செவ்வாய், 8 மார்ச், 2016

ஈழத்தமிழர் இரவீந்திரன் உயிர்ப்பறிப்பு - சில விளக்கங்கள்.






ஈழத்தமிழர் இரவீந்திரன் உயிர்ப்பறிப்பு
 -  சில விளக்கங்கள்.

இறந்தவர் பெயர்:  இரவீந்திரன் (அகவை 48).
மனைவியின் பெயர் : மஞ்சுளா தேவி. .

அவருக்கு 4 பெண் மக்கள்.2  ஆண்மக்கள்.
கடைசி மகன் குருதிவளிக்காவி(Hemoglobin/haemoglobin) பற்றாக்குறையால் கால் வீங்கி இருந்ததற்கு மருத்துவமனையில் உள்நோயாளியாக மருத்துவம் பார்த்து வருகிறார். 

முகாமில் கணக்கெடுக்க வந்த வருவாய் ஆய்வர் பெயர் இராசேந்திரன்.
அவருடன் கூட வந்தவர் ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வர் துரைப்பாண்டியன்.

இரவீந்திரனிடம் கடுமையாய் நடந்து அவரை தற்கொலைக்குத் தூண்டியவர் துரைப்பாண்டியன்தான்.

துயர நிகழ்வு நடந்தபோது அங்கிருந்த பழனிவேல் என்ற  கியூ பிரிவுக் காவலரும் இராசேந்திரனும் இருசக்கர வாகனத்தைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தற்கொலையைத் தடுக்க முயலவில்லை.
பழ.நெடுமாறன்  நிகழ்விடம் வந்து  மறியல் செய்ததால்தான் மாவட்ட ஆட்சியர் வந்தபின் சரியான முறையில் வழக்கு பதிவானது..

 
மதுரை - உச்சப்பட்டி அகதி முகாமில் தற்கொலை செய்து கொண்ட இரவியின் மரணம் குறித்து  தடயம் (Evidence) அமைப்பு, முகாமிற்கு  உடனடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.  
தம்முடைய 22  ஆவது  அகவையில் அகதியாகத் தமிழகம் வந்து உள்ளார் இரவி. முதல் 14 வருடம்  இராமேசுவரம் - மண்டபம் முகாமிலும் அடுத்து 12 வருடம் உச்சப்பட்டியிலும் இருந்து இருக்கிறார். இவரது இளைய மகன் பெயர் பிரதீபன். அகவை 13. இந்தச் சிறுவனுக்கு இரத்தம் உறையாத நோய் இருக்கிறது. சிறு காயம் அடைந்தாலும் இரத்தம் வந்து கொண்டே இருக்கும். இந்தச் சிறுவனை மதுரை அரசு  இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்து இருக்கிறார் இரவி. 
 மாதந்தோறும் மூன்று தடவை வருவாய் ஆய்வாளர்  இராசேந்திரன் இந்த அகதி முகாமிற்கு  ஆய்வு செய்ய வருவார். அதன் அடிப்படையில் மாசி 23, 2047 / 06.03.16 அன்று  இராசேந்திரன் வந்து இருக்கிறார்.

 இராசேந்திரன் கடந்த ஒரு வருடமாக இங்கு பொறுப்பில் இருந்து வருகிறார். இங்கு உள்ள  முகாம்வாசிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளுவார். அதட்டலாகவும் மிரட்டலாகவும் பேசுவது இவரின் இயல்பு. இந்த முகாமில் 560 குடும்பங்களைச் சேர்ந்த  ஏறத்தாழ 2500 ஈழத்தமிழ் ஏதிலியர் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர்  முதியவர்கள். .நோயாளிகள் சிலர்.  மாற்றுத் திறனாளிகள் சிலர்.   
  இராசேந்திரன் முகாமின் நுழைவு வாயிலில் உட்கார்ந்து கொண்டு எல்லோரையும் அழைத்து வரச் சொல்லுவாராம். முடியாதவர்களை அங்கு உள்ள இளைஞர்கள் தூக்கிச் செல்லுவார்கள். எப்போதும் சிடு சிடு என்றே எங்களிடம்  இராசேந்திரன் நடந்து கொள்ளுவார் என்று இங்கு உள்ள மக்கள் கூறுகின்றனர்.

 வருவாய் அலுவலர்  இராசேந்திரனிடம் சென்று இரவி "என் மகனை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறேன். அவனை அழைத்து வர முடியாது. நீங்கள் வாருங்கள் அழைத்துச் செல்லுகிறேன்" என்று கூற, இராசேந்திரன் "அது எல்லாம் முடியாது. உன் மகன் இங்கு உடனடியாக வர வேண்டும்" என்று கூறி இருக்கிறார். உடனே /இரவி மருத்துவ அறிக்கைகளை எடுத்துச் சென்று  இராசேந்திரனிடம் காட்டி, "ஐயா! என் மகனுக்கு ஆபத்தான நோய். தயவு செய்து கருணை காட்டுங்கள்" என்று காலில் விழுந்து கெஞ்சி இருக்கிறார். "உன் மகன் இறந்தால் எனக்கு என்ன? இருந்தால் எனக்கு என்ன? எனக்குத் தேவை கணக்கு" என்று கொஞ்சம் கூடக் கரிசனை இல்லாமல் பேசி இருக்கிறார்.

 இதில் மனத்தளவில் பாதிக்கப்பட்ட இரவி மின்சாரக்கோபுரத்தில் ஏறி மின் கம்பிகளில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
  இந்தத் துயரநிகழ்வு பிற்பகல் இரண்டு மணி அளவில் நடந்து உள்ளது. இராசேந்திரன் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அவரைப் பணிவிலக்கம் செய்து கைது செய்ய வேண்டும். இரவியின் குடும்பத்தினருக்கு  உரூபாய் 25இலட்சம்  இடருதவித்தொகை வழங்க வேண்டும்.
இந்தக் கொடுமையை எமது கவனத்திற்குக் கொண்டு வந்தவர்கள் வழக்கறிஞர்  இராசேந்திரன். கனி ஓவியா, வெற்றி வேலன், சுவாமிநாதன், சுப்பிரமணியன் ஆகியோர்....
 - தடயம்(எவிடென்சு) கதிர்


  மதுரையில் ஈழத் தமிழர்  சாகடிக்கப்பட்ட செய்தி அறிந்து  என்றி டிபேன் , எவிடென்சு கதிர், ஆகியோர் விரைந்து செயல்பட்டனர். கொளத்தூர் மணி பழ.நெடுமாறன், தொல்.திருமாவளவன் முதலானோர்  நிகழ்விடம் சென்றனர். பல காட்சி ஊடகங்கள் வந்தன. அழுத்தம் காரணமாக மாவட்ட ஆட்சியர்  நிகழ்விடம் வந்து பேச்சு நடத்தினார். 
.தமிழன் ஒருவனைத் தற்கொலைக்குத் தூண்டியவன் சட்டத்தின் பிடியில் சிக்குவானா?
-தமிழ் இராசேந்திரன்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக