99eazhukanniyar0199eazhukanniyar02

உலகமயமாக்கலினால்

நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள்

  உலகமயமாக்கலின் அதிவேகமான நடைமுறைப்படுத்தலில் பண்டைய மரபுகள், குழுஇனங்காணுதல், அடையாளப்படுதல் ஆகியன மறைந்து போய் ஒரே பண்பாட்டுத்துறை நடைமுறையிலாகிவிடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் நாட்டுப்புறவியல் என்பது மீள் விளக்கம் செய்யப்படவேண்டும் என்னும் கருத்து வேகமாகப் பரவிவருகின்றது. புதிய குடியேற்ற ஆதிக்கத்தின் விளைவைக் குமுகாயத்தில் கண்டறிந்து எதிர்விளையாற்றவேண்டிய காலத்தின் கட்டாயம் நாட்டுப்புறவியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியானது குறிப்பிட்ட அளவு மக்கள் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் பாதித்திருக்கிறது.
  சிற்றூர்கள் அழிந்து நகரங்களாக மாறிவருகின்றன. விளைநிலங்கள், ஏரிகள், கண்மாய்கள், கட்டடங்கள் வன்கவர்தலுக்கு அடிபணிந்து விட்டன. புதுமைஉகத்தின் சுழற்சியில் குமுகாயம் விரைந்து மாற்றத்திற்குள்ளாகி வருகிறது. புதிய வேளாண் கருவிகளான உழுபொறி, (பொக்குலைன்)அகழ்பொறி இயந்திரங்களின் வருகையால், மரபு நிலை வேளாணும் அதைத் தொடர்ந்து, தெம்மாங்கு, ஏற்றப்பாட்டு, முதலான வேளாண் சார்ந்த பாடல்களும் மறைந்து வருகின்றன.சிறு-குறு உழவர்கள் புதிய சூழலுக்கு எதிர்நோக்கி நீச்சலடிக்கமுடியாமல் நிலத்தை விற்றுவருகின்றனர். இதனால் வேலையில்லாத் திண்டாட்டம், பரம்பரையானகுண்டுச்சோடா எனப்படும் காலகநீர், உணவுமுறை, மருத்துவம் என மரபு சார்ந்த அனைத்தும் முடக்கப்பட்டு அத்தொழில்கள் மூடுவிழாவை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன.
  நேரங்காலமின்றி அயல்நாட்டுப் பணத்துக்காக உழைக்கின்ற கணிணிப் பொறியாளர்கள் அடிமைகளாய் உருவாகி வருகின்றனர். மற்ற நாடுகளைவிட நம்நாட்டில் பழங்குடி இனங்கள் பரவலாக இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. பழங்குடிகள் குறித்த இனவரைவியல் ஆய்வுகளில் ஒரு காலத்தில் நாகரிக நிலையில் வாழ்ந்தவர்கள், பல குமுகாயக் காரணங்களால் விரட்டப்பட்டு அங்கு கிடைத்த வசதிகளைக் கொண்டு வாழப்பழகிப் பழங்குடி நிலையைப் பெற்றிருக்கின்ற நிலை எடுத்துக்காட்டப்படுகின்றன. இம்மக்களது வழக்காறுகளில் பெரிதும் சமணம், பௌத்தம் சார்ப்புகளைக் காணமுடிகிறது. இதனால்தான் சட்டமேதை அம்பேத்கர் அனைவரும் பௌத்த மதத்திற்கு மாறிவிடுமாறு அறைகூவல் விடுத்ததை நினைவு கூர வேண்டியுள்ளது.
  உலகமயமாக்கலின் விளைவுவாக அடையாள வேர்களை மறந்து காவல் தெய்வநிலையிலுள்ள சிறு தெய்வ வழிபாட்டில் ஒதுங்கிப்போன வரலாறு தெளிவாகிவருகிறது. சமத்துவமும் ஓரிறைக்கொள்கையும் கொண்ட பிற சமயங்கள் அறிமுகமானபோது தங்கள் இருப்பை நிலைநிறுத்திக் கொண்ட வரலாறுகளும் தொடர்கின்றன.
  இசுலாமிய சமயத்தில் சடங்குமுறை வழிபாடுகளுக்கு முதன்மை இல்லை. ஆனால் இந்தியச்சூழலில் சில சடங்குகள் பல தளங்களில் இம்மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கு வேறு பெயர் வைக்கப்பட்டாலும் அடிப்படையில் தொல் மரபினைச் சார்ந்தே அமைந்துள்ளன. இந்தோனேசியா நாட்டில் பெரும்பான்மையாக முசுலிம்கள் இருந்தாலும் அந்நாட்டில் உள்ள பணத்தில் பிள்ளையார் படம் வைத்திருப்பது இதன் அடிப்படையில் அமைந்ததே. குறிஞ்சி, நெய்தல் நிலங்களில் வாழும் இசுலாமியர்கள் ஆன்மாவைக் குறித்து ஓதப்படுகின்ற பலவற்றில் ஒன்றுதான் பாத்திஃகா.
 கூறாணிப்பாத்திஃகா, பூரணப்பாத்திஃகா, செட்டியார் பாத்திஃகா, ஏழு(சப்த) கன்னிகள் பாத்திஃகா. எனப் பல பாத்திஃகாக்கள் உள்ளன. பாத்திஃகா என்னும் அரபுச் சொல் ‘தொடக்கம்’ எனப் பொருளாகும். அதாவது முசுலிம்களின் புனித குர்ஆனில் திருமறையின் முதல் அத்தியாயம் என்னும் பொருள்தருவதாகும். பொது நிலையில் இறைவனிடம் வேண்டி வழிபாடு செய்வதைக் குறிக்கிறது.
பூரணப்பாத்திஃகா
  தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம், கடலூர், இராமநாதபுரம் மாவட்டங்களில் சில இசுலாமியக் குடும்பங்களில் நடைபெறும் சடங்குகளில் ஒன்று பூரணப்பாத்திஃகா அல்லது பூரியா பாத்திஃகா. பூரணப்பாத்திஃகா ஓதப்படும் இவ்வில்லங்களில் 40 நாட்கள் நோன்பு கடைப்பிடித்து நாள்தோறும் வீடுகளைக் கழுவித் தூய்மையாக வைத்து இருப்பார்கள். பூரணம் என்பது ஒருவகைப் பலகாரம். மைதாவைக் தட்டுப்போல் பரத்தி அதன் நடுவே தேங்காய்த்துருவல், சருக்கரை, பொரிகடலைப்பொடி, அவல் போன்றவற்றைக் கலந்து வைத்து மூடி ஒருப்பகுதியை விரல்களால் அழுத்திப் பெரிய சிப்பி போன்ற வடிவமாக்கி எண்ணெயில் பொறித்து எடுப்பார்கள். குறிப்பிட்ட நாள் உறவினர்களைச் சூரியன் மறைந்த பிறகு அழைத்து வந்து வீட்டின் மேல்பகுதியில் வெள்ளைத்துணி கட்டியும் ஓட்டைகள் மற்றும் கூரைகளில் ஓட்டை இருந்தால் அவற்றையும் மறைத்துவிடுவார்கள். காரணம் வானத்திற்குத் தெரியக்கூடாது என்பதுதான். பலகாரம், பாற்கூழ்(பாயாசம்) முதலியவற்றை உறவினர்களுக்குக் கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கும்போது கீழே சிந்தினால் அவற்றைக் கைகளால் எடுத்து வைப்பார்கள். உறவினர்கள் அதனை உண்டுபிறகு ஒரு பாத்திரத்தில் கைகளைக் கழுவி, அந்த நீரைத் தனிப்பாத்திரத்தில் சேகரித்துக் காலடிபடாத இடத்தில் வீட்டின் நான்கு எல்லையில் ஏதாவது ஓர் இடத்தில் குழிதோண்டி சூரியன் மறைவுக்குப் பின்பு அல்லது சூரியன் உதயத்திற்கு முன்பு ஊற்றிவிடுவார்கள். இதற்கான விளக்கம் கேட்டால் இசுலாமிய மார்க்கமேதை சகுபர் சாதிக்கு இரலி அவர்களுக்காக ஒதப்படுவதாகக் குறிப்பிடுகிறாகள். அவர்கள் வீட்டில் ஆண்குழந்தை பிறந்தால் சகுபர் சாதிக்கு என்ற பெயரை இணைத்து வைத்திருப்பார்கள். சகுபர் சாதிக்கு மௌலான, சகுபர் சாதிக்கு போன்ற பெயர்கள் இருக்கும்.
  இந்நிகழ்வில் பூரணம் எனும் பலகாரத்தின் மூலம் வழிபாட்டில் முக்தி பெற்றுள்ள பூரணநிலை அடைகின்ற பூரணர்களையும் கலந்துள்ளமை நிகழ்ந்துள்ளது. ஆன்மா சலனமற்றுப் பூரண நிலை அடைவதைப் பரிபூரண நிலை என்றும் அவ்வாறான ஆன்மாக்களைப் பரிபூரணம் என்றும் குறிப்பிகிறார்கள். பரிபூரணர் என்பது சமண மக்களின் வழக்கமாகும். இசுலாமியர்கள் 5 வேளை தொழுகின்ற மசீத்தைப் பள்ளி என அழைப்பதும், நைனார் பள்ளிவாசல் என்பதும் சமணருடைய வழக்கமாகும். இவற்றை உற்று நோக்கும்போது பூரணநிலை அமைந்ததனைக் கொண்டாடும் சடங்கு முறையின் மறுவடிவமே பூரணப்பாத்திஃகா என்ற பெயரில் முசுலிம்கள் நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை சார்ந்த சடங்காக இருக்கிறது எனத்தோன்றுகிறது.
7 கன்னிகள் பாத்திஃகா
  இந்தச் சடங்கானது வீட்டில் மங்கலநிகழ்ச்சிகள் நடைபெறும் முதல் நாளன்று குடும்பப் பெண்கள் மட்டும் பங்கு பெறும் நிகழ்வாகும். வீட்டில் உள்ள ஆண் மரபுரிமையரின் மனைவிமார்கள் அதாவது பெண்கள் இருக்கவேண்டும் அவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிதான் 7 கன்னிகள் பாத்திஃகா.. இதில் பங்கு பெற உரிமையுள்ள சுமங்கலிகள் நோன்பிருந்து அக்குழுவின் மூத்த தலைமுறையினரின் வீட்டில் அனைவரும் ஒன்று கூடுகின்றனர். இச்சடங்கில் பங்கு பெறுகின்ற சுமங்கலிகளுக்குக் காதோலை, கருகமணி கொடுக்கப்படுகின்றன. வசதி இருப்பின் அவர்களுக்கு புதிய வண்ணச்சேலையும் அணிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பெண்கள் தலை வகிட்டில் இந்துக்களைப்போல் குங்குமம் வைக்கிறார்கள். இசுலாமியர்கள் தங்கள் தலை வகிட்டில் அல்லது நெற்றியில் குங்குமம் வைக்கும் வழக்கம் இல்லை. ஆனால் இச்சடங்கில் பின்பற்றப்படுவது ஆய்வுக்குரியதாகும். இப்பாத்திஃகா. ஓதுவதற்கு ஒரு கதையும் வைத்துள்ளார்கள். பண்டைய காலத்தில் ஓர் அரசன் குதிரை மேறி வரும்போது அந்த வீட்டில் உள்ள பெண் வீட்டின் மாடியில் குளித்துவிட்டுத் தலையைக் காயவைக்கும்போது அந்த மன்னன் பார்த்ததாகவும் அந்தப்பெண்ணை மணம் முடிக்க தூதுவிட்டதாகவும் அதனால் தங்கள் குடும்பப் பெண் மாற்றுச்சமூகத்தில் திருமணம் ஆகிக் கலப்பினம் உருவாகும் என்ற அச்சத்தில் தங்கள் வீட்டில் உள்ள சோளக்குழியில் குதித்து உயிர்விட்டதாகவும் கூறுகிறார்கள். அந்தப்பெண் சோளக்குழியில் இறந்தவுடன் அந்த மன்னனின் ஆளுகையை விட்டு மாற்று இடம் போய் வாழ்ந்ததாகவும் கூறுகிறார்கள். இவ்வாறு இறந்த பெண்ணைத் தங்கள் குலத்தெய்வமாக வழிபடுகின்றனர். ஏதோ ஒரு காலத்தில் மதம் மாறினாலும் மரபு வழிச்சடங்கினை மறந்துவிடாமல் பின்பற்றி வருகின்றனர்.
மீனவர்கள் வழிபடும் ஏழு கன்னியர் வழிபாடு
  கடலோர மாவட்டங்களில் மீன்பிடிப்பவர்கள் மாசித்திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். இதை மாசிமகம் என அழைக்கிறார்கள். குட்டியாண்டவரின் உடன்பிறந்தாள்களான ஏழு கன்னிகள் அல்லது சப்தகன்னிகள் என்று கருதப்படுகிறார்கள். இந்த கன்னித்தெய்வத்திற்கு மேடை போட்டு பூசை செய்கிறார்கள். இதனைப் பெண்களே செய்கின்றனர். இதில் கலந்து கொள்கிற ஏழு கன்னிப்பெண்களும் தை மாதத் தொடக்கத்திலிருந்து நோன்பு இருப்பர். இந்தப் பெண்களும் பருவமடைந்தது முதல் திருமணம் ஆவதற்கு முன்புவரை பங்கு கொள்ளலாம். இந்த ஏழு கன்னிப்பெண்களில் மூத்த கன்னி ஒருவரைப் பெண்களே தேர்ந்தெடுப்பர். இந்தப்பூசை மாசிமகத்தன்று நடக்கும். அதன்பின்னர் 7 கன்னியரும் கடலுக்குச் சென்று பெரிய கன்னி மட்டும் கட்டுமரத்தில் ஏறிக் கடலில் சுமார் ஒரு புதுக்கல் தொலைவு சென்று ஒரு சட்டியில் சூடம் ஏற்றிக் கடலில் விட்டு வருவர். மற்ற கன்னியர் கரையிலே நிற்பர். இப்படி விடப்பட்ட தீச்சட்டி அணையாமல் கரைந்து வந்து சேருமென்றால், அந்த ஆண்டு செழிப்பாக இருக்கும் என்றும், கரைக்கு வருவதற்குள் தீ அணைந்து விடுமென்றால் தீமை நிகழும் எனவும் நம்புகிறார்கள்.
கூறானிப் பாத்திஃகா
அரபு மொழியில் ‘கூறுல்ஈன்’ அல்லது ‘கூறுலீன்’ என்ற சொல் ‘கண் அழகிகளாகிய கண்ணிகள்’, ‘விண்ணக மகளிர் என்னும் பொருள் தருவதாகும்.
நிதிமனைக்குரிய கூறுல் ஈனனையார்
(முகியித்தீன் புராணம்:20:177)
…………………………..கரிய கூந்தன்
மலக்கமில் கூறுலின்கள் வந்து நின்றேவல் செய்ய
சீறாப்புராணம் 85:11
இச்சொல்லே இசுலாமியர் பேச்சு வழக்கில் கூறானி என வழங்கப்படுகிறது.
  திருமணம் ஆகும் முன்பே பெண் குழந்தைகள் இறந்துவிட்டால் அவர்கள் விண்ணக மகளிர் ஆவார் என்பது இவர்களின் நம்பிக்கை. எனவே கன்னிகள் தொடர்புடைய சடங்கு கூறானிப் பாத்திஃகா என அழைக்கப்படுகிறது.
  குடும்பத்தில் திருமணம், சடங்கு முதலான நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன்நாள் இச்சடங்கு நிகழ்த்தப்படுகிறது. குடும்பத்தலைவி தன்னுடைய உறவினர்களின் ஏழு கன்னிக்குழந்தைகளுக்கு ஒரு கிண்ணம் சிகைக்காய்ப் பொடியும், நல்லெண்ணெயும் கொடுத்தனுப்புகிறாள். அக்கன்னிகள் எண்ணெய் தேய்த்து நீராடி ஆடை அணிகலன் அணிந்து அக்குடும்பத்தலைவின் வீட்டிற்கு வருகின்றனர். வரும் வழியில் வாசலில் வெள்ளைத்துணிகளை விரிப்பாக விரித்து அதில் அவர்களை நடக்கச் செய்து அதன்பின்னர் அவர்களின் கால்களைக் கழுவிவிடுவார்கள். அதன்பின்னர் கன்னிகளை உட்கார வைத்துத் தலைவாழை இலை, முட்டை, சோறு, காய்கறிகள் பரிமாறுவார்கள். அவர்கள் சாப்பிட்ட பின்னர் பாத்திஃகா ஓதப்படும். பாத்திஃகா. ஓதிய பின்னர் கன்னிகள் கையில் காதோலையும் கருகமணியும் கொடுத்தனுப்புகிறார்கள். அவர்கள் சென்ற பின்னர் மற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  உலகமயமாக்கலின் விளைவாகக் குறிப்பிட்ட சாமிகள் மட்டும் சந்தைப்படுத்தப்படுகின்றன. இச்சந்தைப்படுத்தலின் விளைவாக அக்கோவில்களில் வழங்கப்படும் திருவுணாக்கள் (பிரசாதங்கள்) காப்புரிமை வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளன. அத்திருவுணாக்களைப் பெறுவதற்குப் பலமணிநேரம் கால்கடுக்க நின்று வாங்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். அதே வேளையில் பரம்பரையான வேர்களை இழந்து அல்லது அழித்து பெருநிறுவனக்(கார்ப்பரேட்டு)கடவுள்களை வணங்குவதற்குரிய மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
  இப்பாத்திஃகாவின் ஆய்வு முடிவுகள் குமுகாயப் போராட்ட எதிர்வினைபற்றிய செய்தியில் சில உண்மைகள் மறைந்துள்ளன என்பது தெளிவாகிறது. அதே வேளையில் சமயம்(மதம்) மாறினாலும் தங்கள் கலை, பண்பாடு, மரபுகளை மறக்காமல் இன்னும் சில ஊர்களில் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது இப்பழக்கம். தென்னக மக்கள் வரலாற்றில் இருளடைந்த வரலாற்றுச்சுவடுகள் இன்னும் வெளிப்படுத்தபடாமல் இருக்கின்றன என்பதற்கு இதுமாதிரி நிகழ்வுகள் சான்றளிக்கின்றன. இவ்வாறு மறந்துபோன, மறக்கடிப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாறுகள் நாட்டுப்புறவியல் ஆய்வின் வழியாக வெளிப்படும் என்பது உறுதியாகிறது.
99vaikaianeesu-peyar