வியாழன், 1 அக்டோபர், 2015

தினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான்


 si.paa.athithanaar_athithanar
athithanar-viruthu02
  சி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள் மற்றும் இலக்கிய பரிசளிப்பு விழா நேற்று மாலை ராணி சீதை மன்றத்தில் நடந்தது.
  சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு உரூ.2 இலட்சம் ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்காகப் பெற்ற தங்கர்பச்சான் ஏற்புரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தெரிவித்தார்:
  இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகின்றன என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன். திரைப்படத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு அளிக்கப்படும் விருதுகளையும், பரிசுகளையும் விட இலக்கியத்திற்காக அளிக்கப்படும் அங்கீகாரத்தில்தான் எனக்கு மனநிறைவும், பெருமையும் இருக்கிறது.
  நான், எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக எழுதத் தொடங்கியவன் இல்லை. என்னைச் சுற்றிலும் நிகழும் நிகழ்வுகளையும், அதனால் எனக்குள் ஏற்பட்ட தாக்கங்களையும் பதிவு செய்வதற்காகவே எழுதினேன். 1984-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினேன். 1990- இல் திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளனாக அறிமுகமானேன். அன்றிலிருந்து இன்று வரை இரண்டு துறைக்கும் சேர்த்து பல விருதுகளையும், பரிசுகளையும் அரசாங்கங்களும், தனியார் அமைப்புகளும் நிறைய கொடுத்திருக்கின்றன.
  அவற்றை விடவும் மிகுதியான மகிழ்ச்சியும், மனநிறைவும் இந்த சி.பா.ஆதித்தனார் இலக்கியப் பரிசின் மூலமாகக் கிடைத்திருக்கிறது. நான் யாருக்காக, யாரைப்பற்றி, எனது குடும்பத்தைக் காட்டிலும் அதிகமாகச் சிந்திக்கிறேனோ, உலகம் முழுமையும் உள்ள அந்தத் தமிழர்கள் அனைவருக்கும் இந்தப் பரிசின் மூலம் தினத்தந்தி நாளிதழ் என் படைப்பினை அறியச் செய்திருக்கிறது.
  நான் சந்திக்கும் மக்களெல்லாம் அடுத்ததாக என்ன படம் வெளிவருகிறது என்று மட்டும்தான் கேட்டிருக்கிறார்கள். நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துத் துறையில் இயங்கி வந்தாலும் அந்தப் படைப்புகள் பற்றி ஒருவர் கூட கேட்பதில்லை. விவரமறிந்தவர்கள் இதுபோன்ற கேள்வியைக் கேட்கும் பொழுதெல்லாம் எனது ஆதங்கத்தையும் நியாயமான கோபத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். இனிமேல், அடுத்து என்ன படம் என்பதோடு, என்ன எழுதுகிறீர்கள் என்னும் கேள்வியையும் என்னைச் சந்திப்பவர்கள் கேட்பார்கள் என நம்புகிறேன். அதற்குக் காரணம் தினத்தந்தி மட்டுமே.
போர்வாள்
  அந்தக் காலத்தில் பெரும் படிப்புப் படித்தவர்கள் மட்டுமேதான் செய்தித்தாளைப் படிக்க முடியும்; அவர்கள் படித்துக்காட்டுவதைத்தான் மற்றவர்கள் தலையாட்டிக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆங்கிலத்தையும், சமக்கிருதத்தையும் கொண்டு பெயரளவிற்குக் கொஞ்சம் தமிழ்ச் சொற்களைக் கலந்துதான் தமிழ்ப் பத்திரிக்கை எனும் பெயரில் அன்றைக்குப் பத்திரிகைகள் வெளிவந்தன. சி.பா.ஆதித்தனார் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் பரண் மீது போடப்பட்டிருந்த மக்கள் தமிழைத் தட்டியெடுத்துப் படிப்படியாக அதுவரை பத்திரிகை என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்களின் கைகளிலெல்லாம் கொடுத்தார்.
  தாய் மொழியைக் கூடப் படிக்கத் தெரியாத நம் தமிழர்களைப் பெரிய பெரிய கொட்டை எழுத்துகளில் அச்சிட்டுத் தமிழைச் சொல்லித் தந்தார். ஆதித்தனார் ஐயாவின் பணி என்பது ஓர் இயக்கம். அந்த இயக்கம் இன்று விரிவடைந்து மூன்றாம் தலைமுறையால் வளர்த்தெடுத்துத் தமிழர்களின் குரலாகவும், மனச்சான்றாகவும், போர்வாளாகவும் மாறியிருக்கிறது.
தமிழ் மக்களின் நலனுக்காக
  தமிழர்களைத் தமிழர்களாக மாற்ற மொழியுணர்வையும், இன உணர்வையும் விதைத்துத் தங்களின் அரசியலைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் மையப் புள்ளியாகச் செயல்பட்டு ‘நாம் தமிழர்’ இயக்கத்தை உருவாக்கினார். திராவிட வலையில் சிக்குண்ட தமிழர்களை மீட்டெடுக்கும் முயற்சியாக அவர் மேற்கொண்ட அரசியல் பணியின் மூலமாகத்தான் தமிழர்கள் அனைவரும் இன்று தங்களைத் தமிழராக உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.
முதன்மை வாய்ந்தது
  தமிழைப் படிப்பதையும், தமிழில் பேசுவதையும் கேவலமாகப் பார்க்கக் கூடிய சமுதாயத்தை உருவாக்கிவிட்ட இந்தச் சூழலில் அதிகப்படியாகத் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் உயிர் நாடியாக தினத்தந்தி விளங்கிக் கொண்டிருக்கிறது.
  பொருளாதாரத்திற்காகவும், கல்விக்காகவும், உறவுகளையும், மண்ணையும், மொழியையும் பிரிந்து உலகம் முழுக்கப் பரந்து வாழும் தமிழர்கள் அனைவருக்கும் பத்திரிகை கிடைக்க வேண்டும் என்பதற்காக முன்னோட்டமாகத் துபாயில் தினத்தந்தி பதிப்பு தொடங்கப்பட்டிருப்பது தமிழன் என்ற முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வேறெந்த தமிழ்ப் பத்திரிகையும் இதுபோன்று வெளிநாட்டில் பதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த அருவினையை ஆற்றியவர் இளையவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனார்தான்.
  இத்தகைய பெருமை வாய்ந்த தினத்தந்தி பெயரால் வழங்கப்படுகின்ற இந்த இலக்கியப்பரிசினை இதுவரை நான் பெற்ற அனைத்து விருதுகள், பரிசுகளைக் காட்டிலும் முதன்மை வாய்ந்ததாகக் கருதுகின்றேன்.
  எனது 23-ஆம் அகவையில் எழுதத் தொடங்கினேன். சிந்திக்க முடிந்ததையெல்லாம் படைப்புகளாக்குகிறேன். அவற்றுள் சில திரைப்படங்களாக உருவாகின்றன; சில சிறுகதை, குறும்புதினம், புதினங்களாக வடிவம் பெறுகின்றன. சமூகத்தின் மீதான எனது கோபத்தையும், ஆற்றாமையையும் கட்டுரைகளாக்கிப் பத்திரிகைகளில் வெளியிடுகின்றேன். உலகம் முழுமையும் இருக்கின்ற தமிழர்களைக் கணக்கெடுத்தால் எட்டரை கோடிக்கு மேல் வரும். ஆனால் எவ்வளவு பெரிய பேர் எடுத்த தமிழ் எழுத்தாளனின் நூல்களும், அதன் விற்பனையில் ஐந்தாயிரத்தைத் தாண்ட படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
புத்தகங்கள்
  எழுத்தாளனையும், உழவனையும் பாதுகாக்காத நாடு உருப்பட வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை; உருபட்டதாக சரித்திரமும் இல்லை. ஏற்கெனவே புத்தகங்கள் படிக்கின்ற பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. புத்தகங்கள் விற்றால்தான் அதில் ஒரு சிறு பகுதியின் மூலமாக எழுத்தாளனுக்கு வருவாய் கிடைக்கும்.
  எத்தனையோ செல்வந்தர்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என இவர்கள் நடத்தும் விழாக்கள், கணக்கற்ற குடும்ப விழாக்கள், கொண்டாட்டங்கள், திருமணங்கள் என எங்கு பார்த்தாலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. இந்த நிகழ்வுகளில் பொன்னாடை பூங்கொத்துக்களுக்கு மாற்றாகச் சமுதாயத்திற்குப் பயன்படும் நூல்களைத் தேர்வு செய்து பரிசுப்பொருளாகத் தரும் பழக்கத்தை ஒவ்வொரு தமிழனும் ஏற்படுத்திக் கொண்டால் எழுத்தாளன் உயிர் பெறுவான். மனித குலத்தின் எதிர்காலம் வளம் பெறும்.
பாதுகாக்க வேண்டும்
  ஒரு பொறியாளர்போல், ஒரு மருத்துவர்போல், ஓர் அரசியல்வாதி போல், ஒரு தொழிலதிபர் போல் ஒரு தீவிரமான எழுத்தாளனை யார் நினைத்தாலும் உருவாக்கிவிட முடியாது. எங்கிருந்தோ ஒருவன் பிறப்பான். அப்படிப்பட்டவர்களை இந்த சமுதாயம்தான் பாதுகாக்க வேண்டும்.
  அவனைக் கொண்டாடாமல் போனாலும் பரவாயில்லை; அவனது படைப்புகளைப் படிக்காமல் தொடர்ந்து மேலும் மேலும் எழுதுங்கள் எனச்சொல்லாதீர்கள். தனது படைப்புகளைப் படிக்காமல் தன்னைக் கொண்டாடுவதை உண்மையான எந்த எழுத்தாளனும் விரும்ப மாட்டான்.
தமிழர்களின் சொத்து
  எனது முப்பது ஆண்டுகளுக்கு மேலான இரவு பகல் பாராது உருவாக்கப்பட்ட படைப்புக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பரிசினைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். இந்தப் பரிசு சோர்ந்து போயிருந்த என்னை மீண்டும் ஊக்கப்படுத்தி எழுப்பி உட்கார வைத்திருக்கிறது. தமிழர்களின் சொத்தாக மாறிப்போன தினத்தந்தி பத்திரிகைக்கும், அதன் நிறுவனத்திற்கும், நடுவர் குழுவிற்கும், இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
logo-muthirai-dinathanthi



உச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார்- ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன்


si.paa.athithanaar_athithanar athithanar-viruthu03

  ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 111- ஆவது பிறந்தநாளும் இலக்கிய பரிசளிப்பு விழாவும் நடைபெற்ற பொழுது மூத்த தமிழ் அறிஞர் விருதும் விருதுத் தொகை உரு..3இலட்சமும் பெற்ற ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார்:-அப்பொழுது அவர் பின்வருமாறு உரையாற்றினார்
குடும்ப உறவு
  ஐயா சி.பா.ஆதித்தனாரின் உள்ளக்கிடக்கை, வாழ்க்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பற்ற வாழ்வு நெறியாகும். அவரின் உன்னதமான உழைப்பே அவரை உயரச்செய்தது. தொழிலாளருடன், தொழிலாளராக வாழ்ந்து பத்திரிகையை உயர்த்திக்காட்டினார். நான் பார்த்த வரையில், ‘தினத்தந்தி’ குடும்ப உறவுபோல் எந்தப் பத்திரிகையிலும் பார்க்கமுடியாது.
  எத்தனையோ இடர்பாடுகளை கடந்து ‘தினத்தந்தி’ இன்று உயர்ந்து நிற்கிறது. பத்திரிகை நடத்தும்போது ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கையில் பணம் இல்லை என்ற நிலையில், ‘சேட்டிடம்’ வெற்றுத்தாளில் கையெழுத்திட்டுப் பணம் பெற்று ஊழியர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். தான் வேறு, தொழிலாளர்கள் வேறு என்று அவர் ஒருபோதும் நினைத்தது இல்லை.
உச்சமான தலைவர்
  காகிதம் கிடைக்காத காலத்தில் தொழிலாளர்களுடன் சேர்ந்து காகிதக் கூழ் காய்த்து, ‘காலை முதல் மாலை’ வரை அதைக் காகிதமாக மாற்ற உழைத்தார். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பத்திரிகை நடத்தினார். ‘தினத்தந்தி’ அரசியல் மாற்றத்திற்கு மிகப்பெரிய கருவியாக இருக்கிறது. ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்று வாழ்ந்தவர். அந்தத் தொடரைஅறிமுகப்படுத்திய ஆதித்தனாரிடம் இருந்து விடாமுயற்சியை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
  தன் கோட்பாட்டில் உறுதியோடு வாழ்ந்தார். தமிழர் என்று சொன்னால் சி.பா.ஆதித்தனார்தான் முன் நிற்கிறார். தமிழுக்கும், தமிழர்களுக்கும் உச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார். எங்களுக்குப் பரிசளிக்கும் செய்தியை ‘தினத்தந்தி’யில் முதல் பக்கத்தில் 8 பத்திச் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். இதைவிடத் தமிழ் மொழியின் படைப்பாளர்களுக்கு வேறு என்ன பெருமை கிடைக்க முடியும். எங்களுக்கு இவ்வளவு பெரிய புகழைத் தந்த ‘தினத்தந்தி’க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழ் மொழியை வளர்க்க தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பாடுபட்டது போல எல்லா தலைவர்களும் துணிந்து வெளியே வந்து போராடவேண்டும்.
‘வெல்க தமிழ்’
  எதைச்செய்தாலும் தமிழ், தமிழ் என்று ஐயா வாழ்ந்தார். அவர் நடத்திய இதழுக்குப் பெயர் ‘தமிழ்’. அவர் அமைத்த இயக்கம் ‘நாம் தமிழர்’. தாய் இல்லத்துக்குப் பெயர் ‘தமிழன் இல்லம்’. அவர் வெளியிட்ட பதிப்பகத்துக்குப் பெயர் ‘தமிழ்த்தாய் பதிப்பகம்’. அவர் அமைத்த இரண்டு இயக்க அமைப்பு பெயர்  ‘இளந்தமிழர்’, ‘மகளிர் தமிழ்மன்றம்’. எழுதிய நூல் ‘தமிழ்ப் பேரரசு’.
  அவருடைய தமிழ் உணர்ச்சிதான் எங்களைப் போன்றவர்களுக்கு உந்துதலைத் தந்தது. தமிழ் மக்கள் மானத்துடன் வாழவேண்டும், பசி, பட்டினி இல்லாமல் வாழவேண்டும். தமிழ் உணர்வோடு வாழவேண்டும் என்பதற்காகச் சி.பா.ஆதித்தனார் பாடுபட்டார்.
  ஒருமுறை ஐயா அவர்களை பார்க்க ஒரு நடிகர் வந்தார். அவர் உள்ளே வரும்போதே “தமிழ் வாழ்க” என்றார். உடனே ஐயா அவர்கள் தமிழ் எப்போதும் வாழும். அதை யாரும் அழிக்க முடியாது. ஆனால் தமிழ் வென்றதா? என்றுதான் பார்க்கவேண்டும். அதனால் தமிழ் வெல்க என்று சொல்லுங்கள் என்று அன்றே சொன்னார். அவரிடம் மட்டுமல்லாமல் எப்போதுமே தமிழ் வாழ்ந்தால் மட்டும் போதாது, தமிழ் வெல்லவேண்டும் என்பதை ஐயா அவர்கள் சொல்வார். அதையே ‘தினத்தந்தி’ தலைப்பின் கீழே ‘வெல்க தமிழ்’ என்று வெளிவருகிறது.
வாழ்க்கை வரலாறு
  இன்றைய இளைஞர்கள் சி.பா.ஆதித்தனாரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்ளும் வகையில் மலிவுபதிப்பாக வெளியிடவேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். சி.பா.ஆதித்தனாரின் ஈகத்தை ‘தினத்தந்தி’ எப்போதும் காப்பாற்றும். ‘தினத்தந்தி’ ஒரு பல்கலைக்கழகம். அஞ்சல் வழிக்கல்வி, திறந்தவெளி பல்கலைக்கழகம் போல தமிழை வளர்க்க அன்று முதல் ‘தினத்தந்தி’ பாடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் சி.பா.ஆதித்தனார் குறித்து அவர் எழுதிய கவிதையைப் படித்தார்.
logo-muthirai-dinathanthi



தமிழனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார்; வெ. இராமசுப்பிரமணியன்

si.paa.athithanaar_athithanar
athithanar-viruthu01
  90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனுக்குச் சிறுதொழில், தன்முன்னேற்றம்பற்றிச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார்.
  சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:-
தமிழனின் அடையாளம்
    73 ஆண்டுகளாகத் தமிழர்களின் அடையாளமாகவும், பத்திரிகைத் துறையில் அருந்திறல் புரிந்தும் ‘தினத்தந்தி’ வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் பொதுவாக அதற்கு நல்ல நேரம் இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.
  நான் கூடுதலாக என்ன நினைக்கிறேன் என்றால், ஒரு தனி மனிதனோ, நிறுவனமோ வெற்றி பெற வேண்டுமானால் அது குறித்த நேரமும் இருக்க வேண்டும். அதுபோல் 6 மணிக்கு விழா என்றால், அந்த நேரத்தில் விழா மேடையின் திரை விலகி, தமிழ் விழா ஒன்று குறித்த நேரத்தில் நடக்கிறது என்பதே மிகுந்த மகிழ்ச்சிக்குரிய செய்தி. எனவே குறித்த நேரத்தில் விழா நிகழ்ச்சியை முடிப்பதும் விழாத்தலைவராக உள்ள எனது கடமை.
அடுத்த பிறவியிலும்
  அடுத்த பிறவியிலேயும் பத்திரிகையாளராகவே பிறக்க ஆசைப்படுகிறேன் என்று மரணத்தின் வாயிலில் ஒருவரால் சொல்ல முடியுமா? என்றால் அது சி.பா.ஆதித்தனாராக மட்டும்தான் இருக்க முடியும்.
  நான் வழக்குரைஞராக இருந்தபோது எனது அருமை நண்பர் எழுத்தாளர் பின்னலூர் மு.விவேகானந்தன் என்பவர், ‘வழக்கறிஞர்கள் வளர்த்த தமிழ்’ என்ற ஒரு நூலை எழுதினார். நண்பன் என்ற ஒரே காரணத்தினால் அதற்கு அணிந்துரை வழங்க என்னைப் பணித்தார். அந்த நூல் 2003- ஆம் ஆண்டு திசம்பரில் வெளிவந்தது.
எனது அணிந்துரை
  தமிழை வளர்க்க பாடுபட்ட 33 வழக்கறிஞர்கள் பற்றியும், அவர்களது வாழ்க்கைக் குறிப்புகளும், சுவையான நிகழ்வுகளும் அந்த நூலில் இருந்தன. அதிலே 25-ஆவது தலைப்பு வழக்கறிஞர்(பாரிசுடர்) சி.பா.ஆதித்தனார்பற்றியதாகும். அந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியபோது ஒரு செய்தியைச் சொல்லியிருந்தேன்.
  நான் நீதியரசர் ஆவேன் என்றோ, இந்த விழாவுக்குத் தலைமை தாங்குவேன் என்பதையோ அப்போது யாரும் எண்ணியிருக்க முடியாது. அப்படி யாரும் எண்ணியிருந்தாலும் அது நடந்திருக்குமா என்பதும் தெரியாது. அணிந்துரையில் நான் சொல்லியிருந்தது, “படிப்பறிவு மிக்கோரின் பள்ளியறையில் பவனி வந்துகொண்டிருந்த பத்திரிக்கை துறையைப் பட்டிதொட்டிகளுக்கும் கொண்டு சென்ற வழக்குரைஞர் சி.பா.ஆதித்தனார்” என்பதாகும்.
தமிழனின் தன்முன்னேற்றம்
  இன்று தன்முன்னேற்றத்தைப் பற்றியும், தன்தொழில் பற்றியும் பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் 1923, 1924, 1925-ஆம் ஆண்டுகளில், அஃதாவது ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன்னால், “தீக்குச்சி செய்வது எப்படி?, மெழுகுவத்தி செய்வது எப்படி?, சோப்பு செய்வது எப்படி?” என்றெல்லாம் சிறுதொழில்களை மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காகவ் சின்னச்சின்ன புத்தகங்களை எழுதித் தனது அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்ட பெருமகனார் அவர்.
  இலண்டனில் வழக்குரைஞர்(பாரிசுடர்) பட்டம் படிக்கிறபோது, அங்கிருந்தபடியே சுதேசமித்திரனுக்குச் செய்திக் கட்டுரைகளைச் சி.பா.ஆதித்தனார் எழுதிவந்தார். அதுமட்டுமல்ல தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற பத்திரிகைகளுக்கும் இலண்டனில் படிக்கும்போதே கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
  அவையெல்லாம் தொகுத்து நூலாக வெளியிடப்பட்டதா என்பது தெரியவில்லை. அப்படியிருந்தால் அவை பரவச் செய்ய வேண்டும்.
சட்டப்பேரவை விதிகளின் தமிழாக்கம்
  சட்டப்பேரவை விதிமுறைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டும்தான் இருந்தன. அவற்றை, ‘தமிழ்நாட்டுச் சட்டப்பேரவை நடைமுறை விதிகள்’ என்று தமிழாக்கம் செய்த பெருமையும் அவரையே சாரும். அந்த மொழியாக்க நூலுக்கு பேரறிஞர் அண்ணா அணிந்துரை அளித்தார்.
  அதில், “நீண்ட நாட்களாக நிலவி வந்த குறையினைக் களைந்தெறியும் முறையில் கிடைத்த இந்தத் தமிழாக்கம் தந்துள்ள சி.பா.ஆதித்தனாருக்குத் தமிழ்நாடு பெரிதும் கடமைப்பட்டுள்ளது” என்று அண்ணா குறிப்பிட்டார்.
இந்தியாவில் 9- ஆவது இடம்
  73 ஆண்டுகளைக் கடந்தும் 2014- ஆம் ஆண்டு சூன் மாதம் “தாள் விற்பனை எண்ணிக்கைக் கழகம்' (Audit Bureau of Circulations) என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, இந்தியாவில் உள்ள நாளேடுகளிலே 9- ஆவது இடத்தைப் பிடித்திருக்கிற பத்திரிகை தினத்தந்தியாகும். நாள்தோறும் ஏறத்தாழ 16.78இலட்சம் படிகள் விற்கப்படுகின்றன.
  பத்திரிகைத் துறையில் நமக்குத் தெரியாத கணக்கு ஒன்று உண்டு. ஆனால் அது புரிந்துகொள்ளக்கூடிய கணக்கு. சில பத்திரிகைகளைப் பொறுத்தவரை அதை வாங்குகிறவர்கள்கூடப் படிக்க மாட்டார்கள். சில பத்திரிகையை வாங்கிய காரணத்துக்காக வாங்கியவர் மட்டுமே படிப்பார். சில பத்திரிகையை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் படிப்பார்கள்.
  16.78இலட்சம் படிகளை வாங்கிக் குறைந்தது 10 பேராவது ஒரு குடும்பத்தில் படிக்கிற ஒரே பத்திரிகை தினத்தந்திதான். இதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
  அப்படிப்பட்ட தினத்தந்தியை நிறுவிய மூத்த தமிழறிஞர் விருதை வா.மு.சேதுராமனுக்கும், சிறந்த இலக்கியத்துக்கான பரிசைத் தங்கர்பச்சானுக்கும் வழங்குவதில் நான் பெருமை அடைகிறேன்.
மீசை பற்றிய கவி
  இந்த இரண்டு பேர் பற்றி ஒரு குறிப்பை மட்டும் சொல்கிறேன். வா.மு.சேதுராமன்பற்றிக் கவியரசு கண்ணதாசன் ஒரு கவிதை எழுதினார். “நுண்ணிய மதியே செல்வம், நூலறிவு ஒன்றே தெய்வம், எண்ணிய முடிதல் தர்மம், இதயத்தின் உயர்வே வீரம், கண்ணெனும் தமிழே வாழ்க்கை, கவிஞராம் சேதுராமன் நண்ணிய பெருமை ஈடே, நாளெல்லாம் உயர்ந்து வாழ்க” என்று அதில் எழுதியுள்ளார்.
கண்ணதாசனுக்கே உரிய வழக்கமான பாணியில் கவிதை எழுதியிருந்தால் இவரது மீசையைப் பற்றியும் எழுதியிருக்க வேண்டும். ஒருவேளை அப்படி எழுதியதைத் தணிிக்கை செய்து பதிப்பிக்காமல் விட்டுவிட்டார்களோ தெரியவில்லை.
தங்கர்பச்சானின் ஆதங்கம்
  தங்கர்பச்சானின் கதைகளின் நூலில் உள்ள இரண்டு, மூன்று கதைகளைப் படித்துப் பார்த்தேன். நூலின் முன்னுரைக்கு மாற்றாகப் பகிர்தல் என்று சொல்லி வெளியிட்டிருக்கிறார். அதில் தனது ஆதங்கத்தைத் தங்கர்பச்சான் சொல்லியிருக்கிறார். அந்த ஆதங்கம் என்ன?
  தனது பகிர்தலில் அவர், “ஒரு இலட்சம் பேர் வீட்டின் நடுமுற்றத்தில் கொட்டும் குப்பைகளை ஒருவன் மட்டும் தூய்மைப்படுத்துவது என்பது நடக்கக்கூடிய செயலா? அப்படித்தான் இலக்கியத்திலும் சரி, குப்பைகளைக் கொட்டுபவர்கள் மிக அதிகமாகவும், தூய்மைப்படுத்துபவர்கள் மிகக் குறைவாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் என் போன்றவர்களின் படைப்புகள் இனம் கண்டு கொள்ளப்படாமலேயே போய்விடுகின்றன” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
கலைவாணியின் பரிசு
 அந்த ஆதங்கத்தை என்று அவர் எழுதினாரோ அன்றே அவரைப் பார்த்து கலைவாணி சிரித்தாள். அவருக்கு இந்த ஆண்டு இலக்கிய பரிசு கிடைத்துவிட்டது.
வா.மு.சேதுராமனுக்கும், தங்கர்பச்சானுக்கும் பரிசுகளை வழங்கியிருக்கும் தினத்தந்தியை பாராட்டுகிறேன்.
இவ்வாறு நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன் பேசினார்.
logo-muthirai-dinathanthi