புதன், 10 செப்டம்பர், 2014

தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ஙி : இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர்கள் தாழ்வும் வாழ்வும் – ஙி : இலக்குவனார் திருவள்ளுவன்

heding-thamizharkalin-thaazhvumvazhvum

4. தலைமை வழிபாட்டுணர்வைப் போக்குக!
  தமிழக மக்களிடம் உள்ள தலைமை வழிபாட்டுணர்வே பல அழிவுகளுக்கும் சிதைவுகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. அதனால்தான் திரைப்படப் பாத்திரங்களை ஏற்று நடிப்போரை வாழும் ஆன்றோர்களாகக் கருதிக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் போக்கும் பெரும்பாலோரிடம் காணப்படுகிறது. இந்த எண்ணப் போக்குக் கட்சித் தலைமையிடமும் ஏற்படுவதால். பொது மக்கள் நலனுக்காகக் கட்சி என்பதை மறந்து விட்டுத் தம் சொந்த மக்கள் நலனுக்காகக் கட்சி என்று தலைவர்கள் திகழ்ந்தாலும் அவர்களைக் கண்டிக்கும் போக்கு இன்றி எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளும் போக்கு மேலோங்குகிறது. எனவேதான், ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைகள் கண்டு உள்ளம் வெதும்பித் துடித்துப் பதைபதைத்தாலும் கட்சித்தலைமைகளின் மாறான போக்குகளைக் கண்டிக்காமல் ஊமை மக்களாய் உணர்வு மரத்தவர்களாய் விளங்குகின்றனர். ஆதலின் தமிழ் மக்கள் நலனுக்காகத்தான் தமிழகக் கட்சிகள் என்பதை உணர்த்தி அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் தலைமை வழிபாட்டாளர்களைக் கொள்கைப் பிடிப்பாளர்களாக மாற்ற வேண்டும். இதற்குக் கட்சிச் சார்பற்ற அமைப்புகளும் மனவளத் தொண்டர்களும் கட்சிக் கொத்தடிமைப் போக்கிற்கு எதிரான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும். தமிழ், தமிழர் நலன்களுக்கு எதிராகக் கட்சித் தலைமை செயல்படும் பொழுது அதனைத் தூக்கி எறியும் உள்ள உறுதியும் துணிவும் வரவேண்டும். இவ்வாறான தமிழ்க்காப்பு போக்குக் காணப்பட்டாலே எந்தக் கட்சித்தலைமைக்கும் தமிழர் நலனுக்கு எதிராகச் செயல்படும் எண்ணம் முளைவிடாது. எனவே, ஈழப் பேரழிவில் இருந்தாவது பாடங் கற்றுக் கொண்டு தமிழ் ஈழ மக்கள் இனியேனும் தங்கள் தாயகத்தை நிறுவ, தமிழர் தரணி எங்கும் தலைநிமிர்ந்து வாழத், தலைமை வழிபாட்டுணர்வை அறவே அகற்ற வேண்டும்.
hero-worhsip01
5. ஊடகங்கள் தமிழ் நலம் பேணுவதைக் கடமையாய்க் கொள்க!
தமிழர் யார் என்பதை மக்கள் அடையாளம் காண வேண்டும். தமிழில் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் ஆகி விட முடியாது. ஆரியப் பரப்புரை மேற்கொள்பவர்கள் தமிழில் பேசுவதாலேயே தமிழர்கள் ஆகி விட முடியாது. ஆனால் என்ன கொடுமை என்றால் எந்தச் சிறப்பு நாள் என்றாலும், குறிப்பாகத் தமிழர் திருநாள் என்றாலும் தமிழ்நலத் தலைவர்களை விட்டு விட்டு இத்தகையோர் வாழ்த்தை வெளிப்படுத்துவதே ஊடகங்களின் வேலையாய்ப் போய்விட்டது. தமிழர் நலத்தை வெளிப்படுத்தும் ஊடகங்கள் கூட இத்தகைய போக்கைப் பின்பற்றுவதுதான் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. தமிழர் திருநாள்களில் முதல் வாழ்த்தைக் கூறி ஆரியநச்சை விதைப்பதற்கு இவர்களுக்கும் உரிமை யில்லை. தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்திருந்தாலும் தமிழ் அழிவு வேலையில் ஈடுபடும் இரண்டகர்களுக்கும் உரிமையில்லை.
  ஊடகங்களில் வேண்டுமென்றே பிராமணப் பேச்சு வழக்கையே கையாளுகின்றனர். வருங்காலத்தவர் அவர்கள் மட்டுமே வாழ்ந்ததாக அல்லது தலைமை நிலையில் இருந்ததாக எண்ணும் வகையில் இப்போக்கு தவறானதாக மாறும். அல்லது சென்னைக் கொச்சை வழக்கிற்கு முதன்மை அளிக்கின்றனர். இதுதான் இக்காலத்தமிழ் எனப் பிற்காகலத்தவர் தவறாகக் கருத மாட்õர்களா? சில ஆண்டுகளுக்கு முன்பு நாளிதழ் ஒன்றின் கிழமை மலரில் வந்த மலையாள எழுத்தாளர் செவ்வி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அளவிற்கு மீறிக் கொச்சை வடிவிலும் பிராமண வழக்கிலும் பேசுவதுபோல் அமைந்திருந்தது. தமிழ் கற்று வருபவர்; எனவே, கொச்சையாகப் பேசுகிறாரா? அப்படியே அவர் பேசினாலும் எடுத்தெழுதுபவர் நல்ல நடையில் எழுதியிருக்கலாமே! அல்லது வேண்டுமென்றே எடுத்தெழுதுபவர் பிழையான நடையைக் கையாளுகிறாரா என்ற ஐயங்கள் ஏற்பட்டன. உசாவி அறிந்ததில் அந்த மலையாள எழுத்தாளருக்குத் தமிழ் தெரியாது என்றும் ஆங்கிலத்தில் தம் கருத்தைத் தெரிவித்திருந்தார் என்றும் எடுத்தெழுதியவர் உரியவர் அதைப் படிக்கப் போவதில்லையே என்பதால் தன் விருப்பம் போல் எழுதி அவருக்கு அவப் பெயர் ஏற்படுத்தி விட்டார் என்றும் அறிந்தேன். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம்தான் இந்த எடுத்துக் காட்டு. இப்படித்தான் ஊடக எழுத்தாளர்கள் தத்தம் விருப்பம் போல் மொழிக் கொலை புரிந்து நடப்பியம் என்கின்றனர்.
  மொழித் தூய்மையை இழந்ததாலேயே தமிழ் மண்ணின் பெரும்பகுதியை இழந்தோம் என்பதை உணர்ந்து மொழித் தூய்மையை அனைவரும் பேண வகை செய்ய வேண்டும். மொழிக் கொலை புரியும் ஊடகங்கள் தடைசெய்யப்பட வேண்டும். இறைநெறியும் அடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்களின் பண்பாட்டு நெறிதான். ஆனால், அதே நேரம், இறைநெறி என்ற போர்வையில் மூட நம்பிக்கைகளும் ஆரியப் புரட்டுகளும் அரங்கேற இடந் தரக் கூடாது. இவற்றின் விளைவாக மக்கள் நல்வாழ்விற்கு எனக் கூறிப் பிறமொழி வழிபாட்டு முழக்கங்களை அல்லது பாடல்களை -சுலோகங்களை – ஓதினால் நன்மை விளையும் என்ற புரட்டுச் செய்தியுடன் அவற்றைப் பரப்புகின்றனர். இறைவனால் உருவாக்கப் பட்டதாகவும் ஓதப்பட்டதாகவும் கற்கப் பட்டதாகவும் கற்பிக்கப்பட்டதாகவும் சிறப்பிக்கப்படும் தமிழ் மொழிக்கு இல்லாத சிறப்பு வந்தேறி மொழிகளுக்கு வந்ததாக மக்கள் நம்பும் அறியாமையைப் போக்க வேண்டும்.
தொண்டர்நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும் எலும்புபெண் உருவாக்
கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததும் கன்னித்
தண்டமிழ்ச் சொல்லோ? மறுபுலச் சொற்களோ சாற்றீர்!”
என்று அன்றே பரஞ்சோதியார் உணர்த்தியதை இன்றும் கூட உணராமல் மக்கள் நாவில் நடமிடா மொழியால் இறைவனை வாழ்த்தும் நிலை இருப்பது ஏன்? இந்நிலை மறைந்து இன்னிலை எய்த ஊடகங்கள் இறைநெறி தொடர்பான புரட்டுக் கதைகளை வெளியிடாதிருக்கவும் தமிழிறைப் பாடல்களை மட்டுமே வெளியிடவும் ஆவன செய்ய வேண்டும்.
  1974 இலிலிருந்து அனைத்து இந்திய வானொலிகளில் சமசுகிருதத்தில் குறுஞ்செய்தி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதுபோல், அனைத்து வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழ்ச் செய்தி ஒலி பரப்பவும் ஒளிபரப்பவும் செய்யப்பட வேண்டும். வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் சமசுகிருத வகுப்பு, கூட்டுப்பாடல் பயிற்சி சமசுகிருத நாடகம் அளிக்கப்படுவது போல், தமிழ் மொழிப் பயிற்சி அளிக்கப்படவேண்டும். சமசுகிருதத்தில் திரைப்படம் உருவாக்கவும் நாடகம் உருவாக்கவும் முழு நிதியுதவி அளிக்கப் படுவது போல், தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்க்கலை நாகரிகச் சிறப்பையும் இலக்கியச் சிறப்பையும் விளக்கும் நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் குறும் படங்களுக்கும் ஆவணப் படங்களுக்கும் உலக அளவில் நிதியுதவி அளிக்கப்படவேண்டும். (செம்மொழித் தமிழ் மேம்பாட்டிற்குச் செய்ய வேண்டியன: ஆசியவியல் நிறுவனமும் நடுவண் அரசின் செம்மொழித் தமிழ் மேம்பாட்டு மையமும் இணைந்து நடத்திய செம்மொழித் தமிழ்-பன்னாட்டுக் கருத்தரங்கம்)
  நட்சத்திரப் பலன்கள் என்றும் எண் கணியம் என்றும் கூறிக் கொண்டு அயல்மொழிப் பெயர்களைப் புகுத்தும் போக்கு ஊடகங்களிடம் மிகுதியாக உள்ளது. தமிழ்ப் பெயர்களை அரசே வரையறை செய்து அப்பட்டியலில் உள்ள பெயர்களை மட்டுமே சூட்ட வேண்டும் என்னும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். பட்டியலில் இடம் பெறாதப் பெயராயின் அரசின் இசைவைப் பெற வேண்டும். அது தமிழ்ப் பெயராகத் – தமிழ்ப் பண்பாட்டை எதிரொலிக்கும் பெயராக – இருந்தால் மட்டுமே அதனை ஏற்றுப்பட்டியலில் சேர்க்க வேண்டும்.
  உலகெங்கும் தமிழ்ப் படைப்புகள் ஏற்கப்படும் நிலை நிலவ, பேச்சு நடையையும் கொச்சை நடையையும் எழுத்து நடையாக்கும் போக்கை நிறுத்த வேண்டும். பேச்சுநடையே உயிர்ப்புள்ளது எனக் கூறிக் கொச்சை நடையை வேண்டுமென்றே பரப்புவதையும் வரிவடிவச் சிதைவையும் நிறுத்த வேண்டும்.(செம்மொழி அரசேற்பால் தமிழ் பெறும் பயன்கள் : உங்கள் குரல் தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர்: பக்கம் 83)
  இவ்வாறு வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் அறிவுத் துறைகளிலும் பிறவற்றிலும் ஊடகங்கள் தமிழையே பயன்பாட்டு மொழியாகக் கையாள வேண்டும்.
  இந்தியத் தமிழர்கள் – தமிழகத் தமிழர்கள் – அடிமை மனப்பான்மையினர். போராட்ட உணர்வுள்ளவர்களும் ஆரவாரத்துடன் அடங்கி விடுவர். உணர்வுமிக்கச் சிறுபான்மையர் உணர்வுகள் காட்டில் நிலவாய் கடலில் மழையாய் உரிய பயன் இன்றி வீணே போகின்றது. தமிழர்களின் அடிமைத்தனம் தொலைந்தால் ஒழிய தமிழர்களுக்கு விடிவு இல்லை. கல்வியில் கலைகளில் ஆட்சியில் நீதிமன்றங்களில் வணிகத்தில் கோயில்களில் தொழிலில் ஊடகங்களில் எங்கும் தமிழ்க் கொலைதான் நடைபெறுகிறது. இக் கொலை நிகழ்வுகளை எடுத்துக்காட்டிற்காகக் குறிப்பிடக் கூடக் கை கூசுகின்றது; அதை எண்ணிப் பார்க்கக்கூட மனம் நோகின்றது. எனவே, அனைவரும் அறிந்த நாளும் ஊடகங்களில் நடைபெறும் தமிழ்ப்படுகொலைகளை எடுத்து இயம்ப இயலவில்லை. இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்தினால்தான் தமிழ் உணர்வு தழைத்தோங்கும். தமிழ் உணர்வு கிளர்ந்தெழுந்தால்தான் அடிமை மனப்பான்மை தொலையும். ஆதலின் எல்லா இடங்களிலும் தமிழின் தூய்மையைப் பேண வேண்டும். தமிழின் தூய்மையே நம் வாழ்வின் தூய்மை என்பதை நம் உள்ளத்தில் பதிய வைத்துக் காலங்காலமாய் தடம் புரளாமல் தமிழ் நடை போட அடித்தளத்தை இப்போதே அமைக்க வேண்டும். இவ்வாறாகத் தமிழ்நலம் பேணுவதை மக்களிடையே வற்புறுத்துவதையும் பரப்புவதையும் செயலாக்குவதையும் ஊடகங்கள் தங்களின் தலையாயக் கடமையாகக் கொண்டு ஒழுக வேண்டும். கடமை தவறும் ஊடகங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
(தொடரும்)
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற
6-ஆவது உலகத் தமிழர்கள் ஒற்றுமை மாநாடு – 2009
தி.பி.2040,புரட்டாசி 9,10,11 * கி.பி.2009 செப்டம்பர் 25,26,27
கோலாலம்பூர், மலேசியா




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக