சென்னையில் ஆனி 09, 2049 சனி மாலை 6.00 சூன் 23, 2018 அன்று, ‘தமிழ்ப்பள்ளிகளை மூடாதே!’ என்னும் தலைப்பில் தமிழ்க்காப்புக்கழகம் உரையரங்கம் நிகழ்த்தியது. தமிழ்வழிக் கல்விக்கழகம், தாய்த்தமிழ்க் கல்விப்பணி, தமிழ் அமைப்புகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தமிழ்க்கல்வி இயக்கம், உலகத்தமிழர் பேரவை முதலான பல அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பெற்ற, இக்கூட்டத்தில் திருவள்ளுவர் மழலையர் – தொடக்கப்பள்ளிமழலையர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். வழ.அங்கயற்கண்ணி பாரதிதாசன் பாடல் பாடினார்.
த.தமிழ்த்தென்றல் வரவேற்புரை யாற்றினார். இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை யுரையாற்றினார். முனைவர் க.ப. அறவாணன் தொடக்கவுரையாற்றினார்.
கல்வியாளர் இறை. பொற்கொடி, எழுத்தாளர் மாம்பலம் ஆ.சந்திரசேகர், கல்வியாளர் வெற்றிச்செழியன், தமிழ்நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம் ஆகியோர் உரையாற்றினர்,
தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.
கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர் தீர்மானங்களை வாசித்து உரையாற்றினார்.
அக்கினி சுப்பிரமணியம் நன்றி நவின்றார்.
பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்ப ட்டன.
- தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி நிலைப்பதற்காக அனைத்து வகை நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்.
- எல்லாத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளையும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளாக மாற்றித் தேவைப்படும் உதவிகளைப் புரிய வேண்டும்.
- பள்ளிகளை மூட வில்லை என்று சொல்லிக்கொண்டு ஆங்கில வழிப்பள்ளிகளாக மாற்றும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி இட வேண்டும்.
- பள்ளிகளை நடத்துவதற்குக் கூட்டுறவு அமைப்பு முறையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். ‘கூட்டுறவுக் கல்விநிலையங்கள் சட்டம் 2018’ என ஒன்றை உருவாக்க வேண்டும். இச்சட்டத்தின் அடிப்படையில் தாய்த்தமிழ்ப்பள்ளி பொறுப்பாளர்கள், தமிழ் அமைப்புகள், பெற்றோர்கள், ஆசிரியர்களைக் கொண்டு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்திக் கூட்டுறவுக் கல்வி நிலையங்களை அமைக்க வேண்டும்.
- மூடக்கருதியுள்ள கல்வி நிலையங்களையும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள கல்வி நிலையங்களையும் கூட்டுறவு அமைப்பில் இணைக்க வேண்டும்.
- தமிழ்வழி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்னும் அரசாணை சரியானதன்று. எனவே, வேலைவாய்ப்பில் முதல் 80 முன்னுரிமை தமிழ்வழி படித்தவர்களுக்கே என்னும் புதிய அரசாணையை வெளியிட வேண்டும். பணித்தகுதிக்குரிய கல்விப்பட்டம் தமிழ்வழியில் இல்லை யெனில், தமிழ்வழியாக மேனிலைப் பள்ளியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் இயங்கும் எந்த அலுவலகமாயினும் தமிழ் மொழி அறிந்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்.
வேலைவாய்ப்பு உறுதி மூலம் தமிழ்வழியில் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியும் தமிழ்வழிப்பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் போதிய நிதியுதவிகள் செய்தும் தமிழ்நாட்டில் கல்வி என்றால் தமிழ்வழிக்கல்விதான் என்னும் நிலையை ஏற்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அவை கேட்டுக் கொள்கிறது.
தமிழகப் புலவர் குழு முதலான பிற அமைப்புகள் இத்தீர்மானங்களைஅரசிற்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ளன. பிறரும் அவ்வாறே செய்யவேண்டுகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக