(புரட்டாசி12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி)
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/08/heding-thamizharkalin-thaazhvumvazhvum.png
7. இந்தியா என்றால்இந்தியாவா?
inida_hindiyaa_02
இந்தியா உண்மையான மக்களாட்சி நாடு எனில் தாய்மொழி வாயிலாகக் கல்வியும் வேலைவாய்ப்பும் அமைந்து அனைவருக்கும் சம வாய்ப்புரிமை இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் இந்தி படித்தவர்க்கே இந்தியாவில் வாழ இயலும் என மோசடியான சூழலே விளங்குகிறது. சான்றாகத் தமிழ்நாட்டில் உள்ள படைத்துறைப் பள்ளியான சைனிக் பள்ளியில் சேர இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் தேர்வு எழுத வேண்டும். இந்திக்காரர்கள் தம் தாய்மொழியில் எளிதில் பெறக் கூடிய வாய்ப்பைப் பிற மொழியினர் பெற இயலாது.படைத்துறையில் சேர்ந்தபின்பும் இந்தி இந்தி இந்திதான். நமக்குத் தேவை இந்தி-யா? இந்திய ஒருமைப்பாடா?
நடுவணரசின் நோக்கம் ‘இந்தியா’என்றால் ‘இந்தி’என்பதுதான். காற்றில் வீசும் வாள்வீச்சைப் போன்ற நம் எதிர்ப்பு கண்டு நடுவணரசு மிரளாது. எந்த அளவிற்கு விரைவாக நாம் பொங்கி எழுகிறோமோ அந்த அளவிற்கு நாம் அடங்கிவிடுவோம். சான்றாகச் ‘சடுகுடு’இடத்தைக் ‘கபடி’பிடிக்க முயன்ற பொழுது எழுந்த எதிர்ப்பு‘சடுகுடு’தொலைக்கப்பட்டதுபோல் தொலைந்து போயிற்று அல்லவா? எனவேதான் நடுவணரசின் திட்டங்கள் – ஊரக வளர்ச்சியாகட்டும், சிறு சேமிப்பாகட்டும், காப்பீடாகட்டும், வங்கியாகட்டும் – எங்காயினும் எதுவாயினும் இந்தியே வீற்றிருக்கிறது. எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணாக்கர் பயிலும் தொழிற்பயிற்சி நிலையங்களின் வினாத்தாள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் உள்ளது போல்,‘இந்தியா முழுமைக்கான’எதுவாயினும் இந்திதான் இடம் பெறுகிறது. ஆங்கிலம் அயல்மொழி எனக் கூறி இடம் பெயர்க்கப்பட்டு அந்த இடத்தில் அயல்மொழியான இந்திமொழி கால்பதித்து வருகிறது. தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவனம் ஓட்டுநர், நடத்துநர் பதவி உயர்விற்கான தேர்வை ஆங்கிலத்தில்தான் நடத்துகிறது. இக்கொடுமையிலும் கொடுமையாக ‘ஒரே நாடு;ஒரே முறையான பயிற்சி’என்று நாளை இங்கு இந்திதான் வரப்போகிறது. தொழிலாளர் காப்பீட்டு மருத்துவமனையினருக்கான நோய்கள் பெயர்ப்பட்டியல் குறியீட்டு எண் தொகுப்பு, சிறுதொழில் குறுந்தொழில் பெருந்தொழில்களுக்கான தொழில்வகைப் பெயர்ப்பட்டியல் குறியீட்டு எண் தொகுப்பு போன்ற அனைத்து இந்திய அளவிலான அனைத்துத் தொகுப்புகளும் இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் உள்ளன. நடுவணரசு, நடுவணரசு சார்அமைப்புகளின் பணிகளுக்கு இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்களையும் முனைவர் பட்டம் பெற்றவர்களையும் அமர்த்தம் செய்கிறார்கள். ஆனால், தமிழ் நாட்டிலோ தமிழ் வளர்ச்சித் துறையிலேயே தமிழ் படித்தவர்கள் துரத்தப்படுகிறார்கள். னுனு
அன்றாடம் மக்கள் ‘வணக்கம்’என்பதை மறந்து ‘குட் மார்னிங், குட் ஆப்டர்நூன், குட் ஈவினிங், குட் நைட்’என்று ஆங்கிலத்தில் வாழ்த்தினைப் பரிமாறிக் கொள்ளும் அவலம் ஒரு புறம் இருக்க, மத்திய அரசு அலுவலகங்களுடன் தொடர்பு கொண்டால் இனிய தமிழ் மறந்து ‘நமசுகாரம்’அல்லவா ஒலிக்கிறது? தொலைபேசிப் பொது எண்களுடன் தொடர்பு கொள்ளுகையில் தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்காக உள்ள இத்துறை தமிழ் நாட்டு மக்களிடம் தமிழில் வணக்கம் சொல்லக்கூடாதா? என்ன பண்பாட்டுக் கொலை இது? கேள்வி கேட்பார் யாருமில்லையே?
அதுபோல் மத்திய அரசு அலுவலகங்கள் என்றால் தமிழ்த் ‘திரு’மறைந்து ‘சிரீ ‘ தான் ஆட்சி செய்கிறது, இதுதான் மத்திய அரசின் இந்திக் கொள்கை என்னும் பொழுது தமிழால் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களாவது எதிர்த்து இம்முறையை ஒழிக்க வேண்டாவா?
தொலைக்காட்சி வானொலிகளில் விளையாட்டு குறித்த நேரடி வருணையாகட்டும் பிற குறித்த நேர்முக விளக்க உரையாகட்டும் தமிழ் நாட்டிலே நடைபெறும்நிகழ்ச்சி யாகட்டும், தமிழுக்கு இடமில்லையே! ஆங்கிலத்திலும் இந்தியிலும் மாறி மாறி வழங்கி இந்த நாடு இந்தி பேசுவோருக்கு மட்டுமே உரியது என மத்திய அரசு ஆணித்தரமாக அறைகிறதே! மாநிலத் தன்னாட்சியாளர்கள் உறங்குவது ஏன்?
தொலைவரிக்குச் சுருக்கப் பெயர்களைப் பதிந்து கொள்ளும் வாய்ப்பை அத்துறை தருகிறது. ஆனால், இப்பெயர் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். இது என்ன கொடுமை? தமிழ்நாட்டு நிறுவனம் அல்லது அமைப்பு நிறுவனப் பெயரைச் சுருக்கமாகத் தமிழில் வைக்கக் கூட உரிமை யில்லையா?
மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களும் சரி மத்திய உதவியுடன் தமிழ் நாட்டில் அமைக்கப்படும் ஊர்கள், நகர்ககளின் பெயர்களும் சரி தமிழில் இல்லை. எந்த இந்திக்காரன் பணத்தில் இதனை அமைக்கின்றனர்? தமிழ் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதானே? பிறகு ஏன் இந்த அவலம்? நமது பணத்தால் பெறும் உதவிகளுக்கு இந்தி பேசும் பகுதிகளுக்குத் தமிழ்ப் பெயரையா சூட்டுகின்றனர்? வெட்கமின்றித் தமிழக அரசும் ஏற்று நடைமுறைப்படுத்துகிறது. சூடு சொரணையின்றி நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.இவ்வாறு பல செய்திகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்திய நாட்டில் தமிழர் அயலவராக நடத்தப்படும் பொழுது தமிழ் எங்கே வாழும்? வளரும்? மலரும்? தமிழ் நாட்டிலேயே தமிழ் தளரும் பொழுது பிற நாடுகளில் வாடத்தானே செய்யும்?
இந்தி விதைப்பு
வங்காளியர்’எனில் வங்காள மொழி பேசுநர்; ‘மலையாளியர்’எனில், மலையாள மொழி பேசுநர்; ‘பஞ்சாபியர்’எனில் பஞ்சாபி மொழி பேசுநர்; ‘மராத்தியர்’எனில் மராத்தி மொழி பேசுநர்; ‘குசராத்தியர்’எனில் குசராத்தி மொழி பேசுநர்; இவைபோல் ‘இந்தியர்’எனில் ‘இந்திமொழி பேசுநர்’; பேச வேண்டியவர்கள் என்ற தவறான எண்ணம் நம்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் விதைக்கப்பட்டுள்ளது. எனவேதான் தலைமையமைச்சரும் இந்தியில் பேச முடியாமைக்கு வருத்தம் தெரிவிக்கிறார்; இந்தியில் உரையாற்ற இயலாமை இழுக்கு எனக் கருதி இந்தியில் உரையாற்றுகிறார். “இந்தியா’என்றால் ‘இந்தி’நாடு;‘இந்து’நாடு என்ற எண்ணம் மாற முதலில் நம் நாட்டின் பெயரே மாற்றப்பட்டாக வேண்டும்.
தமிழ் இந்தியா
thamizhinida
உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தோன்றிய வளர்ந்த வாழும் பகுதியான ஆசியாக்கண்டத்தை நாம் ‘தமிழ்க்கண்டம்’என்றே அழைக்க வேண்டும். ‘இந்தியா’என்பது ‘தமிழ்க்கண்டக் கூட்டரசு நாடுகள்’என அழைக்கப்பெற வேண்டும்; அல்லது குறைந்தது ‘தமிழ் இந்தியா’என்றாவது அழைக்கப்பட வேண்டும். னுனு
இலங்கைத்தீவு முழுமையுமே தமிழ் நிலமே! ஆனால் வந்தேறிகளான சிங்களர்கள், பெரும்பகுதியை வஞ்சகத்தால் கைப்பற்றிக் கொண்டனர். எஞ்சிய பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களில் நூறாயிரக்கணக்கானவரை எரிகுண்டுகளாலும் கொத்துக் குண்டுகளாலும் அழித்தும் அகழ்பொறிகளால் மண்ணில் புதைத்தும் ஒழித்து விட்டனர். அப்படியும் எஞ்சியோரை வதைமுகாம்களில் அடைத்து வைத்து குடிநீர்த் தட்டுப்பாடு, உணவுப் பற்றாக்குறை, மருந்தின்மை ஆகிய கொடுமைகளை உருவாக்கிப் போதிய நல்வாழ்வு வாய்ப்புகளை ஏற்படுத்தாமல் அழித்து வருகின்றனர். ஆகவே, தமிழர் வாழ்ந்த பகுதிகளை முழுமையும் சிங்கள நிலமாக ஆக்கவும் பரம்பரையாகச் சிங்கள நிலமாக இருந்ததுபோல் காட்டவும் இந்தியத் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் எனச் சிங்கள ஊடகங்களே தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் தம் இன மக்களை அழித்தொழிக்கும் நாச வேலைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது போல் உலக மக்களும் தத்தம் இனத்தின் தாய் இனமாகிய தமிழ் இனத்தைக் காக்கும் பொறுப்பு தங்களுக்கு இருப்பதை உணர்ந்து தாய்இன அழிவைத் தடுக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய விடுதலைக்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் குரல் கொடுத்து வந்திருந்ததுடன் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல கடுமையான போராட்டங்கள் மூலம் தங்கள் உணர்வையும் வெளிப்படுத்தியுள்ளனர். உலக நாடுகளின் துணையின்றித் தமிழ் ஈழ மக்கள் தனிஅரசை அமைத்த பின்பு அதை உலக நாடுகள் ஏற்க வேண்டும் என வேண்டி வந்தனர். அண்மைப் பேரழிவின் தொடக்கத்தில் இருந்தே அதனைத் தடுத்து நிறுத்த அனைத்துத் தரப்பாரும் பல்வேறு வகைகளில் போராடி வந்தனர். முத்துக்குமாரர்கள் அனலுக்கு உணவாகி உயிர் ஈகம் புரிந்தும் தமிழ் இன உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இவையனைத்தும் பயனற்றுப்போகும் வண்ணம் இந்திய காங்.அரசு கேளாச் செவியாய் நடந்து கொண்டதன் காரணம் என்ன? இந்திய நாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு விளங்கினாலும், இந்தியாவிற்கு அயலவரால் இன்னல் வரும் பொழுதெல்லாம் முதலில் தோள் கொடுப்பவர்கள் தமிழர்களாக இருந்தாலும் இந்தியா தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. பாராமுகமும் புறக்கணிப்பும் இருந்தாலும்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், சமசுகிருத மேலாண்மைக்காகக் கழுத்தறுப்பு வேலையல்லவா செய்து வருகிறது?
மத்திய ஆட்சிக்குத் தமிழகக் கட்சிகளின் பங்களிப்பு தேவை என்ற கட்டாயச் சூழலிலும் தமிழ்நாட்டிற்கு எதிராகச் செல்லும் துணிவு எவ்வாறு அதற்கு வந்தது? தமிழால் ஒன்றுபடாத் தமிழ் நாட்டு மக்களே அதற்குக் காரணமாகும். தமிழகப் பேராயக் கட்சியோ தில்லிக்குக் காவடி தூக்குவதில் அணி அணியாகப் பிரிந்து போட்டி போட்டுக் கொள்ளும். பிற கட்சிகளோ தங்களுக்குள் யார் அடிபணிந்து போவது என்று போட்டி போட்டுக் கொள்வதில் காட்டும் கருத்தைத் தமிழர் நலனைக் கட்டிக் காப்பதில் காட்டுவதில்லை. தமிழ்நாட்டுக் கட்சிகள் தங்களுக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்வதைப் பார்த்து செல்வாக்குடன் இருப்பதாக எண்ணினால் அது தவறாகும். ஓர் எடுத்துக் காட்டைக் கூற விரும்புகிறேன். கரும வீரர் காமராசர் சுட்டிக் காட்டுபவரைத் தலைமைஅமைச்சராக ஏற்றுக் கொள்ள முன்வந்த பேராயக்(காங்கிரசு) கட்சியினர் அவரைத் தலைமை அமைச்சராக ஏற்க முன்வரவில்லையே! இதுதான் உண்மைநிலை. வடவர் நம்மைக் கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை; ஆனால், நம் இனமோ மொழியோ பயனுறும் வண்ணம் செயல்பட முன்வருவதில்லை. ‘திராவிடம்’, ‘திராவிட இயக்கம்’என்றே தமிழக மக்கள் பேசிவந்தாலும் பிற தென்மாநிலத்தவரும் தமிழ் மக்களுக்கு எதிராகவே நடந்து கொள்கின்றன. மத்திய அரசுகளும் அவற்றிற்கே துணைபுரிகின்றன. நாமோ பாடங்கற்காமல் விழித்தெழாமல் இருக்கின்றோம்.
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு!
தமிழர் வாழ்வே தமிழின் வாழ்வு!
என்பதே பேராசிரியர் சி.இலக்குவனார் வற்புறுத்தி- வந்த கோட்பாடு ஆகும். எனவே, தமிழர் வாழ, தமிழ் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தமிழின் செம்மொழித் தகுதி ஏற்கப்பட்டால் தமிழ்நலன் சார்ந்த விந்தை பல நிகழும் எனப் பலராலும் சொல்லப்பட்டது. ஆனால், முழு ஏமாற்றமே! தெலுங்கு, கன்னடம், முதலான மொழிகள் பலவற்றையும் சேர்த்துக் கொண்டு பத்தோடு பதினொன்றாக மொழிகளுக்கெல்லாம் தாயான செந்தமிழ்மொழி இருக்கப் போகிறது. எனவே, நாம் அனைத்து மொழிகளுக்கும் காவடி தூக்குவதை விட்டு விட்டு விட வேண்டும். தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாகவும் இந்தியாவின் தேசிய மொழியாகவும் அறிவிக்கச் செய்ய வேண்டும். தேசிய மொழி என்று இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால்,இந்தி அறிவிக்கப்படாமலேயே தேசிய மொழியாகப் பரப்புரை செய்யப்படுகிறது. வாழும் செம்மொழியும் மூத்தமொழியும் ஆகிய தமிழைத் தேசிய மொழியாக அறிவிப்பதால் இந்தியாவிற்கே பெருமை எனப் பிறரை உணரச் செய்ய வேண்டும்.
8. தமிழர் சிக்கல்களுக்கு முடிவுரை எழுதுவோம்!
‘அன்றும் இன்றும் உலகளாவிய தமிழர்களின் வாழ்வும் தாழ்வும்’என்னும் தலைப்பே இங்கு சுருக்கமாகக் குறிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் என்னும் பொழுதே உலகத் தமிழர்களைக் குறிக்கின்றது. அன்றிருந்த பழந்தமிழர் பொற்கால வாழ்வு நீங்கி இன்று தாழ்வு ஏற்பட்டுள்ளதை ஆராயவில்லை. இவை நீங்கி வாழ்வு பெறத் தேவையான செயற்பாடுகள் மட்டும் சுட்டப்பட்டுள்ளன. எனவே, தலைப்பு ‘தமிழர் தாழ்வும் வாழ்வும்’எனச் சுருக்கப்பட்டுள்ளது. எனினும் இங்கு, உலகளாவிய சிக்கல்கள் ஆராயப்படவில்லை. ஏனெனில் நாட்டிற்கு நாடு இவை வேறுபட்டிருந்தாலும் அடிப்படைச் சிக்கல் என்பது உரிமை மறுக்கப்படுவதுதான். உலகளாவிய உரிமை மறுப்பின் காரணம் தமிழ்நாட்டில் தமிழரும் தமிழும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் உள்ளதுதான். தமிழ் உரிமை பெற்றாலேயே உலகச் சிக்கல்கள் தீர அந்த உரிமை நிலையே கலங்கரை விளக்கமாக அமையும். எனவே, அனைத்துச் சிக்கல்களுக்கும் மையச் சிக்கலான மொழி உரிமையின்மையும் இனக்காப்பின்மையும் இயம்பப்பட்டு இவற்றைப் பெறுவதற்கான சில வழிமுறைகள் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவ்வழிமுறைகள் வெற்றி பெற வாழும் இடங்களில் எல்லாம் தமிழர்கள் அதிகார ஆளுமை பெற வேண்டும். ஆனால், தமிழ்நாட்டு அதிகாரப் பீடங்களில் தமிழர் சிறுபான்மையாக இருக்கும் பொழுது தமிழர்க்கு வாழ்வேது? வளமேது? தமிழ்நாட்டிலேயே தாழ்ச்சி என்றால் பிற பகுதிகளில் வீழ்ச்சியைத்தானே சந்திக்க இயலும்? தமிழரல்லாதவரும் தமிழ்ப் பகைவரும் தமிழ் உரிமைக்கு எங்ஙனம் குரல் கொடுப்பர்? தமிழ் நாட்டில் தலைமைப் பதவிகளிலும் அதற்கு அடுத்த நிலைகளிலும் தமிழர் மட்டுமே வீற்றிருக்க வகை செய்ய வேண்டும்.
உலகத் தமிழர்கள் எதிர்நோக்கும் எல்லாச் சிக்கல்களும் நம் செயல்பாடுகளை அல்லது செயல்பாடின்மையைச் சார்ந்தனவே! இவையோ நம் இன உணர்வைச் சார்ந்தனவே!-எனப் புரிந்து கொண்டு செயல்பட்டால் எல்லாம் வல்லவராக நாம் திகழலாம். தமிழ் வல்லவரை எதிர்நோக்கும் இமயமலைபோன்ற சிக்கலும் தவிடு பொடியாகும். ஆதலின் பின்வருவனவற்றை நினைவில் நிறுத்துவோம்! ‘இனநலம் எல்லாப் புகழும் தரும்’என்றும் ‘இனநலம் ஏமாப்பு உடைத்து’என்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் (குறள் 457 – 458) இனநலம் குறித்து வலியுறுத்தி இருந்தாலும் நாம் அதை நினைக்க மறந்தோம்! சிதைந்தோம்! இனநலம் ஒன்றையே எண்ணித் தாயகத் தமிழர்கள் செயல்பட்டார்கள் எனில் நமக்கு எதிராக எவனும் நெருங்க மாட்டான்! எமனும் நெருங்க மாட்டான்! ‘எங்கும் இன்னல்! என்றும் அல்லல்!’ என வாழும் உலகத் தமிழர்கள் என்றென்றும் இன்பமே அடைய
இன ஒற்றுøமையைப் பேணுவோம்!
இன நலனைக் காப்போம்!
இடையூறுகளைக் களைவோம்!
இனிதே வாழ்வோம்!
ilakkuvanar thiruvalluvan–இலக்குவனார் திருவள்ளுவன்
பேசி: 9884481652 / 91 44 22421759
மின்வரி : thiru2050@gmail.com
மேற்கோள் கருத்துகள் கட்டுரையாளரின் பின் வரும் படைப்புகளில் இருந்து எடுக்கப்பட்டவை:
** செம்மொழி இதுவரையும் இனிமேலும்: புதிய பார்வை: அக்.1-15,2004: பக்கம் 13
## செம்மொழி அரசேற்பால் தமிழ் பெறும் பயன்கள் : உங்கள் குரல் தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்: பக்கம் 83
++ செம்மொழித் தமிழ் மேம்பாட்டிற்குச் செய்ய வேண்டியன: ஆசியவியல் நிறுவனமும் நடுவண் அரசின் செம்மொழித் தமிழ் மேம்பாட்டு மையமும் இணைந்து நடத்திய செம்மொழித் தமிழ்-பன்னாட்டுக் கருத்தரங்கம்
ளூளூ தமிழ் இன்றும் என்றும் : திருவையாறு தமிழய்யா கல்விக்கழகம் ஆறாவது கருத்தரங்கம்
னுனு தமிழ் : ஆட்சிமொழிச் செயலாக்கம் – ஓர் இனிய கனவு; புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் – தமிழ் ஆட்சிமொழி : சிக்கல்களும் தீர்வுகளும் – கருத்தரங்கு ; 1996 நவம்பர் 3-5