கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில்  இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார்.
     கம்பன் பிறந்த நாளை நாம் அறிய சான்றுகள் ஏதும் கிடைக்காததால், அவன்  தன் இராமாவதாரக் காப்பியத்தை அரங்கேற்றியதாகத் தனிப்பாடல் ஒன்றின் துணையால் அறிய நேர்ந்த கிபி 886, பெப்பிருவரி 23 பங்குனி அத்த  நாளையே கம்பன் கவிப்பேரரசராகத் தோன்றிய நாளாகக் கொண்டு  அந்நாளிலேயே கம்பன் திருநாளைக் கொண்டாடிவந்தார். கம்பன் அடிப்பொடியார் ஆண்டு தவறாது 44 ஆண்டுகள் தொடர்ந்து தம் வாழ்நாள் வரை (1982) கொண்டாடினார். 1983 முதல் அவர் விரும்பியவண்ணமே அவர்தம் தலைமாணாக்கரான கம்பன்அடிசூடியைச் செயலாளாராகக் கொண்டு அதேமுறையில் தொடர்ந்து 33 ஆண்டுகளாகக் கம்பன் விழா சிறப்புடன் நடைபெற்றுவருகிறது.
  இளந்தலைமுறையினரை இனங்கண்டு நாளைய அறிஞர்களாக உருவாக்கும்வண்ணம், தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரி மாணாக்கர்களுக்கான கம்பராமாயணம், திருக்குறள் ஆகிய இலக்கியங்களில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பெறுகின்றது; இதன்வழி அடுத்ததலைமுறைப் பேச்சாளர்கள் உருவாகிவருகின்றார்கள். ஆண்டுதோறும் திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் தம் பெற்றோர் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுப்பொழிவு நிகழ்த்தப்பெறுகின்றது;. அவை நூலாகவும் வெளியிடப்பெற்றுள்ளன. மருத்துவர் சுதா சேசய்யன் (தாய்தன்னைஅறியாத…), முனைவர் அ. அ. ஞானசுந்தரத்தரசு (கம்பனின் மனவளம்), திருமதி இளம்பிறை மணிமாறன் (கம்பனில் எண்ணமும் வண்ணமும்), முனைவர் பழ. முத்தப்பன் (கம்பனில் நான்மறை),முனைவர் ச. சிவகாமி (கம்பர் காட்டும் உறவும் நட்பும்), முனைவர் தெ. ஞானசுந்தரம் (கம்பர் போற்றிய கவிஞர்), நாஞ்சில்நாடன் (கம்பனின் அம்பறாத் தூணி), திருமதி இளம்பிறை மணிமாறன் (கம்பனில் விண்ணோடும் மண்ணோடும்), திரு, சோம. வள்ளியப்பன் (எத்தனை மேலாண்மை சூட்சுமங்கள் எங்கள் கம்பனிடம்), அரிமழம் பத்மநாபன் (கம்பனில் இசைக்கலை) ஆகியோர் உரையாற்றி, அந்த உரைகள், அந்த  ஆண்டே வெளியிடப் பெற்றுள்ளன.
  மாதந்தோறும் முதற் சனிக்கிழமைகளில் புதியகோணங்களில் கம்பன்காவியம்பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்று, அவை அச்சில் வெளிவர தொகுக்கப் பெற்றுவருகின்றன. முனைவர் சொ.  சேதுபதியின் கம்பன்காக்கும்உலகு, முனைவர் மு.பழனியப்பன் கம்ப வானியல், முனைவர் க. முருகேசனின் தெய்வமும் மகனும்  ஆகிய நூல்களும் வெளியிடப்பெற்றுள்ளன.    சாகித்திய அகாதமியுடன் இணைந்து கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் என்ற பொருளில் இலக்கிய அரங்கம் நடத்தப்பெற்றது. எம்.எசு.சுப்புலட்சுமி, அறிஞர் அ.ச.ஞானசம்பந்தம், பேரா.ந.சுப்புரெட்டியார்  ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களும் இவ்வாண்டு கொண்டாடப்பெற்றன. கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் டி.கே.சி பிள்ளைத்தமிழ், எம்.எசு. பிள்ளைத்தமிழ் ஆகியனவும் இவ்வாண்டில் வெளியிடப்பெற்றன. இவ்வாறு  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் காரைக்குடி கம்பன் கழகம் நினைந்து நினைந்து தமிழ்த்தொண்டுகளைச் செய்து வருகிறது.
     கம்பராமாயண ஆய்வினையும் வளர்க்க வேண்டி, 2013ஆம் ஆண்டில் கம்பன் திருநாள் பவளவிழா  தொடக்கத்தையும்,  2014ஆம் ஆண்டில் பவளவிழா நிறைவையும் ஒட்டி இரு பன்னாட்டுக் கருத்தரங்குகளைக் கம்பன் கழகம், காரைக்குடி நடத்திப் பெருமைபெற்றது. இதன் தொடர்வாக  2016 ஆம் ஆண்டு அந்தமானில் ‘கம்பனில் இயற்கை’ என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கினை அந்தமான் கம்பன் கழகத்துடன் இணைந்து நடத்தியது. இதுவரை 5 கருத்தரங்கத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவ்வாண்டும்(2017) ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்தத் திட்டமிடப்பெற்றுள்ளது.
கருத்தரங்க நாளும், இடமும்,  நிகழ்வுகளும்
     ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான இப்பன்னாட்டுக் கருத்தரங்கம்  பங்குனி 27, 2048 / 2017 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம், 9 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படத் திட்டமிடப்பெற்றுள்ளது. கோட்டையூரில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பர் அவர்களின் பூர்வீக இல்லத்தில் கவிதாயினி வள்ளிமுத்தையா அவர்களின் வரவேற்பில் செட்டிநாட்டு்ப் பாரம்பரியத்துடன் இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கம் நிகழும் நாளன்றே ஆய்வுக்கோவையும் வெளியிடப்பெறும். அன்று முற்பகல் தொடக்கவிழாவும் பல அரங்குகளில் கட்டுரை வாசி்ப்புகளும் நிகழ உள்ளன. மதியம் 3.00 மணியளவில் இக்கருத்தரங்கு முடிந்து(?) காரைக்குடி கம்பன்கழகம் நடத்தும் ஆண்டுவிழாவில் பங்கேற்கவும் வசதி செய்யப்பெற்றுள்ளது. பங்குனி 24-27, 2048 / ஏப்பிரல் 6,7.8, 9  ஆகிய நாட்களில் காரைக்குடி கம்பன் கழகத்தின் ஆண்டுவிழா நிகழ்வுகள் நடத்தப்பெற திட்டமிடப்பெற்றுள்ளது.
கருத்தரங்கக் குழுவினர்
செட்டிநாட்டு இளவல் எம்.ஏ.எம்.ஆர்  முத்தையா, திரு. அரு.வே. மாணிக்கவேலு, திரு.த. இராமலிங்கம்,  திருமதி விசாலாட்சி கண்ணப்பன், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன், முனைவர் சொ. சேதுபதி, முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன், முனைவர் மு.பழனியப்பன்,  முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, முனைவர் மா. சிதம்பரம், திரு. மீ. சுப்பிரமணியம், திருமதி அறிவுச் செல்வி தீபன், சொ. அருணன்
ஆய்வுத்தலைப்புகள்:
  1. செட்டிநாட்டு இலக்கியங்கள்
சிற்றிலக்கியங்கள், தலபுராணங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் பிற
  1. செட்டிநாட்டுத் தமிழறிஞர்களும், செட்டிநாடு போற்றிய தமிழறிஞர்களும்
  பண்டிதமணி, சிந்நயச்(செட்டியார்), வ.சுப.மாணிக்கனார், சோம.லெ., முரு.பழ. இரத்தினம்(செட்டியார்), ச. மெய்யப்பன், சுப.அண்ணாமலை, வெ தெ. மாணிக்கம், தமிழண்ணல், இலெ.ப.கரு.இராமநாதன்(செட்டியார்), கம்பனடிப்பொடி, இராய. சொக்கலிங்கனார், ஏ.கே.(செட்டியார்), சொ. முருகப்பா, சின்ன அண்ணாமலை, சோம. இளவரசு, இரா. சாரங்கபாணி, பா. நமசிவாயம்
  1. செட்டிநாட்டுப் படைப்பாளிகளும், செட்டிநாடு போற்றிய படைப்பாளர்களும்.
  பட்டினத்தார், கம்பர், பாடுவார் முத்தப்பர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்(பிள்ளை), புதுவயல் சண்முக(ஞ் செட்டியார்), தேவகோட்டை சிதம்பர(ஞ் செட்டியார்), பாரதியார், பாரதிதாசன், வ.உ.சிதம்பரனார், சீவா, பனையப்ப(ச் செட்டியார்),  கண்ணதாசன், தமிழ்வாணன், அரு. இராமநாதன், அழ.வள்ளியப்பா, அர. சிங்காரவடிவேலன், சோம. சிவப்பிரகாசம், பெரி. சிவனடியான், பூ.அமிர்தலிங்கனார், முடியரசனார்.
  1. செட்டிநாடு சார்ந்த தமிழ் வளர்க்கும் நிறுவனங்கள்
  கோவிலூர் வேதாந்தமடம், குன்றக்குடி திருமடம்,  பாகனேரி காசி விசுவநாதன்(செட்டியார்) நூலகம் (தனவைசிய சங்கம்),  உரோசா முத்தையா நினைவு நூலகம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, காரைக்குடி சார்ந்த இந்துமதாபிமான சங்கம்,  இராமசாமி தமிழ்க்கல்லூரி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அண்ணா தமிழ்க் கழகம், வள்ளுவர் கழகம்    கம்பன் கழகம், தமிழ்ச்சங்கம்-புதுவயல் சரசவதி சங்கம், குருவிக்கொண்டான்பட்டி கவிமணிமன்றம், பி. அழகாபுரித் தமிழ்மன்றம், குமரன், தனவணிகன், தமிழ்நாடு, தென்றல் போன்ற இதழ்கள்.
  இவை தவிர  கருத்தரங்கத் தலைப்பு சார்ந்த பிற தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கலாம். வாழும் சான்றோரைப் பற்றி எழுதலாம். வாழ்ந்துவருவோர் பற்றி எழுதும்போது அச்சான்றோரின் இசைவையும் வழிகாட்டலையும் பெறுவது நலம்.
 ஆய்வுக் கட்டுரை எழுதுவதற்கான நெறி முறைகள்:
  1. ஆய்வுக் கட்டுரையைத் தனியொருவராகத் தமிழிலோ ஆங்கிலத்திலோ வழங்கலாம்;
  2. ஆய்வுக்கட்டுரைகள் முற்றிலும் பேராளர்களின் சொந்த முயற்சியாக இருத்தல்வேண்டும். ஆய்வாளரே அவரின் கருத்துகளுக்குப் பொறுப்பாவார். கண்டிப்பாகப் பிறர் படைப்புகளைத் தழுவியதாகவோ, மின் இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவோ இருத்தல்கூடாது. பொய்த்தகவல்கள் தரப்படக் கூடாது.  அவ்வாறு இருப்பின் அக்கட்டுரை வெளியிடப்பட மாட்டாது. பதிவுக்கட்டணம் திருப்பியளிக்கப் பெறமாட்டாது. தேர்ந்தெடுக்கப் பெறாத கட்டுரைப் படிதிகள் எக்காரணங்கொண்டும் திருப்பி அனுப்பப்பெறாது. கட்டுரைத்தேர்வு முதலான அனைத்து நடைமுறைகளிலும் கருத்தரங்கக் கூட்டு நடவடிக்கைக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது
  3. ஆய்வுக்கட்டுரைகள் ஏ4 தாளில் இருவரி இடைவெளியுடன், நான்கு பக்கங்களுக்கு மிகாமல் ஒருங்குகுறி(யுனிகோடு) எழுத்துருவில் கணிணி அச்சாக்கி, மின்னஞ்சல் வழி அல்லது குறுவட்டு வடிவில்  அனுப்பவேண்டும்..
  4. கருத்தரங்கு குறித்த அழைப்பு, அவசரச் செய்திகள், குறுஞ்செய்திகளாகக் கைபேசி / மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பெறும். எனவே கட்டாயம் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்கவும்.
  5. கருத்தரங்க ஆய்வாளர்கள் தலைப்புகளைத் தேர்ந்து காரைக்குடி கம்பன் கழக மின்னஞ்சலிலோ, முகநூலிலோ அனுப்பி ஒப்புதல் பெற்றுக்கொள்வது நலம். இதன் காரணமாக ஒரு பொருளையே பலர் எழுதுவது தவிர்க்கப்படும்.

ஆய்வுக் கட்டுரைக்கான கட்டணமும் செலுத்தும் முறையும்
ஆய்வுக்கட்டுரையுடன் உரூ 700 (ரூபாய் எழுநூறு மட்டும்) கட்டணமாகச் செலுத்தப்பெற வேண்டும். வெளிநாட்டுப் ஆய்வாளர்களுக்குக் கட்டணம் அமெரிக்கப்பண(தாலர்) மதிப்பில் $ 60/= கருத்தரங்கிற்கான கட்டணங்கள் காரைக்குடியில் மாற்றத்தக்க (Crossed Bank Demand Draft) குறுக்குக்கோடிட்ட வங்கிவரைவோலையாக ‘KAMBAN ACADEMY’ என்றபெயருக்குப் பதிவஞ்சல், விரைவஞ்சல், தூதஞ்சல்( Registered Post / Speed Post / Courier Mail) மூலமாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

ஆய்வுக்கட்டுரை அனுப்பிட கடைசி நாள்
பதிவுப் படிவமும், ஆய்வுக் கட்டுரையும் கட்டணமும் 28-02-2017 க்குள் காரைக்குடி அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும். காலத் தாழ்ச்சியாக வரும் கட்டுரைகள் ஏற்கப்படா.


தாய்க் கழகமான காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும்
செட்டிநாடும் செந்தமிழும்என்ற பொருளிலான  பன்னாட்டுக் கருத்தரங்கு (2017)
                                 அறிவிப்புமடல்
  1. பெயர்: தமிழில்
ஆங்கிலத்தில் (in CAPITAL Letters):
  1. கல்வித்தகுதி:
  2. தற்போதையபணி:
  3. பணியிட முழு  முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
  1. இல்லமுழுமுகவரி: (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
கைபேசி எண்:     (கட்டாயம் சுட்டப்பெறல் வேண்டும்)
மின்வரி( e-mail id) (கட்டாயம் சுட்டப்பெறல் வேண்டும்.)
  1. கட்டணத்தொகை:
வரைவோலை எடுத்த வங்கியின்பெயர்:              வரைவோலைஎண்:
இடம்:
நாள்:                                                                                                                                     கையொப்பம்
(படிவத்தினைப் படிகள் எடுத்தும் அனுப்பலாம்)
கருத்தரங்கத்திற்கான தொடர்பு முகவரி
கம்பன்அடிசூடி பழ.பழனியப்பன், செயலர், கம்பன் கழகம்
5, வள்ளுவர் சாலை, காரைக்குடி 630002
[ Kamban Adisudi Pala Palaniappan, secretary, Kamban Academy, ‘Sayee’ 1E, Chettinadu Towers, 5, Valluvar Salai, Subramaniyapuram North, Karaikudi 630002, Tamilnadu, India]
மின்னஞ்சல்: kambantamilcentre@gmail.com
வலைப்பூ : kambankazhagamkaraikudi.blogspot.com
முகநூல்: https://www.facebook.com/karaikudi.kambankazhagam
தொலைபேசி : தொடர்பிற்கு
முனைவர் மு.பழனியப்பன் 9442913985 முனைவர் மா. சிதம்பரம், 9486326526