ஞாயிறு, 14 டிசம்பர், 2014

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு – வைகை அனிசு


57tractor_thevathaanappaati

தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு

தேனி மாவட்டத்தில் வேளாண்பணிகளுக்கு உழுவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டியிலும் அதனைச்சுற்றியுள்ள குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம் முதலான பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் போதிய மழை பெய்யவில்லை. மேற்குமலைத்தொடர்ச்சியில் பெய்த மழை காரணமாக அணைகள், ஏரிகள், கண்மாய்கள், கிணறுகள் நிரம்பத்துவங்கியுள்ளன. இதனால் கடந்த மூன்று ஆண்டுகாலமாகத் தரிசாக கிடந்த நிலங்களை உழுது வருகின்றனர் உழவர்கள். நெல், கரும்பு, வாழை முதலானவற்றைப் பயிரிட்டு வருகின்றனர். இதனால் வேளாண்பணிகளுக்கு உழுவைகள் தேவை மிகுதியாக உள்ளது. கடந்த பத்தாண்டுகள் வரை உழவு, அறுவடை செய்தல், பரம்படித்தல், நாற்றுப்பணிகளுக்கு மாடுகளைப் பயன்படுத்தி வந்தனர். இப்பொழுது மாடுகளைப் பயன்படுத்துவது அரிதாகிவிட்டது. இதனால் மாடுகளை விற்பனை செய்துவிட்டனர். அதன் பின்னர் இயந்திரத்தை நாடினார்கள். உழுவை பெரும்பாலும் 90விழுக்காட்டு வேளாண்பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. உழுபொறிகளை உழுவுதற்கும், பரம்படித்தல், அறுவடை செய்தல், நிலத்தைச் சமப்படுத்துதல் ஆகிய பணிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பொழுது ஒரு மணிநேரத்திற்கு 1000 உரூபாய் வீதம் உழுவைகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. அதே வேளையில் காளைமாடுகளைப் பயன்படுத்தினால் 4 மணிநேரத்திற்கு 700உரூபாய் வரை வாங்குகிறார்கள். ஆனால் வேலை சரியாக நடைபெறுவதில்லை. இதனால் உழுவைகள் பயன்பாடு பெருகி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உழுதொழில் நடைபெற வில்லை. இதனால் வங்கி மற்றும் தனியார்களிடம் கடன்வாங்கிய உழவர்கள் கடனைக் கட்டமுடியாமல் உழுவைகளை ஒப்படைத்துவிட்டனர். இப்பொழுது உழுவைகளின் தேவை அதிகமாக உள்ளதால் வெளிமாவட்டங்களில் இருந்து உழுவைகளைக் கொண்டுவந்து உழுதொழில் புரிகின்றனர்.
57vaigai aneesu_name



அகரமுதல 57

வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள்-வைகை அனிசு

57vaigaidam_park01

வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள்

தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணையில் பூங்காக்கள் பேணப்படாமல் உள்ளதால் சிறுவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
வைகை அணையில் பொழுது போக்குவதற்காகப் பூங்காக்கள், சிறுவர்கள் விளையாட்டுத்திடல், இராட்டினம், சறுக்கி விளையாடும் இடம், தொடரி(இரயில்வண்டி), பாரஉந்து போன்ற பொழுது போக்குவாய்ப்புகள் நிறைய உள்ளன. மேலும் சிறுவர்கள் தனியாக விளையாடுவதற்குத் தனியாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சிறுவர்கள் விளையாடும் பூங்காக்களுக்குத் தனியாக நுழைவுக்கட்டணம் பெறப்படுகிறது. கட்டணம் வாங்கியும் எந்த வித அடிப்படை வசதியும் பொதுப்பணித்துறை சார்பில் செய்துதரப்படவில்லை. இதனால் இப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் அங்கு உடைந்துள்ள கம்பியில் அடிபட்டு இரத்தக்காயத்துடன் செல்கின்றனர்.
மேலும் மின்சாரக் கம்பிகள் ஆங்காங்கே எந்த விதப் பாதுகாப்பும் இன்றித் தரையில் விழுந்து கிடக்கின்றது. குழந்தைகள் அதனை மிதித்துவிட்டால் மின்விபத்து ஏற்பட்டுவிடும் கண்டம்(அபாயம்) உள்ளது.
இவை தவிர பூங்காக்கள் முறையாகப் பேணப்படாமையால் மண்டிக்கிடக்கும் புதர்களில் பாம்பு, பிற நஞ்சுயிரிகள் புல், புதர்களில் நுழைந்து உள்ளன. இதன் மூலம் பாம்புக்கடி, நச்சுக்கடிகளுக்கு உள்ளாகும் பேரிடர் உள்ளது.
எனவே பொதுப்பணித்துறை குழந்தைகள் உயிர் இழப்புகள் ஏற்படும் முன் எச்சரிக்கையாகப் பழுதுகளைச் சரிசெய்யவேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
57vaigai aneesu_name


அகரமுதல 57

மொழி உரிமை ஆண்டு- ஈகியர் நினைவேந்தல் - மதுரையில் கூட்டம்

     14 திசம்பர் 2014      கருத்திற்காக..
56anti-hiniagitation-50thyear

ஈகியருக்கு நினைவேந்தலும்

மொழி உரிமை ஆண்டாக 2015 ஐ கடைப்பிடித்தலும்

மொழி உரிமைக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குதலும்
anti_hindi
வணக்கம்,
தமிழகத்தின் வரலாற்றை மாற்றிய 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு எதிர்வரும் 2015 ஆகும். இவ்வாண்டில் மொழிப்போர் ஈகியர் நாளான சனவரி 25, 2015 முதல் ஓராண்டுக்கு இந்தித் திணிப்பு எதிர்ப்பு மொழிப் போராளிகளின் நினைவை ஏந்துவதும் அந்தப் போராட்டத்தின் உயிர்ப்பிலிருந்து புதிய மொழி உரிமைப் போராட்டங்களை நடத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது. இந்தியையும் சமற்கிருதத்தையும் திணிக்கும் நரேந்திர மோடி அரசின் இன்றைய தமிழ்ப்பகை மொழிச்சூழலும் நம்மை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழர்களிடையே மொழியுணர்வை மீ்ண்டும் புத்துயிர்பெற வைக்க   மாபெரும் இந்தித் திணிப்புக்கு எதிரான மாபெரும் போராட்டத்தின் 50 ஆம் ஆண்டை நாம் கடைப்பிடிக்கவேண்டும்.
இதற்காக மொழி உரிமை குறித்து அக்கறையுள்ள அனைத்து அமைப்புகளும் இயக்கங்களும் தனியசர்களும் ஒன்று சேரவேண்டியது தேவையாகும். சனவரி 25, 2015 இல் தமிழகமெங்கும் நினைவேந்தல்களை நடத்துவது, பிறகு ஆண்டு முழுக்க மொழி உரிமைப் போராட்டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்துவது, 1965 போராட்டம் உள்பட அனைத்து மொழிப்போராட்டங்களையும் ஆவணப்படுத்துவது, மொழிப்போர் ஈகியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவரவர் ஊர்களில் சிறப்பிப்பது எனப் பல முறைகளில் இந்த ஆண்டுக்கு நாம் அரசியல் முதன்மையை உருவாக்கமுடியும்.
இதற்காக, மொழி உரிமைக்கென தனியானதொரு கூட்டமைப்பை உருவாக்க முதல் கட்டமாக சென்னையில் நவ. 30 அன்று ஒரு கலந்தாய்வு நடத்தப்பட்டது. அடுத்த நிகழ்வு கோவையில் இந்தவாரம் 7 ஆம் நாள் சிறப்பாக நடைபெற்றது.
அடுத்த நிகழ்வு மதுரையில் எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது.
நாள்: கார்த்திகை 28, 2015 திசம்பர் 14, 2014 ஞாயிற்றுக்கிழமை. மாலை 4.30 மணி
இடம்: மணியம்மையார் மழலையர் பள்ளி, வடக்குமாசிவீதி, கிருட்டிணர் கோயில் எதிரில், மதுரை
இந்நிகழ்வுக்குப் பின் திருச்சியில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்ய வாய்ப்பிருக்கிறது.

சென்னையில் கூடி இறுதி முடிவு எடுக்கப்படும்.

கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள வாருங்கள்.
தொடர்புக்கு செ.ச.செந்தில்நாதன் 9884155289

சே.வி.தாலின் 8015051020

தமிழ்நெறியன் 7401625268
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/02/thamizh-hindi02-250x100.jpg





அகரமுதல 57