திங்கள், 10 பிப்ரவரி, 2014

பொள்ளாச்சியார் திருந்தமாட்டாரா? தமிழ்க்கொலையை நிறுத்த மாட்டாரா?

பொள்ளாச்சியார் திருந்தமாட்டாரா? தமிழ்க்கொலையை நிறுத்த மாட்டாரா?

 mozhi inam nilam01
  பொள்ளாச்சியார், வள்ளலார்  கொள்கையைப் பரப்பும் அருள் உள்ளம் கொண்டவர். ஆனால், தமிழ்த்தாய்மீது அருள் இல்லாதவர்.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் நெறி பரப்புபவர், அயல்மொழிகளால் வதைக்கப்பட்டு வாடும் தமிழன்னை மீது  பரிவு காட்ட வேண்டாவா?  மாறாகத் தமிழைப் பாராட்டி ஆரியத்தை முன் நிறுத்துவதையே கொள்கையாகக் கொண்டவர். ஆரியத்தை அடைவதற்குரிய பாதைதான் தமிழ் என்பது அவரது வழிமுறை. தமிழ்க் கோப்பையில் ஆரிய நஞ்சு தருவதில் வல்லவர். எனவே, அவரிடம் இதனை எதிர்பார்க்கமுடியாதுதான். ஆனால், அவரின் நெருங்கிய வட்டம் தமிழ் எழுத்துவடிவங்களைச் சிதைப்பதையே வாணாள் கொள்கையாகக் கொண்டுள்ளதே! இன்றைக்கு அவரே நேரடியாக வரிவடிவச் சிதைப்பில் ஈடுபட்டுள்ளார். பின்புலத்தில் உள்ளவர் யாராக இருப்பினும் வெளிப்பாடு இவர்தான் என்பதால் இவரிடம்தான் நாம் முறையிட இயலும்.
  அவருடைய ‘ஓம்சக்தி’ இதழில் ‘மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும்’  என அவர் எழுதியுள்ளதைப் பார்த்துப் பதைபதைத்த நண்பர் ஒருவர் தாய்மொழிநாளைக் ‌கொண்டாட வலியுறுத்தும் தமிழ்த்தொண்டர் சிவசுப்பிரமணியத்திடம் தெரிவிக்க அவர் வேதனையுடன் என்னிடம் சுட்டிக்காட்ட நானும் படித்துப் பார்த்தேன்.  தமிழ் எழுத்துகளை ஆங்கில/உரோமன் எழுத்து வடிவில் ஒலி பெயர்ப்பாக எழுதிப்படித்தால்தான் தமிழ் வளரும் என 15 ஆண்டுகள் அரும்பாடுபட்டு ஒருக் கணியனை(software)  உருவாக்கியுள்ளாராராம். கிறுக்குத்தனத்திற் கெல்லாம் 15 ஆண்டுகள் தேவையா என்பது புரியவில்லை.
  1975 முதல் அமெரிக்கா சென்றுவரும் அவரிடம் தமிழ்க் குழந்தைகள் அறிவுக் கண்களைத் திறந்து விட்டனராம்.mozhi03 ஆசிரியர் உதவி இல்லாமல் ஆங்கில எழுத்துகள் மூலம் சப்பான் மொழியையும் இத்தாலி மொழியையும் அவர்கள் கற்கின்றார்களாம். தமிழையும் ஏன் அவ்வாறு ஆங்கிலம் மூலம் கற்றுத் தரக்கூடாது எனக் கேட்டனராம். ஆங்கில எழுத்தில் தமிழ் இலக்கணத்தையும் தமிழ் – ஆங்கில அகராதி ஒன்றையும் தந்துவிட்டால், தாங்களே தமிழைப் படித்துக் கொள்ள முடியும் என்றும் கூறினார்களாம்.. அதுதான் அவரைச் சிந்திக்கத் தூண்டியதாம்.. அகராதிகள் மூலம் அறிவை வளர்க்கலாம் எனில், கல்விக்கூடங்களே தேவையில்லையே! அவற்றை எல்லாம் இடித்துத் தள்ளிவிடுவோமா?
  இதேபோல அமெரிக்காவிலுள்ள அறிஞர்கள் தொல்காப்பியம் முதல் பெரியபுராணம் வரை உள்ள மூலத் தமிழ் நூல்களை உரோமன் எழுத்துக்களில் அச்சிட்டுத் தந்துவிட்டால் போதும், தாங்களே அவற்றைப் படித்துக் கொள்ளவும் ஆராய்ச்சி செய்யவும் உதவும் என்றனராம்.
  இவ்வாறு உரோமன் எழுத்துகளில் தமிழறியா மொழியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுவதற்காக இப்பொழுதும் நூல்கள் வந்துள்ளன. தமிழ் இணையக் கல்வி்க்கழகத்தின் நூலகத்திலும் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்   ஒலி பெயர்ப்பில் வந்துள்ளன. இதனால், எந்த அறிஞரும் உருவானதாக வரலாறு இல்லை. அப்படியெல்லாம் இருப்பதுகூட அறியாமல் அதை அரும்பெரும்வினையாக எண்ணியதுதான் வேடிக்கை.
  இவற்றை எல்லாம் இப்பொழுது ஏன் கூறுகிறார் தெரியுமா? “பிப்பிரவரி 21 உலகத் தாய்மொழி நாள் அல்லவா? நமக்கு நம் தாய்மொழியான தமிழ்தானே  பண்பாட்டு. இன அடையாளம். அதைக் காக்க வேண்டாவா? உலகில் 43 நாடுகளில் தமிழர் வாழ்கின்றனர். ஆனால், 39 நாடுகளில் தமிழே தெரியாமல் தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு அந்த அடையாளத்தைக் காக்கும் வழியைச் சொல்லித் தர வேண்டாவா? அதற்குத்தானாம்!” தமிழை அழிப்பதுதான் தமிழர் என்னும் அடையாளத்தை அளிப்பதாகும் என்று எவ்வாறு மனம் கூசாமல் எழுதுகின்றார் என்றுதான் புரியவில்லை.
  இவரிடம் முறையிட்ட சிறுவர்கள் தமிழில் 247 எழுத்துகள் இருப்பது கடினம் என்று கூறினராம். எனவேதான், அருள் உள்ளம் கொண்டு பெரும்பாலான தமிழ் எழுத்துகளைக் கருணைக் கொலை செய்யமுடிவெடுத்துள்ளார் போலும்.
  மேலும், ஒரு மொழியைப் பிற மொழியளார் படிக்கத் தடையாக இருப்பது அதன் எழுத்துவடிவம்தானாம். எனவேதான் தெரிந்த எழுத்து வடிவம் மூலம் தமிழைக் கற்பிப்பதற்காக இந்த முயற்சியாம். மொழி என்பது வரிவடிவமும் ஒலிவடிவமும் இணைந்ததுதான் என்பதை அறியாதவரா இவர்? அறிந்ததால்தான் வரிவடிவத்தை எப்படி யெல்லாமோ சிதைக்க முயன்றும் முடியவில்லையே! இப்பொழுது வேறு வழியில் சிதைக்கலாம் எனப் புறப்பட்டுவிட்டார் அருளாளர்.
  வாதத்திற்காக இதை ஏற்று ஆராய்ந்து பார்ப்போம். உலக மொழிகள் 2,796 என 1960இற்கு முந்தையப் புள்ளிவிவரப்படி பேராசிரியர் சி.இலக்குவனார் ‘பழந்தமிழ்’ நூலில் குறித்துள்ளார். ஆனால், கோடை மொழியியல் நிறுவனம் (SIL- Summer Institute of Linguistics)   ஆய்விற்கு வராத பல மொழிகளை ஆண்டுதோறும் கணக்கிட்டு  உலக மொழிகளின எண்ணிக்கையை ஆண்டுதோறும் அறிவித்து வருகின்றது. இது வெளியிடும் மொழித்தொகையின்படி(Ethnologue) 1969 இல் 4,493 மொழிகள் கண்டறியப்பட்டதாகவும் 2013 இல் 7,105 வாழும் மொழிகள் கண்டறியப்பட்டதாகவும் அறியலாம். இவ்வெண்ணிக்கையின்படி ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழி வரிவடிவம் மூலம் பிற மொழிகளைப் படிப்பதாயின், 7,105 X 7,105 = 5,04,81,025 வரிவடிவங்கள் தேவை.  ஒரே வரிவடிவங்களைப் பின்பற்றக்கூடிய சில மொழிகள் உள்ளமையால் இதன் எண்ணிக்கை சிறிது குறையலாம். என்றாலும்   ஐந்துகோடிக்குக் குறையாத தாய் வரிவடிவ அயல்மொழிகள் என உருவாக்க வேண்டும்.  ஆனால், இதைப் பிற மொழியாளருக்குச் சொல்லவில்லையே! சொன்னால் விட்டுவைக்க மாட்டார்கள் என இவருக்குத் தெரியாதா?
  உலக மொழியாம் ஆங்கிலத்தைப் படிக்க நம் மக்கள் அல்லலுறுகிறார்கள். இதேபோல், பிரெஞ்சு,  செருமனி, உருசியன், சீனம், சப்பான் மொழிகளைப் படிப்பதால் உலக அறிவு பெருகும்.  எனவே இதோ நான் கண்டுபிடித்த தமிழ்வரிவடிவ ஆங்கிலம், தமிழ்வரிவடிவப் பிரஞெ்சு, தமிழ்வரிவடிவச் செருமனி  தமிழ்வரிவடிவ உருசியன், தமிழ்வரிவடிவச் சீனம், தமிழ்வரிவடி  சப்பானியம் என உருவாக்கித் தருவதுதானே! தமிழில் இருப்பது மொத்தம் 31 எழுத்துகள்தாம்.  சீன, சப்பானிய எழுத்து வடிவங்களை இந்த 31 வடிவத்தில் உருவாக்கலாமே!
  ஆனால், இவ்வாறு செய்தால் தமிழை அழிக்கும் நோக்கம்  திசைதிரும்பிவிடுமே! எனவேதான், தமிழ் படிக்காத தமிழர்கள் உள்ளார்களே எனத் தாய்மொழிநாளை முன்னிட்டுக் கவலைப்பட்டுக் கணியனை உருவாக்கி உள்ளாராம்!
  அவர் எப்படித்தான்  தமிழை எழுத வேண்டும் என்கின்றார் என்ற ஆர்வம் வருகிறதா? அதையும் பார்ப்போம்!
          letter sivan image                                                        letter parvathy image
  சிவன் என எழுத வேண்டும் என்றால் ஆங்கில எசு / s எழுத்தை எழுதி அதன் மேல் கொக்கி போட்டால் ‘சி’ ஆகிவிடுமாம். கொக்கி என்றால் தமிழில் உள்ள இகர வளைவு என எண்ணாதீர்கள். தலைகீழ் ‘ட’ வடிவம். ஆங்கில வி / v எழுத்தைக் குறிப்பிட்டால் ‘வ’ ஆகிவிடுமாம். ஆங்கிலச்சிறிய என் / n மீது புள்ளி வைத்தால் ‘ன்’ ஆகிவிடுமாம். இதே போல் பார்வதி என்பதற்குப் பி / p பக்கத்தில் ஒற்றைக்கோடு போட்டால் பா ஆகிவிடுமாம். பிற முதலில் குறிப்பிட்டால்போல்தான். எனவே இவ்வாறு எழுதினால் பார்வதி என்றாகிவிடுமாம்.
    “ஆங்கில ஒலிபெயர்ப்பில் ஒரு சொல்லில் எத்தனை ஆங்கில எழுத்துக்கள் உள்ளனவோ, அதே எண்ணிக்கையில்தான் தமிழ்ச் சொல்லின் எழுத்துக்களும் இருக்க வேண்டும்” என்பதுதான் இதன் சிறப்பியல்பு எனப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். அஃதாவது “தமிழ் எழுத்துகள் எத்தனையோ அத்தனைக்கும், தான் ஆங்கில வரிவடிவத்தைப் பயன்படுத்தவில்லை. ஆங்கில வரிவடிவத்திற்குள் தமிழ் வரிவடிங்களை அடைக்கின்றேன்” என்பதைத்தான் அருவினையாகப் பெருமை யடைகிறார்.
   இத்தகைய படுகொலைக்கென இவர் உருவாக்கியதுதான் மகாலிங்கம் உரோமன் கிரந்தம் (MRG) என்ற பெயரிலான கணியன்(Software).
   இப்படு கொலையைத் தமிழைக்காப்பதற்காகக் கூறுவதுதான் வேடிக்கை.  கல்லூரிவரை தாய்மொழிவழிக்கல்வி இல்லையல்லவா?. “இப்போக்கினைத் தடுத்தால்தான் தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ் இன அடையாளத்தையும் நாம் காப்பாற்ற முடியும்” என்பதால் அவர் தரும் தீர்வுதான் சிறு அகவையிலேயே மனநோயாளிகளாக மாற்றும் இந்த வழிமுறையாம்.. இரண்டு அகவையிலேயே மழலைக்கல்வி தருகிறார்கள் அல்லவா? அதனை விளையாட்டுக் கல்வியாக மாற்றிவிட்டு, வரி வடிவம் படிக்கும் பருவத்தில் ஒலி பெயர்ப்பு முறையில் கற்றுத் தருவதுதான் தமிழை வளர்க்கும் முறையாம்.
   அது மட்டுமல்ல. “தமிழ் மாணவர்களுக்குக்கூட மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் தமிழ்ப் பாடத்தில் ஒரு புத்தகத்தை (Non Detail) உரோமன்  வடிவில் ஒலிபெயர்த்து வாசித்துக் கொள்ளும் பயிற்சியைத் தர” வேண்டுமாம்.
  தமிழை வளர்ப்பவர்கள்  மெதுவாகச்  செயல்படுவதால், அழிக்க  எண்ணுபவர்கள் விரைவாகவும் கூட்டாகவும் சிந்தித்துச்  செயலாற்றுகின்றனர். நாம், இதனை முளையிலேயே கிள்ளி எறியாததால் இக்கூச்சல் பெருகிக் கொண்டுள்ளது.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
என்னும் தெய்வப்புவலர் திருக்குறளை(879) நாம்  நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்.
  ஏனெனில் எழுத்து வடிவம் அழிந்தால் மொழி அழியும்; மொழி அழிந்தால் இனம் அழியும் என்னும் வரலாற்று உண்மையை அதனை உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
  ‘எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும் என்னும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் எச்சரிக்கையை நாம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டும்.  சில திங்கள்முன்னர்,  மேதை ஒருவர் நாளிதழ் ஒன்றின் மூலம்  தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்கு எதிர்ப்புகள் வந்தமையால் வேறொரு ‘மாமேதை’ இறங்கியுள்ளார். இவ்வாறு தொடர்ந்து மொழிப்பகைவர் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்துகொண்‌டே இருப்பர்.நாம் இதனை எளிதாக எண்ணிப் புறந்தள்ளக் கூடாது. இத்தகைய முன்னோர்களால்தான்  தமிழ் வரிவடிம் சிதைந்து புதிய மொழிகள் பல தோன்றித் தமிழ்ப் பரப்பு அழிந்துள்ள வரலாற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
  இந்திய அரசமைப்புச்சட்டப்பிரிவு 29(1) இல்  தந்துள்ள ‘மொழியையும் எழுத்துவடிவத்தையும் பேணிக்காக்கும் உரிமை’க்கு மாறாகச் செயல்படுவோர் மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க  ஆவன செய்ய வேண்டும்.
  ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்றும் ‘எண்ணெழுத்து இகழேல்’ என்றும் நம் ஆன்றோர் உரைத்த பொன்மொழிகளைப் போற்றிச் செயல்படவேண்டும்.
எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே
மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே
இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே
 -பாவேந்தர் பாரதிதாசன்
தை 27, 2045 / பிப்.9, 2014       feat-cat-default
இதழுரை

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

இந்தி முதன்மைத் தனி ஆட்சி – பேராசிரியர் சி.இலக்குவனார்

இந்தி முதன்மைத் தனி ஆட்சி – பேராசிரியர் சி.இலக்குவனார்

இந்தி முதன்மையை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. ஆயினும் நடுவிட ஆட்சியாளர் அதைப் பொருட்படுத்தக் காணோம். ஏனைய தேசிய மொழிகளைப் புறக்கணித்து இந்திக்கு மட்டும் முதன்மையளிக்கும் செயல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.
1. இந்தியறிவு இல்லையேல் அரசு ஊழியர்க்கு ஊதிய உயர்வு இல்லை என்றனர்.
2. இந்தியறிவு பெற்றால் ஊதியம் உயர்த்தப்படும் என்றனர்.
3. அரசுத்துறை ஆவண ஏடுகளில் தலைப்புக் குறிப்புக்கள் இந்தியில் எழுதப்பட வேண்டும் என்று ஆணை பிறந்துள்ளது.
4. பாராளுமன்றில் இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயன்படுத்துவதற்குரிய வசதிகள் செய்யப்படுகின்றனவாம். ஏனைய தேசீய மொழிகட்கு தேசப் பாராளுமன்றில் இடம் கிடையாது.
5. திரைக்காட்சிகளில் செய்திக் கதிர் விளக்கம் இந்தியிலேயே கூறப்படுகின்றது.
6. உயர்நிலைக் கல்விக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் இந்தி மொழிவழியாகக் கற்பிக்கத்திட்டங்கள் தீட்டப்படுகின்றன.
7. இந்திமொழிவழியாகக் கற்பிக்கும் பல்கலைக் கழகம் ஒன்றும் தென்னாட்டில் தோன்றப் போகின்றதாம்.
தமிழ்ப் பெருமக்களே! இவற்றையெல்லாம் எண்ணி இந்தி முதன்மையைத் தடுக்க மடிதற்றி முந்துங்கள். இந்தி முதன்மை தமிழை அழிப்பது உறுதி. தமிழ்நாட்டில் தமிழுக்கு முதன்மையளிக்கத் தவறாதீர்கள். இந்தி முதன்மைக்கு இடமளிப்பது தமிழை அழிப்பதற்கு வசதி செய்தி கொடுப்பதாகும் என்பதை அறமின்.
எதனை இழந்தாலும் மீண்டும் பெறலாம்.
மொழியை இழந்தால் மீண்டும் பெறல் அரிது.
மொழியை இழந்தபின் வாழ்வது எற்றுக்கு?
-      தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், குறள்நெறி: ஆனி 02,1995 / 15.06.1964 பக்கம் 14

‘‘பெரும்பாலோர் மொழி இந்தி’’ என்பது உண்மைக்கு மாறுபட்டது – மே.சி.சிதம்பரனார்


‘‘பெரும்பாலோர் மொழி இந்தி’’ என்பது உண்மைக்கு மாறுபட்டது – மே.சி.சிதம்பரனார்

 thamizh-hindi01

‘‘பாதிக்குமேலானவர்கள் பேசுவதால் இந்தியைத் தேசிய மொழியாக்குவதில் நியாயமிருக்கிறது’’
-‘‘மொரார்சி’’ 28-3-64, காஞ்சிபுரம்.
இந்தி, தனிமொழியா? பழமை மொழியா? சொல்வளம், பொருள் வளமுண்டா? எழுத்து வனப்புண்டா? இலக்கிய விலக்கணங்களுண்டா? அறிவியல் நூல்களுண்டா? இந்தி படித்து ஒரு விஞ்ஞானியாகலாமா? ஒரு மருத்துவனாகலாமா? ஒரு பொறியியலனாகலாமா? ஒரு வழக்கறிஞனாகத்தானாக முடியுமா? அல்லது இந்தியைக் கொண்டு பிறநாட்டானோடு கலந்து பேசவியலுமா? என்ற கேள்விகட்கெல்லாம் விடைகள் இல்லையென்பது ஒப்பமுடிந்ததாய்விட்டது. இறுதிக்காரணம்? பெரும்பான்மையினர் பேசப்படுவதென்பதைத் திட்டமிட்டுத் ‘‘திடீர்ப்புளுகு’’கள் மூலம் உயர்த்திக்கொண்டே வருகிறார்கள்.
பொய்மையெனத் தயங்காது அதனையே மேன்மேலும் உறுதியுடன் பேசிவந்தால் இறுதியில் அது மெய்யாகவே நிலைத்துவிடும்’’ இது இட்லர்க்குக் கிடைத்த ‘கெபள்சு’ என்ற அமைச்சரின் முடிவு.
‘‘யாதொரு பொருளை எப்பேர்க்குற்றவரிடமிருந்து கேட்பினுஞ்சரி, அதனை அப்படியே நம்பாது அதனுண்மையாதென ஆராய்ந்து கோடலே அறிவின் இலக்கணம்’’ என்பது குறள்நெறியின் முடிவு. இம்முடிவுப்படி இந்தியின் பெரும்பான்மைக் கணக்கு உண்மைதானா என்பது காணலாம்.
‘‘இந்தி பேசுவோர் தொகை 100க்கு 42 விழுக்காடென்றே பல ஆண்டுகளாகவும் இன்றும் இந்தி ஆதரவாளர்களும் அமைச்சர்களும் புள்ளி விவரம் போட்டுப் பேசிவரும்போது ‘‘பாதிக்குமேலானவர்கள் பேசுவதால்’’ எனக் குறிப்பிட்ட மொரார்சியின் பேச்சு திடீர்ப் புளுகுகளில் ஒன்றென்பது வெளிப்படை.
இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்ப்பவர்கூட 100க்கு 42க்கு என்ற கணக்கை ஒத்துக் கொண்டு 42 பேர் பேசுகிற மொழியை 58பேர் மீது திணிப்பது என்ன நியாயம்? என வாதாடுகின்றனரன்றி, கணக்கு உண்மையா? எனக் காண்பதில்லை. இதனாற்றன் கௌபள்சின் முடிவும் உறுதிப்பட நேர்கிறது.
‘‘பெரும்பாலோரால் பேசப்படும் மொழி இந்தி என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. கணக்கு எடுத்துப் பார்க்கும்போது, இந்தி மொழியைப் பேசுகிறவர்கள் நம் நாட்டில் 13 கோடி பேர்கள், பாக்கி இருக்கும் 23 கோடி மக்களும் வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.’’
- திரு. சி. சுப்பிரமணியம்.
ஆனந்தவிகடன், தீபாவளி மலர் 1955.
அக்கணக்கின் படி பார்க்கும் போது 100க்கு 42 விழுக்காடு என்பதும் உண்மையல்ல. இனிப் பதின்மூன்று கோடி மக்கள் பேசுவதென்பதும் உண்மையா? என்பது காணலாம். வடநாட்டில் இந்தியல்லாத முதன்மையான மாநில மொழிகளின் கணக்குகள் பின்வருமாறு.
உருது      220 இலட்சம்
மராத்தி    270 இலட்சம்
வங்காளி  250 இலட்சம்
குசராத்தி  160 இலட்சம்
ஒரியா     130 இலட்சம்
பஞ்சாபி   120 இலட்சம்
இராசசு கான்   107 இலட்சம்
அசாமி     50 இலட்சம்
காசுமீரி    20 இலட்சம்
—–
1327 இலட்சம்
—–

இந்திய (சென்சசு-1951) கணக்குப்படி இந்தியாவில் பேசப்படுகின்றமொழிகள் மொத்தம் – 782.
1. இவற்றில் ஒரு கோடி மக்கட்குமேல் பேசப்படும் மொழிகள் -12
2. ஒரு இலட்சத்திலிருந்து ஒரு கோடி மக்கள் வரை பேசும் மொழிகள் – 48
3. ஒரு இலட்சத்துக்குக் குறைவாகப் பேசுபவர்களை கொண்ட மொழிகள் – 722
திரு. சி.சு. அவர்களின் கணக்குப்படி ‘‘மொத்தம் 2530 இலட்சம் மக்கள் (வட இந்தியாவில்) ஆரியமொழி பேசுபவர்கள்’’ என்றால், முதன்மையான மாநிலமொழிகள் பேசுவோரே 1327 இலட்சமென்றால், 13 கோடி பேர் இந்தி பேசுவோர் என்ற அவர் கணக்கும் உண்மையன்று. மேலும் 782 மொழிகளில் தென்னாட்டிற்குரிய மொழிகள் 17 தான். மீந்த 765 மொழிகட்கு வடநாட்டில் வரும் ஈவுதானெங்கே?
1951 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை (சென்சசு) கணக்குகளை கையில் வைத்துக் கொண்டு தாய் மொழியாகப் பேசப்படும் ஒவ்வொரு இனக்கணக்கையும் தெளிவாகச் சொல்லிவிடலாம்.
தமிழ் பேசுவோர் தொலை 2,65,46,764
கன்னடம் பேசுவோர் தொகை 1,44,71,764
மலையாளம் பேசுவோர் தொகை 1,33,80,109
தெலுங்கு பேசுவோர் தொகை 3,29,99,916
இன்னும் எழுத்தே இல்லாத மொழிகட்குக் கூடத் தனித்தனிக் கணக்குகள் உண்டு. தோடர்மொழி -நீலகிரிப் பகுதியில் 879 பேர் என்று குறிப்பிடுகிறது. குறவர் மொழி 45,817. இவ்வாறு துளு, கொங்கணி, சௌராட்டிரா, படகா, கோண்டு முதலிய தென்னாட்டுப் பதினேழு மொழிகட்டுகும் கணக்குகளுண்டு.
இவவ்வாறு காட்டுவாசிகள், நாடோடிகள், மலைவாசிகள் முதலியோருக்கும் தனிப்பட்ட கணக்குகள், பேசுபவர்களின் எண்ணிக்கைகள் இருக்கின்றன! ஆனால், இந்தியாவின் ஆளும் மொழியாகத் தயார்ப்படுத்தும் இந்திக்கு அத்தகு கணக்கு கிடையாது!
‘‘இந்தியாவில் இந்தி பேசுபவர்கள் தொகை எவ்வளவு என்பது யாருக்கும் தெரியாத ஒன்று. இந்தி ஆதரவாளர்கட்கும் தெரியாது. இந்திய அரசாங்கத்துக்கும் தெரியாது.  கணக்கு (சென்சசு) எடுத்த அலுவலர்கட்கும் தெரியாது. இந்நிலையிற்றான், ‘‘15கோடி, 13 கோடி, 100க்கு 42 விழுக்காடு என்றெல்லாம் அரங்கின்றி வட்டாடிவருகிறார்கள். இச்சோகச் செய்தியை கணக்கு (சென்சசு) அதிகாரிகளே ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை யாருக்கும் தெரியாது’’.
-1951 ‘சென்சசுஅறிக்கை மொழிகள் பக்கம்2
இக்குழப்ப நிலைக்குக் காரணம் என்ன? 1951 கணக்குகள் எடுக்கப்பட்ட நேரத்தில் வட இந்தியாவில் தாய்மொழிபற்றிய சிக்கல்கள் எழுந்தன; இந்தி ஆதரவாளர்கள் இந்தியையே தாய்மொழியாகக் கூறும்படி ஏனைய மொழியினரிடம் பரப்புரை செய்தனர். இதற்கு ஆதரவும் கிடைத்தது. எதிர்ப்பும் உருவாகியது. அப்பொழுது பஞ்சாப், பெப்சு, தில்லி, இமயமலைப்பகுதி, பீகார் ஆகிய மாநிலங்களிலிருந்தும், மற்றும் பல பகுதிகளிலிருந்தும் மொழிக்குழப்பங்களே ஏற்பட்டுத் தவறானபடி கணக்குகள் பொதுமக்களாலும் தரப்பட்டன. அதனால் கடைசியில் உண்மையில் இந்தி பேசுபவர்கள் எவ்வளவு என்பது தெரியாமல் போய்விட்டது.
ஆட்சிமொழியாகும் இந்திக்கு ஆள்பிடிக்கும் அலங்கோலம்
பஞ்சாப் மாநிலத்தில் 1951 இல் கணக்கு (சென்சசு) எடுக்கும்பொழுது ‘‘எந்த மொழியைத் தாய்மொழியாகக் கொடுப்பது’’ எனப் பெருங் குழப்பங்கள் ஏற்பட்டன. சீக்கியர்கள் ‘‘குர்முகி’’ எழுத்தைக் கொண்ட பஞ்சாப்பிய மொழியைப் பேசுகிறார்கள். ஏனையோர் பெரும்பாலும் உருது பேசுகிறார்கள். இந்நிலையில், இந்திமொழி காப்பாற்றப்பட வேண்டும். ‘‘இந்தி ஆட்சி மொழியாக வருகிறது’’. எல்லா மக்களும் இந்தியையே தாய்மொழியென்றுகணக்குக் கொடுக்க வேண்டும்’’ எனக் கொட்டையெழுத்துக்களில் வெளியிட்ட துண்டு அறிக்கைகள், பொதுக்கூட்டங்கள் பரப்புரைகள் மும்முரமாய் இந்துக்களால் நடத்தப்பட்டன. ஆனால் அறிக்கைகள் உருது மொழிகளில்தாம் வெளியிடப்பட்டன ஏன்? இந்தி மொழி அங்கு யாருக்கும் தெரியாது. எனினும் சீக்கியர்களின் எதிர்ப்பு வலுத்ததால் கலகம் மூண்டது. இதன் பயனாய் ‘‘சாகாத்திரி’’ என்ற இடத்தில் நடந்த அடிதடியில் ஒருவர் கொலை, மூவர் படுகாயம், ஒன்பதுபேரை கைதாக்கினார் என்று செய்தித் தாள்களில் வெளிவந்தது யாவரும் அறிந்த ஒன்று. எனினும் பஞ்சாபி, உருது ஆகியமொழிகளைக் கூட இந்தியுடன் சேர்த்துக்கணக்கு எடுத்து விட்டார்கள்.
‘‘இராசசுதானை எடுத்துக்கொண்டால் (1951 சென்சசு) கணக்கு எடுத்தபொழுது மூன்று முதன்மை மொழிப் பிரிவுகள் அங்கு இருந்தன. 1) இராசசுதானி 2) மேற்கிந்தி 3) பிலி. இவற்றுள் ‘இராசசுதானி’, ‘செய்புரி’, ‘மார்வாரி’, ‘மேவாரி’ இன்னும் சில மொழிகள் இருந்தன.
மேற்கு இந்திப் பிரிவில், இந்தி, உருது, பிரசுபாவா பந்தல், கந்தி, தாங்கி ஆகிய மொழிகள் சேர்ந்திருந்தன.
பிலி மொழி நாடோடிக் கூட்டத்தினராலும், பழங்குடி மக்களாலும் பேசப்பட்டுவந்தன.
‘இராசசுதானி’ மொழி பேசுபவர் 1 கோடியே 7 இலட்சம்பேர்கள், ஏனைய மொழிகள் இந்தி எண் 1 தலைப்புக்குள், தள்ளப்பட்டுவிடுகின்றன.
இனி மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களையும் முழுக்க முழுக்க இந்தி மாநிலங்களாகவே காட்டிவிட்டனர். இவற்றையும் ஒவ்வொன்றாக ஆய்வோம்.
இந்திப் போர்வையில் 81 மொழிகள்
மத்தியப்பிரதேசத்தில், ‘‘இந்தி பேசுபவர்கள்’’ என்று கீழ்க்கண்ட 81 மொழிகளைப் பேசுகிற மக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கணக்கு (சென்சசு) அறிக்கை கூறுகிறது.
1. இந்தி
2. உருது 3. இந்துசுதானி 4. பீகாரி
5. மைதிலி 6. இராசசுதானி 7. பிரசுபாசா 8. பக்ரி
9. மேவாரி 10. செய்புரி 11. மால்வி 12. சாட்டிசுகாரி
13. மார்வாரி 14. ஆசுமீரி 15. பந்தேலி 16. பலாகி
17. லோடி 18. கிராரி 19. ராகோபான்சி 20. தம்தி
21. சடி 22. பர்தேசி 23. கலாரி 24. பாடு
25. பங்கி 26. கோசாவி 27. ஓகி 28. சுவதி
29. நுனியா 30. பைகனி 31. பாண்டோ 32. அதுகுரி
33. பசுதாரி 34. மிர்கனி 35. மகேசுரி 36. போயாரி
37. குர்சார் 38. இராசுகாடி 39. நிமாதி 40. கால்பீ
41. மராரி 42. போவாரி 43. சடாரி 44. பான்சாரி
45. இராசபுதானி 46. கோர்க்காலி 47. மாதுரி 48. குருமாலி
49. மிர்சாபுரி 50. கோசங்கா & பாடி 51. அபு 52. பர்பி
53. முசல்மானி 54. லோதாந்தி 55. போபாலி 56. கோட்வாரி
57. பூலியா 58. சங்கலி 59. இரங்கடி 60. அகரி
61. புவானி 62. வாணி 63. கந்தால் 64. இரிவை
65. பரத்பூரி 66. கோத்யானி 67. பிரதாப்காடி 68. கங்கேரி
69. கங்காபாடி 70. ஆக்ராவாலி 70. மேர்வாரி 72. தேவநாதரி
73. உத்தாரி 74. பாமி 75. உத்கேதி – போலி 76 பூலி
77. கோரக்பூர் 78. சார்மாலி 79. பான்சாரி 80. கோர்த்தி
81. போசுபுரி      

(1951 கணக்கு (சென்சசு) அறிக்கை ‘மொழிகள்’ பக்கம் 72)
ஒன்று இரண்டல்ல 81 மொழிகளைச் சேர்த்து ‘இந்தி’ என்ற பெயருக்கு அதிகமான ஆள் சேர்த்துக் கொண்டார்கள்.
இந்த 81 மொழிகளும் சிறு சிறு மொழிகள் என்று எண்ணிவிட முடியாது. இலட்சக்கணக்கில் மக்கள் பேசக்கூடிய மொழிகள் பலவுண்டு. மார்வாரி என்ற மொழி இராசசுதானில் பேசப்படுவது. அது இங்கு 45 இலட்சங்களுக்குமேல் பேசப்படும் மொழியாக உள்ளது. இது இந்திப் போர்வைக்குள் மறைகிறது. இதேபோன்று மேவாரி 20 இலட்சம். செய்புரி 14 இலட்சம். பக்ரி 9 இலட்சம். சட்டிசுகாரி 9 இலட்சம். மால்வி 3 இலட்சம். கால்பி 3 இலட்சம். இங்ஙனம் பெரியதும் சிறியதுமாக யாவற்றுக்கும் மதமாற்றம் செய்வதுபோல் மொழிமாற்றமல்ல மொழி மாறாட்டம் செய்துவிட்டனர். மொழிமாற்றம் என்றால் மொழி சொல்லிக் கொடுத்ததல்ல. அவர்கட்கு இன்றும் இந்தி தெரியாது  பெயரளவில் மாறுதலைச் செய்யும் வேலை வட இந்தியாவில் நடைபெற்றிருக்கிறது.
புள்ளி விவரங்களுக்குச் சான்றுகள்:
மத்தியபாரத்
மொழி     1941           1951
இந்தி           14,40,906   58,42,114
மால்வி    16,78,087   5,23,374
நிமாரி           2,78,138     180,696
போபால்
மொழி     1931            1941                      1951
இந்தி      6,464           67,988                  6,52,722
உருது           6,91,065     6,99,523     1,31,600
இங்ஙனம் வியக்கத்தக்க மாறுதல்கள் பற்றி, ‘‘கணக்கு (சென்சசு)’’ அலுவலர் குறிப்பிடும் பொழுது ‘‘கணக்கு (சென்சசு) புள்ளி விவரங்களின் மொழிப் பகுதியைப் பார்த்தால் திடீரென அதிகமான பேர்கள் இந்தியைத் தங்கள் தாய்மொழியாகக் கொடுத்திருப்பது தெரியவரும். இதற்குக் காரணம் என்னவென்றால் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுதான் ஆகும். தங்கள் தாய்மொழி இந்துசுதானி என்றோ இராசுதானி நிமா. மால்வி என்றோ வற்புறுத்தி யாரும் முன்வரவில்லை’’.
(1951) ‘‘கணக்கு (சென்சசு’’ அறிக்கை பக்கம் 74.
தாய்மொழி என்பது மாற்றமுடியாத ஒன்று. இந்தி ஆதரவாளர்களால் தாய்மொழியைக் கூட மாற்றிவிட முடிகிறது. ஏனைய மொழிகளைத் தாய்மொழியாகவும், இந்தி மொழியோ, எழுத்தோ தெரியாதவர்கட்கும் கூட இந்தியைப் பெயரளவில் தாய்மொழியாக்கிவிட்டார்கள்.
பீகார் இந்தி மாநிலம் அல்ல!
இனிப் பீகார் மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏனைய மாநிலங்கட்கெல்லாம், மாநில மொழிகளை, அம்மா மாநிலங்களின் பெயரால் இருப்பதுபோல் பீகார் மாநிலத்துக்கும் ‘‘பீகாரி’’ என இருந்தது. ஆனால் இன்று மறைகிறது. அல்ல, மறைக்கப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் பேசப்படும் பெரும்பான்மை மொழி பீகாரி என்று மொழியமைப்பேயாகும். அம்மொழி மூன்று பிரிவுகளாக இருக்கிறது. 1. மகதி, 2. மைதிலி, 3. போசுபுரி இம்மூன்று மொழிகளும் – சிறு சிறு வேறுபாடுகளைத் தவிர இலக்கணத்தாலும், சொற்களாலும் நெருங்கிய தொடர்புடையன. இவற்றை ‘மகதபிராகிருதம்’ என்று மொழியாளர்கள் கூறுவார்கள். பிராகிருதம் என்றால் சிதைவு என்று பொருள் மகதம் என்பது பீகார் பகுதிக்குப் பழைய காலத்திலிருந்த பெயர். இதிற்றான் பாடலிபுரத்தைத் தலைநகராகக் கொண்ட நந்த பரம் பரையினரும், மௌரிய அரசர்களும் ஆண்டனர். மௌரிய ஆட்சியில் ‘சந்திரகுப்தர்,’ பிம்சாரர், அசோகர் ஆகியோரின் பொற்காலத்தில் மகதநாடும், மகதமொழியும் உயர்நிலையிலிருந்தன. புத்தமத கோட்பாடுகள் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வந்தது மகத மொழியேயாகும். இதோடு மைதிலி, போசுபுரி ஆக மூன்றுமொழிகள் இன்னுமிருக்கின்றன. இம்மொழியமைப்பில் பீகாரில் வழக்காற்றிலுள்ள மொழிகட்கும் இந்திக்கும் தொடர்பு கிடையாது.
மகதி, மைதிலி, போச்புரி ஆகிய மூன்று பீகார் மொழிகளுடன் பெங்காலி, அசாமி, ஒரியா என்ற மூன்றையும் சேர்த்து ஆறு மொழிகளையும் ஒரு தனிக் குழுவாக மகதபிராகிருதக் குழுவாக எண்ணப்படுகின்றன. எந்த அளவுக்கு ஒருமைப்பாடு இருக்கிறதென்றால், ‘‘திராவிடக்குழு மொழிகள் தனி அமைப்பாக இருக்கின்றனவல்லவா அதுபோன்று இந்த ஆறு மொழிகட்கும் ஒரே இலக்கணம் அமைக்கலாம்’’ என்கிறார் மொழி ஆராய்ச்சியாளர் அறிஞர்(டாக்டர்) கிரையசன்.
1961 (சென்சசு) கணக்குகளை எடுத்து வெளியிட்ட அதிகாரியே ‘‘பீகாரி மொழிகளிடமிருந்து அடிப்படை அமைப்புகளிலேயே இந்தி அதிகமான அளவு வேறுபட்டிருக்கிறது’’ என்று தவிர்க்க முடியாதபடி உண்மையைத் தருகிறார்.
பீகாரில் இந்தி நுழைந்த கதை வேடிக்கையானது. இரண்டு மூன்று கணக்கு(சென்சசு)க்கு முன்பு இந்தி மொழியினர் தங்களையும் பீகாரி மொழி பேசுபவர்களுடன் சேர்த்துச் சொல்லிக் கொண்டார்கள். அதனால் பீகாரிகளும் பெருமையோடு இதை ஏற்றுக் கொண்டார்கள். (சென்சசுக்) கணக்கில் ‘‘பீகாரியும் இந்தியும்’’ என்று போட்டுக் கொண்டார்கள். வரவர இந்திக்குத் தே சிய மொழி எனப் பட்டம் தரப்பட்டது கண்டு ‘‘இந்தியும் பீகாரியும்’’ என மாற்றினார்கள். கடைசியில் இரண்டும் சேர்ந்து இந்தி என்ற தலைப்பு வந்து விட்டது அல்லது வருவித்துக் கொண்டார்கள்.
1951 (சென்சசு) கணக்குப்படி பீகார் மாநிலத்தில் மக்கள் தொகை 4 கோடியே 2 இலட்சம் பேர்கள் இதில் 3 கோடியே 20 இலட்சம் பேர்கள், அதாவது 100க்கு 80க்கு மேற்பட்டவர்கள் இந்தியே பேசுபவர்களாகக் கணக்கு காட்டுகிறது. இந்த இந்தி பேசுபவர்களாகவுள்ள கணக்கு, தவறானது என்பதை கணக்கு (சென்சசு)  அதிகாரிகளே கூறிவிடுகின்றனர்.
‘‘(பீகார் மாநிலத்தில்) 3 கோடியே 19 இலட்சம் பேர்கள் இந்தியைத் தாய் மொழியாகப் பேசுபவர்களாகக் கணக்கெடுக்கப்பட்டுள்ளார்கள்; உண்மையில் பீகாரில் உள்ள மக்களில் வெகு சிலரே இந்தி மொழியைப் பேசுபவர்களாக இருப்பார்கள்.’’
1951 கணக்கு (சென்சசு) – மொழிகள் பக்கம் 37.
பீகார் மாநிலத்து இந்தி பேசுவோர் கணக்கில் பீகாரி மொழிகள் மட்டும் அல்லாமல் உருது, தமாரியா, குர்மாலி, சோட்டா, நாகபுரி, கவாரி, கார்வாரி, கார்வானி, பிலாசுபுரி, சத்ரி ஆகிய பல மொழி பேசுவோரையும் இந்தியத் தலைப்புக்குள் அடக்கிவிட்டனர். இதைவிடப் பெரியதொரு புள்ளிவிவரப் புரட்டு யாண்டும் இருக்க முடியாது.
இனிக் கடைசியாக உத்திரப் பிரதேசத்தை எடுத்துக் கொள்வோம். அம்மாநிலம், இந்தி வெறியும், ஆதிக்க வெறியும் ஒருங்கே கிளம்பும் இடமாகவும், தேசியத் தலைவர்கள், ஆளும்கட்சித் தலைவர்கள், ஆட்சி அலுவலர்கள் முதல் அனைவரும் ஒருங்கே சேர்ந்து இந்தி ஆளும்மொழியாவதற்கு வழிகோலும் இடமாகவும், மொழிப்போர் முனைசென்று வெற்றி கண்டுவரும் வீரர்கள் தங்கும் பாசறையாகவும் உள்ளதெனில் மிகையன்று.
இம்மாநிலத்தில் இந்தி பேசும் மக்கள் கணக்கையும் பார்க்க வேண்டுமா? ஒரே ஒரு சான்று காட்டினால் உண்மை விளங்கிவிடும். அதாவது 1931 இல் எடுத்த சென்சசுக் கணக்கு இம்மாநிலத்திற்குரிய மொழியான ‘‘இந்துசுதானி’’ பேசுபவர்கள் நூற்றுக்கு 99 பேர் எனக் காட்டுகிறது. 1951 சென்சசுக் கணக்கோ 100க்கு 99 பேர் இந்தியைத் தாய்மொழியாய்க் கொண்டவர்கள் எனக் கணக்குக் காட்டுகிறது. இதுபோதும் மொழி மாற்ற வேலைக்குச் சான்று. பலபடத் துருவிப் பார்ப்பது வீண் வேலையாகும்.
1931 இல் எங்கோ பல பட்டரை மொழிகளில் ஒன்றாக மூலையிற் கிடந்த இந்தியை 1941 இல் முற்றத்துக் கிழுத்துவந்து ‘‘இந்தி அன்னை’’ எனப் பெயர் சூட்டினார்கள். 1951 இல் இந்தி அன்னையை, அரியணை ஏற்றி ‘‘நாடாளும் அரசி’’ என முடிசூடிவிட்டார்கள். ஆம். அறிவுள்ள பிள்ளைகளைப் பெற்ற இந்தி அன்னை, அரசு கட்டிலேறினாள். அபத்தப் பிள்ளைகளைப் பெற்ற ஏனைய அன்னைமார்கள், இந்தி அரசிக்குப் பணிப் பெண்களாயினர். பலபல பன்னிப் பேசினும் இதுதானே உண்மைப் பொருள்.
வட இந்தியாவில், முதன்மையான பெரிய மாநிலமொழிகளான, பீகாரி, இந்துசுத்தானி இரண்டும் பேரில்லாமலே மறைந்துவிட்டன. ஏனைய பெரு மொழிகளிலும் கைவைத்துள்ளனர். இவையன்றி 250க்கு மேற்பட்ட சிறு மொழிகள் போன பக்கம் தெரியவில்லை. இந்திப் போர்வைக்குள் ஒழிந்திருக்கின்றன.
இப்பித்தலாட்டங்களால் ஏற்பட்ட மாற்றங்கள், கூட்டங்கள், மறைப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு உண்மையில் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் தொகைமட்டும் கணக்கிடப்பட்டால், ஏறத்தாழ ஒரு 5 கோடி மக்களும் 100க்கு 15 விழுக்காடும் தான் தேருமென்பது நிச்சயிக்கலாம்.
இங்ஙனம் ‘‘செய்யதக்கவல்ல’’ செய்வதை விட இன்றைய நிலைமையில் ஆளும் உரிமை எங்களிடம் இருக்கிறது. எவ்விதத் தகுதியோ பெரும்பான்மைக் கணக்கோ இல்லாவிடினும் எங்கள் மொழிதான் ஆட்சி மொழியாக வரவேண்டும்’’ எனச் சொல்லியிருந்தால் வாய்மையாகவும் இருக்கும்.
செய்தக்கவல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங்கெடும் – தமிழ்மறை.
-      குறள்நெறி:  வைகாசி 02, 1995 / 15.05.1964 பக்கம் 3-5


கருத்து அரங்கம் இந்தியால் தமிழுக்குக் கேடு… – மே.சி.சிதம்பரனார்

கருத்து அரங்கம் இந்தியால் தமிழுக்குக் கேடு… – மே.சி.சிதம்பரனார்

கருத்து அரங்கம்
இந்தியால் தமிழுக்குக் கேடு
விடைகள்
thamizh-hindi02
வினா 6 : மொத்தத்தில் இந்தியால் நம் தமிழ் சிஞ்சித்தும் சிதைவுறாது என்று பசுமரத்தாணிபோல் என் மனத்தில் பதிகிறது. இதில் உங்கள் மனச்சாட்சி என்ன?
விடைகள்:
நம்நாட்டிற்கு அண்டை நாடுகள் பண்டைக்காலம் தொட்டு வாணிபம் போக்குவரவு முதலியவை நீடிப்பினும், அந்நாட்டு மொழிகள் நட்பு மொழிகளானாதால் மொழி வளர்ச்சியே யன்றிக் கேடில்லை. ஆட்சி மொழிகளாக வந்தவைதான் மொழியைச் சிதைத்தனவென்பது மேலே கூறினோம். இந்தி ஆட்சிமொழியாக வந்தும் வராததின் முன்பே பல தமிழ்ச் சொற்களழிந்தமையையும் எடுத்துக் காட்டினோம். இந்தி ஆட்சி மொழியாக நீடிக்குமானால், அரசியல் அலுவலகங்கள், பள்ளிகள், வழக்காறுகளிலுள்ள கொஞ்ச நஞ்சம் சொற்களுமழிந்து தமிழ் வீட்டுமொழியாக ஏட்டு மொழியாக உலவி வருமன்றி ஒரு மதிப்பான மொழியாக, நாட்டில் செல்வாக்குப் பெற்ற மொழியாக இருக்க முடியாது. ஆதலில் ‘‘தமிழ் கிஞ்சித்தும் சிதைவுறும்’’ என்ற உறுதியை வினவிய நண்பர் அறவே மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதுதான் நமது மனச்சான்றின் முடிவு.
& மே. சி.சிதம்பரனார்.
இந்தி புகுத்தப்படுவதால் தமிழ் மொழியின் வளர்ச்சி மிகவும் தடைப்படும். இந்தி புகுத்தலால் தாய்மொழிப் பற்றும் குறையும். அரசின் பாராட்டுதலைப் பெறும் பொருட்டு தமிழ் இலக்கியங்களைப் புறக்கணித்து அம்மொழி இலக்கியங்களைப் புறக்கணித்து அம்மொழி இலக்கியங்களைப் பலரும் கற்க முன்வருவர். அதனால் தமிழின் வளர்ச்சியும் அதற்கு அளிக்கப்படும் ஆதரவும் குறையும். ஆங்கில ஆட்சிக்காலத்தில் பலரும் தமிழைப் புறக்கணித்து ஆங்கில இலக்கியங்களைப் பயிலவில்லையா?
‘‘குறள்நெறி இந்தி & தமிழ் என்று பிரித்துப் பேசவில்லை. இந்தியின் புகுத்தலால் தமிழுக்கு நேர்ந்துள்ள நேரவிருக்கும் இழுக்குகளையே மக்களுக்கு அறிவுறுத்துகிறது. இச்செயல் எந்தக் கட்சிக்கும் வளர்ச்சியாய் அமையாது. இந்திய நாட்டின் பற்றிலிருந்து ஒரு சிலரை வெளியேற்றுவது இந்திய மொழிகளில் ஒன்றுக்குத் தனிச் சிறப்பும் ஒதுக்கீடும் அரசினர் அளிக்கும் செயலேயன்றி, தாய்மொழிப் பற்றூட்டும் செயலன்று.
- மு.க. இராசமாணிக்கம்.
இந்தியால் தமிழ் சிதைவுறாது என்பதை ஒப்புக்கொள்ள முடியாது, மொழியறிஞர்கள் எவருமே இக்கருத்தினை ஏற்கார். தாங்களும் தங்கள் மனச்சான்றினை மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன். இன்று வழக்கிலுள்ள தமிழை உற்று நோக்கினால் பிறமொழிகளால் தமிழின் சிதைவை உணரலாம். உறவுமொழியாக வந்த சமசுக்கிருதத்தாலும், ஆட்சிமொழியாக வந்த ஆங்கிலத்தாலும், தமிழ்மொழி எவ்வளவோ சிதைந்து அன்றைய சிறப்புகளை இழந்துள்ளது. நாமெல்லாம் எழுதும், பேசும் தமிழே இதனை முழுமையாக எடுத்துக் காட்டுகிறதே? தமிழ்ப்புலவர்கள் கூட வடமொழிச் சொற்களையும், ஆங்கிலச் சொற்களையும், தூய தமிழோடு கலக்க நேரிடுகிறது. புலவர்களே இவ்வாறெனில் புலமையில்லாதவர்களின் தமிழைப் பற்றி விளக்கத் தேவையில்லை. இவ்வாறு, தமிழோடு சமசுக்கிருதமும், ஆங்கிலமும் பிரிக்க முடியாமல், கலந்திருப்பது, தமிழின் சிதைவைக் கூறவில்லையா? இந்த ஆட்சி மொழியாக வந்து தமிழோடு பெரிதும் கலக்கும்; இந்தியால், தமிழ்மொழி மேன்மேலும் சிதைந்து தூய்மை குன்றும்.
- தமிழ்ப்பித்தன்.
பசுமரத்தில் ஆணி எவ்வாறு எளிதாகப் பதிகின்றதோ அதேபோல வெகு எளிதாக எடுக்கவும் படலாம்! இந்தி ஆதரவாளர்களும், அதிகாரப் பிரியர்களும் அழகாக மேடைகளில் பேசுவர்; கேட்பவர் மனத்தில் பசுமரத்தாணிபோல் பதியத்தான் செய்யும். ஆனால் சிந்திப்பவர்க்கு இது ஆணி அல்ல, புல்லுருவி என்பது புலப்படும்.
ஆனால் வைரம் ஏறிய நெஞ்சினனுக்கு ஆபத்து இல்லை. எவனிடம் தமிழறிவும், தமிழ்ப்பற்றும் உளதோ அவனுக்கு அச்சம் இல்லை. தமிழர்கள் அனைவரும் உறுதியாக இருந்து, தமிழே எங்கள் உயிர் என இருந்து, தமிழை ஐயம் திரிபறக்கற்பார்களாயின், ஆயிரம் மொழிகள் ஆட்சி செலுத்தினும் அச்சமில்லை, அச்சமில்லை. முடியுமா? இந்தி படித்தவன் அதிகாரி ஆகிவிடுவான்! அடிமையாக இருக்க விரும்புவரா? அன்று, ஆயின் தமிழைவிடுத்து இந்தி படிக்க முனைவர். போட்டி போட்டுப்படிப்பர். தமிழின் கதி என்னை? சிந்தனை செய்மின்.
- வித்துவான் சேகராசன் பி.ஏ.
இந்தியால் தமிழ் கிஞ்சித்தும் அழியாது என்று இந்தி வெறியர்கள்தான் சொல்வர். தமிழர்களாகிய  நாம் கூறுவது அறிவு நிறைந்த கூற்றாகாது. ஒருவன் பாலுக்குக் காவலாகவும் பூனைக்குத் தோழனாகவும் எப்படி இருக்க முடியும்? அதுபோல்தான் இந்தியும் வேண்டும், தமிழும் வேண்டும் என்று கூறுவது அமைந்துள்ளது.
- ப.முத்துச்சாமி
இந்தியால் நந்தமிழ் கிஞ்சித்தும் சிதைவுறாது என்று கூறுதல் மனச்சான்றுக்கு மாறாகக் கூறும் கூற்று என என் மனத்தில் பசுமரத்தாணிபோல் நிலை பெற்றிருக்கும் தன்மையாகும். மாணவரிடையே மும்மொழித்திட்டம் மூளையைக் குழப்பிக் கொண்டிருப்பதையும், அரசு அலுவலர் பலர் தாய்மொழி தவிர பிறமொழி தெரியாக் காரணத்தால் குறிப்பாக இந்தி தெரியாதிருப்பதால் தமக்குப் பதவி உயர்வு பாதிக்குமே என்ற மன வேதனையுடன் தாய்மொழியைப்பற்றிய தம் கவனத்தை மாற்றியதாலும் தமிழ் சிதைவுபெற்று வருகின்றது. இது தவிர, இந்தியைக் கற்றால் தனி உரிமைகளும் கிடைக்கின்றன என்ற ஆசை வலையை வீசித் தமிழ் மாணவர்களின் மனத்தில் எழுச்சியை அடக்குவதன் காரணத்தாலும் தமிழ் சிதைவுற்று வருதல் வெள்ளிடைமலை.
-      மு.தங்கராசு.
பிறமொழி புகுவதால், புகுந்தமொழி உயர்ந்த இடத்தில் அமர இருந்தமொழி தாழ்ந்த இடத்தில் வைக்கப்படுகிறது. ஆட்சியில் இருக்கும் மொழிக்கு எப்பொழுதும் வளர்ச்சியும் சிறப்பும் வந்து சேரும். ஆட்சியில் இருக்கின்ற மொழி குறவர் மொழியாக இருந்தாலும், குறத்தி மொழியாக இருந்தாலும் அதுமட்டும் தனிச்சிறப்புப் பெற்று ஓங்கி நிற்கும். தன்கீழ் இருக்கும் மொழி சிதைவுறும். காலப்போக்கில் அழியும். இங்கிலாந்து வரலாற்றில் ஆங்கிலத்திற்கு முன்னிருந்த மொழி அழிந்ததும், இடைக்காலத்தில் தமிழுக்கு வீழ்ச்சி ஏற்பட்டு வடமொழி ஏற்றம் பெற்றதும் சிறந்த சான்றுகள்.
‘இந்தி படித்தால் தான் வேலை; இந்தி படித்தால்தான் வாழ்வு; இந்தி படித்தால்தான் உயிர்’ என்ற நிலை உருவாகிவிட்டது. மொழியைவிட வயிறும் வாழ்வும் பெரிது. என்று எண்ணும் நிலை வறுமை மிகுந்த நாட்டில் நடைமுறையில் காணும் காட்சி! வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியிருக்கும் இவ்வேளையில் இந்தி படித்தால் வேலை எளிதில் கிடைக்கும் என்றால் இந்தியைப் படித்து வாழ்வை வளமாக்க எவரும் தயங்க மாட்டார்கள். இங்குதான் தமிழுக்கு முதல் அரிவாள் வெட்டு விழுகிறது என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த ஓர் ஆண்டில் மதுரையில் மட்டும் எட்டு, ‘இந்திப் பிரச்சார சபைகள்’’ புதிதாகத் தோன்றியுள்ளன. இந்தியால் தமிழுக்குக் கேடு இல்லையென்றால் இந்திப் பிரச்சார சபைகள் தோன்றியிருக்கக் கூடாது. எட்டுத் தமிழ்ச்சங்கங்கள் (கல்லூரிகள்) அல்லவா தோன்றியிருக்க வேண்டும்!
- பா. வெற்றிச்சுடரோன்
குறள்நெறி 01.05.1964 பக்கம் 3-4

தமிழுக்குக் கல்லறை கட்டப்பட்டுவிட்டது…? – புலவர் வி.பொ.ப.

தமிழுக்குக் கல்லறை கட்டப்பட்டுவிட்டது…? – புலவர் வி.பொ.பழனிவேலன், பி.ஓ.எல்

kuralneri02
v.po.pazhanivelanar01
‘இந்தி’ கட்டாயமில்லை என்று நடுவண் அரசும் அதற்கு ஒத்து ஊதிக் கொண்டு தமிழ்நாட்டு அரசும் (இல்லை, தப்பு, தப்பு, சென்னை ராச்யமும்) இந்தியைத் தமிழ்நாட்டில் நுழைக்கும் பணியில் வெற்றி பெற்றுவிட்டன.
1. தமிழ்நாடு என்று பெயரிடத் தமிழக அரசு மறுத்துவிட்டது. அமைச்சர் ஒருவர், ‘மெட்ராசு ஃச்டேட்’ என்பது இரண்டு ஆண்டுக்கு முன்னரே எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது; ஆதலால் அது தீர்ந்துபோன செய்தி; இனி அதைப்பற்றிப் பேசத் தேவையில்லை என்று வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்.
2. தமிழ் நாட்டுக் கல்விக் கூடங்களில் பாடம் பயிற்று மொழியாகவிருக்கத் தமிழ் தகுதியற்றது என்று முடிவுகட்டப்பட்டுவிட்டது.
3. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் எல்லா மாணவர்களும் கட்டாயம் இந்தி படித்தே ஆக வேண்டும் என்பதும் பதினோராம் வகுப்பு அரசியல் தேர்வுக்குப் போகும் மாணவர்கள் இந்தியிலும் தேர்வு எழுத வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுவிட்டன. வருகிற பொதுத் தேர்வுக்குக் குறைந்த மதிப்பெண் இத்தனை பெற வேண்டுமென்று வற்புறுத்தவிருக்கின்றனர்.
4. தமிழகக் கல்வியமைச்சர் உயர்திரு பக்தவத்சலம் அவர்கள் சட்டமன்றில் ஒரு கேள்விக்கு விடையளிக்குங்கால் ‘தமிழ்நாட்டு மாணவர்களும், பொதுமக்களும் இந்தியை விரும்பிப் படிக்க முன் வரும்போது அரசாங்கம் படிக்கக்கூடாது என்று தடுக்க முமுயுயுயு?’’ என்று கூறியுள்ளார்.
5. இந்தியை எதிர்த்து ஒழித்தே தீருவோம். தமிழகத்தில் இந்தி புகவிட மாட்டோம்’ என்று ஆணவம் பேசி இந்தியப் பாராளுமன்றில், சட்டத்திற்குப் புறம்பாக, தமிழில் பேசிப் பெரும் புரட்சி செய்த தமிழ்த்தாயின் தவமகன் ஒருவர் இன்று இந்திக் கோட்டைக்குள் புகுந்து அடைக்கலமடைந்துவிட்டார். இஃது இவர் தமிழ்த்தாய்க்குச் செய்த பெருங்கேடும். நன்றிகெட்ட செயலுமாகும். தன்னலம் காரணமாகத் தாயைப் பணயம் வைக்கத் துணிந்துவிட்டார். இவர் ஒருவர் மட்டுமா? ஓர் இலக்கம் தமிழ் மறவர்களையும் உடன்கொண்டு சென்றுவிட்டாராம்.
6. நடுவணரசால் நடத்தப்பெறும் பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் இந்தி முதன்மை பெற்றுவிட்டது. இந்தியக்கூட்டு பொது ஊழியர் குழுத் தேர்வு (I.U.P.S.C.E.)க்கு இந்தியில் எழுத வேண்டும்; தெரியாதவர் சிலகாலம் ஆங்கிலத்திலும் எழுதலாமாம்.
7. தமிழக அஞ்சல்துறை, இருப்புப்பாதைத் துறைகளில் தமிழுக்கு இடமில்லாமற் போய்விட்டது, ‘எல்லாம் இந்திமயம். அத்துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் யாவரும் இந்திகற்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கையொப்பம் கூட இனி இந்தியிற்றான் போடவேண்டுமாம்.
8. பேராயக் கட்சித் தலைவர்கள் – பச்சைத் தமிழர் காமராசர் உட்பட தமிழ்மக்கள் இந்தியைக் கற்க வேண்டுமென்று வற்புறுத்திக் கூறிவருகின்றனர். கற்காவிட்டால் அரசாங்க அலுவல் கிடைக்காமல் பின்னால் வருந்த நேரம் என்று தமிழக முழுதும் பறைசாற்றித்திரிகின்றனர்.
9. இந்திய அஞ்சலகங்களில் இனி (தந்தி) கம்பிச் செய்தியனுப்பப் பதினான்கு மொழிகளில் எதனை வேண்டுமாயினும் பயன்படுத்தலாமாம். ஆனால், தேவநாகரி எழுத்துக்களால் எழுதிக் கொடுத்தல் வேண்டுமாம். அதற்குரிய புத்தகங்கள் அணியமாயுளவாம்.
10. தமிழக இருப்புப் பாதை நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் இந்திக்கு முதன்மை கொடுத்ததை எதிர்த்து அழித்து தமிழ்க்கு முதலிடம் அளிக்கச் செய்த தமிழர் தலைவர் என்று போற்றப்பட்ட பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்களும் தமிழுக்குக் கல்லறை கட்ட கற்களை அணியம் செய்து கொண்டு, எல்லாரையும் பேராயக் கடசியில் சேரும்படி தூண்டுதல் செய்து கொண்டும் சேருகின்றவர்களைப் பாராட்டிக் கொண்டும் காமராசரின் புகழ் பாடிக்கொண்டும் உலாவருகிறார். அவர் கட்சியாகிய திராவிடர் கழகத்தில் உள்ளோரையும் அக்கட்சியில் கோரச் செய்துவருகிறார். தம்முடைய ஆயுட்குப் பிறகு தி.க.வைக் கலைத்துவிட்டு எல்லோரையும் அதிலேயே சேரச்சொல்லிவருகிறார்.
11. ‘‘இந்தியை ஒழிப்போம்; வடவர் ஆட்சியினின்றும் தமிழ்நாட்டை மீட்போம்’’ என்று செருக்கோடு பேசிய ‘தமிழகப்புலிகள்’’, பேராயக் கட்சிக் கூண்டுக்குள் போய் அகப்பட்டுக் கொண்டன.
12. தமிழகப் பேராயக் கட்சியோ தமிழகத்தை வடவர்பால் அடிமைப்படுத்த ஆவனவெல்லாம் செய்து கொண்டு வருகின்றது. காரணம் தன்னலமே. தமிழ்த்தாயை அழிக்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டுவிட்டது. தமிழுக்குக் கல்லறை அமைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டார்கள். விரைவில் வேலையும் முடிந்துவிடும். தமிழ்த்தாய் என்றும் தலையெடுக்காதபடி கல்லறைக்குள் அடக்கமாகப் போகிறாள்.
தமிழ்த்தாயின் கட்சிச் சார்பற்ற நன்மக்களே! உங்கள் கடமையைத் தமிழ்த்தாய்க்குச் செய்ய முன்வரப்போகிறீர்களா? அன்றித் தாயைக் கல்லறையிலிடுவதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க விரும்புகிறீர்களா? தக்கவாறு முடிவு செய்து தாயைக் காப்பாற்ற முனையுங்கள்.
‘‘தமிழைக் கெடுப்பவரைத் தாய் தடுத்தாலும் விடேன்’’ என்று பாவேந்தர் பாரதிதாசனாரின் சூளுரையை எண்ணிப்பார்த்து ஏற்பன செய்க. இப்பொழுது அயர்ந்திருந்தால் பின்னர் பெரிதும் வருந்த நேரும். இடர்வருமுன் காக்கவிழிமின்! எழுமின்!! செயல்புரிமின்!!! இன்று ஏமாந்து பின் இடுக்கட்படாதீர்கள்.
-      குறள்நெறி:  ஆடி 31,1995 / 15.08.1964 பக்கம் 1, 8

கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு..

கருத்தரங்கம்: இந்தியால் தமிழுக்குக் கேடு..

 thamizh-hindi02
வினா 4: இந்தி மொழியால் எங்காவது ஓர் இடத்தில் தமிழ்மொழி மறைந்திருக்கிறதா?
விடைகள்:
வட்டார மொழிப்பற்று இந்தியைப் புகுத்துவதற்குத் தடையாயிருக்கும் என்று அரசினர் கருதுவதால், தமிழ் மொழிப் பற்றூற்றும் இலக்கியப் பகுதிகளையும், தமிழ்ப் பற்றையும் தடை செய்கின்றனர். தற்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் ‘வாழிய செந்தமிழ்’ என்ற பாரதியின் பாட்டைப் பள்ளிகளில் பாட வேண்டாமென்று வேண்டியதும், இளங்கலை, இளமறிவியல் மாணவர்க்குத் தமிழ் இலக்கியப் பகுதியில் அமைந்த ‘கால்கோட்காதை’யை நீக்கியதும் இதற்குச் சான்று. இவ்வாறு மொழிப் பற்றூட்டும் பகுதிகளை நீக்குவதால் அவ்விலக்கியப் பகுதிகள் மறைய வாய்ப்புண்டு.
- மு.க. இராசமாணிக்கம்.
பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்ற வள்ளுவர் வாக்கிற்கேற்ப, படிக்கின்றவர்களில் பெரும்பாலோர் பொருளுக்காகத்தான் படிக்கின்றார்கள் என்பதை, பாரதம் அறிவார் என நம்புகின்றேன். எனவே இந்தி படிப்பதால் எளிதாக வேலையும் அதன் மூலம் நல்ல பொருளையும் ஈட்டக் கூடிய வாய்ப்பை அரசினரால் உண்டாக்கப்படுவதால் இந்தி மொழியால் தமிழ் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை மாணவர்கள் மனத்திலிருந்து மறைக்கப்படுகின்றது. தமிழை வளர்க்க வேண்டிப் படிக்கின்ற மாணவர்களிடமிருந்தே தமிழை மறக்கும்படி. தமிழின் நிலை எந்த நிலைக்குச் செல்லுமென்று சொல்லாமலே புரிந்து கொள்ளலாம். எனவே இந்தியைப் புகுத்தும் இந்நிலை நீடித்தால் தமிழ் ஓரிடத்தில் மட்டுமல்ல. ஆயிரமாயிரம் இளம் உள்ளங்களிலிருந்து இந்தியால் மறைக்கப்படுகின்றது என்பதை உறுதியுடன் கூறுகின்றேன்.
- பொன்னியின் செல்வன்.
தமிழ் நாட்டில் இந்தியை ஆதரிப்பவர்களில் சிலர். ஆங்கிலத்தால் தமிழ் அழிவுறுகிறது என்பதைப் பலவாறாக எடுத்துக் காட்டியுள்ளனர். (சிறப்பாகத் தமிழரசுக் கழகத்தினரும் பொதுவுடைமைக் கட்சியினரும் தமிழகத்தில் இதனை நன்கு விளக்கியுரைத்து விழிப்புணர்ச்ச்சியூட்டுகின்றனர்.) சின்னஞ்சிறிய சிற்றூர்களில் கூட ஆங்கிலச் சொற்கள் கற்றவர், கல்லாதவர், வாயில்வரக் காண்கின்றோம். ஆயிரக்கணக்கான எடுத்துக்காட்டுக்கள் காட்ட முடியும்.
ஓர் எடுத்துக்காட்டு:-
குழப்பம் என்பது தமிழ்ச் சொல். ஆங்கிலத்தில் உள்ள ‘ரேசன்’ (Ration) சொல் சேர்ந்து குழப்பரேசன் என்று முதிர்ந்த பாட்டியின் வாயிலாக வழங்குவதைக் காணலாம். இவ்வாறு ஆங்கிலத்தால் தமிழ் கெடுகிறது என்பதைப் பலரும் ஒத்துக் கொள்ளும்போது அதே இடத்தில் இந்தி வருவதால் தமிழ் கெடாது என்று எப்படிக் கூற முடியும்? ஆங்கிலத்தால் விளைந்த தீமைகள் இந்தியால் விளையாது என்று எவ்வாறு கூற முடியும்.
- பா.செயப்பிரகாசம்.
தமிழ் மொழி இந்தியால் பற்பல இடங்களில் பல வகைகளில் மறைந்து கொண்டிருக்கிறது. முதலாவதாக இந்தியப் பாராளுமன்றில் உறுப்பினர் இந்தி அல்லது ஆங்கிலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில்தான் தன் உரையைத் தொடங்க முடியும். இவ்விரு மொழிகளிலும் பேசவியலா உறுப்பினர் தம் தாய் மொழியில் பேசினால் எதிர்ப்பைத் தான் அடைகின்றனர். இரண்டாவதாக மத்திய அரசு அலுவலர் தேர்வுக் குழுவின் (Union Public Service Examination) தேர்வுக்கு இந்தியே இன்றியமையாத மொழி. இந்தியோ ஆங்கிலமோ தெரியாத ஒரு தென்னாட்டுக்காரர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக முடியாது. இது மூன்றாவது சான்று நான்காவதாக முதல் வினாவிற்கும் மூன்றாவது வினாவிற்கும் அளித்த விடைகள் இவ்(4) வினாவிற்கும் பொருந்துவனவாகும்.
- மு.தங்கராசு.
எரிகின்ற நெருப்பில் கைவைத்துப் பார்த்த பின்னரே சுடுமென்ற கொள்கையை ஒப்புக் கொள்ளும் கண்ணற்ற குருடர்களினும், முன்னரே சுடுமென்று அறிந்து விலகிக் கொள்பவர்கள் அறிவுடையவர்களாவர். அதைப்போல் இந்தியைத் தமிழ் நாட்டில் புகுத்தி அதனால் தமிழ் அழிகிறதா? இல்லை. வாழ்கிறதா? என்று ஆராய்ந்து கொண்டிருக்க இது நேரமன்று. எந்த ஒரு மொழியும், பிறமொழி மீது வன்மையாக ஆதிக்கம் செலுத்தினால் அதன் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மொழி அழிவது கண்கூடு. இவ்வாறு இன்று உலகத்தையே வளைத்துக் கொண்டிருக்கும் ஆங்கிலமொழி, பிரெஞ்சு, இலத்தீன் போன்ற பல மொழிகளை விழுங்கியுள்ளதை நாம் அறியலாம். எனவே இந்தி மொழியால் தமிழ் மறைந்திருக்கிறதா, மறையவில்லையா என்று ஆரூடம் கணித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அழிவது உறுதி.
- வி.முத்துச்சாமி.
இருப்புப்பாதை நிலையங்களின் பெயர்களை இந்தியில் எழுதினார்களே! அஞ்சல் தலைகளிலும், அட்டைகளிலும் தமிழா காணப்படுகிறது? வானொலி நிலையத்தில் தமிழ்மொழி சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறது. பள்ளிகளில் தமிழ் படாதபாடு படுகின்றது. இன்னும் சாகவில்லையே தமிழ்! என்ற ஏக்கம் வேண்டாம். சாகாமல் செத்துக் கொண்டே இருக்கிறது என்பது உண்மை என்பதை உணர்ந்து இன்றே ஆவன செய்க. அஃதே அறிவுடைமை. சாகட்டும் எழுப்புகின்றேன் என்பது வெள்ளம் வந்தபின் அணைபோடலாம் என்ற மதியற்ற நினைவின் மறுஉருவம் ஆம்.
- சேசுராசன், பி.ஏ.
சத்தியமேவ சயதே எனத் தமிழ்நாட்டு அரசாங்க முத்திரையில் எழுதப்பட்டுள்ளது. உண்மை வெல்க என்று எழுதினால் என்ன கேடு வந்துவிடுமோ? தமிழ் மொழி வாழும் மண்ணில் சத்தியமேவ சயதே மட்டுமல்ல; பிரச்சார் சபா. வசுதிராலயா என எண்ணற்ற இந்திச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. கிராம சேவக் என்பதற்குப் பதிலாகச் ‘சிற்றூர்த் தொண்டர்’ எனக் கொண்டால் பொருள் குன்றிவிடுமா? இனிமை செத்து விடுமா? ஆயினும் இந்திச் சொற்கள் வடக்கிலிருந்து வரவேற்கப்படுகின்றன.
இந்தியால் தமிழ் எங்காவது ஓரிடத்தில் மறைந்துள்ளதா என்பதைக் கண்டறிய, தேடி அலைய வேண்டாம். தாய் மொழியாகிய தமிழ் ஒலிக்க வேண்டிய இளம் நாக்குகள் இன்று கலம் - கிதாப் - லட்கி - அச்சா என முழங்குகின்றன; இதனால் இந்தியால் தமிழின் சிறப்பு மறைந்து வருவது காணலாம். இந்தி படித்தால் உதவிப் பணம் கிடைக்கும் என்ற அற்ப ஆசையால் இந்திப் பண்டிட்களாகி வரும் தமிழர்களிடம் தமிழின் உயர்வு மறைந்து வருவதைக் காணலாம். ‘‘இந்தியை எதிர்ப்பவர்கள் எங்கள் தமிழ்நாட்டில் இல்லை’’ என்று வடநாட்டில் நம் முதலமைச்சர் கூறி வந்தாரே. அங்கே தமிழ்த் தாயின் வீரம் ஒடுங்கியதை உணரலாம். மறத்தமிழின் சின்னச்சாமி எரிந்து மாண்டாரே ‘தமிழ் வாழ்க. இந்தி ஒழிக’ என்று இறுதி மூச்சு வரையில் முழங்கிக் கொண்டே! அவ்வீரனை வணங்காது விட்டு, ‘‘நோயால் செத்தான்” “வறுமையால் இறந்தான்” என்றெல்லாம் தமிழர்களே பொய் கூறித் தூற்ற முற்பட்டார்களே. அங்கே தமிழ்ப் பண்பு மறைந்ததைத் தெரிந்து கொள்ளலாம். இத்தனைக் கேடுகளுக்கும் காரணம் இந்தியே. இந்தியைக் கற்காவிட்டால் வாழ முடியாத கொடுமை சூழுமே!’’ என்று தமிழ்த் தாயின் நன்மக்கள் கலங்குகின்றனரே. அங்கெல்லாம் இந்தியால் தமிழ் சரிந்து வருவதாயும். நாளைக்கு முழுமையாக மறையும் என்பதையும் அறிவீராக.
- தமிழ்ப்பித்தன்
நான்காவதாக (மத்திய அல்லது மாநில) அலுவலகங்களில் இந்தியின் உதவியால் காரியங்களைச் செய்வது பற்றி ஆய்வோம். அந்த இடத்தைப் பெற்றிருந்த ஆங்கிலத்தை நீக்கிவிட்டு அவ்விடத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டினை உள்ளிட்ட நகர, சிற்றூர் அலுவலகங்களில், எம்மொழி எவ்விடத்தைப் பெற்றிருந்தாலும், அலுவலகர்கள் தமிழிலேயே வேலைதனைச் செய்யத் தூண்டுவதே முறை. அது விடுத்து, ஆங்கிலத்தால் அது நடைபெற்று வந்தது. அது ஓரளவு நற்பணியைச் செய்து வந்தது. இப்பொழுது அதன் இடத்தையும் இந்தி பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. தொடர்புகளும் அதனாலேயே கொள்ளப்படுகின்றன. தமிழில் இவையெல்லாம் நடைபெற்றிருக்குமேயானால், ‘‘ஆட்சித் தமிழ்’’ பற்றிய ஓர் கருத்து நிலவாது. ஒரு சிலரும் ‘‘சிறிது சிறிதாகத் தமிழை அலுவலகங்களில் புகுத்துகிறோம்’’ என்கின்றனர். அம்மொழியினை அவ்வாறு புகுத்த வேண்டுமோ. அதை அவ்வாறு செய்யாது தமிழால் முடியும்’’ என்று கூறப்படுகின்ற போழ்தும் அதைப் புகுத்துகிறோம் என்பது, ஒவ்வாத செயலே. இக்காரணங்களாலும் ஆட்சி நடத்துவதற்குரிய வாய்ப்பினை அது பறித்தலால் தமிழின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கின்றது. அவ்வூறின் காரணமாகத் தமிழ்தன் உருச்சுரந்து கெடுதற்கு வாய்ப்பு ஏற்கின்றது.
-      ப.உசேன்
-
-      குறள்நெறி:  வைகாசி 02, 1995 / 15.05.1964 பக்கம் 10-11

இறுதிவரை இந்தியை எதிர்ப்பேன் – பேரறிஞர் அண்ணா


இறுதிவரை இந்தியை எதிர்ப்பேன் – பேரறிஞர் அண்ணா

சென்னைக் கடற்கரையிலே செந்தமிழ் காக்கச் சிறை சென்று மீண்ட அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு.

இந்தி ஒழியும் வரைப் போராட்டம் நீடிக்கும்.
thamizh-hindi02
சூன் 14ஆம் நாள்: கன்னித் தமிழ்க்காவலனின் போர் முழக்கத்தைச் செவிமடுக்க வெள்ளமென மக்கள் கூட்டம் திரண்டெழுந்தது. தலைநகரிலே தண்டமிழ் காக்கும் தனிப்பெருந் தலைவனுக்கு  வரலாறு காணாத மாபெரும் வரவேற்பு.
1965 வரை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவதின் நன்னோக்கத்தைப் பற்றி அன்று எழுதினேன். போராட்டம் தொடர்ந்து நடைபெற்று, 1965ஆம் ஆண்டிலே நாம் முடிவு எடுக்குங்கால், நம்முடைய போராட்டம், நேருபெருமகனாரின் கண்களுக்குப் புலனாகும்; அவருடைய மனமும் மாறும் என்று எண்ணினேன்anna02. எவருடைய உளத்திலே மாற்றம் ஏற்படுமென்று நினைத்தோமோ, அவருடைய மறைவு நமக்கு உண்மையிலேயே பேரிழப்பாகும். அவரைப்பார்த்து அரசியலில் நிரம்பப் பாடம் பெறல் வேண்டும்; சிறப்பான பண்பைக் கொண்டவர் மறைந்து விட்டார். இதைக் கேட்ட பொழுது இந்தி எதிர்ப்பு அறப்போராட்டத்தில் எனக்குச் சோர்வு தோன்றியது; இனி நம் போராட்டத்தை புரிந்து கொள்வார் இலரே என்று நினைத்தேன்.
கடமையுணர்வு:
யார் புரிந்து கொண்டாலும், புரிந்து கொள்ளாவிட்டாலும், நம் கடமையை நாம் செய்வோம்; இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தி.மு.கழகம் மிக உறுதியாக இருக்கிறது.
இலால்பகதூர் பற்றி அண்ணா:
இன்றைய இந்தியத் தலைமையமைச்சர் உயர்திரு. இலால்பகதூர்(சாத்திரி) பற்றி நான் அதிகம் அறியேன். அறிமுகம் அதிகம் இன்று. இலால்பகதூர் அவர்கள் ஊகம் நிறைந்தவர்; முகமலர்ந்து பேசாப் பண்பினர்.
இந்தியமேலவையில் அவர் இந்தியை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ‘‘சென்னையில் இந்திக்கு ஆதரவு மிகுதி. அண்மையில் சென்னை சென்றிருந்தபொழுது இந்தி மொழி பரப்பும் கூட்டத்தில் ‘இந்தியில் பேசவா? ஆங்கிலத்தில் பேசவா?’ என்று கேட்டேன். இந்தியிலே தான் பேசும்படி கூறினார்கள். அங்கிருந்த மூவாயிரம் பேர்களும் இந்தியை ஆதரிக்கிறார்கள்’’ என்று கூறி என்னை உற்றுப் பார்த்தார்.
நான் விடையிறுத்தபொழுது, ‘‘இந்திமொழி பரப்பும் அவையிலேயே இந்தி மொழியில் பேசாவிடில் வேறெங்கு போய் இந்தியில் பேசுவது?’’ என்று கேட்டேன். “இந்திமொழி பரப்பும் அவையிலேயே, அமைச்சருக்கு இந்தியில் பேசலாமா? ஆங்கிலத்தில் பேசலாமா? என்னும் ஐயம் எழுந்ததே! அதுதான் தமிழ்நாட்டின் நிலைமை” என்றேன். இதற்குச் சாத்திரி விடையிறுத்தாரில்லை.
இந்தி எதிர்ப்பின் பலன் தனி இதழ்
தலைமையமைச்சர் ஆன பின்னர் வானொலியில் தமது சொற்பொழிவை இலால்பகதூர் அவர்கள் ஆங்கிலத்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். இவ்வுணர்வு எப்படி முகிழ்ந்தது? தமிழக மக்கள் இந்தியை எந்த அளவிற்கு எதிர்க்கிறார்கள் என்பதை தலைமையமைச்சர் நன்கு புரிந்திருக்கிறார்
சிறைக்குச் செல்வதால் ஊக்கம் குறையவில்லை; உற்சாகம் குன்றிவிடவில்லை. வெள்ளையாரின் ஆட்சியை ஒழிக்கக் காங்கிரசுக்காரர்கள் எவ்வாறு சிறை சென்றார்களோ, அத்தகைய பான்மையில், இன்று இந்தி மொழிவெறியை ஒழிக்க நாங்கள் சிறை செல்கிறோம். அரசை எதிர்த்துச் சிறைபோகும் அச்சம் தி.மு.கழகத்திற்கு இல்லை.
சட்டம் பாதுகாக்கும் கேடயம்;
பழிவாங்கும் வாள் அன்று.

ஆளும் கட்சியினர் சட்டத்தைக் கேடயமாகவே பயன்படுத்தல் வேண்டும்; வாளாகப் பயன்படுத்தல் நன்றன்று. இன்றைய ஆட்சியினர் எதிர்க்கட்சிகளை அழிக்கும் ஆயுதமாகவே சட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.
தஞ்சையில் அரசியல் சட்டத்தை எரிக்கப் போவதாகக் கருணாநிதி அறிவித்திருக்கிறார். சென்னையில் சட்டத்திற்கு எரியூட்டப் போவதாக நடராசன் தெரிவித்திருக்கிறார். மதுரையில் நடந்த போராட்டத்தில் அமைதி காக்கும் பொருட்டுப் பொறுப்புமிக்க தலைவர்கள் என்ற முறையில் அவண் சென்றார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடருவானேன்?
சட்டம் எனக்குத் தெரியாவிட்டாலும், நீதி பற்றிச் சிறிதளவு அறிவேன். பின்னர் சிறைக்குச் செல்பவர்களை முன்னரே சென்று விடுங்கள் என்று இயம்புவது போன்றுதான் இருக்கிறது இந்நிகழ்ச்சி. இஃது எதைக் காட்டுகிறது? பலரை வெளியேவிட்டு வைத்து ஆட்சி நடத்துவது ஆபத்து என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
4 பேர் சிறை சென்றால் 40 பேர் வெளியே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் போராட்டத் திட்டத்தை வகுத்தேன். எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கழக வேலைகளைத் தடைபடவைக்கும் ஏமாறி அல்ல நான்.
இந்தியை எதிர்ப்போர் யார்?
சென்னை மாநகராட்சியை தி.மு.கழகத்திடம் ஒப்படைப்பதற்காக அரும்பாடுபட்ட வீரத் தோழர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் என் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
நான் சிறையை விட்டு வெளிவந்த பொழுது மாற்றுக்கட்சி  நகர்மன்றத் தலைவரைக் காணின். சற்று நாணியே வந்திருப்பேன். வெளியே நான் இருந்து வெற்றி காண முடியாத பெரு வெற்றி இது. மக்கள் தி.மு.கழகத்தின் பக்கம் அணி வகுத்து நிற்கிறார்கள் 11நகர் மன்றங்களில் தி.மு.கழகம் ஆட்சி நடத்துகிறது.
இதற்கு முன் இந்தியை எதிர்த்தவர்கள் கழகத்தில் உள்ள எளிய தோழர்கள்தான். ஆனால் இன்று இந்தியை யார் யார் எதிர்க்கிறார்கள் தெரியுமா? மாநகராட்சித் தலைவர் எதிர்க்கிறார்; துணைத் தலைவர் எதிர்க்கிறார்; நகர்மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கிறார்கள்.
இதன் பொருள் விளங்குகிறதா? உங்களைக் கேட்கவில்லை. மற்றவர்களைக் கேட்கிறேன். இந்தி எதிர்ப்பை எளிய ஒன்றெண்ணி ஏமாற வேண்டாம். இந்தியை எதிர்க்கும் பொருட்டு எளிய மக்களையெல்லாம், தலைவர்களாக்குகிறார்கள்.
இறுதிவரை இந்தியை எதிர்த்தே தீருவேன்.
பொது மக்களுக்குப் பணிவன்போடு ஒரு செய்தியைச் சொல்லிக் கொள்கிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கழகத்தை ஆதரித்தால் கழகப்புகழ் அதிகமாகும் என்று கருதாதீர்கள். தி.மு.கழகம் நடத்தும் இப்போராட்டம், இந்தி பேசாத மக்களுக்காகச் செய்யும் திருத்தொண்டு, அறப்போராட்டம்.
தி.மு.கழகத்தின் அறப்போராட்டம் என்ன ஆகும் என்ற கேள்விக்கு விடையிறுக்கிறேன்.
இந்தப் போராட்டம் பட்டுப் போய்த் துவண்டுவிடுமேயானால், யாருக்கு இழப்பு? இஃது அரசியல் தொடர்புடையதன்று; எதிர்கால உயர்வையும் தாழ்வையும் உறுதிப்படுத்துகின்ற உயிரினும் மேலான ஒன்றாகும்.
இப்போராட்டத்திலேயே எங்கள் வாழ்வு முடியுமேயானாலும், நிறைவோடு அம்முடிவை ஏற்போம்; புன்னகை தவழும் முகத்தோடு, தாய்நாட்டுக்குப் பணி செய்தோம் என்று மடிவோம்;  மறங்குன்றோம்!
எங்களுடைய பேரப்பிள்ளைகள் பிற்காலத்தில் பெருமைப்படுவார்கள். எங்கள் தாத்தா இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இறந்தார் என்று பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களைப் பார்த்து உங்கள் பாட்டனார் கோழை என்று சொல்லிக் கேலி செய்வார்கள் அப்படிப்பட்ட பிற்காலப்பழியைத் தேடிக் கொள்ளாதீர்கள்.
இந்தி எதிர்ப்பை அற்பமான ஒன்றென்று எண்ணிவிடாதீர்கள். இஃதோர் அறப்போராட்டம்; தாயக மக்களின் தலைவிதியை நோக்கி, நடத்துகின்ற பெரும்போராட்டம்; திமு.கழகம் தலைசாயும் வரை இந்தப் புனிதப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறது.
இந்தி மொழித்தகராறு எதனால் தீரும் என்ற உண்மையை இராசாசி நன்கு தெரிந்திருக்கிறார்.காங்கிரசுக் கட்டிடம் அவர் கட்டிய வீடு; எந்த இடத்தில் வேகாத கல் வைக்கப்பட்டிருக்கிறது? எங்கே இடித்தால் விழும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற ஒரே வழி.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெற்றி பெற தி.மு.கழகத்திடம் சென்னை மாநில ஆட்சி வரல்வேண்டும்; அப்பொழுதுதான் வடவர் கண்திறக்கும் என்று எடுத்துரைத்திருக்கின்றார்.
இராசாசியின் அரசியல் ஊகத்தை அரசியல் வட்டாரத்தில் உள்ள யாரும் மறுக்கமாட்டார்கள்.
இந்தியை ஏன் எதிர்க்கிறோம்?
இந்தி மொழியை ஒரு மொழி என்பதற்காக அதை எதிர்க்கவில்லை; இந்தி பேசாத மக்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆகிவிடுவார்கள். ஒதுக்கப்படுவார்கள் என்று நாம் சொல்லிவருவது ஊகமுள்ள உயர் திரு இலால்பகதூர் அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

 -      குறள்நெறி: ஆனி 18,1995 / 01.07.1964 பக்கம் 1.2


எரியும் நெருப்பில்… – மு. தங்கராசு

எரியும் நெருப்பில்… – மு. தங்கராசு

thamizh-hindi01
‘இந்தி, இந்திய மக்களில் பெரும்பாலோர் பேசும் இலக்கிய மொழிகளுள் ஒன்றன்று. இந்திய மொழிகளுள் சிறுபான்மையோர் பேசும் சிறு இலக்கிய, இலக்கண வளமற்ற மொழியேயாகும். எனவே இந்தி மொழி பேசுவோர் அம்மொழியைப் பேசாப் பகுதிகளில் வாழ்கின்ற (குறிப்பாகத் தென்னகத்து) மக்களின் இசைவையும் நல்லெண்ணத்தையும் நாட்டின் ஒருமை உணர்வு கருதிப் பெறல்வேண்டும். இவ்வாட்சி மொழியேற்பாடு இன்றோடு முடிவுறும் நிலையற்ற செயலன்று இக்காலத்தினரால் வரும் காலத்தினருக்காகச் செய்யப்படும் நிலைபெற்ற செயலாகும். எனவே, இதனை இந்தி ஆர்வலர் எவரும் மறக்கலாகாது’ என்று இந்திய அரசலமைப்பு’ (Indian Constitution) என்ற நூலில் 212, 213 ஆகிய பக்கங்களில் இந்திய ஆட்சி மொழி பற்றிய சட்டப் பிரிவின் 343ஆவது பகுதியை விளக்கிடும் ஆசிரியர் திரு. வீ.கண்ணையா அவர்களின் கருத்தாகும்.
‘‘இந்தி மொழி வெறும் நாடோடிமொழியே! இலக்கியத்திலோ, கலைச் சொற்களிலோ வளராத நிலையில் உள்ளது. துளசிதாசு இராமாயணத்தைத் தவிர சிறந்த காவியம் இந்தியில் இல்லை. இந்திப் பிரச்சார சபைகளினால் வெளியிடப்படும் நூற்கள் வங்காள மொழியில் எழுதப்பட்ட கதைகள், நாடகங்களின் மொழி பெயர்ப்புக்களே இந்நிலையில்தானே இந்தி வெறியர்கள் ஆங்கிலத்தை விலக்கிவிட்டு அதனிடத்தில் இந்தியைத் திணிக்க முயல்கின்றனர். இவ்வேளையில் அறிஞர் இராதாகிருட்டினன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பெற்று, பல்கலைக்கழகங்களின் கல்விமுறை குறித்து வாதித்து, இறுதியில் ‘இந்தியமொழிகள் அறிவியல் சம்மந்தப்பட்டகலைகளின் விளக்கத்திற்கேற்ற அளவு வளரவில்லை. எனவே, ஆங்கிலமே தொடர்ந்து கல்வி மொழியாக இருத்தல் வேண்டும். அஃதன்றி இந்தியே அதற்கான மொழியெனில் வேண்டாத விளைவுகளும் மாணவர் தேர்ச்சியில் குறைவும் ஏற்பட்டு விடும்’’ எனக் குழு தன் முடிவை வெளியிட்டது. ஆனால் இந்தி வெறியர்களோ, ஆங்கிலேயர் நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர். ஆங்கில மொழியையும் வெளியேற்று என்று முரட்டுத்தனமாகக் கூச்சலிட்டனர். அத்துடன் அன்றைய அரசியல் நிருணய சபையின் காலத்தையும் மக்களின் வரிப்பணத்தையும் வீணாக்கின்றனர். இன்றியமையாச் செயல்கள் இவை என்று சிந்திக்காமல் பகுத்தறிவைப் பறிகொடுத்தவர்கள் தாம் காங்கிரசுக் கட்சியில் பாதிப்பேர் என்று அறியப் பரிதாபம் அடைகின்றோம். இந்தி வெறிக்கு இவர்களே அடிப்படையாவர். இந்நிலையால், இந்தி ஆதிக்கம் குறைந்தபாடில்லை’ என்று, ‘‘இந்தியக் குடியரசின் அரசியல் அமைப்பு’’ என்ற நூலில் திரு. ந.வெங்கட்ராமன் அவர்கள் (பக்கம் 199201) கூறுகிறார்.
‘‘ஆங்கிலத்தின் இடத்தை நிரப்பும் அளவிற்கு இன்னும் இந்தி வளரவில்லை’’ என, கே.எம்.முன்சி கூறுகிறார்.
மேற்காணும் சான்றுகள் நம் மனத்திரையில் நிழலிடும்போது சில உண்மை உருவங்கள் தோன்றத்தான் செய்கின்றன. அவற்றுள் சில. இந்தி வளமற்ற மொழி என்பதற்கு இந்தி பேசுவோரே சான்றாவர். ஒரு குறிப்பிட்ட பகுதியினர் கூடி வளர்த்த மொழி என்பதற்கும் வரலாறு இல்லை. பற்பல மாநிலத்தவரும் தத்தம் தாய் மொழியுடன் கலந்து பேசிவரும் கதம்ப மொழியினும் கடைமொழி என்பது உணரப்படுகிறது. ஒருவர் பேசும் இந்தியை மற்றொருவர்கட்குப் புரிந்து கொள்ளும் அளவிலும் இல்லை.
இத்தகைய கலப்பு நிறை, கடைமொழிதான் இன்றைய இந்தியத் துணைக்கண்ட மக்களாட்சி அரசியலின் ஆட்சிமொழி என்றால் ஒரு புறம் வேதனையும் மறுபுறம் வெட்கமும் தோன்றாமல் இருப்பதில்லை. ஏறத்தாழ எண்பதுக்கும் மேற்பட்ட மொழிகளின் கலவையாளர் எண்ணிக்கையைக் கணக்கில் எடுத்துக் கொண்டு 42 விழுக்காடு மக்கள் தனியாக இந்தி பேசுவோர் என்றால் உண்மை விரும்பிகள், குடியாட்சி நிலைக்க வேண்டும் என்று எண்ணுவோர் இச்செயலை அறவழிப்பட்ட தென்றா கருதுவர்? சிரிப்பர், வேதனையும் கொள்வர், ஆட்சியின் அவலம் கண்டு!
இந்திய அரசியலமைப்பு பதினான்கு மொழிகளை ஆட்சிமொழிகளாக ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இந்தி தான் முதன்மொழி என்ற நிலையில் இன்று காட்சி தருகின்றது. ஏனெனில், மைய அரசுப் பணித் துறைப் பதவிகளில் முதலிடம் பெற வேண்டுமானாலும், பதவி உயர்வு அடைவதாயினும் ஊதியத்தில் உயர்வு பெறவேண்டுமாயினும் இந்தியே வேண்டப்படுகின்றது. (அண்மைக்கால அரசு ஆணை இதனை அறிவிக்கின்றது.) மாநிலங்களிலுள்ள இந்திப் பிரச்சார சபைகளின் ஆசிரியர்களுக்கான ஊதியத்தையும் அரசே ஏற்றுக் கொண்டு செலவு செய்ய முடிவெடுத்துவிட்டது. இதற்கெனத் திட்டக்குழு ஒரு கோடி வெண்பொற் காசுகளை ஒதுக்கியுள்ளது என்று மக்களவையில் இந்தியக் கல்வித்துறைத் துணையமைச்சர் திரு. பகத்தர்சன் அறிவித்துள்ளார். தென்னக மாநிலங்கள் தரும் இசைவைப் பெற்று இந்தி மொழிப் பல்கலைக் கழகத்தை நிறுவவும் அரசு எண்ணியுள்ளது. இவை காரணமாக இந்திக்கு முதன்மை ஏற்படுத்தி வருகிறது. இந்தி வளர்ச்சிக்காக இந்தி (ய) அரசு பலகோடி வெண் பொற்காசுகளை மக்களின் வரிப்பணத்தினின்றும், நாட்டைச் சூழ்ந்துள்ள இக்கட்டான நிலையையும் மறந்துவிட்டுச் செலவு செய்து கொண்டு வருகிறது. இவையெல்லாம் மக்களாட்சியின் மாண்பை உயர்த்துவனவா? அன்றி, தாழ்ந்துள்ளனவா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும் ஒரு மொழி, ஒரு கொடி, ஒரு கட்சி,. ஒரே ஆட்சி என்ற நிலை இன்று இந்தியாவில் நடைபெறுகிறது என்றுதான் மக்கள் எண்ணுவர். ஏனெனில் மக்களின் கருத்தை எதிரொலிக்கும் எதிர்க் கட்சிகளின் வேண்டுகோளையும் அரசு ஏற்றுச் செயல்பட வேண்டும் ஆட்சிமொழிகளென்று வரையறுக்கப்பட்டுள்ள பதினான்கு மொழிகளுள் ஒன்றான இந்திக்கு மட்டும் முதலிடம் கொடுத்தல் அறநெறி ஆட்சி அன்று. மாறாக மக்களின் மனக்கருத்தை மதியாத மற வெறியாளரின் ஆட்சி என்றே கூறவியலும்.
மும்மொழித் திட்டம் மூளையைக் குழப்பும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியெனத் தெள்ளத்தெளிய விளங்கும் உண்மையாகும். முதலாவதாக இத்திட்டப்படி ஒரு மாணவனோ அன்றி ஆசிரியரோ மூன்று மொழிகளைத் தெரிந்திருத்தல் வேண்டும். ஒன்று அவரவர் தாய் மொழி அடுத்து ஆட்சி மொழியென ஆட்சியினரால் மாற்றிக் கூறப்படும் இந்தி. மொழி மூன்றாவதாக ஆங்கிலமொழி.
பொதுவாக மாணவனோ அன்றி ஆசிரியரோ இத்திட்டத்தால் தமக்குக் கொடுக்கப்படும் பயிற்சிக் காலத்துள் இம்மொழிகளை நன்முறையில் கற்றல் இயலாது. தாய்மொழி வழியாகக் கற்கும் கல்வியால் பெறும் பயனே சிந்தனையையும் மொழித் தூய்மையையும் இலக்கிய இலக்கண வளங்களையும் மொழியின் எளிமைத் தன்மையையும் கற்கும் காலத்தின் அளவையும் சிறப்பாக அமைத்துக் கொடுக்கும். அஃதன்றி வேற்று மொழி வழியாகக் கற்கும் போது மேற்கண்டவை அனைத்தும் சிறப்புற அமையா, மேலும் மும்மொழிகளுள் எம்மொழியிலும் சிறந்த அறிவைப் பெறல் என்றுமே இயலாது.
அடுத்து இன்றைய இந்திய அரசியலமைப்பு விதிப்படி அவ்வமைப்பு ஏற்பட்ட பதினைந்தாவ தாண்டில் இப்போதுள்ள ஆங்கிலம் அதாவது 1965இல் அகற்றப்பட்டு விடும். அதன்பிறகு தாய்மொழி, இந்தி என்ற இரு மொழிக் கொள்கை உருவாகிவிடுகிறது. இதனால் இந்தியைக் கட்டாயம் கற்றாக வேண்டிய வன்முறை, சட்டத்தின் மூலம் நம்மேல் திணிக்கப்படுகிறது. இஃது இந்தி பேசாதோர் பெறும் நிலை இந்தி பேசுவோர் பெறும் நிலை என்ன? அவர்கள் ஒரே மொழியைக் கற்றால் போதும். அதாவது அவர்களின் தாய்மொழியைக் கற்றுக் கொண்டாலே போதுமானதாகும்.
(தொடரும்.)
-      குறள்நெறி: ஆனி 02,1995 / 15.06.1964 பக்கம் 13

இதுதான் மக்களாட்சியா? – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

இதுதான் மக்களாட்சியா? – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

thamizh-hindi02
மக்கள் நன்மைக்காக மக்களால் மக்களைக் கொண்டே ஆளப்படுவது மக்களாட்சியாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் பல்வேறு மொழியனரும் சமயத்தினரும், கொள்கையினரும், நாற்பது கோடிக்குமேல் வாழ்ந்தபோதிலும், மக்களாட்சி முறையைப் பின்பற்றி உலகம் புகழுமாறு ஆட்சி செலுத்துகின்றோம் என ஓயாது பறையறைந்து வருகின்றனர் ஆளுங்கட்சியினர்.
இந்தியக் கூட்டரசு ஆட்சியை நடத்திவரும் கட்சியினர் மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றுப் பதவிப் பீடத்தில் அமர்ந்திருப்பது உண்மைதான். இவ்வாறு அமர்ந்திருப்பது மக்களாட்சி முறைகளைப் பின்பற்றி வருவதன் பயனாகவா? அல்லது வேறு முறைகளைக் கையாண்டு வருவதன் தன்மையாலா?
வறுமை, அறியாமை, கல்வியறிவு இன்மை, அச்சம், பதவிப்பற்று, எப்படியும் உயிர்வாழ வேண்டும் என்ற நோக்கம் முதலியன நிறைந்திருக்கும் இப்பெருங்கண்டத்தில் மக்களாட்சி முறைக்கு மாறாகச் சென்றாலும் தடுத்து நிறுத்த எவரும் முன் வருவாரா? வந்தாலும் வெற்றி பெறல்கூடுமா?
இந்தியக் கூட்டரசுப் பொறுப்பை ஏற்று நடத்திவரும் ஆளுங்கட்சியினர், மக்களாட்சி முறையில் செல்லவில்லை யென்பதற்கு இந்தியக் கூட்டரசு ஆட்சிமொழி பற்றி அவர்கள் கடைப்பிடித்துவரும் கொள்கையே தக்க சான்றாக அமையும்.
‘கூட்டரசு’ என்பது பல அரசுகளும் சேர்ந்து அமைத்துக் கொண்டுள்ள அரசாகும். கூட்டரசு ஆட்சியில் எல்லா அரசுகளுக்கும் – மாநிலங்களுக்கும் சம உரிமையும் வாய்ப்பும் இருத்தல் வேண்டும். இல்லையேல் கூடிவாழும் கூட்டரசுக் கொள்கை மாய்ந்து ஒற்றையாட்சித் தன்மை மேலோங்கிவிடும். இந்தியக் கூட்டரசு உண்மையாகவே கூட்டரசாகவே என்றும் நீடித்திருக்க வேண்டும் என்றால் கூட்டரசு மொழிகளும் ஒன்றாகிய இந்திக்கு மட்டும் தனி உரிமையும் செல்வாக்கும் அளித்தல் பொருந்தாது இந்திமொழி ஒன்றுதான் இந்தியக் கூட்டரசின் மொழி என்று கூறி ஏனைய அரசு மொழிகளை இரண்டாம்தர நிலைக்குத் தள்ளிவிட்டனர். இச்செயல் கூட்டரசுக் கொள்கைக்கு ஏற்றதன்று என அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் பெரியோர்களும் எடுத்துரைத்துள்ளனர். தமிழகத்தில் எதிர்க்கட்சியாய் இயங்கும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி முதன்மையை எதிர்த்துப் பெருங் கிளர்ச்சிசெய்து வருகின்றது. அதன் தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், பிறரும் சிறைக்குச் சென்று கொண்டு இருக்கின்றனர். இந்தியக் கூட்டரசு மக்களாட்சி முறையில் நம்பிக்கையும் பற்றும் கொண்டிருக்குமானால், இந்திக்கு முதன்மை தருவதை நிறுத்தி இருத்தல் வேண்டும். இந்தி முதன்மையை எதிர்ப்போரின் கூற்றுகளைச் செவிமடுத்துத் தாம் கடைப்பிடித்து வரும் இந்தி மொழிக் கொள்கையை நெகிழவிட்டிருக்க வேண்டும்.
இந்தியக் கூட்டரசு அவ்வாறு செய்திலதே! மாறாக இந்தி முதன்மையை விரும்பாதார் மீது சுமத்தும் செயல்முறைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்திய அரசுத்துறைப் பணியினரைத் தேர்ந்தெடுப்பதற்குரிய தேர்வு மொழி இந்திதான் எனக் கூறியுள்ளது.
இந்திய அரசுத்துறைப் பணியில் உள்ளோர் இந்தி மொழிப் புலமை பெற்றாக வேண்டும் என அறிவித்து, பணியில் அமர்ந்துள்ளோரை இந்தி மொழி படிக்குமாறு வற்புறுத்தி வருகின்றது. அவர்கள் அலுவலக நேரங்களிலேயே இந்தியைப் படிக்குமாறு கட்டாயப்படுத்தி வருகின்றது. படிக்காவிட்டால் வேலையுயர்வோ ஊதிய உயர்வோ கிட்டாது எனத் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந்தி மொழியைப் பயிற்சி மொழியாகக் கொண்டுள்ள பல்கலைக்கழகம் ஒன்றைத் தென்னாட்டில் தோற்றுவிப்பதற்கும் முயன்று வருகின்றது.
இம்மட்டோடு நிற்கின்றதா?
இந்திய மொழிகள் அனைத்தும் இந்திமொழி எழுத்தாம் தேவநாகரியில் எழுதப்படவேண்டுமெனக் கூறி அதற்குரிய செயல்முறைகளிலும் ஈடுபட்டுள்ளது.
ஒவ்வொரு மொழிக்கும் அதனதன் எழுத்தே உடலாகும். உடலாம் எழுத்தை அழித்தபின் உயிராகும் மொழி வாழ்வது எங்ஙனம்? ஆகவே ஏனைய மொழிகளை அழித்துவிட்டு இந்திமொழி ஒன்றைமட்டுமே நிலைக்கச் செய்வதற்கு ஒல்லும் வகையால் எல்லாம் ஓயாது முயன்று திட்டமிட்டுச் செயல்புரிந்து வருகின்றனர்.
இந்திய மொழிகளின் தாய் எனக் கருதத்தகும் நம் தாய்மொழியாம் தமிழை யிழந்தபின்னர் நாம் வாழ்வது எவற்றுக்கு? மொழியிழந்து, வாழ்விழந்து, மானமிழந்து வாழச்செய்வதா மக்களாட்சிமுறை? உண்மையான மக்களாட்சி முறையில் ஒவ்வொருவர் நலனும் உரிமையும் காக்கப்படல் வேண்டும். இன்றேல் அது மக்களாட்சியாகத்தான் கருதப்படும்.
இந்திமொழி எழுத்தைத் தமிழுக்குரிய எழுத்தாக ஆக்குவதைத்தடுத்து நிறுத்தல் வேண்டும். ஒற்றுமையின்பேரால் நம் உயிரனைய மொழியை அழிக்க வரும் திட்டத்தை உயிர் கொடுத்தேனும் தடுத்து நிறுத்த ஒன்றுபட்டெழுதல் தமிழரின் தலையாய கடனாகும். வேற்றுமைகளை மறந்து வீறுகொண்டு எழுமின். வெல்க தமிழ்.
-      குறள்நெறி:  வைகாசி 02, 1995 / 15.05.1964 பக்கம் 8

இந்தியைப் பற்றிய சொல்லும் செயலும் – பேராசிரியர் சி.இலக்குவனார்

இந்தியைப் பற்றிய சொல்லும் செயலும் – பேராசிரியர் சி.இலக்குவனார்

thamizh-hindi02
சென்ற இதழில் அலுவலக நேரத்திலேயே இந்தி மொழிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்பின்னர் வெளிவந்துள்ள இந்திய அரசு அறிக்கை ஒன்றில் அலுவலக நேரமல்லாத காலத்திலேயே இந்திமொழிப் பயற்சி பெறுமாறு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. (At present classes are being conducted in many departments of the Union Government outside office hours to enable non-Hindi speaking people to learn Hindi) இக்குறிப்பில் ‘எல்லா அலுவலகங்களிலும்’ என்று குறிப்பிடாமல் ‘பல அலுவலகங்களில்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது நோக்கத்தக்கது. ஆகவே சில அலுவலகங்களில் அலுவலக நேரத்திலயே இந்திமொழி கற்குமாறு செய்யப்பட்டுள்ளது என்பதுதானே வெளிப்படுகின்றது. நாம் அறிந்தவரையில் மதுரையில் உள்ள இந்திய அரசுத் துறை அலுவலகங்களில் உள்ளோர் அலுவல் நேரத்திலேயே இந்திமொழி பயில்கின்றனர் என்பது உண்மையே. அலுவலகங்களில் பணிபுரிவதற்காக ஊதியம் பெறுவோர் அலுவலக நேரத்தை வேறு முறையில் கழிப்பதற்கு வசதி செய்து கொடுப்பது நல்லாட்சி முறைக்கு ஒத்தது அன்று. பணிமுறை கருதி அளிக்க வேண்டிய ஊதிய உயர்வை வேண்டாத மொழியைப் பயிலச் செய்வதற்காக அளிப்பதும் அடாததாகும்.
‘‘எல்லாத் தேசிய மொழிகளையும் சமநோக்குடன் நோக்குகின்றோம்; இந்தி மொழிக்குரியரல்லார் இந்தி மொழி பயிலுமாறு கட்டாயப்படுத்தப்படமாட்டார்’’ என்று மேடைகளில் முழங்குவதும் செயல் முறையில் அதற்கு மாறாக நடப்பதும் சொல்லும் செயலும் மாறுபடும் பெருங்குற்றத்திற்கு உரியன அன்றோ? சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக பேரரசுத் தலைவர்களே மேற்கொள்ள நேரின் ஏனைய மக்கள் என்னதான் செய்யமாட்டார். ஒழுக்கம் நிலைபெறுவதெங்கே?
இந்திய அரசு இவ்வாறு முறை திறம்பி இந்தி மொழியை விரும்பாதார் மீது சுமத்த வேண்டா. ‘‘இந்திமொழி யறியாத ஊழியரிடம் எவ்வித வேறுபாடும் காட்டமாட்டாது’’ எனக் கூறிய உறுதிமொழி என்னவாயிற்று’ இங்கு, ‘‘மும்மொழிக் கொள்கையே நம் திட்டம்’ என்று கூறித் தமிழ் ஆங்கிலம் இந்தி என்பனவற்றைக் கற்கச் செய்யும் அரசினர், ஏனைய மாநிலங்களில் மூன்று மொழிகள் கற்பதற்கு என்ன செய்துள்ளனர்? இந்தி மொழி மாநிலத்தில் தென்னகமொழியொன்றைக் கற்பதற்கு வசதி செய்தி கொடுத்துள்ளனரா? தென்னகமொழி ஒன்றைக் கற்போர்க்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படுமென்று அறிவிக்கப்படவில்லையே! இங்கு அலுவலகத்தில் உள்ளோர் இந்திமொழி பயில்வதற்கு வசதி செய்து கொடுத்துள்ளதுபோல் அங்குத் தமிழோ பிற தென்னக மொழியோ பயிலுவதற்கு வசதி செய்து கொடுத்துள்ளரா? இல்லையே. இந்தி மொழிப் பயிற்சியில் ஆர்வம் காட்டும் நம் தமிழக அரசு, வடக்கே தமிழைப் பயிலச் செய்வதற்குக் கருத்துச் செலுத்தாதது ஏனோ? தென்னாட்டவர்க்குத்தான் மும்மொழித் திட்டம்; வடவர்க்கு இரு மொழித் திட்டம்தான் என்றன்றோ கருத வேண்டியுள்ளது. இத்தகைய பாகுபாடு இந்தி மொழியாரின் தனியாட்சிப் போக்கைத்தானே வெளிப்படுத்துகின்றது. இந்நிலையில் இந்திமொழியாளரும் ஏனைய மொழியாளரும் எங்ஙனம் ஒன்று கூடி வாழ இயலும், இந்திய ஒருமைப்பாடு நிலை பெறுவது எங்ஙனம்?
ஆகவே இந்திய அரசு இவ்வாறு இந்தி மொழிக்கு மட்டும் தனிச் சலுகை காட்டுவதை உடனே நிறுத்தல் வேண்டும்.
அன்றியும், விரும்பாதவரையும் இந்தி மொழியால் பயன்பெறாதோரையும் இந்தி மொழி பயிலுமாறு செய்யும் திட்டத்தையும் உடனே கைவிடுதல் வேண்டும்.
எடுத்துக்காட்டாக, திருச்சி அல்லது மதுரை வட்டாரத்திற்குள்ளேயே பணிபுரியப் போகும் அஞ்சல் நிலைய அலுவலர்களை எதற்காக இந்தி மொழி பயிலுமாறு வற்புறுத்தல் வேண்டும். தமிழ் நாட்டை விட்டு அயல் மாநிலங்களுக்குச் செல்லுவோராயிருப்பின் ஆங்கிலம் ஒன்றே போதும். அல்லது எந்த மாநிலத்திற்குச் செல்லுவாரோ அந்த மாநில மொழியைக் கற்குமாறு செய்தால் பயனுண்டு. இந்தி மாநிலத்திற்குச் செல்லுவோரை இந்தி மொழி பயிலுமாறு செய்தால் அதில் பொருளுண்டு. அங்ஙனமணின்றித் தமிழ் மாநிலத்திலேயே பணிபுரிந்து ஓய்வுபெறப் போகின்றவரையெல்லாம் எதற்காக இந்தி கற்குமாறு செய்தல் வேண்டும்?
தமிழ்நாட்டில் பெரும்பாலோர் இந்திமொழி முதன்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்; பல்லாயிரக் கணக்கில் சிறை புகுந்த வண்ணம் உள்ளனர். இவற்றையெல்லாம் நோக்காது மேலும் மேலும் இந்தி முதன்மையை வன்முறையாக நிலைநாட்டுவது குடிதழுவிக் கோலோச்சும் மக்களாட்சியாகாது. சொல் வேறு செயல்வேறு என்ற நிலை மாறிட வேண்டும்.
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், குறள்நெறி ஆசிரியருரை
குறள்நெறி:  வைகாசி 19, 1995 / 01.06.1964 பக்கம் 8


- அரகமுதல இதழ் 12