தமிழ்நாட்டைப்
புறக்கணிக்கும் நரேந்திரர்!
நரேந்திரர்(மோடி)
அமைச்சரவையில், கேரளம்,மே.வங்காளம் முதலான சில மாநிலங்களைச் சேர்ந்த
ஒருவருக்கும் அமைச்சர் பதவி இல்லை என்பது
சமநிலைச் சார்பாண்மையை நரேந்திரர்
வழங்கவில்லை என்னும் அவலநிலையாகும். நாம் தமிழ்நாட்டைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
பா.ச.க.கூட்டணியில் அவர் வரமாட்டார் இவர் வரமாட்டார் என்றெல்லாம் புரளிகள்
கிளம்பபிக் கொண்டிருந்த சூழலிலும் பாடுபட்டு முதன்மையான எதிர்க்கட்சிகளை இணைத்துக் கூட்டணி அமைத்ததில் பொன். இராதாகிருட்டிணனுக்கு முதன்மைப் பங்கு உண்டு. தமிழ்
நாட்டில் அவரைத் தவிர, பிற பா.ச.க.
வேட்பாளர்கள் தோற்றுள்ளனர் என்பதற்கு
அவரைக் குற்றம் சொல்ல முடியாது. ‘மோடி
அலையெல்லாம் சும்மா அலை என அம்மா அலை’
ஆக்கியதால் அவர் என்ன செய்வார்? பாசக வெற்றி மிகுதியாக அமைந்திருந்தால் அதற்கான பெருமை இவருக்கு வழங்கப்படாமல் நரேந்திரருக்கே
வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறிருக்க தோல்விக்கு
அவரைப் பொறுப்பாக்குவது பொருந்தாது. தமிழ்நாட்டின் பாசக கூட்டணியில்
இருவர் வெற்றி பெற்றிருக்கையில்
இருவருக்குமே அமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும். ஒருவருக்கு மட்டும் , அதுவும் இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொன்.இராதாகிருட்டிணன் ஒன்றும் தமிழ் உணர்வாளர் அல்லர். இருப்பினும் கடந்த முறை
அமைச்சராக இருந்தவர் என்பதாலும், தமிழ்நாட்டிற்குரிய குரல் அமைச்சரவையில் சரியாக
ஒலிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் அவருக்கு அமைச்சர் குழுவில் (காபினட்டில்)
வாய்ப்பு அளிக்கும் வண்ணம் அமைச்சராக்கி இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் அஇஅதிமுக முழுநிலையை ஒட்டிய
நிலையைப் பெற்றிருக்கும் சூழலில் திராவிடக் கட்சிகளின் வாக்குகள் மொத்தத்தில் 75 விழுக்காட்டிற்கும் எதிராக உள்ள அரசியல் நிலையில், கட்சி நலன் கருதியாவது அமைச்சராக்கியிருக்க வேண்டும்.
பாசகவிலும் பிற கூட்டணிக்ககட்சிகளிலும் 1 + 1 என்ற அளவில் அமைச்சர் + இணையமைச்சர் பதவி வழங்கப்பட
வேண்டும். அதற்கான வாய்ப்பு குறைவாக
அமையும் சூழலில் அமைச்சர் நிலைக்கு இணையான பதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட
வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள சிக்கல்களுக்கும் தமிழ் ஈழப்படுகொலை தொடர்பான நடவடிக்கைகளுக்கும்
வைகோவின் பங்களிப்பும் அமைச்சர் குழுவில் இருக்க வேண்டும்.
வைகோ
வி.பி.(சிங்கு) அமைச்சரவையில் அமைச்சராகும் வாய்ப்பு பறிபோனதாக வருந்தியதாகச்
செய்திகள் வந்துள்ளன. அவரே பின்னர், அமைச்சர் பதவி தேடிவந்த பொழுதும் புறக்கணித்து அதனைப் பெருமை யாகக்
கருதிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.
வைகோவிற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் நெருக்கம் இருக்கலாம். ஆனால், அமைச்சராக இருந்து தமிழ்நலச் சிக்கல்களை
எதிரொலிப்பதற்கும் தீர்த்து வைப்பதற்கும் உரிய வாய்ப்பு வெளியே கிட்டாது. வெறும் முகமனுரை நட்பால் பயனில்லை என்பதை
இப்போதைய கருப்புக் கொடிப் போராட்டத்திலேயே அவர் உணரலாம். இதற்கு முன்பு அவர்
தனக்கு வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமைச்சராகச் செயல்பட்டிருந்தார் எனில், தன் தொகுதிக்கு, தமிழ் நாட்டிற்கு, இந்தியாவின் அனைத்து
மாநிலங்களுக்கு எனப் பரவலாக நன்மை
செய்திருக்க முடியும். அந்த வாய்ப்புகளை இழந்தது அவர் பதவித் துறப்பு
நிலையாலேயாகும். அமைச்சராக இருப்பதன் மூலம் பல தகவல்களை அறியவும் உடனுக்குடன்
இடர்களைத் தடுக்கவும் உள்ள வாய்ப்புகளுக்கு அவரே தடைகல்லாக
அமைந்து விட்டார். அமைச்சர் என்ற முறையில்
வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு, வெளிநாட்டுத் தலைவர்களிடமும் வெளிநாட்டுத் தூதர்களிடமும் பழகும் வாய்ப்பு
மூலம் அவர் ‘தமிழீழம் தமிழர்களின் தாயகம்’ என்பதை
உணர்த்தவும் தமிழின் பெருமையைப் பரப்பவும்
வாயில்களாக அமைந்திருக்கும். அவற்றை அவர், போலிப்
பெருமையால் இழந்துவிட்டார். இப்பொழுது அமைச்சரானால், இனப்படுகொலையாளிகளைக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டனை பெறச் செய்யவும் கூடுதல் வாய்ப்பாகும்.
நா.உ. ஆக இருக்கும் பொழுதே அமைச்சர் பதவி வேண்டா என்றவர், இப்பொழுது
மாநிலங்களவை உறுப்பினராகி அமைச்சராவதை, ஆட்சிப் பொறுப்பிற்கான குறுக்கு வழி என எண்ணக் கூடாது.
நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாமலேயே
6
திங்கள் ஒருவர் அமைச்சராக இருக்க முடியும். எனவே, அமைச்சரான
பின்பு மாநிலங்களவை உறுப்பினராகலாம். ஆகவே, அவர் எவ்விதக்
கட்டுப்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அமைச்சர் பதவி கேட்டுப் பெற
வேண்டும். பதவியை மக்கள் தொண்டிற்கான
வாய்ப்பு என எண்ணாமல் ஆசை என எண்ணினார்
எனில், மதிமுக
என்பது தேர்தலில் போட்டியிடாத இயக்கம் என அறிவித்து இனித் தேர்தல்களில்
போட்டியிடக்கூடாது.
எனவே
வைகோவிற்கும் மதிமுகவில் மற்றொருவருக்கும் நரேந்திரர் அமைச்சர் பதவிகள் வழங்க
வேண்டும் ; அதனை
வைகோ ஏற்க வேண்டும்.
நரேந்திரர், தமிழ்நாட்டில் 37 தொகுதிகளைக்
கைப்பற்றிய அஇஅதிமுக உறுப்பினர்கள் மக்களவைத்
துணைத் தலைவர் ஆவதற்கும் முதன்மைக்
குழுக்களில் தலைமைப் பொறுப்பேற்பதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும்.
இவ்வாறு
நரேந்திரர் செயல்பட்டால்தான் தமிழ்நாட்டை அவர் மதிப்பதாகப் பொருளாகும்.
காங்கிரசுக் கட்சியால் அவரது கட்சி உறுப்பினர்கள் விலைபோகும் சூழல் ஏற்படும்பொழுது தமிழ்நாடு அவர் பின்னால்
நிற்கவும் இது வழி வகுக்கும்.
எனவே, நரேந்திரர் தன்னுடைய அமைச்சரவையில் தமிழ்நாட்டிற்கு
மதிப்பான சார்பாண்மையை வழங்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே
விழி! தமிழா விழி!/ எழுத்தைக் காப்போம்!
மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக