திங்கள், 5 அக்டோபர், 2015

ஐ.நா.வில் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ



eezham-genocide06

vaiko07

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில்

அமெரிக்கத் தீர்மான நிறைவேற்றத்தால்

படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ

  “இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்களப் பேரினச்சார்பு அரசை அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு, அநீதிக்கு மகுடம் சூட்டப்பட்டு விட்டது. ஐ.நா-வின் வரலாற்றிலேயே ௨௦௧௫ (2015) அக்டோபர் ௧ (1) ஆம் நாள் களங்கத்தைச் சுமக்கும் கருப்பு நாளாகிவிட்டது.
  ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டில் கொலைகாரச் சிங்கள அரசுக்கு மனித உரிமை ஆணையத்தில் பாராட்டுத் தீர்மானம் கொண்டு வந்த இந்தியாவும், கியூபாவும் ௨௯ (29) நாடுகளின் ஆதரவோடு அந்த அநீதியான தீர்மானத்தை நிறைவேற்றின. தற்பொழுது இன்று (௧-௧௦-௨௦௧௫) நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கொலைபாதகச் சிங்கள அரசையே குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பாளியாக்கும் கொடுமையான தீர்மானத்தை அமெரிக்காவும், பிரிட்டனும், மாசிடோனியாவும், மாண்டிநீரோவும் முன்வைத்து, இந்தியா, பாகித்தான் போன்ற நாடுகளின் முழு உறுதுணையுடன் ஒருமனமாக நிறைவேற்றி விட்டன.
  கடந்த ஆண்டு மனித உரிமை ஆணையர் நியமித்த மார்ட்டி அட்டிசாரி குழு, இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலையான எண்ணற்ற நிகழ்வுகளைப் பட்டியலிட்டு, உரிய நீதி உசாவல் (விசாரணை) வேண்டும் என்று விரிவான அறிக்கை தந்தது. அந்த மூவர் குழு இலங்கைக்குள் செல்வதற்கே சிங்கள அரசு விடவில்லை. பன்னாட்டு நீதி உசாவல் ஏற்படுத்தப்பட்டு, புலனாய்வு செய்யப்பட்டால் நடந்தது தமிழ் இனப் படுகொலை என்பது மெய்ப்பிக்கப்படும். ஆனால், இந்த இனப் படுகொலை நடத்துவதற்குச் சிங்கள அரசுக்கு உடந்தையாக ஆயுதங்கள் வழங்கிச் செயல்பட்ட இந்தியா முதலான நாடுகள் குற்றச்சாட்டுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே சிங்கள அரசை வரிந்து கட்டிக்கொண்டு தாங்கிப் பிடித்தன.
  சிரிய நாட்டில் நடக்கும் படுகொலைகளை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரிப்பதற்கு ஐ.நா.-வின் பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் பரிந்துரை செய்துள்ளார். இன்றைய உலகில் தமிழர்கள் துணையற்றவர்களாக வல்லாண்மை நாடுகளால் ஆக்கப்பட்டு விட்டனர். இன்று மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தன்மானத் தமிழர்கள் எவரும் ஏற்க மாட்டார்கள். துன்ப இருளில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வெளிச்சத்தைத் தரச் சூளுரைத்துக் கடமையாற்றுமாறு தமிழ்க்குலத்தின் இளைய தலைமுறையை, மாணவர்களை, தரணிவாழ் தமிழர்களை வேண்டுகிறேன்! தடைகளையும் சூழ்ச்சி வலைகளையும் தகர்க்கும் உறுதியோடு போராடுவோம்!”

– வைகோ


– செய்தியாளர் இ.பு.ஞானப்பிரகாசன்
eezham03


அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது: செயலலிதா


eezham-genocide08jayawithtears

அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றத்தையும்,

மன வருத்தத்தையும் அளிக்கிறது:

தமிழ்நாட்டு முதல்வர் செ.செயலலிதா

  “தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்று ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குச் செயல் வடிவம் கொடுக்க நடுவண் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே தற்பொழுது ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எடுத்துரைக்கிறது.
  ஒட்டுமொத்தத் தமிழினத்தின் குறிக்கோளுக்கும், இலங்கை வடக்கு மாகாண அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ்தமிழர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபொழுது பன்னாட்டுச் சட்டம் மற்றும் செனீவா ஒப்பந்தத்தில் உள்ள போர் நெறிமுறைகளை முற்றிலும் மீறிப் போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் பன்னாட்டு உசாவல் (விசாரணை) நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தை இந்தியா ஐக்கிய நாடுகள் அவையில் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா முதலான மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டு வர வேண்டும் என்றும், இலங்கைக்குச் சார்பான நிலையை அமெரிக்கா எடுத்தால், அதனை மாற்ற அரசார்ந்த வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடுவண் அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானம் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் ஒரு மனமாக ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்று நிறைவேற்றப்பட்டது.
  ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) முதல் ௨-௧௦-௨௦௧௫ (2.10.2015) வரை நடைபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுவின் ௩௦ (30)ஆவது கூட்டத்தில் இலங்கையில் ‘இணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் பொறுப்புடைமை பற்றிய மனித உரிமைக் குழு’வின் ஆணையரது அறிக்கை கருதிப்பார்க்கப்பட்டு, வரைவுத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்பொழுது இலங்கையே போர்க் குற்றங்கள் பற்றி உசாவல் மேற்கொள்ளலாம் என்ற வகையில் தீர்மானம் நிறைவேற்றக்கூடிய சூழல் உள்ளது என்பதையும், அதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமை இந்தியப் பேரரசுக்கு உள்ளது என்பதையும் நான் தெளிவாகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தேன்.
  அப்போது ௧-௯-௨௦௧௫ (1.9.2015) அன்று இலங்கை வடக்கு மாகாண அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் சுட்டிக் காட்டினேன். அந்தத் தீர்மானத்தில் பன்னாட்டுக் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது இலங்கையிலேயே உசாவல் மேற்கொள்வது என்பது நீதியைப் பகடிக்குள்ளாக்குவது போன்ற செயல் என்றும், இலங்கை மக்களைக் காத்து, அவர்களுக்குச் சேவை புரிய வேண்டிய இலங்கை நாட்டின் முதன்மைத் தூண்கள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக் காட்டி நீதி வழங்கத் தவறி விட்டன என்றும் தெரிவித்து, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பன்னாட்டுக் குற்றங்கள் குறித்து உசாவல் மேற்கொள்ளப் பன்னாட்டுத் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று பன்னாட்டுக் குமுதாயத்தை (சமுதாயத்தை) இலங்கை வடக்கு மாகாண அவை கேட்டுக் கொண்டுள்ளதைப் பற்றி எடுத்துக் கூறினேன்.
  அந்தத் தீர்மானத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில், இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் மீது பன்னாட்டு உசாவல் நடத்தப்பட்டால்தான் நீதியும், நியாயமும் நிலைநிறுத்தப்படும் என்பதால்தான் தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இன்றி ஒட்டுமொத்தத் தமிழர்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும் எனில் பன்னாட்டு விசாரணைதான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெளிவாக எடுத்துக் கூறியிருந்தேன். ‘தமிழ்நாடு சட்டப்பேரவை’யால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு நான் ௧௬-௦௯-௨௦௧௫ (16.9.2015) அன்றே ஒரு மடல் எழுதினேன்.
  அதனுடன் ‘தமிழ்நாடு சட்டப்பேரவை’த் தீர்மானத்தின் படியையும் அனுப்பியிருந்தேன். எனினும், நடுவண் அரசு இது தொடர்பாக எவ்வித நேர்முக நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆறா மனப் புண்ணை ஏற்படுத்தியுள்ளது.
  அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை முதலான நாடுகளால் கொண்டு வரப்பட்டு, ௧-௧௦-௨௦௧௫ (1.10.2015) அன்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் நியாயம் வழங்குவதாக அமையாது. இது இலங்கை அரசுக்கு ஏற்பாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ள தீர்மானம்தான். மனித உரிமை மீறல், மனிதநேயம் பற்றிய பன்னாட்டுச் சட்டங்கள் மீறல் குறித்த நம்பகத்தன்மை உடைய நீதி முறைமை, விடுதலையன நீதி – வழக்குத் தொடுப்பு நிறுவனங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்றும், இலங்கையின் நீதிமுறைமையில் பொதுநலநாடுகள், பிற வெளிநாட்டு நீதியாளர்கள், எதிர்த்தரப்பினரின் வழக்குரைஞர்கள், ஒப்புதலளிக்கப்பட்ட வழக்குத் தொடுப்போர் மற்றும் உசாவல் செய்வோர் ஆகியோரின் பங்கேற்பு முதன்மையானது என்பதையும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. எனினும், இஃது எந்த வகையிலும் பன்னாட்டு நீதி உசாவலுக்கு ஈடானது இல்லை.
  இலங்கை அரசிடம் மன மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கருதி நிறைவேற்றப்பட்டுள்ள இந்த வலுவற்ற தீர்மானம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு எவ்வித நன்மையையும் பயக்காது.”

-முதல்வர் செ.செயலலிதா

– செய்தியாளர் இ.பு.ஞானப்பிரகாசன்
eezhaththaay02



திருடன் கையில் திறவுகோல் – இராமதாசு

eezham-genocide45Ramadoss01

ஐ.நா தீர்மானம் திருடன் கையில்

திறவுகோலை ஒப்படைப்பதற்கு

இணையானது:  மரு.இராமதாசு

  “இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே உசாவல் நடத்த வகை செய்யும் அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இந்தியா முதலான நாடுகளின் ஒத்துழைப்புடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்களையும், இனப் படுகொலையையும் நடத்திய கொடுமதியானவர்கள் தண்டனையின்றித் தப்பிக்கவும், சொந்தங்களைப் பறி கொடுத்தவர்கள் இறுதி வரை நீதி கிடைக்காமல் வாடவும்தான் இந்தத் தீர்மானம் வகை செய்யும்.
  இலங்கையில் ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை நூறாயிரம் (இலட்சம்) தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அப்போதைய இலங்கை ஆட்சியாளர்கள்தாம் காரணம் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். இதைச் சான்றுகளுடன் மெய்ப்பித்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே உலகத் தமிழர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் விருப்பமாக இருந்தது.
 ஈழத் தமிழர்களின் நலன்களையும், மனித உரிமையைப் பாதுகாப்பதிலும் அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து முதலான நாடுகள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்துப் பன்னாட்டு உசாவல் நடத்தப்பட வேண்டுமெனக் கடந்த ஆண்டுவரை வலியுறுத்தி வந்தன. அதன்படி ஐ.நா மனித உரிமை ஆணையர் அலுவலகம் சார்பில் உசாவல் நடத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இவ்வுசாவலில் தெரிய வந்த தகவல்களின் அடிப்படையில் பன்னாட்டு நீதிமன்ற உசாவல் நடத்திக் குற்றவாளிகளைத் தண்டிப்பதுதான் இயற்கையான நீதியாக இருக்கும். ஆனால், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, அங்குள்ள நிலைமை முற்றிலுமாக மாறி விட்டதைப் போன்ற ஒரு பொய்யான சித்திரத்தை உருவாக்கி, இலங்கை மீதான போர்க்குற்றத்தை அந்நாட்டு நீதிமன்றத்திலேயே உசாவல் (விசாரிக்க) விடுவது ‘திருடன் கையில் திறவுகோலை ஒப்படைப்பதற்கு’ ஒப்பாகும்.
   ஈழத் தமிழர்களின் நலனில் அமெரிக்காவுக்கு அக்கறை இல்லை என்பதும், இலங்கையைத் தனது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவது மட்டும்தான் அதன் நோக்கம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. இலங்கையை வழிக்குக் கொண்டு வர இனப்படுகொலையைப் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, அதன் நோக்கம் நிறைவேறியதும் இலங்கையைக் காப்பாற்றத் துடிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கை மீதான தீர்மானத்தைக் கொண்டு வந்த இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, மாசிடோனியா, மாண்டிநெக்ரோ ஆகிய நாடுகளும், அதற்குத் துணை நின்ற அல்பேனியா, செருமனி, ஆத்திரேலியா, கிரீசு, இலாத்வியா, போலந்து போன்ற நாடுகளும் அமெரிக்காவின் விரல் அசைவுக்குக் கட்டுப்பட்டவை என்பதால் அவையும் இலங்கைக்கு ஏதுவாகச் செயல்பட்டதில் எந்த வியப்புமில்லை.
  ஆனால், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட இந்தியா இந்தச் சிக்கலில் நடந்து கொண்ட விதம்தான் திகைப்பும் ஏமாற்றமும் அளிக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான அதிகாரம் கிடைப்பதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்தத் தீர்மானத்தின் மீதான கலந்துரையாடலில் பேசிய இந்தியத் தூதர் அசித்குமார் கூறியுள்ளார். உண்மையில், ஈழத் தமிழர்களுக்கு இவற்றைப் பெற்றுத் தர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தால், அதற்கு முன் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்! ஈழத் தமிழர்களுக்கு அதிகாரமும், கண்ணியமான வாழ்க்கையும் கிடைக்க அதுதான் அடிப்படையாக அமையும். போர்க்குற்ற உசாவலை இலங்கை நீதிமன்றங்களே நடத்திக் கொள்ள விட்டுவிட்டு, தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தருவதாகக் கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.
  இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுக் குறித்துப் பன்னாட்டு நீதிமன்ற உசாவலுக்கு ஆணையிடக் கோரும் தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று தமிழகச் சட்டப்பேரவையில் கடந்த ௧௬-௦௯-௨௦௧௫ (16.09.2015) அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் மீதான   நிலைப்பாட்டை நடுவண் அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியபொழுதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, கடைசி நேரத்தில் இலங்கைக்குச் சார்பான தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைத்திருப்பது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த இரண்டகமும் அநீதியும் ஆகும். இலங்கைச் சிக்கலில் முந்தைய காங்கிரசுக் கூட்டணி அரசுக்கும், இப்போதைய தேசிய சனநாயகக் கூட்டணி அரசுக்கும் வேறுபாடு இல்லை என்பதையே இச்சிக்கலில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாடு காட்டுகிறது.”

– மரு.இராமதாசு

– செய்தியாளர் இ.பு.ஞானப்பிரகாசன்
eezham02