செவ்வாய், 15 செப்டம்பர், 2015

"இல்லந்தோறும் இணையம்" முதல்வர் அறிவிப்பு




"இல்லந்தோறும் இணையம்" கொள்கை அடிப்படையில் 
குறைந்த செலவில் இணைய இணைப்பு

தமிழகச் சட்டசபையில்  14.09.15 அன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் செயலலிதா 110- ஆவது விதியின் கீழ்  இதற்கான அறிவிப்பை வெளியிட்டுப்பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
 அனைத்து மாநிலங்களிலும் உள்ள  ஊராட்சிகளை ஒளியிழை (ஆப்டிக்கல் பைபர்நெட்) மூலமாக இணைத்து அரசின் சேவைகளை இணையம் மூலமாகப் பொதுமக்கள் பெற்றுப் பயன்பெறும் வகையில் பாரத்நெட்என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
 இத்திட்டம் தமிழகத்தில் தமிழ்நாடு அரசின் மூலமாகத்தான் செயல்படுத்தப்பட வேண்டும் என நான் வலியுறுத்தியதன் அடிப்படையில், மத்திய அரசு இத்திட்டத்தினைத் தமிழகத்தில் தமிழ்நாடு அரசே செயல்படுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.
 இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 12,524  ஊராட்சிகளும் ஒளியிழை (ஆப்டிக்கல் பைபர்நெட்) மூலம் இணைக்கப்பட்டுத் தமிழக அரசின் பல்வேறு சேவைகளைப் பொதுமக்கள், தங்கள்  சிற்றூர்களில் இருந்தே இணையம் மூலமாகப் பெற்றுப் பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
 இத்திட்டத்தினை 3,000 கோடி  உரூபாய் செலவில் மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கெனத் தமிழ்நாடு  ஒளியிழைக் கழகம்என்ற ஒரு தனி அமைப்பு உருவாக்கப்படும்.
 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110- இன் கீழ் 11.8.2014 அன்று தமிழ்நாடு அரசு கம்பிவடக் காட்சி. நிறுவனம் மூலமாக அதிவேக அகண்ட அலைவரிசைச் சேவைகள், பிற இணையத்தளச் சேவைகள் வழங்கப்படும்என வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கம்பிவடக் காட்சி.. நிறுவனம் மத்தியத் தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து தமிழ்நாடு முழுவதும் அகண்ட அலைவரிசைச் சேவைகள்,  பிற இணையத்தளச் சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்கான உரிமத்தினைப் பெற்றுள்ளது.
 மேலும், தமிழ்நாடு அரசு கம்பிவடக் காட்சி.நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசைச் சேவைகள், பிற இணையத்தளச் சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்காக இந்திய ரெயில்டெல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக  ஏறத்தாழ 552 உள்ளூர்  கம்பிவடக்காட்சி இயக்கியர்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இச்சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
 இதன் சேவைத்திறன் மற்றும் செயல்பாடு குறித்து அரசு கம்பிவடக் காட்சி. நிறுவனம் மிகக் கவனமாக ஆய்வு செய்து வருகிறது. பாரத்நெட்மூலம் அனைத்து ஊராட்சிகளும் இணைக்கப்பட உள்ளதால், தமிழ்நாடு அரசு கம்பிவடக் காட்சி. நிறுவனம் ஏற்கெனவே பெற்றுள்ள இணையத்தளச் சேவை (இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர்) வழங்கும் உரிமத்தினைப் பயன்படுத்தி, “இல்லந்தோறும் இணையம்என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிடும்.
மேலும், அதிவேக அகண்ட அலைவரிசைச் சேவைகள், பிற இணையத்தளச் சேவைகள் ஆகியவற்றுடன் சேர்த்து, புதிதாக இணைய வழித் தொலைக்காட்சிச்" சேவைகளும் வழங்கப்படும்.
 பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை நன்குணர்ந்து  மி-சேவை மையங்கள் வழியாக அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மின் மாவட்டச் சேவைகள், பொதுமக்களுக்குத் தேவையான அரசு சார்ந்த பிற சேவைகள் இம்மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.
 இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் 2014- ஆம் ஆண்டு பிப்பிரவரியில் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தேன். தற்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள், புதுவாழ்வு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட  ஊர்ப்புற ஏழ்மை குறைப்புக் குழு, தமிழ்நாடு அரசு கம்பிவடக் காட்சி. நிறுவனம், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆகியவற்றின் மூலமாக அமைக்கப்பட்ட 10,034 மி-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக