திங்கள், 13 ஜூலை, 2015

குமுக வளர்ச்சி 3 – முனைவர் இராம.கி.


Borewell02

 குமுக வளர்ச்சி 3 

  இந்த வேலிக்கருவையாற்றான் நம்மூர்க் கண்மாய்களுக்கு நீர்வரத்துள்ள கால்கள் அடைபட்டுப் போயின. கண்டதேவிக் கோயிற்குளம் தவிர வேறெந்தக் குளமாவது நம் பக்கத்தில் நிறைந்து பார்த்திருக்கிறீர்களா? சற்று எண்ணிப்பாருங்கள். எப்பொழுது நம் ஊர்க்கண்மாய்கள் நிறையவில்லையோ, அப்புறம் நம்வீட்டுக் கிணறுகளிலும், கேணிகளிலும் நீருற்றுகள் தூர்ந்துதான் போகும். 30-80 அடிவரை இருக்கும் நிலத்தடி நீர்ப்படுகை வற்றிப்போனால் பின் புரைக்கிணறுகளில்(bore-wells) தான் நாம் உயிர்பிழைக்கவேண்டும். அதன் ஆழம் 120 அடிகளிலிருந்து 250 அடிவரை போகும். இப்பொழுதெல்லாம் புரைக்கிணறுகளை 500 அடிகள்வரையும் (சில இடங்களில் 1000 அடிகள்வரையும்) தோண்டுகிறார்கள். ஒவ்வொரு புரைக்கிணற்றுக்கும் ஆகுஞ்செலவு 1.5 இலட்சமாகும். எத்தனை பேரால் இது முடிகிறது? தண்ணீருக்கு அலையும் பிழைப்பு நம்மூர்களில் இப்பொழுதே வந்துவிட்டது. வீடுகளின் வெளிச்சுவர்களில் மூன்று நீர்க்குழாய்கள் வைத்து ஓரிரு மணிநேரம் தண்ணீர் அளித்தாலே அது பெரும் தருமம் என்றாகிவிட்டது.
  கண்டனூரிற் சிச்சிறிதாய் எல்லா வீட்டாரும் புரைக்கிணறுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். பழைய கிணறுகளிற் சேறுகூட மிஞ்சவில்லை. தரைதட்டிப் போயிற்று. எப்பொழுது கண்டனூரார் வையைக்கரைக் கண்மாய் நிறையாது போனதைக் கவனிக்கவிலையோ, அப்பொழுதே அக் குமுகம் தடுமாறிப் போனது. அதே நிலைதான் பள்ளத்தூருக்கும். இங்கும் உங்கள் கண்மாய் நிறைந்து பலவாண்டுகள் ஆகிவிட்டன என்று கேள்விப்படுகிறேன். இந்நிலையிற்றான், ”போராடிப் பார், ஆன்மா மகிழும்!” என்று தலைப்பிட்ட செய்தியைப் படித்தேன். அசந்துபோனேன். எப்பேர்ப்பட்ட நல்ல பொதிவான செய்தி தெரியுமா? நீங்கள் உங்கள் ஊரிற் சாதித்திருக்கிறீர்கள். அதைத்தான் இந்தப் பேச்சினூடே உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைத்தேன். இதைப் பல செய்தித்தாள்களிலும், வலைத்தளங்களிலும் அறிந்தேன்.
இஃதோ அந்தச் செய்தி!
சீமை கருவேலமரங்களை அழித்து 110 காணியில் (ஏக்கரில்) வேளாண்மை நடைபெறுகிறது. மகிழ்கிறது மனம்!
வேளாண்மைக்கு மீண்டும் புத்துயிர் அளித்த பள்ளத்தூர் உழவர்களுக்கு ஒரு செம்மாந்த வணக்கம்!
 
வெளிநாட்டு மோகத்தை விடுத்துப் பல ஆண்டுகளாகச் சீமைக்கருவேல மரங்களின் வல்லாளுகையில் இருந்த நிலத்தைச் சீரமைத்து, வேளாண்மை மேற்கொண்டு வருகின்றனர் பள்ளத்தூர் உழவர்கள். போதிய மழையின்மை, ஆர்வம் குறைந்ததால், கடந்த 15 ஆண்டுகளாக வேளாண்மை படிப்படியாகக் குறைந்துவருகிறது. செல்வத்துக்காகக் கடல்கடந்து போய் வேலைசெய்து, குடும்பத்தினரை அவ்வப்போது சந்திக்க முடியாமல், நல்லதுகெட்டதுக்கு வரமுடியாமல் தவிப்பவர் ஏராளமானோர். இந்நிலை என்று மாறுமோ? – என்றேங்கித் தவிக்கும் சமுதாயத்துக்கு மத்தியில் நாங்கள் மாறியுள்ளோம் எனக் கூறுகின்றனர் பள்ளத்தூர் உழவர்கள்.

காரைக்குடிக்கு அருகே பள்ளத்தூர் பெரிய கண்மாய் மூலம் முப்போகம் விளைந்த 140 காணி(ஏக்கர்) நிலத்திற் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாகச் சீமைக்கருவேல மரங்கள் மண்டிக்கிடந்தன. யார் சீரமைப்பார்? என்று ஏங்கியிருந்த நேரத்தில்  முயன்று பார்ப்போம், முப்போகம் விளைந்த இடத்தில் ஒரு போகமாவது விளையவைப்போம் என வெளிநாட்டிலிருந்து வந்த முன்னாள் உழவர்களும், பல்வேறு வேலைக்குச் சென்ற இந்நாள் உழவர்களும் முயன்றனர். ஊரும் இவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தது. 100-க்கும் மேற்பட்டோருக்கு பாத்தியப்பட்ட இடத்தைச் சுற்றிலும் உரூ.8 இலட்சம் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டது. சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு தற்போது 110 காணியில்(ஏக்கரில்) வேளாண்மை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 140 காணி வேளாண்மை செய்துகாட்டுவோம் என்கின்றனர் இவ்வூர் உழவர்கள்.

இனி அடுத்தடுத்து மற்ற ஊராரும் பள்ளத்தூர் உழவர்களைப் பார்த்து வேளாண்மைக்கு மாறுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை! ஆனால், இம்மாற்றத்திற்குப் பள்ளத்தூர் உழவர்கள்தான் முன்னோடிகளாக விளங்குவார்கள்! உங்கள்பாதம் பணிந்த எங்களின் வாழ்த்துகளும், பாராட்டுகளும், வேளாண் குடிமக்களே!
 – சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் , www.aaproject.org
  சீமைக் கருவேல மர ஒழிப்பு இயக்கமென்னும் இச்சிந்தனை சிவகங்கை மாவட்டமெங்கும் பரவ வேண்டும். ஆர்.எசு.பதி. மரங்களும் தவிர்க்கப்படவேண்டும். இங்கிருக்கும் பெருஞ்செல்வந்தர் இதற்கு உதவவேண்டும். பள்ளத்தூரைச் சுற்றிலும் இம் மரங்களைப் பிடுங்கியெறியுங்கள். மாறாக நம்மூர் மரங்களை நடுங்கள். ஊரெங்கும் மழைநீர் சேகரிப்பைக் கூட்டுங்கள். கண்மாய்க்கு நீர்வருங் கால்களைத் தூர்வாருங்கள். ஊர்க் கண்மாய்களை நிறைத்துப்பாருங்கள் உங்கள் கேணிகளிற் கொஞ்சங் கொஞ்சமாய் நீர் ஊறத் தொடங்கும்.
“மழைநீர் சேகரிப்பின் தேவை” என்ற தலைப்பில் அக். 23 2014 இல் தினமலரில் ஒரு செய்தி வெளியானது. “காரைக்குடி: நெற்பயிர் நீரில் மூழ்கும் அளவு, கடந்த ஒரு வாரமாகக் கனமழை பெய்தும் வரத்துக் கால்வாய் அடைப்பால் பள்ளத்தூர் கண்மாய் புல் வெளியாகவே காட்சி அளிக்கிறது.” இதுபோன்ற செய்திகள் இனியும் வாராதிருக்கக் கண்மாய்களுக்கு நீர்வரும் வழியைக் கண்டறிந்து நீர்வரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  சுற்றுச்சூழல் மாறுவதைப் பற்றிப் பேசுகையில் சூடு, ஈரப்பதம், காற்று, நிழல்தருஞ் சூழல் ஆகியவைபற்றியும் பேசவேண்டும். நம் ஊர்களின் சூடு ஓரளவாவது குறையவேண்டுமெனில், ஈரப்பதம் கூடவேண்டுமெனில் நம்மூர்ப்பக்கம் மரபுசார்ந்த மரங்களை நடவேண்டும். மண்ணில் ஈரம் இருந்துகொண்டேயிருக்கவேண்டும். மாற்றூர்க் கோயிலில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒருமரம் நட்டுக் காட்சிசெய்திருப்பார்கள். அதை மாதிரியாகக்கொண்டு, ஒவ்வொரு நட்சத்திரத்திற் பிறந்தோரும், அந்நட்சத்திரத்திற்கொப்ப 10 மரங்களாவது நட்டுப் பேணிவரலாம். ஒரு குமுகத்தின் நிலத்தில் 33 விழுக்காடாவது மரம் நிறைந்த பகுதிகளாய் ஆகவேண்டுமென்று அறிவியலாளர் சொல்கிறார். மொத்தத்தில் நம்மூரின் பழைய முல்லைத்தோற்றம் இங்கே திரும்பி வரவேண்டும்.
  அது மட்டுமல்ல. நம்மூர்களில் மாலைநேரத்தைக் குடும்பத்தோடு களிக்க பச்சைப் பசுமையான சோலைகளே இல்லாதிருக்கின்றன. சோலையாண்டவர் கோயிலைச் சுற்றி ஒரு சோலையுண்டா? அந்தக்காலத்தில் ஐயனார் கோயில்களும் அம்மன் கோயில்களும் பெரும்பாலும் அடர்ந்த காவிற்குள்ளேயே இருந்தன. இன்று அப்படியிருக்கின்றனவா? கேரளத்தில் இன்றுகூடப், பல நாட்டார் கோயில்கள் காவிற்குள்தான் இருக்கின்றன. நம்மூர்களில் ஒவ்வொரு கோயிலுக்கும் தலமரம் என்றவொன்று உண்டு. அந்தத் தலமரங்கள் நிறைந்த சோலையைக் கோயிலையொட்டி நிறுவுகிறோமா? ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், ஊருக்கு 2 பூங்காக்களாவது நமக்குத் தேவை. (காரைக்குடியில் புதுப் பேருந்துநிலையத்திற்கு அருகிலுள்ள பூங்காவிற்கு எத்தனைபேர் வருகிறாரென்று கவனித்திருக்கிறீர்களா? 5 உரூபாய் கட்டணமென்றாலும் கூட்டம் விடாது போகிறது. அந்தப் பூங்கா நமக்கெல்லாம் ஒரு மாதிரிப் பூங்காபோல் ஆகவேண்டும். அந்நகருக்கே கூட இன்னும் 10 பூங்காக்கள் வேண்டும்.)
  நம் ஊர்களில் கோயிலை விட்டால் பொதுவிற் புழங்கும் இடங்களேயில்லை. அப்படியிருப்பது சரியில்லை. குறைந்தது இரு பூங்காக்களும் ஒரு விளையாட்டுத் திடலும், ஒரு படிப்பகமும் நமக்கு வேண்டும். இப்பொழுது பல ஊர்களில் இவை பேணுவாரின்றிக் காணாமற் போயின. நம் மக்களெல்லாரும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவமிருந்து நெடுந்தொடர்களைப் பார்த்துக் குடியிருக்கத் தொடங்கிவிட்டார். நாம் வாழும் ஊரிற் பிள்ளைகளுக்குக் கலைகளைச் சொல்லிக் கொடுக்கும் பயிலகம் இருக்கவேண்டாமா? 1970கள் வரை இவையெல்லாம் நம் ஊர்களில் இருந்தன. இப்பொழுதோ எல்லாம் நிலைகுலைந்துபோயின.
 ஊருக்குள் இருக்குஞ் சாலைகளை உருப்படியாகப் புதுப்பிக்கமாட்டோம் என்கிறோம். கோயில்களை நெருங்கும் இடங்களில், கோயில்வாசல்களிற் செங்கல்களைப் பதியமாட்டோம் என்கிறோம். சாலைகளின் இருமருங்கும் நிழல்தரும் மரங்களை நடமாட்டோம் என்கிறோம். பெரும்பாலான பேருந்து நிறுத்தங்கள் நிழல்தரும்படி புதுப்பிக்கப்படவில்லை. எங்கு பார்த்தாலும், “மாடுவந்தது, கட்டினாற் கட்டிக்கொள்; கட்டிக்காவிட்டாற் போ” என்ற அசமந்தமும் அலட்சியமும் இருந்தாலெப்படி?
(தொடரும்)
karuvelamaram+1
 – முனைவர் இராம.கி.
சென்னை 600101
transliteration_raamki23

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக