100ஆவது ஆண்டை நிறைவு செய்த எம்டன் கப்பல்

 

உலகம் சுற்றிய முதல் கப்பல்

  கடல் பயணங்களில் காலந்தோறும் பயன்படுத்தப்பட்ட கப்பல்களின் வரலாறு குறித்த அதிகமான ஆய்வுகள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை. உலகத்தை முதன்முதலில் சுற்றிய கப்பல் மெகல்லன் தலைமையில் உள்ள குழுதான். வாசுகோடகாமா 1498 ஆம்ஆண்டு இந்தியாவுக்குள் கடல்வழி கண்டறிந்தவுடன் நறுமணப் பொருள்கள் விற்பனையைப் போர்த்துகீசியர்கள் கட்டுப்படுத்தத் தொடங்கினர். கொலம்பசைப்போலவே போர்த்துக்கீசிய சாகசப் பயணி பெர்டினாண்டு மெகல்லனும், கடலில் ஐரோப்பாவுக்கு மேற்கே பயணித்தால் நறுமணப்பொருட்கள் இருக்கும் தீவை அடையலாம் என நம்பினார். அப்பொழுது இசுபானியர்கள் தங்களிடமிருந்த ஐந்து புதிய கப்பல்களைத் தந்து போர்த்துக்கீசியர்கள் பயன்படுத்தாத புதிய வழியைக் கண்டறிந்து தருமாறு கேட்டனர். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க மெகல்லன்,  தான் முதலில் வலம் வந்த கப்பல் குழுவின் தலைவனாக மாறினார்.
  ஐந்து கப்பல் 260 பேருடன் மெகல்லன் பயணம் புறப்பட்டார். அவருடைய முதன்மைக்கப்பல் திரினிடாட்டு. அந்த மரக்கலம் வெறும் 30 பேரடி(மீட்டர்) நீளமே இருந்தது. கடற்கொள்ளையர்கள் மற்றும் எதிரிகளைத் தாக்கும் வண்ணம் இது பீரங்கியுடன் வலம் வந்தது. இப்பயணத்தின் மூலம் பசிபிக் பெருங்கடலைக் கடந்து ஆசியாவுக்கு வரமுடியும் என்பதை முதலில் கண்டறிந்தவர் மெகல்லன். இதனைத்தொடர்ந்து பூமியை முதன் முதலில் சுற்றியவர் என்ற பெருமை கொண்டவர்
தமிழனின் பெருமையை உலகறியச்செய்த எம்டன் கப்பல்
  முதல் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்த நேரம், செருமானிய போர்க் கப்பலான எம்டன் பல வீரதீரச்செயல்களைச் செய்து எதிரிகளை அச்சுறுத்தியது. எம்டன் கப்பலினால் பல கப்பல்கள் கைப்பற்றப்பட்டன; பல கப்பல்கள் அழிக்கப்பட்டன. இதற்குக் காரணம் கப்பல்நாயகன் வான்முல்லரின் திறமை எனக்கூறப்பட்டது. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்டன் கப்பல் இந்தியக் கடற்படை பகுதிக்குள் நுழைந்தது. அப்பொழுது கலங்கரை விளக்குகள் மண்ணெண்ணெயால் பயன்படுத்தப்பட்ட நேரம். அதனால் வெளிச்சத்தை நோக்கி வந்த எம்டன் கப்பல் சென்னை துறைமுகத்தையொட்டி நின்ற அனைத்துக் கப்பல்களுக்கும் தெரியாமல் வந்து குண்டு வீசியது. குண்டுவீசிய வேகத்தில் திரும்பியது. அந்தக் குண்டுவீச்சு சென்னை உயர்நீதிமன்றத்தின் வளாகச் சுவரின் ஒருபகுதியைத் தரைமட்டமாக்கியது. அந்த இடத்தில் ஒரு கல்வெட்டு நினைவுச்சின்னமாக வைக்கப்பட்டது. இந்த ஆண்டில் எம்டன் சென்னையில் குண்டு வீசிய நிகழ்வு 100ஆவது ஆண்டை நிறைவு செய்தது. அக்கப்பலைச் செலுத்தியவர் செண்பகராமன் என்ற தமிழன் என்பது அதன் பின்னர்த் தெரியவந்தது. தற்பொழுது அந்தக்கல்வெட்டு பாதுகாக்கப்படாமல் சாலையோரம் வருவோரையும், போவோரையும் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்தியச் சிற்றூரை உலகிற்கு வெளிப்படுத்திய இரசூலா
   19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இந்தியாவை ஆளத்தொடங்கிய ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், பெருகி வரும் மக்கள் தொகைக்கும் இத்தகைய வணிகமே ஏற்றதாக அமையும் எனக் கருதினர். 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிரித்தானிய இந்திய ஃச்டீம் நேவிகேசன் நிறுவனம் இந்தியத் துறைமுகங்களுக்கு நீராவிக் கப்பல்களைச் செலுத்தியது. இந்நிறுவனம் உலகம் முழுவதும் ஏறத்தாழ 160 கப்பல்களைக் கடலில் இயக்கியது. இதன் மூலம் இந்தியா சீனா, சப்பான், கீழ்த்திசை நாடுகள் போன்ற நாடுகளுடன் வணிகம் புரிய ஏதுவாக அமைந்தது.
  20 ஆம் நூற்றாண்டில் பருமா, மலேசியா போன்ற நாடுகளுக்கு தொய்வத் தோட்ட (ரப்பர்)வேலைகளுக்கும், தேயிலைத் தோட்ட வேலைகளுக்கும் கூலி ஆட்கள் தேவைப்பட்டனர். இதனால் சென்னையிலிருந்து பருமா, மலேசியா நாடுகளுக்குப் பிரித்தானிய இந்திய ஃச்டீம் நேவிகேசன் நிறுவனம் குறைந்த கட்டணத்தில் கப்பல்களை இயக்கியது.
  இருபதாம் நூற்றாண்டில் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்பட்ட நீராவிக்கப்பல் இரசூலா என்று அழைக்கப்பட்டது. இக்கப்பல் 1926 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் கட்டப்பட்டது. இக்கப்பலின் நீளம் 477 அடி, அகலம் 681 அடி, எடை 8478 பாரம்(டன்). இதில் பயணிகளின் பொருளாதார வசதிக்கேற்ப முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, திறந்த வெளி பயணியர் செய்யும் வகுப்பு எனப்பிரிக்கப்பட்டது. இங்கிலாந்தில் கட்டப்பட்டாலும் இந்தியாவில் உள்ள குசராத்தின் சின்னஞ்சிறிய ஊர்தான் இரசூலா ஆகும்.
  1927 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் சென்னையிலிருந்து நாகப்பட்டினம் வழியாகப் பினாங்கு மற்றும் சிங்கப்பூருக்கு மாதத்தில் இரண்டு தடவை இந்தத் தடத்தில் பயணித்தது. இவ்வழித்தடத்தில் 5000 பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச்சென்று வந்தது.
  இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து அரசு தங்களது கடற்படைக்கு உதவியாக இக்கப்பலை வாடகைக்கு அமர்த்திக்கொண்டது. அதன்பின்னர் மீண்டும் 1946 ஆம் ஆண்டு தனது தாயகத்திற்கு மீண்டும் பயணித்தது.
  1947 ஆம் ஆண்டு சென்னை-பினாங்கு, மலேசியாவிற்குப் பயணிகள்- சரக்குக் கப்பலாக மீண்டும் இயங்கத் தொடங்கியது. இவ்வாறு தொடர்ந்து இயங்கி வந்ததால் கப்பல் தன்னுடைய திறனை இழந்தது. அதன் பின்னர் 1962 ஆம் ஆண்டு சப்பானில் பழுதுபார்க்கப்பட்டு இயந்திரத்தின் திறன் கூட்டப்பட்டது.
 3.11.1966 ஆம் ஆண்டு பினாங்கிலிருந்து நாகப்பட்டினத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது கடும் புயல் வீசிக்கொண்டிருந்தது. இதனால் இரசூலா கப்பல் நாகப்பட்டினத்தில் நிற்காமல் சென்னை நோக்கிச் சென்றது. இருப்பினும் சென்னை அருகே உள்ள கோவளம் அருகாமையில் புயல் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் நடுக்கடலில் தத்தளித்தது. அதன் பின்னர் புயல் வேகம் தனிந்த பின்னர் சென்னை துறைமுகத்தை நோக்கிச் சென்றது.
 அதன் பின்னர் 1973 ஆம் ஆண்டு இந்தியக் கப்பல் கழகத்திற்கு இரசூலா விற்கப்பட்டது. இந்தியக் கப்பல் கழகம் இரங்கத்து என்று பெயரிட்டது. 30.8.1974 ஆம் ஆண்டு கல்கத்தாவிலிருந்து மும்பை துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. 1974 ஆம் ஆண்டு மகாராட்டிரா கப்பல் உடைக்கும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு உடைக்கப்பட்டது. 48 வருடம் ஓடி ஓடி தேய்ந்த அக்கப்பல் தன்னுடைய வாழ்வை முடித்துக்கொண்டது. இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டில் கப்பல்துறை வரலாற்றில் எந்தவித நேர்ச்சியையும் சந்திக்காமலும்(விபத்தையும்) தரைதட்டாமலும் சென்றதோடு அல்லாமல் பருமா, மலேசியா, சப்பான், சிங்கப்புர் போன்ற நாடுகளுக்கு அடிமைகளையும், வணிகர்களையும், தொய்வ(இரப்பர்)த் தோட்டத்தொழிலாளர்களையும் ஏற்றிச்சென்ற பெருமையும் உடையது. இந்தியாவிற்குப் பிறநாடுகளோடு வணிகத்தொடர்பு ஏற்படுத்திய இரசூலா, கப்பல் வரலாற்றில் எல்லைக் கல் என்றே கூறலாம். இவ்வாறு தமிழனின் பெருமையை உலகிற்கு அறிமுகப்படுத்திய எம்டன் கப்பலின் 100 ஆவது ஆண்டையும், 48 ஆண்டுகள் இந்தியச் சிற்றூரின் பெயரை உலகம் முழுவதும் சுற்றிவந்த இரசுலாவையும் ஒருநிமிடாவது நினைவு கூர்வோம்.
vaikaianeesu_name