“மதுக்கடைகளை நிலையாக மூடுக”
மக்கள் முழக்கமாகட்டும் !
மகளிர் ஆயம் வேண்டுகோள்!
மகுடை(கொரோனா) ஊரடங்கால், தமிழ்நாட்டில் அரசுசாராயக் கடைகள் கடந்த மார்ச்சு மாதம் 27-இலிருந்து ஒரு மாதமாக மூடிக்கிடக்கின்றன. அன்றாடம் குடித்துப் பழகிப் போனவர்கள் 90 விழுக்காட்டினர் ஒரு மாதமாகக் குடிக்க வழியில்லாமல், குடிக்காமல் இருந்து பழகிவிட்டார்கள். குடிகாரர்களில் பத்து விழுக்காட்டினர் மட்டுமே தவறான வழிகளில் சாராயத்திற்கு மாற்றாக வேறு தயாரிப்புகளைக் குடித்திருப்பார்கள்.
அரசுக் கடைகள் திறந்திருந்த போது, பள்ளி, கல்லூரி மாணவர்களும் குடித்துச் சீரழிந்தார்கள். அவர்களும் இப்போது 1 மாதமாகக் குடிக்கவில்லை.
எனவே இது தக்க தருணம், முழு மது விலக்கைச் செயல்படுத்தத் தமிழ்நாட்டில் சாராயக் கடைகளை நிலையாக மூடிவிடுமாறு தமிழ்நாடு அரசைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் பிரிவான மகளிர் ஆயம் கேட்டுக் கொள்கிறது.
மற்ற மாநிலங்களில், மற்ற நாடுகளில் மதுக்கடைகள் திறந்திருக்கின்றனவே என்று ஆட்சியாளர்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம். நம் தமிழ்நாட்டிற்கு சாராயக் கடைகள் திறந்திருப்பது பேரழிவாய் ஆகிவிட்டதை நடைமுறையில் பார்த்து விட்டோம்!
தமிழ்நாடு அரசு தனது வருமானத்திற்காக சாராய வணிகம் செய்வதைக் கைவிட்டு அதை ஈடுகட்டும் வகையில் தமிழ்நாடு முழுவதற்குமான பால் கொள்முதல் பால் விற்பனை போன்றவற்றைத் தமிழ்நாடு அரசே மேற்கொண்டால் அதன் வழியாக ஆண்டுக்கு நாற்பதாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்ட முடியும். இப்போது தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் தமிழ்நாட்டின் மொத்த விற்பனையில் 20 விழுக்காடு மட்டுமே விற்கிறது. இதன் வழியாக ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டுகிறது.
அரசுக் கடைகளைநிலையாக மூடும்படித் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைக்கும் வகையில் நாளைக்கு (28.04.2020) ஒவ்வொருவரும் பின்வரும் குறிச் சொற்களை (hashtag) பதிவு செய்து சாராய ஒழிப்பு அறப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு மகளிர் ஆயம் சார்பில் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
# அரசு DontOpenTASMACShops
#மதுஆலைகளைத்திறக்காதே
#DontOpenLiquorDistilleries
ம.இலட்சுமி
மதுக்கடைகளைத்திறக்காதே
#தலைவர், மகளிர் ஆயம்
கைப்பேசி:7373456737
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக