கோவையிலுள்ள தனியார் அறக்கட்டளை தொடர்ந்த ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.சுவாமிநாதன், “பகவத்து கிதையை வெறும் மதநூலாகப் பார்க்கக்கூடாது. அஃது ஒரு தார்மீக அறிவியல் நூல்; தூய தத்துவங்களை உள்ளடக்கிய பகவத்து கீதை, இந்த மண்ணின் தாக்கத்தோடு பின்னிப் பிணைந்தது. அதனைக் குறிப்பிட்ட ஒரு மத வரையறைக்குள் சுருக்கிவிட முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.

   அஃதாவது இந்துக்களின் புனித நூல் என்று அடையாளப்படுத்தப்படும் பகத்து கீதை இந்துக்களுக்கமட்டுமல்ல அஃது அனைவருக்கும்  பொதுவான நூல் என்கிற பொருளில் மேற்கண்ட கருத்தினைச் சொல்லியிருக்கிறார் நீதிபதி சுவாமிநாதன்

. பகவத்து கீதையை மையப்படுத்தி அவர் கூறியுள்ள இந்தக் கருத்துகள் தமிழறிஞர்கள் மத்தியில் பேசுபொருளானதுடன் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தின் மூத்த தமிழறிஞரும் வல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதியவருமான இலக்குவனார் திருவள்ளுவன், ‘பகவத்து கீதை மதநூலே அல்ல’ என்று விவாதித்து வருகிறார்.

   இது குறித்து அவரிடம் நாம் பேசியபோது,

“மதம் என்றால் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். மதம் என்பதன் ஆங்கிலச் சொல் ரிலீசியன்(religion). இந்தச் சொல் relegare என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதன் பொருள் இணை, பிணை என்பனவாகும். அந்த வகையில்  மதம் என்பது ஒருவரை ஒருவர் இணைக்க வேண்டும்; மக்களைப் பிணைக்க வேண்டும். அதனால் இந்த இலக்கணத்திற்கிணங்க பகவத்துகீதை இருக்கிறதா எனப் பார்ப்போம்.

   மதநூல் என்பது மக்களை இணைக்க வேண்டும். அவர்களிடையே பிணைப்பை உருவாக்க வேண்டும். ஒருவரை உயர்த்தி ஒருவரைத் தாழ்த்தி இருக்கக் கூடாது. யாரையும் இழித்தும் பழித்தும் கற்பித்தல் கூடாது. அப்படி இருந்தால்தான் அது மதநூல். அந்த அடிப்படையில் பகதவ்துகீதையை ஆராய்ந்தால், ‘பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவப் பிறப்புறுப்பிலிருந்து(யோனியிலிருந்து) பிறந்தவர்கள்” என்று அத்தியாயம் 9, சுலோகம் 32 இல் கீதை கூறுகிறது. பெண்களையும் பிராமணர் அல்லாதவரையும்  இழிவாகக் கூறுகிற கீதை அனைத்து மக்களையும் எப்படி  இணைக்க முடியும்? அதனால் கீதை எங்ஙனம் மத நூலாக இருக்க முடியும்?

“எப்போது அதருமம் சூழ்கிறதோ, அப்போது பெண்கள் கெட்டுப் போகிறார்கள். பெண்கள் கெட்டுப் போகும் போது , வருணக் குழப்பம் உண்டாகிறது.” (1.41) என்கிறது பகவத்து கீதை ஆண்கள் கெட்டுப் போகலாம். ஆனால், அப்போது அதருமம் சூழாதாம். ஆனால், பெண்கள் கெட்டுப்போனால் மட்டுமே அதருமம் சூழ்கிறதாம். இப்படிக் கூறும் பகவத்து கீதை எப்படி மதநூலாகும்?

    மேலும், பெண்கள் கெட்டுப் போகும்போது வருணக் குழப்பம் உண்டாகிறது என்கிறது கீதை. அப்படியென்றால் என்ன பொருள்?

   பெண்கள் பிற வருணத்தாருடன் சாதியினருடன்) உறவு கொள்வதால் வருணக் குழப்பம் உருவாகிறது என்பதே இதன் பொருள்.. அஃதாவது கலப்புத் திருமணத்திற்கு எதிராகக் கற்பிக்கப்படுகிறது. இதற்காகவே வருணவகைகளை வலியுறுத்துகிறது கீதை  இப்படிப் பெண்களை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே வேற்றுமைகளை விதைக்கும் பகவத்து கீதையை எப்படி மத நூலாக ஏற்க முடியும்?

நான்கு வருணத்தைக் கூறி மக்களிடையே உயர்வு தாழ்வை வலியுறுத்துவதே பகவத்து கீதையின் அடிப்படை. கீதையின் விளக்க நூல்களைப் பார்த்தாலே இது நன்றாகப் புரியும். மக்களிடையே வேறுபாடுகளை உண்டாக்கி அதற்கேற்ப குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்குச் சாதகமாக எழுதப்பட்ட நூல் எங்ஙனம் மதநூலாகும்?

இன்னும் சொல்லப்போனால், ஒரு மதநூலானது மக்களிடையே ஆணவத்தை, அகம்பாவத்தைக் கற்பித்தல் கூடாது. அடக்கத்தை உணர்த்த வேண்டும்; அன்பை வலியுறுத்த வேண்டும். ஆனால், பகவத்து கீதை அப்படியில்லை.  தானே எல்லாம் என்பதாகக் கிருட்டிணன் கூறுவது கீதையில் உள்ளது. குறிப்பாக “நான் சடங்கு, நான் வேள்வி, நான் முன்னோர்களுக்கான உணவு, நான் மருந்து, நான் மந்திரம், நான் நிச்சயமாக நெய், நான் நெருப்பு, நான் அவி(பலி உணவு), நானே நான்” என்று கீதையில் கூறுகிறான் கிருட்டிணன்.

    தெய்வப்புலவர் திருவள்ளுவர், நான்(உடம்பு),எனது(பொருள், உடைமை, சொத்து) என்று கருதும் ஆணவத்தையும் அகங்காரத்தையும் முற்றிலுமாக அழித்தொழிப்பவனே இறைவனை அடைந்து உயர்ந்த உலகை அடைவான்(குறள் 346) என்று கூறுகிறார். இததகைய தமிழ்நெறியே தமிழ் இலக்கியங்களில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், நானே எல்லாம்எனக் கூறுகிற கீதை எங்ஙனம் மதநூலாகும்?

    உலக மாந்தரின் நல்வாழ்விற்காக எந்நாளும் ஏற்றவழி கூற வேண்டிய கீதை, சில குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட வகுப்பினரின் பழக்க வழக்கங்களை ஏற்றிப் பேசுகிறது. ஒரு வகுப்பாரைப் போற்றியும்  ஒரு வகுப்பாரைத் தாழ்த்தியும் பேசுகிறது கீதை. பிற மத மக்களை நேசிக்கக் கற்றுத் தராவிடடாலும பரவாயில்லை. ஆனால், சொந்த மக்களையே நேசிக்கக் கற்றுத் தரவில்லையே! அவ்வாறிருக்க  இந்து மத நூல் என்று கீதையை எப்படிக் கூற முடியும்?

மதநூல் என்பதையும் கடந்து அது பொதுவான நூல்  என்றும் சிலர் பரப்பி வருகின்றனர். மதம் என்கின்ற ஒன்று இருக்கிறதா? என்பது ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. மதம் இருப்பதாக வைத்துக் கொண்டால் மதத்தின் இலக்கணத்தின்படி இல்லாத பகவத்து கீதை மத நூல் அல்ல; அனைவருக்கும் பொதுவான நூலும் அல்ல” என்கிறார் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன்.