வியாழன், 22 மே, 2025

நெறியுரைப் பொருளியலை வகுத்தவர் நாமே! – அன்றே சொன்னார்கள் ! – இலக்குவனார் திருவள்ளுவன்



(பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர், அன்றே சொன்னார்கள்,தொடர்ச்சி)

நெறியுரைப் பொருளியலை வகுத்தவர் நாமே!

நலம்சார் பொருளியல் (Normative Economics) குறித்து ஆடம் சுமித், ஆல்பிரட்டு மார்சல் முதலானவர் கருத்துகளை முன்னரே தமிழ் இலக்கியங்கள் தெளிவாக்கியுள்ளதை  நாம் பார்த்தோம். இவர்களுக்குப் பின்னர் வந்த அறிஞர்கள் பொருளியல் இயல்புரை அறிவியலா? நெறியுரை அறிவியலா? (Positive Science or Normative Sciene)எனக் கேள்வி கேட்டனர். பொருளியல் ஒரு புறம் உள்ளதை உள்ளவாறு ஒழுங்குபடுத்தப்பட்டு விளக்கும் அறிவியல் என்றனர். மறு புறம் , ஆசிமாகாபுளசு (Asimakopulos) என்னும் அறிஞர்   பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற நெறியுரைக் கோட்பாட்டை வகுக்கும் இயல் என்றார். முன்னது நிகழ்வனவற்றை விளக்கும் என்றால் பின்னது பொருளியலானது நீதி நெறி, ஒழுக்க நெறிக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தும் அறம் சார் கருத்துகளை வலியுறுத்துவது.

செல்வம் என்பது அதன் அளவைப் பொறுத்து அமையாமல் எவ்வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது? எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும் என்பதும் நலம்சார் பொருளியலின் அடிப்படைக் கருத்தாகும்.

தமிழர் நெறி என்பதும் அறவாழ்வு வாழ்வதற்காகப் பொருள் ஈட்ட வேண்டும் என்பதே. தன் முயற்சியில் நேர்மையாக உழைத்துப் பொருள் ஈட்டிப் பிறர் துன்பம் போக்க அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதே தமிழர் நெறி. இதனை விளக்கும் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. தெய்வப்புலவர் திருவள்ளுவர் பொருள்செயல் வகை என்றும் நன்றியில் செல்வம் என்றும் இரண்டு அதிகாரங்களைத் திருக்குறளில் வைத்திருப்பதே நலம்சார் பொருளியல் என்று சொல்லலாம்.

வினைத்தூய்மையிலும்கூடத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறுக்கு வழியில் பொருள் ஈட்டக்கூடாது எனத் தனி மனிதனுக்கு அறிவுறுத்துகிறார். பச்சை மண் பாத்திரத்தில் நீரைப் பாதுகாத்தால் பாத்திரமும் அழிந்து அதில் சேமிக்கப்பட்ட நீரும் வீணாகும் என உணர்த்தும் வகையில் அவர்,

 
               சலத்தால் பொருள்செய்துஏ மார்த்தல் பசுமண்

 கலத்துள்நீர் பெய்து இரீஇ யற்று                             (திருக்குறள் 660)

என்கிறார். (சலத்தால் – தீய வழிகளால்; ஏமார்த்தல் – பாதுகாத்தல் )

            நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
            நச்சு மரம்பழுத் தற்று                                                     (திருக்குறள் 1008)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறருக்குப் பயனின்றிப் பிறரால் விரும்பப்படாமல் போகும் செல்வம் ஊர் நடுவே நஞ்சுமரம் பழுத்ததுற்கு ஒப்பாகும் எனக் கூறிச் செல்வத்தின் பகிர்வு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

(நச்சப்படாதவன் – விரும்பப்படாதவன்; நச்சு மரம் – நஞ்சு மரம்; )

இதற்கு எதிரிடையாக உள்ளூரில் பழுக்கும் பயன்மரம் பிறருக்குப் பயன்படுவதுபோல் செல்வம் பிறருக்குப் பயன்படவேண்டும் என்பதை வலியுறுத்த
                  பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
                நயனுடை யான்கண் படின்                                          (திருக்குறள் 216)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

மேலும் அவர், ஊருணி ஊரார்க்குப்பயன்படுவதுபோல் செல்வம் உலகோர்க்குப் பயன்பட வேண்டும் என வலியுறுத்தி,
              

       ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம்
              பேரறி வாளன் திரு (திருக்குறள் 215)
என்றும்
மருந்து மரம் எல்லா வகையிலும் பிறருக்குப் பயன்படுவதுபோல் பெருந்தகைமை உடையவர் செல்வம் பிறருக்குப் பயன்படும் என விளக்குதற்காக
                 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
                 பெருந்தகை யான்கண் படின்                                        (திருக்குறள் 217)
என்றும் கூறிச் செல்வம் பிறர் பயன்பெற பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

அற வழியில் பொருள் ஈட்டி அனைவரும் பயன்பெற பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை அறக்கருத்தாக மட்டும் பார்க்காமல் மேனாட்டார் கூறும்  நெறியுரைப் பொருளியலை அன்றே வெளிப்படுத்தி உள்ள பாங்காகவும் பார்ப்பதுதானே முறை!

புதன், 21 மே, 2025

பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர், அன்றே சொன்னார்கள், இலக்குவனார் திருவள்ளுவன்

      20 May 2025      கரமுதல



(புலம் பெயர் பறவைகள் – அன்றே சொன்னார்கள் – தொடர்ச்சி)

 பொருள் அல்லது செல்வம் என்றாலே அதனால் வரும் தீமைகளை மட்டும் எண்ணி அதனை ஒதுக்க வேண்டும் என்பது போன்றே உலகெங்கும் அறிஞர்களும் ஆன்றோர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். புத்தர் முதலான சமய அறிஞர்களும் அவ்வாறே மக்களிடம் பொருளாசை துன்பம் தரும் எனக் கூறிப் பொருள் தேடலுக்கு எதிரான கருத்தையே பரப்பி வந்தனர். பொருள் அடிப்படையிலான இயல் பொருளறிவியல் அல்லது பொருளியல் (பொருளாதார இயல்) என உருவானதும் அதன் இன்றியமையாமை உணரப்பட்டதும் 18 ஆம் நூற்றாண்டில்தான் எனலாம். ஆதம் சுமித் (Adam Smith: 1723-1790) என்னும் பொருளியல் அறிஞர் முதலில் பொருளியல் இலக்கணத்தை வரையறுத்தவர் ஆவார்; 1776 ஆம் ஆண்டு நாடுகளின் செல்வமும் அதன் இயல்பும் காரணங்களும் (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம் ) என்னும் நூலை வெளியிட்டுப் பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என அறிவித்தார்.


இதற்கு முன்னர் அறிஞர்கள் கார்லைல், இரசுகின் முதலானோர், பொருளியலை மகிழ்வற்ற அறிவியல் என்றும் இருண்டஅறிவியல் என்றும் கூறியதற்கு மாறாக அமைந்தது இவரது விளக்கம்.

அடுத்த நூற்றாண்டில் வந்த பொருளியல் அறிஞரான ஆல்பிரட்டு மார்சல் (Alfred Marshal: 1842-1924) பொருளியலை நல இலக்கண அடிப்படையில் (Welfare Economics) வரையறுத்தார். 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட பொருளியல் கோட்பாடுகள் என்னும நூலில் இதனை அவர் தெளிவுபடுத்தினார். பொருளியல் ஒரு புறம் செல்வததையும் மற்றொரு புறம்  அதனை விட முதன்மையாக மனிதனையும் ஆராயும் இயல் என விளக்கினார்.


அறிஞர் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள், எனத் தொல்காப்பியத்தை வகுத்ததும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் எனத் திருக்குறளை அளித்ததும் பொருளை மக்களுக்கான பயன் அடிப்படையில் நோக்கியதே ஆகும். எனவே, இவர்களின் இலக்கியங்கள் வாழ்வியல் இலக்கியங்களாக ஒளிர்கின்றன.

தெய்வப்புலவர் திருவள்ளுவர் பொருளின் இன்றியமையாமையை விளக்குவதற்குப்,


பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்                                       (திருக்குறள் 751)
என்கிறார். மேலும்,
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்                                                (திருக்குறள் 754)

எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொருள் முறையாயும் தீயவழியில் அல்லாமலும்  வரவேண்டிய வழியை விளக்குகையிலே மேனாட்டாரின்  நலம்சார் பொருளிலக்கணத்தை அன்றே நம்மவர்கள் அறிந்து தெளிந்திருந்தனர் எனலாம்.


19 ஆம் நூற்றாண்டில் பொருளியல் பற்றிப் பிற நாட்டார் எண்ணி ஆராய்ந்திருக்கையில் பழந்தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதனைப் பற்றிச் சிந்தித்து உள்ளனர் என்பது மட்டுமல்ல, இன்றைய சிந்தனையின் வெளிப்பாடு அன்றே அவர்களிடம் இருந்துள்ளதும் கவனிக்கத்தக்கது.  இலக்கியங்களில் இவை இடம் பெற்றுள்ளமையாலேயே இவற்றை நாம் இலக்கியக் கற்பனைகள் என்று ஒதுக்குவது தவறு. மாறாக இலக்கிய நூல்களிலேயே அறிவியல் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன எனில், துறை நூல்களில் மிகுதியான அறிவியல் செய்திகள் இடம் பெற்றிருக்க வேண்டுமே என எண்ண வேண்டும்.


இன்றைக்குப் பொருளுக்கு அல்லாடும் நாம் அன்றைக்குப் பொருள்  திரட்டலில் சிறந்திருந்ததன் காரணம் பொருள் பற்றிய தெளிவான எண்ணமும் முயற்சியும் இருந்தமைதான். எனவே, தொடர்ந்து வேறு சில பாடல்களையும் அடுத்தடுத்துக் காணலாம்.-         இலக்குவனார் திருவள்ளுவன்

செவ்வாய், 20 மே, 2025

புலம் பெயர் பறவைகள் – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்



(பாசன அறிவியல் – அன்றே சொன்னார்கள்:தொடர்ச்சி)

 பறவைகள் சில பருவங்களில் இடம் விட்டு இடம் மாறிச் செல்வதை – தம் புலத்தில் இருந்து பெயர்ந்து வேறு புலத்திற்குச் செல்வதைப் புலம் பெயர்தல் (migration) என்கின்றனர். இதற்கான தமிழ்க்கலைச் சொல் வலசை என்பதாகும். எசியாடு(Hesiod), ஓமர்(Homer), எரொடொதசு(Herodotus), அரிசுட்டாடில்(Aristotle) முதலான கிரேக்க அறிஞர்கள் பறவைகள் இடம் விட்டு இடம் மாறுவதைக் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் பறவைகள் பிற பகுதிகளில் இருந்து வருவதையும் பிற பகுதிகளுக்குச் செல்வதையும் எங்கும் செல்லாமல் ஒரே பகுதியிலேயே தங்கி இருப்பதையும் (வதி பறவை) வேறுபடுத்தி வலசை அறிவியலைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.

சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் போற்றிப்பாடும் பொழுது புலவர் குறுங்கோழியூர்க் கிழார் பறவைகள் புலம் பெயர்ந்து  வருவதையும் போவதையும்  – புதியதாக வேறு இடங்களில் இருந்து பறவைகள் இங்கு வருவதையும் இங்கேயே உள்ள பறவைகள் வேறு இடம் நாடிச் செல்வதையும் –
       

 புதுப்புள் வரினும் பழம்புள்       போகினும்                             (புறநானூறு 20: 18)

என்னும் வரியில் குறிப்பிடுகிறார். (புள் – பறவை;)

வேந்தன் கோப்பெருஞ் சோழனை அவனைப் பார்க்காமலேயே நட்பு கொண்ட புலவர் பிசிராந்தையார் பாடும் பொழுது, தான் தூதாக அனுப்பும் அன்னப்பறவை தென்குமரியிலிருந்த வட இமயமலைக்குச் செல்வது என்பதைக்

                    குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
                   வடதிசை பெயர்குவையாயின்                (புறநானூறு  67: 6-7)
 என்று குறிப்பிடுகிறார்.

தான் தனித்திருக்கத் தன் உயிர் மட்டும் பிரிந்து தலைவனை நாடிச் சென்றதைக் குறிப்பிடும்  இடத்தில் உவமையாகப், பறவை, தான் தங்கியுள்ள (அசையும் அழகிய கிளையில் உள்ள) கூட்டினைப் பொலிவிழக்கச் செய்யும் வண்ணம் புலம் பெயர்ந்து செல்லும் நிலையைக் குறிப்பிட்டு

              அலங்கல் அம்சினைக் குடம்பைப்  புல்லென
             புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந்தாங்கு           (அகநானூறு 113 : 24-25)
என்கிறார் புலவர் கல்லாடனார்.

              நீயும் நின்பெடையும், தென்திசை குமரியாடி
              வட திசைக்கு ஏகுவீராயின்
எனச் சத்திமுற்றத்துப் புலவர்நாரை விடு தூதுப் பாடலில் நாரை இடம் பெயர்ந்து செல்வது பற்றிக் குறிப்பிடுகிறார்.

புலவர் நரிவெரூஉத் தலையார்  வேறு எங்கும் செல்லாமல் தங்கி உள்ள நாரையை வதிகுருகு எனக்குறிப்பிட்டு 

       வதிகுருகு  உறங்கும் இன்நிழல் புன்னை                              (குறுந்தொகை 5)
என்கிறார்.

இவ்வாறு, பறவைகளின் புலப் பெயர்ச்சி அறிவியலை அன்றைய புலவர்களே அறிந்திருந்தனர். ஆனால், உரிமையிழந்து புலம் பெயர்ந்து செல்லும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு உரிமைவாழ்வு பெறுவதற்கான வழிவகைளைத் தமிழ்நாட்டு மக்கள் அறிந்து செயல்பட்டு வாகைசூடும்  நாள்  எந்நாளோ?

திங்கள், 19 மே, 2025

சனாதனத்தில் பெண் அடிமைத்தனத்திற்கும் உயர்வு தாழ்விற்கும் இடமில்லையாமே? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனாதனம் பொய்யும் மெய்யும்: 22-23 * தொடர்ச்சி)

“பெண் தன் விருப்பப்படி வாழக்கூடாது. சிறு வயதில் தந்தைக் கட்டுப்பாட்டிலும், பருவ வயதில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டும். எப்போதும் தன் விருப்பத்தில் அவள் வாழக்கூடாது” (மனு 5. 148).

கணவன் மோசமானவனாய், கொடியவனாய் இருந்தாலும், பிற பெண்களோடு உறவு கொண்டு அலைபவனாயினும், நன்னடத்தை, நற்குணம் இல்லாதவனாயினும், பத்தினிப் பெண் என்பவள் அக்கணவனையே தெய்வமாக வழிபட்டு வாழவேண்டும்!” (மனு 5.154)

கடவுளாகச் சொல்லப்படும் இராமன், பெண்களை நம்பக் கூடாது, மனைவியிடம் கமுக்கங்களை(இரகசியங்களை)ப் பேசக் கூடாது (வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100) என்கிறான்.

தமிழன் நினைத்தும் பார்க்க முடியாத ஆரிய மனுதருமம்  பெண்களைச் சிறுமைப்படுத்தும் வகையில் எழுதவே கூசும் செயலைக் குறிக்கிறது. எட்டு வயதிற்குள் திருமணம் பெண்ணிற்கு செய்து கொடுக்கா விட்டால்,மாதம் ஒரு முறை பெண்களுக்கு ஏற்படும் இரத்தப்போக்கை எடுத்துத் தந்தை குடிக்க வேண்டும் என்கிறது அது.(அக்கினிஃகோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார், இந்து மதம் எங்கே போகிறது?)  இது சனாதனத்தின் சிறுமையா? பெருமையா?

மாதர்க்குப் பிறவியைத் தூய்மையாக்கும் சடங்குகள்(சமசுகாரங்கள்), மந்திரப்பூர்வமாகச் செய்வித்தல் யாதுமின்று. இவர்களுக்கு வெள்ளை யுள்ளமும் இல்லை. பாவம் நீக்கும் மந்திர அறிவுரையும்(உபதேசமும்) கிடையாது. எனவே பொய்யைப் போல் மாசு வடிவினராக மாதர் இயன்றிருக்கின்றனர் (மனு 9 : 180)

பெண்மையையும் இழந்து கொண்டு தீய ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு வேலைக்குச் செல்கின்றனர் பெண்கள். வீட்டில் அடைபட்டில்லை என்று அலுவலகத்திற்குப் போவதால் எத்தனை தப்புக்களுக்கு இடம் கொடுத்துப் போகிறது? ‘பெண் விடுதலை’ என்று பெரியதாகச் சொன்னாலும் ஆலுவலகத்தில் எத்தனை பேருக்கு அடங்கிப் பதில் சொல்லும்படி இருக்கிறது? இப்படி- யிருப்பதில் வாழ்க்கையில்தான் நிம்மதி உண்டா? நிம்மதியாகச் சமைத்துப் போட்டுச் சாப்பிடுவது; குழந்தை குட்டிகளின் அன்புணர்வை(வாத்சல்யத்தை) பூரணமாகத் துய்ப்பது(அநுபவிப்பது) என்பதெல்லாம் இந்த ‘விடுதலை’ யில் உண்டா?” எனப் பணிக்குச் செல்லும் பெண்கள் மீது பரிவு காட்டுவது போல்  பெண்களை இழிவுபடுத்துகிறார் சந்திரசேகர சரசுவதி(தெய்வத்தின் குரல் -இரண்டாம் பகுதி)

பெண்கள் வீட்டுக்குள்ளேயே வேலை செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டவர்கள் என்று சனாதனத்தின் அடிப்படையில் உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த பாசக தலைவர் ஒருவர சொல்கிறார்.

பெண்களை இழிவு படுத்தும் இவையெல்லாம் பெண் அடிமைத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

பெண்களுக்கான உரிமைகளை ஆண்களுக்கான உரிமைக்குச் சமமாகக் கூறும்  இந்திய அரசியல் யாப்பிற்கு எதிரான சனாதனத்தை – சனாதனத்தைக் கூறும் நூல்களை – சனாதனப் படைப்புகளை தடை செய்வதுதானே முறை.

காண்க : விடை எண் 30

பிராமணன் சந்தேகமின்றித் சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யசமானன் எடுத்துக் கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர் தன்பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரரல்லர். (மனு 8.417)

இத்தகைய உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் சனாதனத்தை எங்ஙனம் உயர்வாகக் கருத இயலும்?

சட்டத்தின் முன் யாவரும் சமம் என்று சொல்லாமல், பிராமணனுக்கு ஏற்பச் சட்டத்தை வளைக்கிறது சனாதனம்.

சூத்திரன் அகந்தையால் பிராமணன் மேல் உமிழ்ந்தால் அவன் உதடுகளிரண்டையும் அரசன் வெட்டியெறியும் படிச் செய்ய வேண்டும்(மனு.அத். 8.282). ஆனால், பிராமணன் என்ன குற்றம் செய்தாலும் தண்டனை கிடையாது.

கொலைத் தொழில் புரிந்த மற்ற சாதிக்காரர்களைத் தூக்கில் போட வேண்டும், பிராமணன் கொலைக் குற்றம் செய்வானேயானால், அவனது தலை மயிரை மொட்டை யடித்தலே தண்டனையாகும் (மனு 8.379).

இவ்வாறு பிராமணனை மட்டும் உயர்வாகச் சனாதனம் கூறுகையில் எங்ஙனம் உயர்வு தாழ்விற்கு இடமில்லை எனப் பொய்யுரை கூறுகிறார்கள்?

‘தெய்வத்தின் குரலின்’ முதல் பகுதியில் “வருண தருமம்” என்ற கட்டுரையில், “சனாதன தருமத்தின் முக்கிய அம்சமே வருண தருமம்தான்” என்கிறார் மகாப் பெரியவர் என்று சொல்லப்படும் சந்திரசேகர சரசுவதி. மனிதர்களிடையே சாதிப்பாகுபாடுகளைத் திணித்து உயர்வு தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணசிரமம் ஆகிய சனாதனம் எங்ஙனம் உயர்வு தாழ்விற்கு இடந் தராததாய் இருக்க இயலும்?

சனாதன தருமத்தை ஊதி ஊதி எல்லாரிடமும் பரவச் செய்யலாம் என்பது என்னுடைய பேராசை. அதனால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். நம்முடைய சனாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வருண தருமம் இருப்பதால், இஃது அவசியமில்லை என்று எடுத்துப் போட்டுவிட்டு நம் மதத்தையும் மற்றவை மாதிரி ஆக்கிவிடவேண்டும் என்று சீர்திருத்தக்காரர்கள் சொல்கிறார்கள்.” எனவும் சந்திரசேகர சரசுவதி கூறுகிறார்.

“நம்முடைய சனாதன மதத்தில் மற்ற மதங்கள் எதிலுமே இல்லாத வருண தருமம்” இருப்பதாகக் கூறுவதால்,  இதனைப் பிற மதங்களுடன் ஒப்பிடுவது தவறு என்றும் எல்லா மதங்களுக்கும்  பொதுவானதாகச் சிலர் கூறுவதும் தவறு என்றும் உணரலாம்.

“மற்ற தேசங்களிலும் சரி, நம் தேசத்திலும் சரி, மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இது மட்டும்  பதினாயிரம் ஆண்டுகளாகப் போகாமல் இருக்கிறது என்றால், அவற்றில் இல்லாத எதுவோ இதில் இருக்கிறது என்று தானே அருத்தம்? அது என்ன என்று பார்த்தால், வருண தருமம்தான் நமக்கு மட்டும் பிரத்தியேகமாக இருக்கிறது. ஆகையால் வருண தருமம் சமூக சீர்குலைவிற்கே காரணம் என்று புது நாகரிகக்காரர்கள் சொன்னாலும், இது இருக்கிற நம் சமூகம்தான் சீர்குலையாமல் இருந்து வருகிறது“.   என்றும் சந்திரசேகர சரசுவதி கூறுகிறார்.

வழக்கம்போல் அப்பட்டமான பொய்களை அவிழ்த்து விடுகிறார் காஞ்சி சங்கராச்சாரி எனப்படும் சந்திரசேகர சரசுவதி. பதினாயிரம் ஆண்டுகளாக இந்துமதம் உள்ளதாக அதன் தொன்மையைக் கூறுவது முதல் பொய். மற்ற மதங்கள் போய்விட்ட போதிலும் இந்துமதம் மட்டும் இருக்கிறது என்பதும் அடுத்த பொய். கிறித்துவம், இசுலாம், புத்தம் முதலான் பிற மதங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மறைந்து விடவில்லை. எனவே, வருண தருமம் இருப்பதால்தான் சமூகம் சீர்குலையாமல் இருப்பதாகக் கூறுவதும் பொய்யே. வருணப் பாகுபாட்டால்தான் மக்களிடையே குழப்பங்களும் சீர்குலைவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

தனக்குக் கீழாக ஒரு சாரார் இருப்பதாகக் கூறுவதைப் பெருமையாகக் கருதி வருண வேறுபாட்டிற்கு இரையாகிச் சிலர் மக்களிடையே உயர்வு தாழ்வைக் கற்பித்து வருகின்றனர். சனாதன நெறி ஒழிந்தால்தான் பாகுபாட்டு முறை ஒழியும்.

(தொடரும்)

– இலக்குவனார் திருவள்ளுவன், சனாதனம் பொய்யும் மெய்யும் பக்.46-48

பாசன அறிவியல் – அன்றே சொன்னார்கள்: இலக்குவனார் திருவள்ளுவன்



(பரணர் பாடலில் நியூட்டன் விதி – தொடர்ச்சி)

மழை நீரைத் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பல நாட்டவர்க்கும் இருந்துள்ளது. ஆனால், நீர்த்தேக்க வகையில் வேறுபாடுள்ளது. கி.மு.3000 ஆண்டைச் சேர்ந்த  சோர்டானில் உள்ள சாவா அணை (Jawa Dam in Jordan)  தொன்மையானது என்கின்றனர். ஆனால், பழந்தமிழர் நாகரிகக்கூறுகள் உள்ள மெசபடோமியாவில் தொடக்கக்காலங்களில் பல நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மேலும், எகித்து நாட்டவர் தமிழ் நாட்டு அணைக்கட்டு வல்லுநர்களை அழைத்து அணை கட்டும் வகையை அறிந்ததாக அந்நாட்டிலேயே குறிப்புகள் உள்ளன. எனவே, அணைக்கட்டு நுட்பவியல் தமிழ் நாட்டில் இருந்தே சோர்டானுக்கும் பரவியிருக்க வேண்டும் எனலாம். இல்லையேல் எகிப்தியர் சோர்டான் நாட்டவரை அழைத்து அணைநுட்பம் பற்றி அறிந்திருப்பர். அணைக்கட்டு அமைப்பில் தமிழர்கள் முன்னோடியாக இருந்துள்ளமையே  இதற்கான கராணமாகும்.

உலகிலேயே பழமையான – இன்றும் நிலைத்திருக்கக்கூடிய – ஒரே அணை திருச்சிராப்பள்ளியில் உள்ள கல்லணைதான். காவிரி நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்துவதற்காகச் சோழ வேந்தன் கரிகால் பெருவளத்தானால் கட்டப்பட்டது இது. இவ்வேந்தன் பாசனத் திட்டங்களையும் செயல்படுத்தி வெற்றி கண்டமை புலவர் முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையிலும் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பட்டினப்பாலையிலும் குறிக்கப்பெற்றுள்ளது.

 கல்லணையின் நீளம் 1080 அடி; அகலம் 40 அடி முதல் 60 அடி வரை; ஆழம் 15 அடி முதல் 18 அடி என அமைந்துள்ளது. ஆனால் சாவா அணை, நீளம் 260 அடி, அகலம் 15 அடி, ஆழம் 15 அடி என மட்டுமே அமைந்திருந்ததாகும். எனவேதான் வயவர் ஆர்தர் தாமசு காட்டன் என்னும் ஆங்கிலேயப் பாசனப் பொறியாளர் (Sir Arthur Thomas Cotton:1803-1899) கல்லணையை மிகு நேர்த்தியான மாபெரும் அணை (grand anikut) என்கிறார். அணைக்கட்டு என்னும் சொல் ஆங்கிலத்தில் இடம் பெற்றதில் இருந்தே அணைக்கட்டு பிற நாடுகளில் இருந்ததில்லை என்பதை உணரலாம். கல்லும் களிமண்ணும் கொண்டு கட்டப்பட்ட ஓர் அமைப்பு ஈராயிரம் ஆண்டுகளாக வெள்ளத்தைத் தடுக்கப் பயன்பட்டு வருவது விந்தையிலும் விந்தையல்லவா!

நீரைத்தேக்கி அணை கட்ட வேண்டியதன் இன்றியமையாமையைப் புலவர் குடபுலவியனார் தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வலியுறுத்திப் பாடியுள்ளார். மறுமை உலகிற்கான செல்வத்தை வேண்டினாலும், உலகையே ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்து நீ ஆள விரும்பினாலும் புகழுடன் இவ்வுலகில் வாழ விரும்பினாலும், நீ ஆற்ற வேண்டிய அரும்பணி ஒன்று உள்ளது. நீர் இன்றி வாழ முடியாத இவ்வுலகத்தில் பசி நீங்க உணவு அளிப்பவரே உயிர் அளித்தவராவர்! உணவு என்பது நில விளைச்சலுடன் சேர்ந்த நீருமாகும்! வான் மழையை எதிர்நோக்கி இருக்கும் வறண்ட பூமியால் எப்பயனும் இல்லை. எனவே, நான் கூறப்போவதை மறவாமல் உள்ளத்தில் கொள்க! பள்ளத்தாக்கிலே  நீரினைத் தேக்கி  நீர் நிலைகளை உண்டாக்குபவர்களே, மறுமை இன்பங்களையும் புகழையும் இவ்வுலகில் பெற்று மகிழ்வோர் ஆவர்.  அவ்வாறு நீரினைத் தேக்கி விளைச்சலுக்கு உதவாதவர்கள், இவ்வுலகில் தம் புகழை நிலை நிறுத்த இயலாதவர்கள்  ஆவார் எனக்கூறுகையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்:

         நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
        தட்டோர் அம்ம இவண்தட் டோரே!
        தள்ளா தோர்இவண் தள்ளா தோரே!                               (புறநானூறு 18 : 28-30)
(தட்டு – நீர்நிலை)

நீரைத் தேக்கிப் பயன்படுத்தும் பாசனஅறிவியலையும் அவ்வாறு பயன்படுத்துவதற்கான நிலையான அணைக்கட்டைக் கட்டும் கட்டுமான அறிவியலையும் நம் முன்னோர் நன்கு அறிந்திருந்தனர். நாமோ தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வி இன்மையால்  அறியாமையைத் தேக்கி அல்லல் உறுகிறோம்!

–         இலக்குவனார் திருவள்ளுவன்

ஞாயிறு, 18 மே, 2025

பிராமணனை உயர்த்திச் சொல்லவில்லை சனாதனத் தருமம் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(பூணூல் அணிந்திருக்கும் போது, ஒழுக்கக் கேடான செயல்கள் செய்யமாட்டார்கள் என்பது சரியா? – தொடர்ச்சி)

சூத்திரன் சுவர்க்கத்திற்காவது, சீவனத்திற்காகவாவது அல்லது இரண்டிற்குமாவது, பிராமணனையே தொழ வேண்டும். இவன் பிராமணனை யடுத்த சூத்திரனென்று ஒருவனுக்குப் பெயர் வந்தால் அதே அவனுக்குப் பாக்கியம்(மனு 10. 122). பிராமணன் கூடவே இருந்து அவனுக்குப்பணி விடை செய்ய வேண்டும் என்றும் பிராமணனைப் பிற வருணத்தார் தொழ வேண்டும் என்றும் கூறுவது பிராமணனை உயர்த்திச் சொல்வதாகாதா? இதனை எப்படி ஏற்க முடியும்.

“ஓர் ஊரில் எல்லாருக்கும் 4 வருணத்தினரையும் சேர்த்துக் கல்வி சொல்லித் தருவது தான் பிராமணன் வேலை. பிராமணன் இல்லா விட்டால் அந்த ஊரில் அனைவரும் தற்குறி தான். அதனால் தான் பிராமணனைக் கொன்றால் ஓர் ஊரே முட்டாளாய் மாறுமே என்று தான் அக்காலத்தில் பிராமணனைக் கொன்றால் பாவம் என்றார்கள். மற்ற வருணத்தினர் ஏன் சொல்லி தரக் கூடாதா ? என்றால் அவர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களின் வேலையில் நிறைய வருமானம் கிடைக்கும்”

எத்தகைய பொய்யுரை? பிற வருணத்தார் கல்வி சொல்லித் தந்தால் குறைவாய் வருமானம் கிடைக்கும் என்று வரவில்லையாம். பிராமணர்கள் ஈக-தியாக மனத்துடன் கற்பிக்கும் தொழிலுக்கு முன் வந்துள்ளார்களாம்.  அப்படிப் பார்த்தால், பிராமணர் சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்றுத் தர மாட்டார்களே! பிராமணனை உயர்த்திச் சொல்லி விட்டு அவனைக் கொன்றால் பாவம் என அச்சுறுத்தி விட்டு இது குறித்துப் பிறர் கேள்வி கேட்டதும் மழுப்பி மறைக்கப் பார்க்கிறார்கள். கற்பிப்பவர் இல்லாமல் போவார்கள் என்றால் ஆசிரியர்களைக் கொல்லக் கூடாது என்றல்லா சொல்லி யிருக்க வேண்டும். அவ்வாறு சொல்லாமல் வருண அடிப்படையில்தானே சொல்லியுள்ளனர்.

(தொடரும்)