(சனாதனம் – பொய்யும் மெய்யும் 62 -. தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 63-64
நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திருக் கர கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே’
- என்பது தேவாரம் (1262). வழக்கம்போல் தமிழ் நெறியை ஆரியமாகத் திரித்துக் கூறும் உத்திதான் இது. ஆரியத்தில் அனைவரும் பணி செய்வது குறித்துக் கூறவில்லை. நான்காம் வருணத்தவர்தான் பிறருக்குப் பணி செய்யப் பிறந்தவர்கள் எனக் கூறுவதுதான் சனாதனம். அவ்வாறிருக்க “என் கடன் பணிசெய்தல்” எப்படிச் சனாதனம் ஆகும்?
இவர்களின் பணிக்குச்(!) சான்றாக ஒரு நிகழ்வைக் காண்போம். கருநாடக மாநிலம் சாம்ராசுநகர் மாவட்டம் சுலவாடி ஊரில் மாரம்மா கோயில் உள்ளது. சாளூர் மடத்தின் பெரிய மடாதிபதி குருசாமி. இதன் இளைய மடாதிபதி மகாதேவசாமி. இருவருக்கும் அதிகார மோதல் இருந்து வந்துள்ளது. மாரம்மா கோயில் பொறுபப்பாளர்களுள் ஒருவரான மாதேசு என்பவரின் மனைவி அம்பிகாவுக்கும் பல பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இளைய மடாதிபதிக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. கோயில் அதிகாரத்தைக் கைப்பற்றி காதலி அம்பிகாவிடம் கொடுக்க இளைய மடாதிபதி திட்டமிட்டார். அத்துடன் பெரிய மடாதிபதியையும் அவமானப்படுத்த வேண்டும் என்றும் காய் நக்த்தினார். இளைய மடாதிபதியின் தலைமையில் சதித்திட்டம் தீட்டினர். 2018இல் கோயில் கோபுரத் திறப்பு விழாவின்பொழுது அம்பிகாவும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து நிகழ்ச்சிக்கு வரும் பத்தர்களுக்கான உணவில் 15 குப்பி நஞ்சினைக் கலந்து விட்டனர். இதனால் 15 பேர் உடனடியாக இறந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்புற்றனர். கோயில் பொறுப்பிலிருந்தாலும் இறையச்சம் இன்றி இறையன்பர்களைக் கொல்வதும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதும்தான் சனாதனம். (இச்செய்தி 20.12.2018 விகடனில் வந்துள்ளது.)
இத்தகைய கொடுஞ்செயல்களைப் பணிகளாகக் கொண்டவர்கள் இறைப்பணிகள் செய்வதாக ஏமாற்றித்தான் வந்துள்ளனர்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்…
என்னும் திருவாசகப் பாடலைக் (சிவபுராணம்: 26 – 32) குறிப்பிட்டுத்தான் இங்ஙனம் மக்களிடையே வேறுபாட்டைக் கற்பிக்கும் ஆரியத்தை எளிதில் மறக்கடிக்கும் வண்ணம் இப்பொய்யுரை புகல்கிறார்.
சூத்திரன் பிராமணன் உணவைத் தொட்டாலும், பார்த்தாலும் உணவு அசுத்தமாகி விடும்(மனு 3.251). இவ்வாறு சூத்திரர்கள் என்று சொல்லி மக்களில் பெரும்பான்மையரை இழிவாகக் கருதுவதுதான் சமமாகக் கருதுவதா?
பிராமணரே உயர்ந்தவர், பிரமாணரே தொழத்தக்கவர், பிராமணரே தெய்வம் என்று சொல்லும் சனாதனம் எங்ஙனம் அனைத்துயிரும் ஒன்றே என மதிக்கும் தமிழ் நெறியாகும். இறைத்தொண்டர் யாராயினும் தொழத்தக்கவராகக் கருதும் தமிழ் நெறி எங்ஙனம் ஒரு சாராரை உயர்த்தி அவரைத் தெய்வமாகக் கூறும் சனாதனத்திற்கு ஒப்பாகும்? இதனைத் தமிழ்ச்சனாதம் என்பது கெடுபுத்தி யுடையோர் கருத்தன்றி வேறென்ன?
கிருட்டிணனின் வாக்கு, “செல்வம் படைத்தவனாகவும், உயர் குலத்துதித்தவனாகவும் நான் இருக்கிறேன். எனக்குச் சம்மானவன் வேறொருவன் எவன் இருக்கிறான்? நான் வேள்வி செய்வேன். நான் தானம் செய்வேன். நான் களிப்பேன். (கீதை 16:15)” என்பதாகும். இங்கே வெளிப்படையாகச் சமமின்மையைத் தெரிவிக்கையில் எங்ஙனம் துணிந்து புளுகுகிறான் சேக்கிழான்?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 90-92
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக