கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 ஜூன், 2025

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -11: அன்றே சொன்னார்கள்49 – – இலக்குவனார் திருவள்ளுவன்

 



(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10 – தொடர்ச்சி)


கட்டடங்கள் என்பன வீடுகள் அல்லது மாளிகைகள்  முதலானவற்றுடன் அறச்சாலை முதலானவற்றையும் குறிக்கும். ஆங்காங்கே வழி நடைப்பயணத்திற்கென மாந்தர்க்குச் சோறிடும் அறச்சாலைகள் கட்டப்பட்டுள்ளன. இவை போல் கால்நடைகளுக்கென வைக்கோல் இடும் சாலைகளும்  வைக்கோல் தின்று வயிறு நிறைந்த உடன் எருதுகள் நீர் குடிக்க வேண்டும் என்பதால் நன்னீர்க்குளங்களும் அமைத்து இருந்து உள்ளனர். துறவிகள் தங்கும் தவப்பள்ளிகளும் அமைத்திருந்தனர். குளிர்ந்த சிறிய குளங்களை உள்ளே அடக்கின முன்றிலை உடைய பெரிய எருத்திற்கு வைக்கோலிடும் பல சாலையினையும் தவம்செய்வோர் உறையும் இடங்களையும் உடைய தழைத்துத் தாழ்ந்தபொழில்கள் சூழ்ந்த தவப்பள்ளிகளை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,

தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டுஎருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவின் (பட்டினப்பாலை 51-52)
எனக் குறிப்பிடுகிறார்.
‘வகைபெற எழுந்து வானம் மூழ்கிச்
சில்காற் றிசைக்கும் பல்புழை நல்இல்‘ (357-8)
என்னும் ஆசிரியர் மாங்குடி மருதனாரின் மதுரைக்காஞ்சி அடிகட்கு,   ‘மண்டபம், கூடம், தாய்க்கட்டு, அடுக்களை என்றாற் போலும் பெயர்களைப் பெறுதலின், வகைபெற வெழுந்தென்றார்‘ என்று நச்சினார்க்கினியர் சிறப்புரை எழுதி உள்ளார். இதனை மொழி ஞாயிறு பாவாணர் அவர்கள் விளக்கமாக,
ஒவ்வொரு மாடமும் அல்லது மாளிகையும், சுற்றுச்சுவர், முகமண்டபம், தலைவாசல், இடைகழி(நடை), முன்கட்டு, உள் முற்றம், பின்கட்டு, கூடம், அடுக்களை (சமையலறை), புழைக்கடை (கொல்லைப்புறம்), மனைக்கிணறு, குளிப்பறை, சலக்கப்புரை (கழிவறை), சாலகம் அல்லது அங்கணம் என்னும் பகுதிகளையுடைய தாயிருந்தது; மேனிலையில் நிலாமுற்றமிருந்தது எனத் தெரிவிக்கிறார்.
இவற்றுடன், அக்கால மாளிகைகள், காற்றோட்டத்திற்காகக் காலதர், சாளரம், பலகணி என்னும் பல்வகை அமைப்புகளைப் பெற்றிருந்தன. இன்றைக்கு நாம் பலகணி வசதி உடன் தனியாக வெண்டிலேட்டர் (ventilator) என்னும் வசதியையும் வைத்துள்ளோம். அதனைக் குறிப்பதுதான் காலதர்  என்பது. ( கால் – காற்று ; அதர் -வழி; காற்று வரும் வழி). அறிவியல் சார்ந்த கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகக் காலதரைக் குறிப்பிடலாம்.

முரட்டுத்துணியால் அமைக்கப்பட்ட கூடாரம், படமாடம் என்றும் திரையால் அமைக்கப்பெற்ற மண்டபம், மண்டப எழினி என்றும் சொல்லப்பட்டமையால் கட்டட அழகிற்குத் துணியையும் இக்காலம்போல் அன்றே பயன்படுத்தி உள்ளனர் எனலாம்.

குற்றமற்ற சிறப்பை உடைய மாளிகை பற்றி ஆசிரியர் இளங்கோ அடிகள்,
‘சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்

முடியர சொடுங்கும் கடிமனை‘ (சிலப்பதிகாரம்14:146-7) எனக் கூறி உள்ளார்

இதற்கு விளக்கம் தரும்பொழுது அருஞ்சொல் உரைகாரர் ஓடு கொண்டு வேயப்படாமல் பொன்னால் வேயப்பட்ட மனை என்று விளக்கம் தருகிறார். ஆசிரியர் சாத்தனாரும் காஞ்சி நகரில் கூடுதற்குரிய பொது அம்பலமும் பொன்னால் வேயப்பட் டிருந்ததாகச்
சாலையுங் கூடமும் தமனியப் பொதியிலும்‘ (மணிமேகலை :  28: 66)
என்னும் அடியில் தெரிவிக்கிறார். எனவே, சுடாத மண், சுட்டமண், ஓடு என்பனவற்றைக் கொண்டுமட்டும் அல்லாமல் பொன்னையும் கொண்டு கூரைகள் வேயப்பட்டிருந்தமை செல்வச் செழிப்புடன் கட்டடக்கலைச் சிறப்பிற்கும் சான்றாகும்.


மன்றம், அம்பலம், பொதுவில், அரண், மதில் எனப் பலவாக அமைந்தனவும் கட்டடச் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும். இவற்றைப் பிறிதொரு சமயம் பார்ப்போம். இதுவரை பார்த்த கட்டடச் சிறப்பிற்கு முத்தாய்ப்பாக நெடுநல்வாடை கூறும் கட்டட அமைப்பை அடுத்துப் பார்க்கலாம். அதற்கு முன்னர், கற்பனைக்காக அல்லது உயர்வு நவிற்சிக்காகக் கட்டடங்கள் பெரிய அளவில் இருந்தமையாகக் கூறியதாகக் கருத வாய்ப்பில்லை என்பதை நாம் தெளிய வேண்டும். ஏனெனில், சிறிய வீட்டினை அவ்வாறே குறிப்பிட்டுள்ளனர். (மனை என்பதை மனையில் நடத்தும் இல்லறத்தைக் குறிக்கவும் பயன்படுத்தினர். குடும்ப ஒளிவிளக்காகத் திகழும் தலைவனை (அல்லது குடும்ப விளக்காகிய தலைவியன் கணவனை)ப் புலவர் ஐயூர் முடவனார்
மனைக்கு விளக்கு ஆகிய வாள்நுதல் கணவன்
 (புறநானூறு  : 314.1)
என்று குறிப்பிடுகிறார்.) உள்ளது உள்ளவாறுதான் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர் என்பதற்குச் சில சான்றுகள் பார்க்கலாம்.

இலைவேய்ந்த குடிசைகள், குற்றில்கள், சிற்றில்கள், மண்சுவர்க்கூரை வீடுகள், பச்சைச் செங்கல் சுவர்க் கூரை வீடுகள், சுட்ட செங்கல் சுவர்க்கூரை வீடுகள், எனப் பலவகையான உறையுள் (குடியிருக்கும் வீடுகள்) பற்றிக் குறிப்பிட்டு உள்ளனர்.
புலவர் முதுகண்ணன் கூவை இலைகளால் வேயப்பட்ட நான்கு கால்களை உடைய பந்தல் போல விளங்கும் சிறு குடிசையைக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறுமனை (புறநானூறு : 29.19-20)
எனக் குறிப்பிட்டுள்ளார். சிறிய குடிலைப்
பண்ணன்சிறுகுடி (புறநானூறு 15:13) என்கிறார் புலவர் கோவூர்க்கிழார்.
பெரிய கோலங்கள் மூலம் அழகு சேர்த்துள்ள சிறிய வீடுகளைப் புலவர் மதுரை மருதனிளநாகனார்
அகல்வரிச் சிறுமனை (நற்றிணை : 283.3) என்பதன் மூலம்
உணர்த்துகிறார்.
எலிகள் மடிந்து கிடக்கும் பழைய வீட்டைப் புலவர் பெருங்குன்றூர்க் கிழார்
இல்எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்
 (புறநானூறு 211.19) எனக்
குறிப்பிட்டுள்ளார். இதைப்போன்ற பாழடைந்த வீடுகளை உள்ளவாறே பாழடைந்த நிலையில் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இயல்பான மனைகள் பற்றியும் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் (முல்லைமாலை நகர் புகல : அகநானூறு: 324.15), புலவர் ஓதலாந்தையார்: மனைகெழுபெண்டிர் : குறுந்தொகை: 382.5), புலவர் மருதனிளநாகனார்  (மணமனை : கலித்தொகை : 68.18; 70.10), மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (இம்மனை அன்று; அஃது உம்மனை : அகநானூறு 56.14), எழூஉப்பன்றி நாகன் குமரனார் (முருகுமனை: அகநானூறு: 138.10), புறத்திணை நன்நாகனார் (மனை என்னாம்: புறநானூறு : 384.13), புலவர்கோமான் நெடுங்கோட்டனார் (கடிமனை : நற்றிணை 40.1), ஆசிரியர் புலவர் முடத்தாமக்கண்ணியார் (பொருநராற்றுப்படை : 185, 223) ஆசிரியர்புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனாரின் பெரும்பாணாற்றுப்படை (256,299) ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார் (மதுரைக்காஞ்சி : 268,423,423) ஆசிரியர் புலவர் மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் (நெடுநல்வாடை : 45) ஆகியோர்  குறித்துள்ளனர்.

பொதுவாக எவ்வகை அடைமொழியும் இன்றி, இல்லம் என்றும், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (பசிப்பிணி மருத்துவன் இல்லம் : புறநானூறு :173), புலவர் கயமனார் (பெருஞ்சோற்று இல்லத்து : அகநானூறு : 275.9), புலவர் நல்லந்துவனார் (கலம்சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்ற : கலித்தொகை : 142.64), புலவர் ஒக்கூர் மாசாத்தியார் (மெல்லிய அரிவை இல் : அகநானூறு: 384.7) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, சிறிய வீடுகளைச் சிறிய வீடுகளாகவே குறிப்பிட்டுள்ளதால், உள்ளது உள்ளபடி பன்மாடக் கட்டடங்களை அவ்வாறுதான் குறிப்பிட்டள்ளனரே தவிர, மிகையாகவோ புனைந்துரையாகவோ கூறவில்லை.

மேலும், குடி, நகர், மாளிகை என்னும் தமிழ்ச் சொற்கள் இந்திய நிலப்பரப்பு முழுமையும் சமசுகிருதம் முதலான பிற மொழிகளில் அவ்வாறே பயன்படுத்தப்பட்டு வருவதை நோக்குமிடத்து இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுமையும் அன்று பரவி இருந்த தமிழர்கள் எல்லா இடங்களிலும் சிறப்பான கட்டடங்களை எழுப்பி வசித்து வந்துள்ளனர் என உணரலாம்.

சனி, 14 ஜூன், 2025

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -10 – அன்றே சொன்னார்கள் 48 – இலக்குவனார் திருவள்ளுவன்



(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 9 தொடர்ச்சி)


கட்டடங்கள், அகலமாகவும் உயரமாகவும் நன்முறையிலும் வளத்தை வெளிப்படுத்தும் வகையிலும் நாகரிகச் சிறப்பிற்கு எடுத்துக்  காட்டாகவும் பாதுகாப்பு ஏந்து(வசதி)களுடனும் அமைக்கப் பட்டன என முன்னரே கண்டோம். வீடுகள் மிகவும் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தன இவை பற்றிய புலவர்கள்  சிலர் கருத்துகளைப் பார்ப்போம். புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ, கடிமனை                 (கலித்தொகை : 24.9)  என்றும் புலவர் மதுரை மருதனிளநாகனார், கடிமனை மாடத்து (அகநானூறு: 255.18) என்றும் பாதுகாப்பு அமைந்த மாளிகைகளைக்  குறிப்பிடுகின்றனர்.

பெரிய காவலுள்ள வலிமையான வீடுகளையும் வீடுகளைச் சுற்றி அமைந்த புலால் மணம் மிக்க அம்புகள் ஏந்திய வீரர்களின் காவல் கட்டுகளையும் குறிப்பிட்டு இன்றைய வல்லம் என்னும் ஊர்க் காட்சியைப் புலவர் கருந்தும்பியார்,
பெரும்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
புலாஅ அம்பின் போர்அருங் கடிமிளை
வலாஅ ரோனே
(புறநானூறு : 181. 4 -6) எனக் குறிப்பிட்டுள்ளார். (குறும்பு-அரண்; கடிமிளை-காவல்காடு; வலாஅரோனே – வல்லார் என்னும் ஊரைச் சேர்ந்தவனே)
ஓவியத்தில் தீட்டப்படும் அழகை விட மிகுந்த அழகுடன்  உள்ள  உயரிய மண்ணால்  எழுப்பப் பெற்ற மதிலால் சூழப்பட்ட பாதுகாப்பான நீண்ட பெரிய வீட்டைப் புலவர் கபிலர்,
நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின்,
ஓவு உறழ் நெடுஞ் சுவர் (பதிற்றுப்பத்து : 68.16-17) என்கிறார்.
அகலமான பரப்பிலும் பல மாடிகளுடன் உயரமாகவும் வளமைக்கு எடுத்துக்காட்டாகவும் நகரத்தைப் போல் சிறப்பாக அமைந்த மாளிகைகளை நகர் என்றே பழந்தமிழர்கள் குறித்துள்ளனர் என்பதை நாம் கண்டோம். நகர் என்பது நகரத்தைக் குறிக்கும் இடங்களும் உண்டு. ஆசிரியர் புலவர் மாங்குடி மருதனார் வானம்போல் பரந்த செல்வம் மிகுந்த வளமையான நகரத்தை
வானத் தன்ன வளநகர் (மதுரைக்காஞ்சி : 741)  என்கிறார்.
புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், நிலா முற்றங்கள் உடைய  நீண்ட மதில்கள் சூழ்ந்த மாளிகைகள் வரிசையாய் நிறைந்த ஊரை
அரமிய வியலகத்து இயம்பும்
நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே (அகநானூறு : 124.15-16)
என்கிறார்.

மிகுந்த செல்வம் நிலையாகப் பெற்றிருக்கும் சிறப்பு மிக்க நகரான உப்பங்கழிப் பக்கங்களை உடைய மருங்கூர்ப்பட்டினத்தைப் புலவர் நக்கீரர்
விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து (அகநானூறு: 227.19-20)
என்கிறார்.
புலவர் கோவூர்கிழார், தைமாதத்தில் பொய்கை குளிர்ந்திருப்பதைப் போலவும் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவையுமுடைய அகன்ற நகரத்தைத்
தைஇத் திங்கள் தண் கயம் போல கொளக்
கொளக் குறைபடாக் கூழுடை வியனகர் (புறநானூறு : 70.7) என்கிறார்.
செல்வச்சிறப்பு மிக்க மாளிகைகள் நிறைந்தமையாலேயே இப்பட்டினம் திருநகர் என குறிக்கப்பெற்றுள்ளது. எனவே, நகரங்கள் சிறப்பார்ந்த கட்டடங்கள் மிகுந்து இருந்தன  என்பதை இவை நமக்கு உணர்த்துகின்றன.
அரணும் மதிலும் சிறப்பும் மிகுந்த அரண்மனையையும் நகர் என்றே குறித்துள்ளனர். சான்றுக்குச் சில பார்ப்போம்.

புதிதாய்த் தோன்றிய பிறைநிலா போன்று வெண்மையான சுதையால் செய்யப்பெற்ற மாடத்தையும் குளத்திலுள்ள பனிநீர் போன்று குளிர்ச்சியையும் உடைய அரண்மனையைப்
புலவர் ஊன்பொதி பசுங்குடையார்
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் (புறநானூறு : 378.7) என்கிறார். (சுதை-
சுண்ணாம்பு; பனிக்கயம் – குளிர்ந்த நீர்நிலை)
புலவர் உறையூர் ஏணிச்சேரி  முடமோசியார், முரசு பொருந்திய செல்வத்தினையுடைய அரசர் கோயிலாகிய அரண்மனையை
முரைசு கெழு செல்வர் நகர் (புறநானூறு : 127.10) என்கிறார்.
புலவர் ஆலந்தூர்க்கிழார், நீண்ட மதிலுடன் பாதுகாப்புடன் விளங்கும் அரண்மனையை,
நெடுமதில் வரைப்பின் கடுமனை (புறநானூறு : 36.10) என்கிறார்.
ஆசிரியர் மாங்குடி மருதனார், எல்லாக் காலத்திலும் அனைத்துப் பயன்பாட்டிற்கும் உரிய வளமான அரண்மனையை,
பயனற வறியா வளங்கெழு திருநகர் (மதுரைக்காஞ்சி : 216) என்கிறார்.
தம் முன்னோர்கள்போல் இமயமலையில் வில் கொடியைப் பொறித்த சேரலாதனின் மாந்தை என்னும் நகரில் உள்ள இலக்கணப்படிக் கட்டப்பெற்ற முற்றம் உடைய அரண்மனையைப் புலவர் மாமூலனார்
நல் நகர் மாந்தை முற்றத்து (அகநானூறு : 127.6) எனக் குறிப்பிடுகிறார்.

அரண்மனையை நகர் எனக் குறிப்பது போல் கோயிலையும் நகர் என்றே குறித்துள்ளனர்.
புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ தெய்வம் உள்ள கோயிலையும் நகர் என
அணங்குடை நகரின் (அகநானூறு :99.9) என்னும் தொடரில்
குறிப்பிடுகிறார்.

இதுபோல் முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய  செல்வரது  கோயிலை வலம் வருவதைக் குறிக்கும் வகையில் புலவர் காரிகிழார்
முனிவர்
முக்கட் செல்வம் நகர் வலம் செயற்கு (புறநானூறு : 6.18)
என்று சொல்லும் பொழுது கோயிலைக் குறிக்க நகர் என்னும் சொல்லைப் பயன்படுத்தி உள்ளார்.
புலவர் மருதன் இளநாகனார் கடவுள் குடிகொண்டுள்ள பாதுகாப்பான கோயில் என்னும் பொருளில்
கடவுள் கடி நகர் (கலித்தொகை 84.6) என்கிறார்.
ஆசிரியர் நல்லந்துவனார் கடம்பமர் செல்வனாகிய திருமுருகனின் திருக்கோயிலைக்
கடம்பமர் செல்வன் கடிநகர் (பரிபாடல் 8.126) என்கிறார்.

எனவே, சிறப்பான நகரங்களைப் போலவும் பெரிய அரண்மனைகளைப் போலவும் கோயில்களைப்போலவும், வீடுகளை உயர்ந்தோங்கிய மாளிகைகளாகக் கட்டி உள்ளனர் என்பது கட்டடவியலில் நம் முன்னோர் தலைசிறந்து விளங்கியமைக்குச் சான்றாகும்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 12 ஜூன், 2025

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 8 : அன்றே சொன்னார்கள் 46 – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 தொடர்ச்சி)

அகலமாகவும் உயரமாகவும் செல்வச் செழிப்பைக் காட்டும் வகையிலும் வீடுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருந்தன எனப் பார்த்தோம். இவ்வாறு, கட்டடவியல் இலக்கணத்திற்கேற்ப நன்கு கட்டப்பட்ட வீடுகளை நன்மனை என்றனர். புலவர் ஓரம்போகியார்(ஐங்குறுநூறு: 292.4; 294.4) புலவர் பரணர்(நற்றிணை : 280.9), புலவர் கண்ணகனார்(நற்றிணை 79.2), புலவர் மதுரை மருதனிளநாகனார்(நற்றிணை : 392.7; அகநானூறு 193.11) ஆகியோர் நன்மனை (நல்மனை) என்று குறிப்பிடுகின்றனர்.
வேண்டியவர்க்கு வேண்டியவாறு வழங்கும் வகையில் உணவுப் பொருள்கள் நிறைந்த பெரிய நல்ல வீடுகளாய் அமைந்துள்ளன என்பதைப் புலவர் நக்கீரர்
கூழ்உடை நன்மனை (நற்றிணை : 367.5) என்பதன் மூலம் தெரிவிக்கிறார்.
புறத்திணை நன் நாகனார்    புதுமைவளம் நிறைந்த பெரிய வளமனையை
யாணர் நன்மனை (புறநானூறு :  376.6) என்று குறிப்பிட்டுள்ளார்.

புலவர் ஒருவர் நற்றிணையில் (132.5) நன்னகர் என்று நல்லமுறையில் அமைக்கப்பட்ட மாளிகையைக் குறிப்பிடுகிறார்.
புலவர் நக்கீரர்  உறந்தை நகரைப்போன்று செல்வம் மிக்க நல்ல மாளிகையை
உறந்தை அன்ன
நிதியுடை நல் நகர் (அகநானூறு: 369.15) என்கிறார்.

அழகிய தோற்றம் அளிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட நல்ல இல்லம் பற்றிப் புலவர் கல்லாடனார்
வினைபுனை நல்லில் (புறநானூறு : 23.10) எனக் குறிப்பிடுகிறார்.

இப்பொழுது நாகரிகச் சிறப்பு மிக்க மாடி வீடுகள் உள்ளமை போல் அப்பொழுதே வீடுகள் போதிய திறந்த வெளி, தோட்டம், மாடிப்பூங்கா ஆகியவற்றுடன் நன்கு அமைக்கப்பட்டிருந்தன. முன்றில், படப்பை, மனை, என மூன்றையும் ஒரே பாடலில் (நற்றிணை 44) புலவர் பெருங்கௌசிகனார் குறிப்பிடுவதன் மூலம் முற்றம், தோட்டம் முதலியன அமைந்த பெரிய வீடுகள் இருந்தமையை அறியலாம். ஆசிரியர் புலவர் இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார் பொலிவும் செல்வமும் நிறைந்து விளங்கும் மாளிகையின் முற்றத்தைப்
பொலிந்து திருநகர் முற்றம் ( மலைபடுகடாம் : 548) என்கிறார்.

வீட்டிற்கு முன்புறம் பெரிதான முற்றம் இருக்கும் வகையிலேயே வீடுகளை அமைத்துள்ளனர். இனிய பெரிய மாளிகையின் அகன்ற முற்றத்தைப் புலவர் குண்டுகட் பாலியாதனார்
இன்நகர் அகன்கடைத்தலை (புறநானூறு : 387.17) என்கிறார். புலவர
நம்பி குட்டுவனார் பாடலிலும்  (நற்றிணை : 236.8-10) முன்றில் பற்றிய குறிப்பு உள்ளது.
புலவர் மாமூலனார், வெண்மையான மணல் நிரப்பப்பட்டு உயர்ந்த பொலிவு மிகுந்த வாயிலை உடைய நெடிதுயர்ந்த மாளிகையை
வெண் மணல் நிவந்த பொலங் கடை நெடு நகர் (அகநானூறு: 325.2)
என்கிறார். வீடுகளின் முன்னர் வெண்மணலைப் பரப்பும் வகையில் வீட்டு முன்பகுதி அகலமானதாகவும் பேரளவினதாகவும் இருந்துள்ளது இப்பாடல் மூலமும் தெரிய வருகிறது..
வழிவழியே வந்த தொன்மைச் சிறப்பு மிக்க மாளிகையைத் தொல்நகர் என அழைத்துள்ளனர்.
தொல் நகர் என ஆசிரியர் காப்பியாற்றுக் காப்பியனார் (பதிற்றுப்பத்து: 31.28), புலவர் பரணர் ஆகியோர்  (பதிற்றுப்பத்து : 47.8) குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பெற்ற சங்க இலக்கியக் காலத்திற்கு முன்பே சிறப்பான மாளிகைகளை நம் முன்னோர் அமைத்து இருந்தனர் எனலாம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

புதன், 11 ஜூன், 2025

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 7 அன்றே சொன்னார்கள் 45 – இலக்குவனார் திருவள்ளுவன்




    (கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 6 தொடர்ச்சி)

    பழந்தமிழ்நாட்டில், பெரிய அகன்ற மாடிகள் பலவற்றை உடைய நகரத்தைப் போன்ற சிறப்பான மாளிகைகள் கட்டப்பட்டிருந்தன என்பதைப் பார்த்தோம். அவை வெறும் கட்டடங்களாக மட்டும் அல்லாமல் செல்வச் செழிப்பிற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கியமையால் வளமனை என்றும் திருமனை என்றும் செல்வமனை என்றும் சிறப்பாகச் சொல்லப்பட்டன.
    பண்பார்ந்த பழங்குடிகள் நிறைந்த அகன்ற இடத்தை உடைய தொன்மையான ஊரில் உள்ள செழுமையான வீடு குறித்துக் கல்லாடனார்
    பண்பின் முதுகுடி
    நனந்தலை மூதூர் . . …..
    செழுநகர் (புறநானூறு : 319.9-17) என்கிறார்.
    செழிப்பான மாளிகையைச் செழு நகர் என்று புலவர் பாலைக் கௌதமனார் (பதிற்றுப்பத்து:21/12) கூறுகிறார். தோற்றத்தாலும் சிறப்பாலும் சிறந்து விளங்குகின்ற மாளிகையைப் புலவர் பெருங்குன்றூர் கிழார் (குறுந்தொகை : 338.7) விளங்கு நகர் என்கிறார்.


    செல்வச் செழிப்பைக் காட்டும் வண்ணம் அமைக்கப்பட்ட வீடுகள் திருமனை (கிளிமங்கலங் கிழார் : குறுந்தொகை : 181.6) என அழைக்கப்பட்டன.
    புலவர் கருவூர்க் கண்ணம்புல்லனார் செல்வம் மிகுந்த அழகிய மாளிகையைத்
    திரு நகர் வரைப்பகம் (அகநானூறு : 63.2) என்கிறார்.

    புலவர் மாமூலனார், மணல் பரப்பப்பட்ட பொலிவு மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க மாளிகையைத்
    தரு மணல் ஞெமிரிய திரு நகர் (அகநானூறு : 187.9) என்கிறார்.
    புலவர் ஒருவர் செல்வம் மிகுந்த பழமையான வீட்டை
    மூதூர்த் திருநகர் (அகநானூறு : 114.13) என்கிறார். இவரே வீடுகளின்
    மதில்கள், அவை மீது ஏற்றப்படும் கொடிகள் வானைத் தொடும் அளவிற்கு உயரமாக இருக்கும் என்பதை
    நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை (அகநானூறு 114.9) என்னும்
    வரியில் விளக்குகிறார்.
    மற்றொரு புலவர், தொழில் நலம் பொருந்திய செல்வம் மிகுந்த மாளிகையை,
    ஏர் வினை
    வளம் கெழு திரு நகர் (அகநானூறு : 117.3-4) என்கிறார்.

    நலமும் வளமும் பொருந்திய அழகான மாளிகையைப் புலவர் தயங்கண்ணியார்
    வளம் கெழு திருநகர் (புறநானூறு : 250.6) என்கிறார்.

    இனிமையாய்த் தூங்குவதற்குரிய செழிப்பான வளமனையைப் புலவர் உலோச்சனார்
    இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின் (புறநானூறு : 377.3) என்கிறார்.
    புறத்திணை நன் நாகனார் செல்வம் மிகுந்த சிறப்பான மாளிகையைத்
    திருஉடைத் திருமனை (புறநானூறு : 379.16) என்று குறிப்பிட்டுள்ளார்.

    செல்வ வளத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்டமையால் வளமனைகள் என்றும் அழைக்கப்பெற்றன. வளமனை என்பதற்கேற்ப வீடுகளில் செல்வவளத்திற்குரிய பொருள்கள் நிறைந்து காணப்பட்டு நாகரிகச் சிறப்பிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கின.
    சிறப்பான பெரிய வளமனையைப் புலவர் வெறிபாடிய காமக்கண்ணியார் (அகநானூறு: 22.9),புலவர் கருவூர்க் கண்ணம்பாளனார் (அகநானூறு: 263.12) ஆகியோர் வள நகர் என்றே கூறுகின்றனர்.
    பல வசதிகளும் உடைய வீட்டை வளமனை எனப் புலவர்கள் கயமனார் (அகநானூறு 275.4),மதுரைக் கண்ணத்தனார் (நற்றிணை 351.1), பரணர் (புறநானூறு 354.6; மதுரைக்காஞ்சி 603; குறிஞ்சிப்பாட்டு 223), ஓரம்போகியார் (ஐங்குறுநூறு : 66.4) ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
    பெரிய நகரத்தைப் போன்று தோற்றத்தாலும் அமைப்பாலும் உள்ளடக்கங்களாலும் சிறப்பாகவும் செழிப்பாகவும் உள்ள மாளிகைகளைச் செழுநகர் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

    புலவர் நக்கீரர்
    பெரும்பெயர்க்
    காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
    செழு நகர் (அகநானூறு : 205.11-13) என்கிறார்.

    தழை செறிந்த புன்னைகளை உடைய செழிப்பான மாடமாளிகையைப் புலவர் கல்லாடனார்
    துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின் (புறநானூறு :391.17) என்கிறார்.
    எனவே, இன்றைக்கு உள்ளவாறான செல்வ வளத்தை உணர்த்தும் வகையில் வீடுகள் சிறப்பாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப்பட்டுள்ளன என்பது தமிழர்களின் கட்டடக்கலைச்சிறப்பை உணர்த்துகின்றது அல்லவா?

    – இலக்குவனார் திருவள்ளுவன்

    ஞாயிறு, 8 ஜூன், 2025

    கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2: அன்றே சொன்னார்கள் 42 – இலக்குவனார் திருவள்ளுவன்