடிப்படை. அது ஆபாசமான வசவுச் சொல், இதைத் தவிர்க்க வேண்டும் என்றேன்.  இந்தச் சொல்லுக்குக் கிடைக்கும் கைத்தட்டல் ஒரு மட்டமான இரசனைக்கு அடையாளம். ஏட்டிக்குப் போட்டியாகக் கூட அவாளிடமிருந்து பண்பாட்டுக் கேட்டை நாம் பார்த்தொழுகக் கூடாது என்றேன். சரி என்று ஏற்றுக் கொண்டார்.

பிறகு என் எதிரில் அந்தப் பாடலைப் பாடும் போதெல்லாம் அந்த வரி வரும் போது என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பார், அப்போதே அந்தச் சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல் போட்டுப் பாடுவார்.

ஒன்றைச் சொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன். தலைவர்கள் உட்படப் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தத் தலைமுடியைச் சொல்வது வாடிக்கையாகி விட்டது. திரைப்படங்களில் நனவியத்தின் பேரால் கதைமாந்தர்கள் பச்சையாக் கெட்ட வார்த்தை பேசுவது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இவை கவலை தரும் போக்குகள். சுப்பையா மாற்றிக் கொண்டார். மற்றவர்கள் மாறுவார்களா?  

தோழர் இலெனின் சுப்பையாவின் உயர்ந்த பண்புக்கு ஓர் அடையாளமாக.. நண்பர் இராசுகுமார் திடீரென மறைந்த போது அவரை நினைவேந்தத் தன்னாலியன்ற முயற்சிகள் செய்தார். எனக்கு ஒவ்வொன்றையும் அறியத் தந்தார். நான் எதிலும் கலந்து கொள்ள முடியாத தொலைவில் இருந்தேன். அதற்காக சுப்பையா என்னைக் கடிந்து கொண்டிருந்தாலும் சரியே. “சரி தோழர், நான் பார்த்து கொள்கிறேன்” என்பார்.

தோழர் இலெனின் க.சுப்பையா (1954-2022) சிவகங்கை மாவட்டம், படமாத்தூர் அருகில் உள்ள நாட்டார்குடிச் சிற்றூரில் கருப்பன் – தம்பா தம்பதியினருக்கு ஒரே மகனாகப் பிறந்தவர். 1957 முதுகுளத்தூர் கலவரத்தின் போது நாட்டார்குடி சேரி கொளுத்தப்பட்டு அங்கு வாழ இயலாத சூழலில் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், முனியாண்டிப்பட்டிக்கு கருப்பன் தம்பா குடும்பம் இடம் பெயர்ந்தது.

தொடக்கக் கல்வியை முனியாண்டிப்பட்டியிலும் பள்ளியிறுதிக் கல்வியை மேலூரிலும் முடித்தார். இளங்கலை பட்டத்தை மதுரை தியாகராசர் கல்லூரியிலும், முதுகலைப் பட்டத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் பெற்றார்.

கல்லூரிக் காலத்திலேயே பொதுவுடைமைக் கட்சியின்(மா-லெ)  கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். கல்லூரிக் கல்விக்குப் பின்னர் மதுரையிலிருந்து இயங்கிய சமூக, சமத்துவ இயக்கம் (SSI) எனும் நிறுவனத்தின் களச் செயல்பாட்டாளராகப் புதுச்சேரிக்கு வந்தார்.

1986இல் மலேசியாவில் வாழ்ந்த கருப்பையா ஆறுமுகத்தம்மாள் தம்பதியினரின் மகளான சுப்புலட்சுமியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார். திருமணத்திற்குப் பின்னர் புதுச்சேரியில் நிரந்தரமாக வாழலானார். தோழர் இலெனின் க.சுப்பையா – சுப்புலட்சுமி இணையருக்கு இரண்டு ஆண் மக்கள் – இசுபாருட்டகசு, கார்க்கி.  இருவரும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள்.

1995இல் விடுதலைக் குரல் கலைக்குழுவை அமைத்துத் தமிழகம் – புதுவையின் அனைத்துச் சிற்றூர்களுக்கும் பயணம் செய்து சாதி, மதம், பெண்ணடிமைத்தனம், வருக்கச் சுரண்டல் போன்ற இழிவுகளுக்கு எதிராகப் புரட்சிப் பாடல்கள் மூலம் மக்களை அணி திரட்டியவர். இசைப்போர், இசைப்போர்-2 ஆகிய 188 பாடல்களை கொண்ட இரண்டு பாடல் தொகுதிகளை வெளியிட்டார். தனது இசுபாருட்டகசு பதிப்பகத்தின் மூலம் 10க்கு மேற்பட்ட கவிதை, கட்டுரை, பயணக்கட்டுரை நூல்களை எழுதி வெளியிட்டவர்.

தமிழகம், புதுவையில் இயங்கி வரும்  இடதுசாரி முற்போக்கு இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள் நிறுவனங்கள் போன்றவற்றிற்காக 50க்கு மேற்பட்ட குறுந்தகடுகளை உருவாக்கியவர். அரசையும், அதிகாரத்தையம் தனது வலிமையான புரட்சிப் பாடல்கள் மூலம் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தவர். விடுதலைக் குரல் கலைக்குழுவின் வேர். குரலற்ற எளிய சனங்களின் குரலாக முழங்கிய கலகக் குரலுக்கு சொந்தக்காரர்.

தோழர் இலெனின் க.சுப்பையா அவர்களுக்குச் செவ்வணக்கம்!.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 50

சனி, 22 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 78: இலெனினைப் படிப்போம்!; பயில்வோம்!

 




(தோழர்தியாகுஎழுதுகிறார் 77 தொடர்ச்சி)

இலெனினைப் படிப்போம்!

இலெனினைப் பயில்வோம்!

இலெனின் தேசத் தன்-தீர்வுரிமை குறித்து என்ன எழுதினார், எப்படி விளக்கினார் என்பதையெல்லாம் விரிவாகப் பார்ப்பது கதிரவனுக்காகவே  அன்று. அக்கறை கொண்ட அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

பாட்டாளி வகுப்பின் நலன் பற்றிப் பேசிக் கொண்டே தேசிய இனச் சிக்கலில் இந்திய ஆளும் வகுப்பின் ஒடுக்குமுறைக் கொள்கைக்கு வால் பிடிக்கும் பாரத பக்த இடதுசாரிகள் எப்படியெல்லாம் இலெனினைத் திரிக்கின்றார்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த இடதுசாரிகள் இலெனினுக்குச் சிலை வைக்கிறார்கள் என்று செய்தி வந்த போது சிலையின் பீடத்தில் என்ன எழுதி வைக்கப்போகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினேன்.

“தேசிய ஒடுக்குமுறை நிலவும் சூழலில் தேசங்களின் தன்-தீர்வுரிமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் குமுகியர்கள் ஆவது கிடக்கட்டும், குடியாட்சியரே ஆக முடியாது.”

[அதாவது ஒடுக்குண்ட தேசத்தின் தன்-தீர்வுரிமையை ஏற்க மறுப்பவர்கள் குமுகியர்கள் ஆக இருக்க முடியாது. அவ்வளவு ஏன், சனநாயகவாதிகளாகக் கூட இருக்க முடியாது]

இந்திய வல்லரசியத்தின் தேசிய இனக் கொள்கைக்கும் இந்த இடதுசாரிகள் எனப்படுவோரின் தேசிய இனக் கொள்கைக்கும் அடிப்படையான வேறுபாடில்லை என்பதைப் புரிய வைத்தாக வேண்டும். இந்தத் திரிபியர்கள் இலெனினை எப்படியெல்லாம் சீரழித்துத் தங்களை நியாயப்படுத்திக் கொள்வார்கள் என்பதில் எனக்குள்ள பட்டறிவைச் சொல்ல வேண்டும்.

இரண்டாவதாக இனவாத நிலைப்பாடுகள் எடுத்துக் கொண்டு மார்க்குசியம் சரியில்லை, இலெனினுக்குத் தெளிவில்லை என்று கயிறு திரிப்பவர்களையும் தோலுரித்தாக வேண்டும்.

மூன்றாவதாக இலெனினைப் பற்றி எதுவும் தெரியாமலே இலெனின் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று முழங்கினால் வாய்வீச்சுப் புரட்சிக்குத் தகுதி பெற்று விடலாம் என்று எண்ணிக் கொள்ளும் துணிச்சல்காரப்  பொய்யர்களிடமிருந்தும் இலெனினைக் காத்தாக வேண்டும்.

எனவேதான்

இலெனினைப் படித்தால் போதாது, பயிலவும் வேண்டும்!

கற்க கசடற! இலெனினைக் கற்க கசடற!

இலெனின் எழுதிய ஒரு நூல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நூலினைப் படிப்பதோடு பயிலவும் வேண்டும் என்பதற்காகவே! இன்னும் பேசுவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 49

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 77 : வெண்மணி ஈகியர்க்குச் செவ்வணக்கம்!

 

     21 April 2023      அகரமுதல



(தோழர்தியாகுஎழுதுகிறார் 76 தொடர்ச்சி)

வெண்மணி ஈகியர்க்குச் செவ்வணக்கம்!

இனிய அன்பர்களே!

நெருக்கடிநிலைக் காலத்தில் திருச்சிராப்பள்ளி நடுவண் சிறையில் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணுகைச் சட்ட(மிசா) கைதியாகத் தோழர் இடும்பையனைச் சந்தித்தோம். சிறந்த பாடகர். கட்சி மேடைகளில் பாடிப் புகழ் பெற்றவர். தோழர் ஏசிகே அவர்களுடன் பணியாற்றியவர் என்ற முறையிலும் அவர் மீது தனி அன்பு வைத்திருந்தோம். இடும்பையன் பாடிய படல்களில் முகன்மையான ஒன்று வெண்மணி பற்றியது. அவர் பாடக் கேட்டாலே கண்ணீர் வரக் கூடிய உணர்ச்சிப் பாடல். அவரும் பாடிக் கொண்டே அழுது விடுவார். மீண்டும் மீண்டும் பாடச் சொல்லிக் கேட்போம். இப்போது மயிலாடுதுறையில் இருக்கும் இடும்பையனை அழைத்து மீண்டும் பாடச் சொல்லிக் கேட்டேன். பாவலர் வரதராசன் எழுதிய அந்தப் பாடல் இதோ: [பூமாலையில் ஓர் மல்லிகை என்ற மெட்டில் பாடலாம்.]

தீயவர் தானென்று

நாம் நினைத்தோம்

அவர்  தீயிடுவாரென்று

யார் நினைத்தார்?

லாரியிலே வந்து சேரியிலே

சருவநாசம் செய்வாரென்று

யார் நினைத்தார்?

சருவநாசம் செய்வாரென்று

யார் நினைத்தார்?

(தீயவர் தானென்று,,,)

வெண்மணிக் கோரத்தைப்

போலிந்த நாடு

வன்முறைச் செய்தியை

காண்பதும் ஏது?

பெண்மணிகள் தங்கள்

பிள்ளைகளோடு

பெண்மணிகள் தங்கள்

பிள்ளைகளோடு

வெந்து மடிந்ததும்

வேறெங்கும் ஏது?

(தீயவர் தானென்று,,,)

அடியாட்கள் கைகளிலே

ஆயுதம் தாங்கி வர

திர்ச்சியுற்ற வாலிபரோ

வயற்பரப்பில் பதுங்கிருக்க

சேரிவாழ் பெண்களெல்லாம்

ஓடியே ஒளிந்திருந்த

சிறுவீட்டைப் பூட்டிவிட்டு

தீயோர் நெருப்பு வைக்க

பற்றியது கூரை

படர்ந்தது தீப்பிழம்பு

கத்தினார் கதறிநின்றார் – கதியேது

கொடியோர்க்குச் செவியேது?

பெண்ணுக்குப் பேய்கூட

ங்குமென்பரே – பேயினும்

தீயவர் தீயிலிட்டாரே

வன்முறை கூடாது

என்றுரைப்போரே என்றுரைப்போரே

வெண்மணிக் காரியம்

தான் புரிந்தாரே

     (தீயவர் தானென்று,,,)

+++

ஊமைச் சனங்களை ஊருள் எரிக்கையில் …
ஆமை நடப்பதைப்
      
போல நடந்தால் நீ
       
ஆணவம் கொல்வாயோஅடே
        
ஆண் பிள்ளை ஆவாயோ?

தஞ்சை

ஊமைச் சனங்களை
         
ஊருள் எரிக்கையில்
         
ஒடுங்கிக் கிடந்தாயே! பின்னர்
          
ஊர்வலம் போனாயே!

ஒடுக்கும் விலங்கினை
         
ஒடுக்க நினைப்பவர்
          
ஒப்பாரி வைப்பாரோவெறும்
           
ஊர்வலம் போவாரோ?
 
உம்மை

ஒடுக்கும் விலங்கினை
          
ஊர்வலம் ஒப்பாரி
          
ஓங்கிப் புடைத்திடுமோஅடே
          
உதைத்துத் துடைத்திடுமோ?

கண்ணின் மணிகளைக்
         
கத்தியால் குத்தினால்
         
கைகட்டி நிற்பாயோஅவர்
         
காலில் விழுவாரோதஞ்சை

வெண்மணி மக்களை
         
வெட்டிப் பொசுக்கையில்
        
வேடிக்கை பார்த்தாயே! அடே
         
வீணே கிடந்தாயே!

எட்டி உதைக்கிற
          
ஈனரின் கால்களை
          
எடுத்து வணங்குவையோஅடே
          
இன்முத்தம் ஈகுவையோ?

மட்டி மடையர்கள்
          
மக்களைக் கொல்கையில்
          
மங்கிக் குமைந்தனையே! மனம்
         
தொங்கித் துவண்ட னையே!

அரைப்படி சேர்த்து
          
ஆறாய்க் கொடுமென
          
முறைப்படிக் கேட்டனையே ! அடே
          
முறையிட்டு நின்றனையே! அருள்

முறையிட்ட உம்மையே
          
மூண்டசெந் தீயினில்
           
முற்றும் எரித்தாரே! தோழா
            
மோதிப் புதைத்தாரே!

தங்கம் விளைக்கிற
          
தஞ்சை மறவனே!
         
பொங்கெனப்  போவாயோவெறும்
          
பொக்கென நிற்பாயோ?  புயம்

பொங்கித் துடித்திட
          
புலிபோல் பாய்கிற
           
போர்க்குணம் கொள்ளாயோபுதர்
          
வேருடன் கிள்ளாயோ?

முட்டுக்கு மேலொரு
         
முட்டுக் கொடுத்தாலும்
          
கட்டிடம்  நின்றிடுமோஅவர்
          
காலம் நிலைத்திடுமோ?

வெட்டுக்கு மேலொரு
          
வெட்டு கொடுத்தேனும்
          
தட்டி நொறுக்காயோமுரசு
          
கொட்டி முழக்காயோ?

பாலுக்கும் காவலன்
          
பூனைக்கும் தோழனாய்
          
பாவனை செய்வோரைத் – தமிழ்ப்
          
பாமரர் நம்பிடவோ உள்ளச்

சோலையில் நஞ்சினை
           
ஊட்டிடும் நாய்களை
           
ஓட்டிப் பொசுக்காயோஅவர்
           
ஊட்டி நசுக்காயோ?

துள்ளி வருகிற
          
வேலினை மார்பினில்
          
தூள்செய்யும் நாயகனே! மறக்
          
கால்கொண்ட  தூயவனே! தஞ்சைக்

குள்ள நரிகளைக்
           
குத்திக் கிழிக்கிற
           
கோபத்தில் முன்னேறு! அடே
            
கொன்றபின் நின்றாடு!
                                                — புலவர் ஆதி

 [வெண்மணி குறித்துப் புலவர் ஆதி எழுதிப் புதிய தலைமுறையில் வெளிவந்த இந்தக் கவிதை என்னுள் கிளறிய உணர்ச்சியை என்னென்பேன்? அடுத்த சில மாதங்களில் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அவரைப் பார்த்து மகிழ்ந்து ஊக்கம் கொண்டேன். 1960களின் இறுதியில்  வசந்தத்தின் இடிமுழக்கமாய் ஆர்த்தெழுந்த  நக்சல்பாரி இயக்கத்தின் மா கவிஞன் அவர். இயற்பெயர் இராசியண்ணன். நெல்லித்துறை நடவடிக்கைக்குப் பின் கைது செய்யப்பட்டு சொல்லொணா அடக்குமுறைகளைச் சந்தித்தவர். சத்தியமங்கலம் காடுகளுக்குள்  காவல் துறையினரால் இழுத்துச் செல்லப்பட்டு கொடுமையான சித்திரவதைகளை  அனுபவித்தவர். கொள்கை மாறா குணக்குன்று.  புதிய தலைமுறை ஆசிரியர் குழுவில் ஒருவர்.  கலை இலக்கிய பெருமன்றத்தில் தோழர் ஜீவாவுடன் இணைந்து பணியாற்றியவர். தமிழ்நாடு இலக்கியப் பேரவையை நிறுவியவர். தமிழ் இலக்கியங்களை மார்க்குசிய நோக்கில் ஆய்ந்து பல நூல்கள்  எழுதியவர்.திணைக் கோட்பாடுகளை மார்க்குசிய முறையில் திறனாய்வு செய்து தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர்.] 

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 49