(தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று – தொடர்ச்சி)

பசிபிக்கு தவிப்பு

துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தால் இடர்நிலையில் இருக்கும் மற்ற தீவுகள்பற்றித் தோழர் கதிரவன் கேட்டிருந்தார். பலருக்கும் அதே கேள்வி உண்டு. ஒரு வகையில் பார்த்தால் இந்தப் புவிக் கோளமே காலநிலை மாற்றத்தால் இடர்நிலையில்தான் உள்ளது. முன்னால் யார், பின்னால் யார் என்பதில்தான் வேறுபாடு. மேலும் கடலுக்குள் மூழ்கிப் போவது மட்டும்தான் கேடு என்பதில்லை. வேறு பல கேடுகளும் நம்மைச் சூழ்ந்துள்ளன. கடலுக்குள் மூழ்கிப் போவது என்ற கடைக்கோடி இடர்நிலையில் துவாலுவைப் போலவே பசிபிக் தீவுகள் பலவும் அழிவின் விளிம்பில் உள்ளன.


பசிபிக்கு தீவுகள் 25 ஆயிரத்துக்கு மேல் உள்ளன. புவிப்பரப்பில் சற்றொப்ப 15 விழுக்காடு. மக்கள் தொகை ஒப்பளவில் குறைவுதான். 2.3 பேராயிரம், அஃதாவது 23 நூறாயிரம், கால் கோடிக்கும் கீழே. இதில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சார்ந்த தீவுகளில் மட்டும் 17 நூறாயிரம் மக்கள் வாழ்கிறார்கள்.


பசிபிக்கு தீவுகள் பல்வகைப்பட்ட சூழலியல் அமைப்புகள் கொண்டவை. பவழப் பாறைகளும் அந்தப் பாறைகளின் இடுக்குகளில் இழைந்து கிடக்கும் மீன்களும், பளிங்கு போல் தெளிந்த நீல நிற நீர்ப்பரப்பும்! கடலடித் தரையில் புல் மேயும் ஆமைகள்! பின்னிக் கிடக்கும் அலையாற்றி (மாங்குரோவு) வேர்களில் மறைந்து வாழும் சின்னஞ்சிறு மீன்களும் நண்டுகளும்! கடலோர வெள்ளி மணற்பரப்பில் காற்றசைப்புக்குத் தலையாட்டும் நெடியர்ந்த தென்னை வரிசைகள்! வான்பரப்பில் பறந்து திரியும் வெப்பமண்டலப் பறவைக் கூட்டம்! வெள்ளுடைத் தேவதைகளாகச் சிறகடிக்கும் கடற்பறவைகள்!


மெலனேசியா, பொலினேசியா, மைக்குரொனேசியா என்று பண்பாட்டு வகையில் மூவேறு குழுக்களாகப் பிரித்தறியப்படும் பசிபிக்கு தீவுகள் காலநிலை மாற்ற இடர்நிலையில் இப்போது ஒரே குழுவாக முன்னுக்கு நிற்கின்றன. இந்தத் தீவுகளில் வதியும் மக்கள் சற்றொப்ப 3,500 ஆண்டுகளுக்கு மேலாகக் கடல்சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து வருவது வரலாற்றில் அறியப்பட்டுள்ளது. இந்தத் தீவுகள் அனைத்தும் தமிழ் மரபுப்படி சொல்வதானால் பெரும்பாலும் நெய்தல் திணைக்குரியவை எனலாம்.
இம்மக்களின் உணவு, உடை, உறைவிடம் மட்டுமல்ல, கலைகளும் கதைகளும் கூடக் கடல்சார்ந்தவையே. கடல் சாடும் வீரக்கதைகள் இவர்களது பாரம்பரியத்தின் பதிவுகள். அவர்களது அளப்பரிய கடலறிவு இப்போது காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பெருமளவில் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.


பசிபிக்கு தீவுகளில் வாழும் மக்களுக்குக் காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிக்கும் காரணிகளில் குறிப்பிடத்தக்க எந்தப் பங்கும் இல்லை. ஆனால் அதன் தீய விளைவுகளுக்கு முகங்கொடுக்கும் முன்வரிசையில் நிற்பது அவர்கள்தாம். கடல்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 5,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது உயர்ந்து கொண்டிருக்கிறது. நிரலளவு (சராசரி) பசிபிக்கு கடல்மட்டம் இந்த நூற்றாண்டில் அரைவாசி முடிவதற்குள் 25 முதல் 58 கீழ் நூறன் பேரடி(centimetre) உயரும் என்று அஞ்சப்படுகிறது. கடல் மட்டத்திலோ அதற்குச் சற்று மேலேயோ இருக்கும் தீவுகளுக்கு இது பெருங்கேடாய் முடியும். துவாலு போன்ற சில நாடுகள் உலக நிலவரையிலிருந்தே காணாமற்போகலாம்.


புவிவெப்பம் தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த அளவுக்கு மேல் 2 பாகை செல்சியசு உயர்ந்தால் என்னாகும்? இப்போது போகிற போக்கைப் பார்த்தால் இந்த உயர்வு ஏற்படத்தான் செய்யும் எனத் தோன்றுகிறது. அப்படி நேர்ந்தால் பசிபிக்கு தீவுகளையொட்டிப் படர்ந்து கிடக்கும் பவழப்பாறைகளில் 90 விழுக்காடு கடுமையாகத் தாக்குறும். இந்த உயிர்ச்சூழலை நத்தியிருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் அழியக் கூடிய நிலை ஏற்படும்.


பசிபிக்கு தீவுக் கூட்டங்களின் வாழ்வு நிலையற்றதாகும் எதிர்காலத்தைக் கணிப்பாய்வு செய்யும் முயற்சியில் அறிவியலர் ஈடுபட்டுள்ளனர். மனோவாவில் இருக்கும் அவாய்(Hawaii) பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்களாக இருக்கும் ஔனானி கேன், சார்லசு பிளெட்சர் ஆகியோர் புதைபடிவத் தரவுகள், வரலாற்று ஒளிப்படங்கள், அலைகளின் ஏற்றவற்றம் பற்றிய புதுமக் கால நோக்காய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தீவுக்கூட்டங்கள் நிலைத்தன்மை இழந்து வாழத் தகுதியற்றவையாகும் தருணத்தைக் கணித்துள்ளனர்.


காலநிலை மாற்றத்தை மையமாகக் கொண்ட பற்பல சூழல்களின் அடிப்படையில், ஆய்வுக்கெடுத்துக் கொண்ட தீவுக் கூட்டங்கள் 21ஆம் நூற்றாண்டிலேயே ஆபத்துக்குள்ளாகும் என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளார்கள். கடல்மட்ட உயர்வுவீதம் மும்மடங்காகும் நிலையில், அடுத்த சில பத்தாண்டுகளில் நிலத்தடி நீர்வளம் ஒரேயடியாகப் பறிபோகும். இந்த நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இந்தத் தீவுகள் வாழவொண்ணாத நிலையை அடைந்து விடும்.


இன்னுங்கூட எதிர்மறையான பார்வையில் காலநிலை மாற்றத்தால் கடல்மட்டம் ஒரு பேரடி(metre) உயருமானால் அடுத்த 20-40 ஆண்டுக் காலத்தில் இந்தத் தீவுகள் நிலைத்தன்மை இழந்து விடும், அஃதாவது இயல்பான மனித வாழ்வுக்குப் பொருந்தாமற்போகும். 2060ஆம் ஆண்டுக்குள் சகிக்கவொண்ணாத நிலைகளுக்குப் போய் விடும் என்று எச்சரிக்கின்றார்கள்.


உலக அளவிலான பசுங்குடில் வாயு உமிழ்வுகளில் பசிபிக்கு பெருங்கடலில் இரைந்து கிடக்கும் இந்தச் சின்னஞ்சிறு தீவுகளின் பங்கு என்ன தெரியுமா? 0.03 விழுக்காடுதான்! பத்தாயிரத்தில் மூன்று பங்கு மட்டுமே! ஆனால் அவற்றின் தீய விளைவுகளுக்கு முகங்கொடுக்கும் முன்வரிசையில் நிற்பன அவையும், அவற்றின் மக்களுமே. பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பதா? குற்றவாளிகள் பகட்டுடன் திரிய அப்பாவிகள் சிலுவை சுமப்பதா?
இவர்கள் எதையும் தெரியாமல் செய்யவில்லை, தெரிந்தேதான் செய்கிறார்கள்! மானிடத்தீர், மன்னிக்காதீர்!
[“பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே” (உலூக்கா 23:34)]
எல்லாமே கைமீறிப் போய் விட்டனவா? இல்லை, இப்போதும் இந்த பசிபிக்கு தீவுகளைக் காக்க முடியும் என்று அறிவியலர்கள் நம்பிக்கை ஊட்டுகின்றார்கள். அரசுகளும் மக்களும் கூடி முயன்றால் அழிவின் விளிம்பிலிருந்து பசிபிக்கு தீவுகள், ஏன், உலகமே மீள முடியும்!


பசிபிக்கு நாடுகளில் ஆகப் பெரியதாகிய ஆத்திரேலியாவின் தலைமையமைச்சர் அல்பேன்சு காலநிலைசார் நெருக்கடிநிலை அறிவித்துள்ளார். பசிபிக்கு தீவு நாடுகள் இதை வரவேற்றுள்ளன. ஆனால், இது மட்டும் போதாது! இன்னும் செய்ய வேண்டிய பலவும் உள்ளன. குறிப்பாக நிலக்கரி, கல்லெண்ணெய்(பெற்றோல்), எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டைப் பையப் பையக் குறைக்க வேண்டும். ஆத்திரேலியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தும் செய்ய வேண்டும். தாமாகச் செய்ய மாட்டா என்றால் செய்ய வைக்க வேண்டும். இது தொடர்பான மாநாடுகள், உரையாடல்கள் உலகு தழுவிய அளவில் நடந்து கொண்டிருக்கும் நேரம் இது.
அரசுகள் இருக்கட்டும், விடுதலைக்காகவும், புரட்சிக்காகவும், அடிப்படைக் குமுக மாற்றத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் பாடாற்றும் இயக்கங்கள் என்ன செய்ய வேண்டும்?

தரவு: தியாகுவின் தாழி மடல் 11