108 free ambulance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
108 free ambulance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 ஜூலை, 2011

New facility introduce in 108 ambulance: மாரடைப்பு நோயாளிகளுக்கு 108 மருத்துவ ஊர்தியில் புதிய வசதி விரைவில் அறிமுகம்

பாராட்டப்பட வேண்டிய நடவடிக்கை. அவசர மருத்துவ ஊர்தி வந்தும் மருத்துவமனைக்குச் செல்லும் மு்னபே உயிரிழந்தோர் பலர் உள்ளனர். இனி அந்த நிலை மிகவும் குறையும். எனினும் பணியாளர்களின் வேலை நேரத்தை எட்டு மணிநேரம் ஆக்கியும் அவர்களுக்கு இணையான பதவிகளில் உள்ளவர்களுக்கான ஊதியத்தை வழங்கியும்  தேவையான மருந்துப்பொருள்கள் வழங்கியும் பணியாளர்கள்  ஈடுபாடடுடன் பணியாற்ற வகை செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


மாரடைப்பு நோயாளிகளுக்கு 108 ஆம்புலன்சில் புதிய வசதி விரைவில் அறிமுகம்
சென்னை: திடீரென மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளை, விரைந்து காப்பாற்ற, 108 ஆம்புலன்சில் புதிய வசதி செய்யப்பட உள்ளது. கடும் நெஞ்சு வலி காரணமாக ஒருவரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும்போது, அவருக்கு சாதாரண நெஞ்சுவலியா அல்லது மாரடைப்பா என்பதை, ஆம்புலன்சில் செல்லும்போதே கண்டுபிடித்து, மாரடைப்பு எனில், அதற்குரிய சிகிச்சை வசதிகள் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, இந்த புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும். கடந்த 2008ம் ஆண்டு செப்., 15ம் தேதி, 108 ஆம்புலன்ஸ் வசதி, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் துவங்கப்பட்டது. முதலில், 20, ஆம்புலன்ஸ் களுடன் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில், இப்போது, 428, ஆம்புலன்ஸ்கள் உள்ளன. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், இந்த ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, நகர்ப்புறங்களில், சராசரியாக, 17 நிமிடங்களிலும், கிராமப்புறங்களில் சராசரியாக, 20 நிமிடங்களிலும் சிகிச்சை கிடைக்கும் வகையில், இந்த ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. செயற்கை சுவாச கருவி உட்பட, முதலுதவி சிகிச்சைக்குத் தேவைப்படும் எல்லா வசதிகளும் இதில் உள்ளன. இந்த திட்டத்தில், இதுவரை, 10 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். பச்சிளம் குழந்தைகளுக்காக தனி, ஆம்புலன்ஸ் வசதி, கடந்த சில தினங்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, மாரடைப்பு நோயாளிகளை விரைந்து காப்பாற்ற, புதிய வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. மாரடைப்பு ஏற்படும்போது, நேர விரயத்தை தடுக்கவும், விரைந்து சிகிச்சை அளிக்கவும் இத்திட்டம் உதவும். நெஞ்சு வலி காரணமாக, 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, அவருக்கு, "இ.சி.ஜி.,' வரைபடம் எடுக்கப்படும். அந்த வரைபடம், மொபைல் போன் மூலம், சென்னையில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்படும். சென்னை அலுவலகத்தில் உள்ள மருத்துவக் குழு, இந்த வரைபடத்தைக் கொண்டு மாரடைப்பின் தீவிரத்தை கணிக்கும். பின், அருகில் உள்ள தீவிர இதய சிகிச்சை பிரிவை அறிந்து, அது குறித்து, தகவல் கொடுக்கும். மேலும், அந்த மருத்துவமனைக்கும், முன்பே தகவல் தெரிவித்து நோயாளிக்கு தேவையான சிகிச்சை ஏற்பாடுகளைச் செய்ய கேட்டுக்கொள்ளும். இந்த, புதிய ஆம்புலன்ஸ் திட்டத்தை, அரசுடன் இணைந்து செயல்படுத்தும் ஜி.வி.கே., நிறுவனத்தின் மண்டல மேலாளர் பிரபுதாஸ், இது குறித்து கூறும்போது,""இத்திட்டம், முதல் கட்டமாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் செயல்படுத்தப்படும். பின், படிப்படியாக மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்,'' என்றார்.108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கடும் மனக்குறையுடன் உள்ளனர்.

இது குறித்து, இத்திட்டத்தில் பணிபுரியும் டெக்னிஷியன் ஒருவர் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு, 12 மணி நேரம் பணிபுரிகிறோம். இப்போது, மாதச் சம்பளம், 5, 500 ரூபாய். இதில், பெண் ஊழியர்கள் அதிகம். பல ஊர்களில், பொது இடங்களில் தான் ஆம்புலன்சை நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன், மருந்து தட்டுப்பாடு இருந்தது. இப்போது ஓரளவு மருந்து, "சப்ளை' சீரடைந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் உட்பட எல்லாவித நோயாளிகளையும் தொட்டு தூக்குகிறோம். ஆனால், எங்களுக்கு போதிய கையுறைகள் வழங்குவது இல்லை. ஆம்புலன்சை சுத்தம் செய்ய தேவையான அளவு, "டெட்டால், பினாயில்' வழங்குவதும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த புகார் குறித்து, மண்டல மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது: பணியில் சேரும்போதே, 12 மணி நேர வேலை என்று சொல்லித்தான் சேர்க்கிறோம். எவ்வளவு ஊதியம் என்பதையும் முன்பே தெரிவித்து விடுகிறோம். இது லாப நோக்கமில்லாத சேவை நிறுவனம். இருப்பினும், ஆண்டுதோறும் சம்பள உயர்வு அளிக்கிறோம். ஆம்புலன்சை நிறுத்த, பல ஊர்களில் இடம் இல்லைதான். கழிப்பிட வசதி உள்ள இடத்தில் நிறுத்த அரசின் உதவியை கோரி உள்ளோம். "டெண்டர்' நடைமுறையில் தாமதம் ஏற்பட்டதால், மருந்து "சப்ளை'யில் சிறிது தொய்வு ஏற்பட்டது. இப்போது அதுவும் சரி செய்யப்பட்டது. ஊழியர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். இவ்வாறு பிரபுதாஸ் கூறினார்.

திங்கள், 10 ஜனவரி, 2011

1 crore rupees ad.charges for family channers: குடும்பச் சேனல்களுக்கு கோடிகளில் விளம்பரம்

இலவசச் சேவைகளுக்கான விளம்பரங்களை இனி அனைத்துத் தொலைக் காட்சிகளும் இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தட்டு்ம்! 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

குடும்பச் சேனல்களுக்கு கோடிகளில் விளம்பரம்

சென்னை, ஜன.9: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் "108' இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடர்பான விளம்பரங்கள் மூலம் முதல்வரின் குடும்பத்துக்குச் சொந்தமான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.  பொதுமக்களால் இலவச சேவை என அறியப்பட்டாலும், இந்த இரு டிவிக்களில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி கட்டணம் செலுத்தியிருக்கிறது.  மற்ற தனியார் சேனல்களுக்குத் தராமல் போனாலும் அரசு நிறுவனமான பொதிகை சேனலுக்கு விளம்பரம் தராதது ஆச்சர்யமாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  தமிழகத்தில் அவசரகால உதவிக்காக "108' இலவச ஆம்புலன்ஸ் சேவை, 2008-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசும், ஜி.வி.கே. அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையமும் (இ.எம்.ஆர்.ஐ.) கையெழுத்திட்டன. மருத்துவம், காவல்துறை, தீயணைப்புத்துறையுடன் இந்த சேவை இணைக்கப்பட்டுள்ளது.  இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை, சென்னை மட்டுமில்லாமல் மாவட்டங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மாரடைப்பு, பெண்களுக்கு பிரசவ வலி, சாலை விபத்துகளில் அடிபடுவோர் என எந்த இடத்தில் இருந்தாலும் "108'க்கு அழைத்தால், இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது.  ஒருபக்கம் பொதுமக்களுக்கு இலவசமாக சேவை வழங்கிய போதிலும், "108' இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது தொடர்பான விளம்பரங்கள் குறிப்பாக சன் மற்றும் கலைஞர் டிவிக்களில் கட்டணம் செலுத்தித்தான் விளம்பரம் செய்யப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் தமிழக அரசு 2008 முதல் 2010 வரை காலக்கட்டங்களில் சுமார் ரூ. 1 கோடி செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.  இது தொடர்பாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ. தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி- பதில்களின் விவரம்:  கேள்வி: 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகின்றன. இது இலவச விளம்பரமா? அல்லது கட்டண விளம்பரமா? கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?  பதில்: 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம் இலவச விளம்பரம் அல்ல. கட்டண விளம்பரம்தான். ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு சன் டிவியில் ரூ. 23,474-ம், கலைஞர் டிவியில் ரூ. 9,700-ம் செலுத்த வேண்டும் என்று இ.எம்.ஆர்.ஐ. பதில் அளித்துள்ளது.  கேள்வி: இலவச ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் விளம்பரத்திற்காக சன் மற்றும் கலைஞர் டிவி நிறுவனங்களுக்கு இன்று வரை செலுத்தப்பட்ட தொகை எவ்வளவு?  பதில்: இன்று வரை சன் மற்றும் கலைஞர் டிவி விளம்பரத்திற்காக செலுத்தப்பட்ட தொகை ரூ. 1,01,53,320 என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ""ஆகாரத்திற்காக அழுக்கை உண்டு, தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதுபோலத் தான் நானும். என்னுடைய சுயநலத்தில், பொது நலமும் கலந்திருக்கிறது'' என்ற "பராசக்தி' பட வசனத்தைப் போல, தமிழக அரசின் இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை பொது நலமாகப் பார்க்கப்பட்டாலும், இந்த 108 ஆம்புலன்ஸ் சேவை விளம்பரத்தின் மூலம் சன் மற்றும் கலைஞர் டிவிகளுக்கு ரூ. 1 கோடி வருவாய் கிடைப்பது என்பது குடும்ப சுயநலம்தான்'' என்கிறார் வி.சந்தானம்.  சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது! 
கருத்துகள்

குடும்பமே தமிழகம்..தமிழகமே குடும்பம்..இதுல 108 விளம்பரம் ஒரு செய்தியா...?
By kannan
1/10/2011 8:02:00 AM
மக்கள் இனிமேல்தான் கவனமாக இருக்க வேண்டும்.
By அம்பை சுதர்சனன்
1/10/2011 7:24:00 AM
அடுத்து அந்த சந்தானத்தின் ஜாதி தி.மு.க தலைமையினால் விமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும், எதுக்கு வீண் வம்பு? ஒரு கோடி என்பது அவங்களுடைய ஒரு நாள் பாகெட் மணி! spektrum பாத்தவங்களுக்கு இது எம்மாத்திரம்? இவ்வளவு ஆன பிறகும் பயமில்லாமல் தமிழ் மையத்துடன் இணைத்து சென்னை சங்கமம் நடத்தும் அரசிடம் இருந்து வெரி என்னத்தை எதிர் பாக்க முடியும்?
By பாலா ஸ்ரீனிவாசன்
1/10/2011 7:06:00 AM
நமக்கு ஒரு கோடி அந்த கேடிகளுக்கு ஒரு ஒரு பைசா. தப்ப நேனைகதீங்க.
By brammasthiram
1/10/2011 6:59:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *