நிகழ்வு- அகநி, வந்தவாசி, முருகேசு01 - nigazh_akani_murukesu01 நிகழ்வு- அகநி, வந்தவாசி, முருகேசு02 - nigazh_akani_murukesu02
குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று கதை எழுதுவதே
         ஒரு படைப்பாளிக்கு அறைகூவலான பணியாகும்
 குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில்  கவிஞர் முருகேசு
  வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் அகநி வெளியீட்டகத்தின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் கதை நூல் வெளியீட்டு விழாவில், குழந்தைகளின் மனவுலகத்திற்குள் சென்று கதை எழுதுவதே ஒரு படைப்பாளிக்கு அறைகூவலான பணியாகும் என்று நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு பேசினார்.
   இவ்விழாவிற்கு இராமலிங்கம்& குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். தேசூர் மு.சீவா அனைவரையும் வரவேற்றார். வந்தவாசி கிளை நூலகர் கு.இரா.பழனி, இலயா அறக்கட்டளைச் செயலாளர் யுவராசு, வெ.அரிகிருட்டிணன், குமரேசன், வேலூர் சிரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி இராசவும்’ குழந்தைகள் கதை நூலை வந்தவாசி அரசு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் செ.வெங்கடேசன் வெளியிட, வந்தவாசி சுழற் சங்க முன்னாள் துணை ஆளுநர் எம்.எசு.முத்துராசு பெற்றுக் கொண்டார்.
   விழாவில், ஏற்புரையாற்றிய நூலாசிரியர் கவிஞர் மு.முருகேசு,  “உலக இலக்கியங்களில் காலங்கடந்தும் அழியா புகழ்ப்பெற்று விளங்குபவை குழந்தைகள் குறித்து எழுதப்பட்ட படைப்புகளே. கடந்த 25 ஆண்டுகளாக இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், பத்தாண்டுகாலமாக குழந்தைகளுக்கான கல்விப்பணிகளில் ஈடுபட்டது மிகப் பெரிய பணியறிவைத் தந்தது. குழந்தைகளின் உலகம் பொய்யற்றது. அன்பால் நிறைந்தது. வளர்ந்த நம்மால் மீண்டும் ஒருமுறை சென்றடைய முடியாதது. எந்த எதிர்பார்ப்புமற்ற குழந்தைகளின் மனவுலகைப் புரிந்துகொண்டு எழுதுவதென்பது ஒவ்வொரு படைப்பாளிக்கும் அறைகூவலான ஒரு பணியாகும்.”
 “எனது பணி அன்றாடம் குழந்தைகளோடு இருப்பதான சூழலைத் தந்ததால், நான் எழுதிய படைப்புகளை அவ்வப்போது குழந்தைகள் மத்தியில் படிக்கக் கொடுத்து, திருத்தம் செய்துகொள்ள முடிந்தது. தமிழில் இன்றைக்குக் குழந்தை இலக்கியத்திற்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அனைத்து நாளிதழ்களும் குழந்தைகளுக்கென சிறப்பு வெளியீடுகளை இணைப்பாகத் தருகின்றனர். தினமணி ‘சிறுவர் மணி’ என்றும், தினமலர் ‘சிறுவர் மலர்’ என்றும், தினத்தந்தி ‘தங்க மலர்’ என்றும், தமிழ் இந்து ‘மாயா பசார்’ என்றும் இணைப்புகளை வெளியிடுகின்றன. விகடன் இதழ் ‘சுட்டி விகடன்’ என்றும், கல்கி இதழ் ‘கோகுலம்’ என்றும் குழந்தைகளுக்கான இதழ்களை வெளியிட்டு வருகின்றன. குழந்தைகள் எழுதுவதற்கான வாய்ப்புகளும் தற்சமயம் மிகுந்துள்ளன. இதனை நம் குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ளும் சூழலைப் பெற்றோர்கள் உருவாக்கித் தர வேண்டும்…” என்று பேசினார்.
   விழா   நிறைவில், கீழ்க்கொடுங்காளூர் மு.குமரன் நன்றி கூறினார்