Ponmurugan_photo33
   பொன்முருகன் செய்தியாளர்களிடம் செல்வாக்குள்ள வளர்ந்து வரும் இதழாளர் ஆவார்.
  ‘இன்றைய வணிகம்’ நாளிதழ் ஆசிரியர், ‘அரசியல் சதுரங்கம்’ மாத இதழ் ஆசிரியர் என இதழாசிரியப் பணியாற்றி வந்தவர்.
 இந்தியன் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ஆகத் தொண்டாற்றி யவர்.
   30.4.2014 அன்று இரா. பொன்முருகன் சென்னை சோழவரம் நெடுஞ்சாலையில் துள்ளுந்து (மோட்டார் சைகிள்)வண்டியில் சென்றபோது மாலை 6.30 மணியளவில்  பாலத்தில் வண்டி மோதி மிகவும்  வலுத்த அடி ஏற்பட்டுவிட்டது. அவசரப்பண்டுவத்திற்காக, அம்பத்தூர் நிலா மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்க்கப்பட்டது. பின்னர் 2.05.2014 அன்று  மேற்கொண்டு மருத்துவத்திற்காகச் சென்னை  அரசு (இராசிவ்காந்தி) பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
  அங்கு அவசப் பண்டுவப் பிரிவில் உடனே சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கேயே நரம்பியல்துறைக்கு மாற்றப்பட்டார். மருத்துவம் நல்ல முறையில் போய்க்கொண்டிருந்தது;  சற்று முன்னேற்றமும் தெரிந்தது; என்கிறார் அவர் தந்தை அன்றில் இறை எழிலன்.
  5.5.2014 அன்று அதிகாலை 4.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. உடனே வளி வழங்கி (வெண்டிலேட்டர்) இயக்கம் நின்றுவிட்டது. இதனால், நாடித்துடிப்பும் படிப்படியாகக் குறைந்து மூச்சோட்டமும் நின்றுவிட்டது. அங்கு மாற்று ஏற்பாடாக எந்த வசதியும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். உயிர் போய்விட்டது. அங்குள்ள மருத்துவர்கள் இரண்டு நாள்களாக மருத்துவமனைக்கு வரவில்லை. அங்கு Ponfunction_Andril_IraiEzhilan80செவிலியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் உடனே மாற்று ஏற்பாடு செய்யுங்கள் என்று குடும்பத்தினர், நண்பர்கள் முறையிட்டுள்ளனர். எந்த ஏற்பாடும் அவர்கள் செய்யவில்லை. அங்கு  மின்னாக்கி (செனரேட்டர்) இருப்பதாகச் சொன்னார்கள். அதை இயக்கி முடிந்தவரையில்  முயலுமாறு கெஞ்சியுள்ளனர்.  ஆனால்  மின்னாக்கி  3 ஆண்டுகளாக இயங்காமல் பழுதாக உள்ளது என்று கூறிவிட்டார்கள்.
தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை
என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்
என அவர் காதல் மனைவி வாழ்நாள் முழுவதும் அழும் வகையில் மருத்துவமனயைின் செயல்பாடற்ற செயல்பாடு அமைந்து விட்டது.  இதுகுறித்து மருத்துவனைத் தலைமைப்  பொறுப்பாளர், “கையினால் இயக்கி இருக்க வேண்டியதுதானே” எனக் கேட்டுள்ளார். நோயாளிகளின் குடும்பத்தினருக்கு  கையினால் இயக்கலாம்Ponm,urugan_function_Navaneetham44 என்றும் அதை எவ்வாறு இயக்கலாம் என்றும் தெரிந்திருப்பார்கள் என எவ்வாறு அவர் எதிர்பார்க்கிறார்.  அப்படியானால் மருத்துவர்களும் ஊழியர்களும் எதற்காக உள்ளனர்? மின் வெட்டுச்சூழலிலும் உரிய கருவிகள் இயங்கா விட்டாலும் நோயாளிக்கு மூச்சு சீராக அமைய உதவ முடியும் எனில், அவ்வாறு தக்க பணியாற்றாதவர்கள் குற்றவாளிகள் என்றுதானே சொல்லப்பட வேண்டும்.
 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமையானும் கெடும் (திருக்குறள் 466)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
இவ்விரு வகையாலும் பொன்முருகன் உயிருக்குக் கேடு விளைவித்துள்ளனர் நெடுநாள் வாழ்வுடைய அவர் வாழ்வை, மருத்துவர்களும் ஊழியர்களும். 42 அகவை மட்டுமே வாழுமாறு முடித்து விட்டனர் அவர்கள்.
 எனவே, பொன்முருகன் குடும்பத்தினருக்கு ஐந்து கோடி உரூபாய் இழப்பீடு தரவேண்டும். அவர் மனைவி திருவாட்டி நவநீதம் வணிகவியல் பட்டதாரி. கணியச்சிட அறிந்தவர் என்ற வகையில் தன் கணவனின் அச்சுப் பணிக்குத் துணை நின்றவர். அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அரசு தகுதிக்கேற்ற தக்க பணியை அவருக்கு வழங்க வேண்டும்.
 இதே நாளில்  வளிவழங்கி இயங்காமையால் இரவி என்பவர் இறந்ததாகவும் மேலும் மூவர்  இறந்ததாகவும் செய்தியிதழ்கள் வாயிலாக அறிய வருகிறோம். எனவே, அவ்வாறு இறந்தவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாறு இழப்பீடும்,  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் அளிக்க வேண்டும்.
  ஒரு நாள் கூத்தில் ஒரு மருத்துவமனையில் ஐவர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது என்றால் நாடு முழுவதும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட்டு வரும் என்பதை எண்ணவே நெஞ்சம் பொறுக்கவில்லை.
  பொன்முருகன் மரணத்தின் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். மருத்துவமனையின் செயல்பாடுகள் எந்த நிலையில் உள்ளன என அறிய வைத்துள்ளார். அரசு மக்கள் நலன் கருதி உரிய மருத்துவக் கருவிகளை வேண்டிய அளவு அளித்தாலும் அவற்றை இயங்காமல் செய்து விடுகின்றனர் என்பதைப் புரிய வைத்துள்ளார். இவ்வாறு இயங்காமல் போகச் செய்வதன் காரணம், அப்பொழுதுதான் நோயாளிகள் தங்களின் தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆய்வுக்கூடங்களுக்கும் வருவர் என்பதுதான்.
  தங்கள் பணப்பெட்டிகள் நிறைய வேண்டும் என்பதற்காக மருத்துவமனையினர், நோயாளிகளுக்கு இடர் விளைவித்து உயிர் பறிக்கும் நிலையை உருவாக்கி விடுகின்றனர். எனவே, இந்த இழப்பீட்டில் ஒரு பகுதியை மருத்துவமனைக் கண்காணிப்பாளர்,  தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள்,  ஊழியர்கள் என அனைவரின் சம்பளத்திலிருந்தும் பிடித்தம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் கடமை தவறும் செயல்களில் ஈடுபடமாட்டார்கள்! நோயாளிகள் உயிர் காக்கப்படும்!
  அரசு, இதுவரை மருத்துவமனைகளுக்கு வழங்கியுள்ள மருத்துவக் கருவிகளின் இப்போதைய பயன்பாட்டு நிலையை ஆராய்ந்து, செப்பனிடப்பட வேண்டியவற்றைச் செப்பனிட வேண்டும்.
  பயன்காலத்திற்கு முன்னரே பயனற்றுப் போன கருவிகளுக்கான செலவை உரிய பொறுப்பாளர்களிடம் இருந்து பெற வேண்டும். இதற்கென ஆராய தனியாரும் பங்கேற்கும் வண்ணம் ஒரு குழுவை அரசு அமைக்க வேண்டும். இந்தக்  குழு நாடெங்கிலுமுள்ள அரசு மருத்துவமனகைளுக்குச்சென்று ஆராய்ந்து தரும் அறிக்கை அடிப்படையில்  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையா வண்ணம் தடுப்பவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும்.
இதழாளர் பொன்முருகன் புகழ் ஓங்குக!
அரசு மருத்துவமனைகள் நலம்தரும்நல்வாழ்வு மனைகளாக மாறுக!