காவல்துறையே
ஏன் இந்தக் கொடூரம்?
எல்லாத்
துறையிலும் நல்லவர்களும் இருப்பர், பொல்லாதவர்களும்
இருப்பர். இதுபோல்தான் காவல்துறையிலும். ஆனால், காவல் துறை, வருவாய்த்துறை, நீதித்துறை ஆகியவற்றில் நேர்மையான மனித
நேயமிக்க அலுவலர்கள் இருத்தலே நாட்டிற்கு நல்லது.
காவல்
துறையினர் ஆர்ப்பாட்டம் அல்லது எழுச்சியை அடக்க வேண்டுமெனில்,
அவர்களே
பொதுமக்கள்போல் மறைமுகமாகத் தூண்டிவிட்டுப் பின்னர் அடக்குமுறையைத் தொடருவர். இஃது
எப்பொழுதிருந்து நடைமுறையில் உள்ளது எனத் தெரியவில்லை. ஆனால், 'தே' முறை
எனச் சொல்லும் வகையில் அவர் காவல்துறையில் உயர் பொறுப்பில் இருக்கும்பொழுதுதான்,
காவல்
ஊர்திகளுக்குச் சேதம் விளைவித்துவிட்டு, அதைக்காரணமாகக்
கூறி ஆர்ப்பாட்டத்தினரைத் தாக்குதல்; காவலர்களுக்குள்ளேயே
சிலரை அவர்களாகச் சிறிய அளவில் தாக்கிக்கொண்டு, காவலர்களின்
உயிர்களுக்குக் கண்டம்-ஆபத்து வந்ததால், ஆர்ப்பாட்டக்காரர்களைக்
கலைக்க தாக்கியதாகக் கூறுவது என்பனபோன்று அமைதியான எழுச்சி அல்லது ஆர்ப்பாட்டம்
அல்லது போராட்டத்தை வன்முறையாககக் காட்டித் தாக்கிக் கலைப்பது காவல்துறையினரின் கை
வந்த கலை.
இப்பொழுது
சல்லிக்கட்டிற்கான அறவழி்ப் போராட்டத்தினர் மீது தாக்குதல் நடத்தியதும்
இப்படித்தான். ஆனால், இப்பொழுது கைப்பேசியில் காட்சிப்படம்
எடுக்கும் வசதி இருப்பதாலும் அவற்றை உடனுக்குடன் வலைத்தளங்கள் வழி உலகில் எளிதில்
பரப்பும் வாய்ப்பு உள்ளதாலும் பொதுமக்களுக்குத் தெரிய வந்துள்ளது. எனவேதான், காவலர்கள் கல்லெறிதல், காவலர் கைகளில் செங்கற்கள், ஊர்திகளைக் காவலர்களே கொளுத்துதல், மிதியூர்தியில் ஏதோ ஒரு பொருளைப்
போடுதல், அமைதியான முறையில் நின்றவர்கள் மீது
நேரடித் தாக்குதல்,
பெண்காவலர்களே
பெண்களை இழி்வாகவும் கொடுமையாகவும்
நடத்தல்
போன்ற காட்சிகளை நாம் பார்க்க முடிந்தது.
இதனைத்
தி.மு.க. தூண்டிவிட்டதாகக்கூறுவதோ, நக்சல்
இயக்கத்தினர் செய்த கலவரம் என்பதோ
பொருந்தாது. அப்படிச்செய்வதாக இருந்தால் தொடக்கத்திலேயே செய்திருப்பர். காவல்துறையினர்
கலைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக்கூறி கொடும் வன்முறையில் ஈடுபட்டதால் விளைந்த
விளைவே இவை.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் தாலின் கூறுவதுபோல் உயர் காலவல்அலுவர்களை
மாற்ற வேண்டும். முறையான உசாவல் மேற்கொண்டு வன்முறையில் காவலர்களை ஈடுபடுத்திய
அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
காட்சிப்படங்களில் தெரியும், வன்முறையில்
ஈடுபடும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட, அவ்வாறு செய்யத் தூண்டியவர்களைத்தண்டிப்பதே முறையாகும். எய்தவன்இருக்க
அம்பை நோவானேன்? எனவே, உயர் அலுவலர்கள் தண்டிக்கப்பட்டால் இது போன்ற காவல்துறையின் கொடூர வன்முறைக்கு
முற்றுப்புள்ளி இட முடியும்.
சிலர்
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அவப்பெயர் உண்டாக்குவதற்காக ஆளுங்கட்சியில் ஒரு
பிரிவினர் இவ்வாறு செய்வதாகக் கூறுவதும் நம்பும்படி இல்லை. அவ்வாறு செய்தால்
அதிமுக அரசிற்குத்தான் தீங்கு. ஆனால், கட்சிக்குள் பேச வேண்டியதை ஊடகங்களில் பேசுவதால் இத்தகைய
புரளி கிளம்புவது இயற்கை. யார் முதல்வர் என்று தீ்மானிப்பது கட்சியினர் பொறுப்பு. இப்போதைய
முதல்வர் பொறுப்பில் இருக்கும்வரை,
அவர்தான்
முதல்வர் என அவரை மதிக்க வேண்டும். அவரை மாற்ற எண்ணுவதை
அவர்களுக்குள் கமுக்கமாகப் பேசிக்கொள்ள வேண்டும். அவருக்கு எதிராக வெளிப்படையாகப்
பேசுவது கட்சிக்குத்தான் தீங்கிழைக்கும்; ஆட்சிபறிபோகும் சூழலும் ஏற்படும்.
18.01.2017 ஆம் நாளிட்ட இளைய விகடனில் (சூனியர்
விகடனில்) (பக்கம் 44-45) ஆளுநர் மிரட்டலால்தான் அதிகாலைத்தாக்குதல்
நடந்ததாகக் குறிக்கப்பெற்றுள்ளது.
பன்னூராயிரக்கணக்கான
இளைஞர்கள், மாணாக்கர்கள் சல்லிக்கட்டிற்குத்
தடையாக உள்ள நரேந்திர(மோடி)க்கு எதிராக முழங்கியதால் மத்திய அரசின் முகவரான ஆளுநர்
இந்தத் தவறான முடிவை எடுத்துள்ளார். இஃது
தமிழக அரசின் அதிகாரத்தில் குறுக்கிடுவதும் மாநிலத் தன்னாட்சிக்கு
எதிரானதுமாகும். இஃது உண்மையெனில் உடனடியாக ஆளுநரை மாற்ற வேண்டும்.
முதல்வர்
பன்னீர்செல்வம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். ஆனால், தில்லியிலிருந்து திரும்பியதும் மாணாக்கர்களையும் இளைஞர்களையும்
அழைத்து விளக்கியிருக்க வேண்டும். அவர்களில் சிலரைச் சட்டமன்றக் கூட்டத்திற்குப்
பார்வையாளராக வரச் செய்திருக்க வேண்டும். அவரைச் சந்தி்த்தவர்கள்
சல்லிக்கட்டிற்கான எழுச்சிப் போராட்ட ஆதரவாளர்களே தவிர, ஈடுபாட்டாளர்கள் அல்லர். தமிழ்நாட்டுச்
சட்ட மன்றத்தில் சல்லிக்கட்டிற்கான தடையை நீக்கும் சட்டம் இயற்றிய பின்னர்
சந்திக்கலாம் என எண்ணியிருந்திருக்கலாம். இதனால் ஏற்பட்டஇடை வெளியே போராட்டம் உடனடியாக நிறுத்தப்படாமல் போகும்
நிலையை ஏற்படுத்தி விட்டது. விரைந்து
நடவடிக்கை எடுத்து உண்மையான கலவரக்காரர்கள், மக்களுக்கும் உடைமைகளுக்கும்
தீங்கிழைத்தவர்களைத் தண்டிக்கவும் உரியவர்களுக்கு உரிய இழப்பீட்டைத் தரவும்
நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்.
இனிமேலாவது
காவலர்கள் மக்களின் காவலர்களாகச் செயல்படட்டும்!
கொலைமேற்கொண்
டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை
செய்தொழுகும் வேந்து. (திருவள்ளுவர்,திருக்குறள் 551)
என்பதைக்
காவல்துறையினர் உணர்ந்து செயல்படுவார்களாக!
- இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக