அறமும் தரமும் அற்ற ஆய்வுகள்

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி வாய்ப்பினைப் பெற வேண்டும் என்றால் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (UGC) விதிமுறைகளின்படி ஒருவர் முதுநிலைப் பட்டப் படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேசிய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (NET அல்லது SLET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருந்தால் இத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் இத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தினால் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி.
நவம்பர் 2018 இல் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு, புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழகங்களில் இருந்து முனைவர் பட்டம் பெற்றிருந்தால் அவர்களை நேரடியாக நேர்காணல் நடத்திக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி நியமனம் செய்யலாம்.
அஃதாவது இவர்கள் எந்த நுழைவுத் தேர்விலும் பங்கேற்கத் தேவையில்லை.
2018 உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களில் இந்தியாவில் உள்ள ஐந்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (IIT) மட்டுமே இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனம் எதுவும் அதில் இடம் பெறவில்லை.
கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களின் முதன்மையான பணிகளாக கற்பித்தல் (Teaching), ஆராய்ச்சி (Research) மற்றும் விரிவாக்கப்பணி (Extension Activities) உள்ளன. இவற்றில் கற்பித்தல் பணியே அடிப்படையானது. பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் 2017-18 அறிக்கையின்படி, இந்தியாவில் தற்போது, இளநிலைப் பட்டப் படிப்புகளில் 2 கோடியே 90 இலட்சத்து, 16ஆயிரத்து 349 மாணக்கர்களும் (79.19 விழுக்காடு), முதுநிலைப் பட்டப் படிப்புகளில் 41 இலட்சத்து 14 ஆயிரத்து 310 மாணாக்கர்களும் (11.23 விழுக்காடு) பயின்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் 24 இலட்சத்து 91 ஆயிரத்து 777 மாணாக்கர்களும்(72.42 விழுக்காடு) முதுநிலைப் பட்டப் படிப்புகளில் 4 இலட்சத்து 38 ஆயிரத்து 886 மாணாக்கர்களும் (12.75 விழுக்காடு) பயின்று வருகின்றனர். இந்திய அளவில் 2017-18 கல்வி ஆண்டில் முனைவர் பட்டப் படிப்பில் 1 இலட்சத்து 61 ஆயிரத்து 412 மாணாக்கர்களும் (0.44 விழுக்காடு) இளமுனைவர்(எம்.பில்) படிப்பில் 34 ஆயிரத்து 109 மாணாக்கர்களும் (0.09 விழுக்காடு) சேர்ந்துள்ளனர்.
இதில் தமிழ்நாட்டில் முனைவர் படிப்பில் 29 ஆயிரத்து 778 மாணாக்கர்களும் (0.87விழுக்காடு) இளமுனைவர்(எம்.பில்) படிப்பில் 17 ஆயிரத்து 179 மாணாக்கர்களும் (0.50 விழுக்காடு) ஆவர். இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் மாணாக்கர்கள் ஆய்வுப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
கல்லூரி, பல்கலைக்கழக நிலையில் ஆய்வுப் படிப்புகளைவிட பட்டப் படிப்புகளிலே மாணாக்கர்கள் அதிகம் உள்ள நிலையில், கற்பித்தல் பணியின் தேவையே அதிகமாக உள்ளது. ஆனால் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு ஆசிரியர் பணிக்கான தகுதியாக முனைவர் படிப்பினையே முதன்மைப் படுத்துவது, சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
கற்பித்தல் பணியின் தன்மை வேறு; ஆராய்ச்சிப் பணியின் தன்மை வேறு. இந்த இரண்டில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டது விரிவாக்கப் பணி. ஆய்வு வேட்கை, ஆய்வுச் சிந்தனை, ஆய்வு ஈடுபாடு கொண்ட ஒருவரால் மட்டுமே திறம்பட ஆய்வுப் பணியில் ஈடுபட முடியும். இதே போன்று கற்பித்தல் என்பது ஒரு கலை. கற்பித்தலில் நமக்கென்று ஒரு மரபும் தொடர்ச்சியும் உண்டு.
ஆழ்ந்த அறிவும், ஆர்வமும், எடுத்துரைக்கும் ஆற்றலும் அமையப்பெற்ற அல்லது முறையாகப் பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே இப்பணியைத் திறம்படச் செய்ய முடியும். விரிவாக்கப் பணிகளில் ஈடுபட விரும்பும் ஒருவருக்குச் சமூகச் சிந்தனையும் தொலைநோக்குப் பார்வையும், ஒப்படைப்பு(அர்ப்பணிப்பு) உணர்வும் தேவை. இந்த மூன்றும் வெவ்வேறு தளங்களாகும்.
தற்போதைய நிலையில் கல்விப் பணி நிலையில் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்ற நிலை இருப்பினும் ஆய்வுக் கட்டமைப்பு வசதிகள், ஆய்வுச்சூழல், நிதிநல்கை போன்றவை பல்கலைக்கழகங்களுக்குக் கிடைப்பது போல கல்லூரிகளில் கிடைப்பதில்லை. சில தன் நிதிக் கல்லூரிகளில் அடிப்படை வசதியோ, தகுதியான ஆய்வு நெறியாளர்களோ, இல்லாத நிலையிலும் ஆய்வுப் படிப்புகள் வழங்கும் சூழல் தற்போது உள்ளது.
கல்விப் புலங்களில் நிகழ்த்தப் பெறும் ஆய்வுகள் குறித்துத் தற்போது கடுமையான கருத்தாய்வுகள் உள்ளன. 2017-ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அளவில் 34,400 முனைவர் ஆய்வேடுகளும், 28,059 இளமுனைவர்(எம்.பில்) பட்ட ஆய்வேடுகளும் ஏற்கப்பட்டு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 4,551 முனைவர் ஆய்வேடுகளும் 18,257, இளமுனைவர்(எம்.பில்) ஆய்வேடுகளும் ஏற்கப்பட்டுப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவுகள் – வெளிப்பாடுகள் சமூக வெளிக்கே வராமல் பல்கலைக்கழக நூலகங்களுக்குள்ளே முடங்கிவிட்டன.
ஒரு குறிப்பிட்ட நிறுவனம் குறித்தோ, அரசு, அரசு சாராத் திட்டங்கள் குறித்தோ, சமூகச் செயல்பாடுகள் குறித்தோ, ஆளுமைகள் குறித்தோ மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வுகள், நிறைவில் உரியவர்களின் பார்வைக்குச் சென்று சேராமலே போய் முடங்கிவிடுகிறது என்பது மற்றொரு அவலம். இதில் பல இலட்சம் உரூபாய் நிதிநல்கை பெறப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அடங்கும்.
ஆசிரியர்கள் தங்கள் பணிநிலை உயர்வுக்கான தகுதிப்பாடாகவும், ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வுப் படிப்பின் ஒரு பகுதியாகவும் ஆய்விதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை கட்டாயம் வெளியிட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிதிநல்கைக்குழு கூறிச், சில ஆய்விதழ்களையும் ஏற்றுப் பட்டியல் வெளியிட்டிருந்தது.
அண்மையில் பல்வேறு புகார்களின் அடிப்படையில் அவற்றை மீண்டும் மதிப்பீடு செய்ததில் 4305 ஆய்விதழ்கள் தரமற்றவை – போலியானவை என்று கண்டறிந்து, அவற்றினைப் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
இதன் அடிப்படைச் சிக்கல் எங்கே இருக்கிறது என்றால், கல்லூரி, பல்கலைக்கழகப் பணிக்கு வருகின்ற ஆசிரியர்கள் அனைவரும் ஆய்வாளர்களாக – அதாவது முனைவர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதால், அந்த விதிமுறைகளை நிறைவு செய்யும் நோக்கிலேயே போலி ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. இதனால் ஆராய்ச்சியின் தரமும் பாதிக்கிறது; கற்பித்தல் தரமும் பாதிக்கிறது.
தரமான ஆய்வு மேற்கொள்வதற்குத் தகுதிப்பாடு உடைய ஆய்வக வசதியும், நிதியுதவியும் தேவை. மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கும், தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகின்ற நிதி நல்கையில் 25 விழுக்காடு கூட மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக, இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து ஆய்வு மாணாக்கர்களுக்கும் மாதம் உரூபாய் 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது, அதைத் தற்போது 70 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இந்த நிலை மாநிலப் பல்கலைக்கழகங்களுக்கு இல்லை.
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் உயர்கல்விக்கான நிதியில் பெரும் பகுதியை 46 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் 101 தேசிய அளவிலான உயர்கல்வி கல்வி நிறுவனங்களுக்குமே ஒதுக்கி வருகிறது. 367 மாநிலப் பல்கலைக்கழகங்களுக்குப் போதிய ஆய்வு நிதிநல்கைகள் கிடைப்பதில்லை என்பதும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் தரமான ஆய்வுகள் வெளிவராமல் போவதற்கு ஒரு காரணமாக உள்ளது.
மற்றொன்று, ஆய்வு மேற்கொள்கின்றவர்களின் நோக்கம். ஆய்வு வசதியோ, ஆய்வு மேற்கொள்வதற்கான கட்டமைப்போ, களமோ வாய்க்கப் பெறாத பள்ளி ஆசிரியர்களும், கடுமையான பணி நெருக்கடிகளில் பணிபுரியும் குடிமைப் பணி அதிகாரிகள் முதலான உயர்நிலையில் உள்ள அதிகாரிகளும் சமூகத்தில் புகழ் பெற்ற ஆளுமைகளும் பகுதி நேரமாக ஆய்வு செய்யப் பல்கலைக்கழகங்களில் பதிவு செய்கின்றனர்.
ஆய்வு வேட்கையும், ஆய்வு உந்துதலும் அவர்களுக்கு இருந்து, அவர்கள் ஆய்வில் ஈடுபட்டால் அது வரவேற்கத் தக்கது. மாறாக, ஊக்க ஊதியம் பெறுவதற்காகவோ, சமூக நிலையில் சிறப்புப் பெறும் நோக்கிலோ ஆய்வுப் பட்டம் பெற விரும்பினால், அஃது ஆய்வுத் துறைக்கு பெரும் கேடு விளைவிப்பதாக அமைந்துவிடும்.
உலகத் தரமான பல்கலைக்கழகங்கள் என்று தர வரிசைப் படுத்தப்படுகின்றபோது, அனைத்து நிலைகளிலும் சிறந்தது, கற்பித்தலில் சிறந்தது, ஆராய்ச்சியில் சிறந்தது என வகைப்படுத்தி தரவரிசைப் படுத்தப்படுகிறது.
இதே போல் மாநிலப் பல்கலைக்கழகங்களையும், அதன் வளங்களைக் கருத்தில் கொண்டு ஆராய்ச்சி, கற்பித்தல் என்று வகைப்படுத்தி அவற்றுள் சிறந்து விளங்கும் வகையில் திட்டமிடலாம். அல்லது முன்பு இருந்த நிலை போல, கல்லூரிகள் கற்பித்தல் பணிகளை மட்டும் மேற்கொள்வது, பல்கலைக்கழகங்கள் ஆய்வுப் பணியில் மட்டுமே கவனம் செலுத்துவது என்று வகைப்படுத்தலாம்.
2017-18 பல்கலைக்கழக நிதி நல்கை ஆணையத்தின் அறிக்கையின்படி இந்திய அளவில் 8 இலட்சத்து 88 ஆயிரத்து 427 உதவிப் பேராசியர்கள் (70 விழுக்காடு) உள்ளனர். இவர்களின் முதன்மைப் பணி கற்பித்தல், இதனை அடுத்து 1 இலட்சத்து 39 ஆயிரத்து 443 இணைப் பேராசிரியர்கள் (11 விழுக்காடு) உள்ளனர். இந்த இரண்டு பணி நிலைகள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. பல்கலைக் கழகங்கள்-தேசிய அளவிலான உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே பேராசிரியர் பணி நிலை 1,14,170 (9 விழுக்காடு) உள்ளது.
உலக நிலையில் இந்தியாவின் ஆய்வுப் பங்களிப்பு 4.06 விழுக்காடு மட்டுமே. வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும்போது இது மிகக் குறைவாகும்.
ஆய்வுப் படிப்பினை விரிவுபடுத்துவதைவிட, ஆழப்படுத்த வேண்டும். ஆய்வுப் பட்டதாரிகளை உருவாக்கித் தருவதைவிட இந்த உலகிற்கு புதிய புதிய ஆய்வு வெளிப்பாடுகளை வழங்கும் வகையில் ஆய்வாளர்களை உருவாக்குவதுதான் இப்போதைய நமது தேவை.
கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான கல்வித் தகுதிப்பாட்டிலும் ஆராய்ச்சிப் படிப்பிற்கு மாணாக்கர்களைத் தேர்வு செய்வதிலும் முற்றிலும் மாற்றங்கள் செய்வது தற்போது அவசியமாகிறது!
எழுத்தாளர்பாரதிபாலன்
தினமணி, திசம்பர் 12, 2018