எழுவர் விடுதலைக்காக மனித நேயர் எழுவர்! சட்ட எதிர்ப்பர், எதிர்ப்பர்!
இராசீவு கொலை வழக்கில் உண்மையான
குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காகச் சிக்க வைக்கப்பட்ட எழுவரின் மரணத்
தண்டனை வாணாள் தண்டனையாக மாற்றப்பட்டு விடுதலையும் அறிவிக்கப்பட்ட சூழலில்
காங். அரசு இடைக்காலத் தடை பெற்றுள்ளது.
எழுவரின் உடனடி விடுதலையை உலகெங்கும்
உள்ள மனித நேயர்கள் வரவேற்கின்றனர். விடுதலைக்கான தடைக்கு எதிராக
அறவழிகளில் போராடி வருகின்றனர். அதே நேரம் தலைமைக்குக் கால்கை
பிடிப்பதுபோல் போக்குகாட்டும் போலிகள் எதிர்த்து வருகின்றனர்.
விடுதலையை முழுமனத்துடன் வேண்டி
ஆதரிப்போர் ஒருபுறம் இருக்க, ஒரு சாரார் காலங்கடந்த முடிவு என்றும் அரசியல்
காரண முடிவு என்றும் குறிப்பிட்டு விடுதலையை வரவேற்கின்றனர். விடுதலையை
எதிர்ப்போர் அரசியல் காரண முடிவு என்றும் உச்ச நீதி மன்றம் இவர்களைக்
குற்றமற்றவர்கள் எனச் சொல்லவில்லை என்றும் மரணத்தண்டனையைத்தான் வாணாள்
தண்டனையாக மாற்றியுள்ளது என்றும் இராசீவுடன் இறந்தவர்களும் தமிழர்கள்தாம்,
அவர்களின் குடும்பத்திற்கு நீதி வேண்டாமா என்றும் சட்டத்தைக் கையில்
எடுத்துக் கொண்டு சட்டமுறைப்படியான ஒன்றைச் சட்டத்திற்கு மாறானதுபோல் திரித்து எதிர்க்கின்றனர்.
அரசுகள் எடுக்கும் முடிவுகள்
பெரும்பாலும் அரசியல் சார்ந்தே இருக்கின்றன. தனித் தகுதி கேட்டுப் பீகார்
பல ஆண்டுகளாகப் போராடியும் வழங்காமல் இருப்பதும் அரசியல் காரணம்தான்! ஒரே
நாளில் இராயல சீமாவிற்குத் தனித் தகுதி வழங்கியதும் அரசியல் காரணம்தான்!
அவதூறு வழக்குகள் போடப்படுவதும் கைவிடப்படுவதும் அரசியல் காரணங்களால்தாம்!
எரிவளி உருளை எண்ணிக்கையைக் குறைத்துவிட்டுக் கூட்டுவதும் அரசியல்
காரணங்களால்தாம்! இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால்,
அரசியல் காரணங்களுக்காகத் தவறான முடிவு எடுக்காமல் மனித நேய நல் முடிவை
எடுக்கும் பொழுது பாராட்டத்தானே வேண்டும். அல்லது பாராட்ட மனமில்லாவிட்டால்
அமைதி காக்கலாம் அல்லவா?
எதிர்ப்போருள் மேதை ஒருவர், தமிழரான உச்சநீதிமன்றத்தின் மாண்பமை நீதிபதி சதாசிவம் இவ்வழக்கை
உசாவி இருக்கக்கூடாது என்றும் பொன்மொழி உதிர்த்திருக்கின்றார். இவ்வாறு
கூறுவது மாண்பமை நீதிபதிக்கு இழுக்கு சேர்ப்பதாகும். சாதி, சமய, இன
அடிப்படையில் அல்லாமல் சட்டமுறைகளுக்கேற்ப நீதி வழங்குவதை இவ்வாறு
இழிவாகக் கூறுவதும் நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். உச்சநீதிமன்ற தலைமை
நீதிபதி ப. சதாசிவம் மனித நேயத் தீர்ப்பு வழங்கும் சிலருள் ஒருவர். கடந்த
சனவரியில் 9 வழக்குகளில் 15 பேரின் தூக்குத் தண்டனையை நீக்கித்
தீர்ப்பளித்துள்ளார். ஒரிசாவில் பாதிரியார் கிரகம் இசுடெயின்சு, அவரது
இரண்டு குழந்தைகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கிலும் மரண தண்டனையை
நீக்கித் தீர்ப்பு வழங்கியுள்ளார். காவல்துறையினரால் மக்கள் பாதிக்கப்பட்ட
பொழுது அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டிப் பல தீர்ப்புகளை வழங்கி உள்ளார்.
அதுபோல்தான் இப்பொழுதும் இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டித்
தீர்ப்புவழங்கி உள்ளார். நடுநிலையும் அற உணர்வும் கொண்ட அவரது தீர்ப்பைத் திரித்துக் கூறுபவர்கள் அறவுணர்வு அற்றவரே ஆவர்.
இராசீவு கொலைவழக்கு தொடர்பில் காங். அமைத்த – இயெயின் ஆணையம்(Jain Commission)எனப்படும் நீதிபதி மிலாப்பு சந்து அவர்களின் பல உண்மைகள் வெளிவரவில்லை என்ற அறிக்கை அடிப்படையிலான – புலனாய்வுக்குழுவின் அறிக்கை வராச் சூழலில் யாரையும் குற்றவாளிகள் எனக்கூறித் தண்டனை வழங்குவதும் தவறாகும்.
‘சட்டத்தின்முன் யாவரும் சமம்’ என்பது குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு மட்டுமல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும். பறிக்கப்பட்டது உயிர் என்ற அளவில் பார்க்கவேண்டுமே தவிர யாருடைய உயிர் எனப் பாகுபாடு காட்டுவது சமநிலைச் சட்டமாகாது.
இந்திராகாந்தி கொலைக்குப்பின்னர்
பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கும்
துன்புறுத்தப்பட்டதற்கும் காரணமான வகையில் இராசீவும் குற்றவாளியே!
போபால் நச்சு வளியால் பல்லாயிரக்கணக்கான
மக்கள் இறந்ததற்கும் பன்னூறாயிரக்கணக்கான மக்களின் உடல் ஊனங்களுக்கும்
காரணமான அமெரிக்க வாரன் ஆண்டர்சனைப் பாதுகாப்பாக அமெரிக்காவிற்கு அனுப்பி
வைத்த வகையிலும் இராசீவும் குற்றவாளியே!
இந்திய அமைதிப்படை என்ற பெயரில்
அனுப்பப்பட்டவர்கள் மூலம் ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்கும் கற்புச்
சூறையாடலுக்கும் துன்புறுத்தல்களுக்கும் காரணமானவர் என்ற வகையில் இராசீவும்
குற்றவாளியே!
இப்படிப் பலவகையில் இராசீவு குற்றவாளி என்றாலும் அவர் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை.
எனவே, அவரைக் கொன்றவர்கள் தண்டனைக்குரியவர்களே! ஆனால், மனித வெடிகுண்டான
தணுவும் முதன்மைக் குற்ற உடந்தையர்களும் இறந்த பின்னர், அவர்களை
ஏவிவிட்டவர்களைப் பிடிக்காமல், அப்பாவிகளை வதைப்பதையும் கொல்லத்
துடிப்பதையும்தான் மனித நேயர்கள் தவறு என்கின்றனர்.
தமிழ்ஈழ அரசின் படையான
விடுதலைப்புலிகளின் படையணியை ‘‘வெறும் நூறு பொடியன்கள்’’ எனத் தவறாக
மதிப்பிட்டதை உணர்ந்தும் மண்ணின் மைந்தர்கள் என்பதைப் புரியாமல் கொடுமை
இழைத்தற்கு வருந்தியும், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உதவுவதாகத் தெரிவித்த இராசீவைக் கொலை செய்ய வேண்டிய தேவை விடுதலைப்புலிகளுக்கு எழவில்லை.
இந்திய அரசு தொடர்ந்து எதிர்வினை
ஆற்றிவந்தாலும் இதன் நட்பை நாடியவர்களாகவே இருந்தமையாலும் இந்த முடிவிற்கு
அவர்கள் செல்ல வேண்டிய தேவையும் எழவில்லை. அப்படியே அவர் சொல்லாமல்
இருந்திருந்தாலும் இந்திய உறவை நாடும் அவர்கள் அயலக அரசியலில் மூக்கை
நுழைத்திருக்க மாட்டார்கள். தம் நாட்டிலும் சிங்கள மக்களுக்கு எதிராக
இல்லாமல், வன்முறைப்படைக்கு எதிராகத்தான் போராடி வந்தவர்கள். எனவே,
அவர்களைக் குற்றவாளியாக ஆராயாமல் அறிவிப்பதும் முறையல்ல.
யாசர் அராபத்து முன்னரே எச்சரித்தபடி,
பன்னாட்டுச் சதியால் இந்தியக் கூலிகள் ஈழத்தமிழர்கள் சிலரைப் பயன்படுத்தித்
திட்டமிட்டுச் செய்த படுகொலையை உரியவர்களை விட்டுவிட்டு அப்பாவிகளைக்
கொல்வதுதான் பெருங்குற்றமாகிறது. இதன் அடிப்படையில் தமிழ் ஈழம் மீதான மறைமுகப் படையெடுப்பும் தொடர்ச்சியான இனப்படு கொலையும் தண்டனைக்குரியதே!
நளினி-முருகன் தங்கள் பிள்ளைக்கு ‘அரித்ரா’ என அயல்மொழிப் பெயரைச்
சூட்டியதில் இருந்தே தமிழுணர்வு மிக்க விடுதலைப்புலி அமைப்பைச்
சேர்ந்தவர்களாக இவர்கள் இருக்கமாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
உண்மைக் குற்றவாளிகளை மறைக்க அதிகாரத்தில் இருந்தவர்களும் இருப்பவர்களும் பெரும்பாடு படுவதும் அனைவரும் அறிந்த உண்மையாக உள்ளது.
இராசீவு கொலை வழக்கு தொடர்பான கோப்பைத் தொலைத்த அதிகாரிக்குப் பதவி உயர்வு அளித்ததில் இருந்தே உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக அக்கோப்பு தொலைக்கப் பட்டது எனப் புரிந்து கொள்ளலாம்.
இராசீவு கொலையுண்ட அன்று அன்றைய நிகழ்வுகளை ஒளிப்படம் பிடித்தது அரசு தொலைக்காட்சி மட்டுமே. அதன் காணொளிப்
பேழையை வாங்கிய அதிகாரி நாராயணன் அதை உரிய புலனாய்வு அமைப்பிடமும்
ஒப்படைக்கவில்லை தொலைக்காட்சியிடமும் திரும்ப அளிக்கவில்லை. அப்படியானால் அக்காணொளி மூலம் உண்மைக் குற்றவாளிகள் அறியப்படுவர்; அப்பாவிகள் சிக்கமாட்டார்கள் என்ற எண்ணம்தானே காரணம்?
“சிவராசன், ‘தன்னிடம் வெடிகுண்டு தாங்கிய இடுப்புப் பட்டையைச் சந்திராசாமி பூசை செய்து தந்தார்’
எனக் கூறியதற்கு ‘அவர் பெயரைக் கூறாதே’ எனப் புலனாய்வு அதிகாரி
கார்த்திகேயன் அடித்தார்’’ என உடனிருந்த பெங்களூரைச் சேர்ந்த பாசுகர்
செவ்வி அளித்துத் தனியார் தொலைக்காட்சியிலும் செய்தியிதழ்களிலும்
வெளிவந்துள்ளது. இருப்பினும் அதன் மீது எந்நடவடிக்கையும் எடுக்காமைக்குக்
காரணமும் உண்மைக் குற்றவாளிகள் தப்ப வேண்டும் என்பதுதானே!
சோனியாவையும் பெரிய பதவிகளில்
இருப்பவர்களையும் இராசீவு கொலையுடன் தொடர்பு படுத்தி நூலிலும் பேச்சிலும்
சுப்பிரமணியசாமி தெரிவித்தும் மேல் நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம்
உண்மைக் குற்றவாளிகள் தப்ப வேண்டும் என்பதுதானே!
இதே சு.சா. இராசீவு கொல்லப்படுவதற்கு
முன்னரே அது குறித்து அறிந்தவராகப் பேசியதைக் காங். கட்சியைச் சேர்ந்த
திருச்சி வேலுச்சாமி காணொளி வாயிலாகவும் நூல் வாயிலாகவும் இதழ்கள்
வாயிலாகவும் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் பன்முறை தெரிவித்தும் சு.சா.மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அல்லது எதன் அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார் எனத்திருச்சி வேலுச்சாமியிடம் உசாவல் மேற்கொள்ளாதது ஏன்?
உண்மைக்குற்றவாளிகள் யார் என அறிந்தும் அப்பாவித் தமிழர்களைக் கொல்லத் துடிக்கும் சு.சா., இவர்கள் விடுதலையானால் உண்மை வெளிவந்து தான் தண்டனை பெற வேண்டும் என அஞ்சுவதுதானே காரணம்?
வழக்கின் முதன்மைச் சான்றுரைஞரான
வேதராண்யம் சண்முகம் புலனாய்வுப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருந்து
தப்பியதாகக் கூறும் பொழுது அவர் ஏன் தூக்கிட்டுச் சாக வேண்டும்? அவர்
தற்கொலை செய்ததுபோல் நாடகமாடும் கட்டாயத்தை உருவாக்கும் வண்ணம் அவரது
வாக்குமூலத்தில் என்ன தெரிவித்தார் என்பது குறித்து மேல் நடவடிக்கை
இல்லாமல் போனதன் காரணம் என்ன?
இவை எல்லாமே இப்போது சிறைக் கொட்டடியில் துன்புறுவோர் ஒன்றுமறியா அப்பாவிகள் என்பதை மெய்ப்பிக்கின்றன.
அடுத்து, இப்போதைய விடுதலையைச் சட்ட மீறலாகக் கருதுவோர் அறியச் சிலவற்றைப் பார்ப்போம்.
முன்கூட்டி விடுதலை (Pre-mature
release) என்பது சட்டப்படியான ஒன்றுதான். எவ்வாறு மரணத்தண்டனை பல
நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ளதோ அதே போல், வாணாள் தண்டனை என்பதும் வாழ்நாள்
முழுமைக்கும் என்பதும் பல நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் வாணாள் தண்டனை என்பது சிறை வாழ்க்கையும் வெளிவாழ்க்கையும் இணைந்த ஒன்றாக உள்ளது.
எனவே, வாணாள் தண்டனைக் காலத்திலேயே சிறைவாசி வீட்டிற்கு
அனுப்பப்படுகிறார். நன்னடத்தையுடன் நடந்துகொள்வதைப் பொறுத்து மீண்டும்
இவ்வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்படுகிறது. இந்தியாவில் கணக்கீட்டின்
அடிப்படையில் வாணாள் தண்டனை என்பது 20 ஆண்டுகள் எனக் குறிக்கப் பெற்று
தண்டனைக் குறைப்பு நீங்கலான 14 ஆண்டுகளில் விடுதலை செய்யக் கருதி, 10
ஆண்டுகளிலேயே முடிவு எடுப்பதற்கான அறிவுரைக் கழகம் கூடி முடிவெடுக்கும்
முறை இருந்து வந்தது. எனினும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு ஒன்றின்
அடிப்படையில், வாணாள் தண்டனை என்பது வாணாளின் எஞ்சியக் காலத்திற்கு எனக்
கருதப்பட வேண்டும் என்றும் எனினும் தண்டனைக் குறைப்பாக இருப்பின் குறைந்தது
14 ஆண்டுகள் தண்டனையைக் கழித்திருக்க வேண்டும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 14 ஆண்டுகள் தண்டனையைக் கழித்த எவரையும் தண்டனைக் குறைப்பின் மூலம் அரசு விடுதலை செய்வது என்பது சட்டப்படியான ஒன்றே.
இவ்வாறு இதற்கு முன்னரும் பலர் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் யாரும் மீண்டும் குற்றம் இழைத்ததாக
வரலாறு இல்லை.
இந்தப் பொதுவான வாய்ப்பே 23 ஆண்டுகளுக்கு
மேலாகச் சிறையில் கடுந்துயரத்துடன் கழித்த எழுவருக்கும் வழங்கப்படுகிறது.
எனவே, இதனை எதிர்ப்போர் சட்டத்தை எதிர்ப்போராவர்.
புலனாய்வுக் கண்காணிப்பாளர் தியாகராசனும்
உச்ச மன்ற நீதிபதி தாமசும் தாங்கள் செய்த தவறுகளுக்காக வருந்தி இவர்கள்
குற்றமற்றவர்கள் எனக் கூறிய பின்பும் இவர்களை விடுதலை செய்யாமல்
உண்மைக் குற்றவாளிகளை மறைக்கும் நோக்கத்தில் தண்டிக்க வேண்டும் எனக்
கூக்குரலிடுவோர் உண்மையிலேயே இராசீவிற்கு இரண்டகம் செய்கின்றவர்கள்
ஆவார்கள். உண்மையான இராசீவின் அன்பர்கள் விரைவான மீள் உசாவலுக்காகப்
போராடி உண்மைக் குற்றவாளிகள் தண்டனை பெற வழிவகை காணவேண்டுமேயன்றி
அப்பாவிகளைக் கொல்லத் துடிக்கக்கூடாது.
இவர்களைக் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பு
வழங்கவில்லையே எனக் கூக்குரலிடுவதும் அறியாமையால்தான்! தீர்ப்பிற்குள்ளான
வழக்கு குற்றத்தன்மை பற்றியதல்ல. தூக்குத்தண்டனையை நிறைவேற்றக்கூடாது
என்பது பற்றியதுதான். எனவே, அதன் அடிப்படையில் ஆய்ந்து தூக்குத்தண்டனையை
நீக்கித் தீர்ப்பு அளித்துள்ளனர். அத்துடன் இல்லாமல் தமிழக அரசு தனக்குரிய
அதிகார அடிப்படையில் விடுதலை செய்வதற்குரிய நெறிப்படுத்தலையும்
அளித்துள்ளனர். இதன் அடிப்படையில்தான் தமிழகஅரசு எழுவரையும் விடுதலை
செய்வதாக அறிவித்துள்ளது. எனவே எழுவர் விடுதலை என்பது முழுக்க
முழுக்க உச்சநீதிமன்ற நெறியுரைக்கேற்ப சட்டப்படியால் அமைந்ததுதான். எனவே,
விடுதலையை எதிர்த்துத் தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் செய்வோர் தண்டிக்கப்பட
வேண்டியவர்களே தவிர, குற்றமற்ற எழுவரல்லர்.
முன்விடுதலைக்கான அறிவுரைக்கழகத்தைக்
கூட்டி அதன் பரிந்துரை அடிப்படையில் விடுதலை அறிவிக்கப்படவில்லை என்பதால்
உரிய முறை பின்பற்றப்படவில்லை எனக் கூறுவதும் தவறாகும். அறிவுரைக்கழகத்திற்கும் மேலான அமைச்சரவை முடிவெடுத்தபின்பு எவ்வறிவுரையும் தேவையில்லை.
எனவே, இதனை முறையற்றது என்று சொல்வது வீண் வேலை. அப்படியே கூட்ட வேண்டும்
என்றாலும் அரசு விடுதலை அளிக்கிறது என்றால் அதற்கேற்பத்தான் பரிந்துரையும்
அமையும். அந்தச்சடங்கினால் காலந்தாழ்த்த வேண்டாம் என அறிவித்ததைத் தவறான
முறையிலான அறிவிப்பாகக் கூறக்கூடாது.
எனவே, காரணம் யாதாயினும் மனித நேயர்கள்
விரும்பிய வண்ணம் நிறைவேறியுள்ள விடுதலையை வரவேற்க வேண்டும். அடுத்து,
உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து இவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள்
என்பதை மெய்ப்பிக்க வேண்டும்! உரிய இழப்பீட்டை அரசு நல்கச் செய்ய
வேண்டும்! உண்மைக் குற்றவாளிகளின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பெற்று அவற்றில் இருந்தும் இவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பெற வேண்டும்.
அரசின் சட்டமுறையான முடிவாகிய விடுதலைக்கு எதிராக யார் வன்முறையில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எழுவரும் விரைவில் விடுதலைக் காற்றை நுகரட்டும்!
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (திருக்குறள் 579)
பொறுத்தாற்றும் பண்பே தலை. (திருக்குறள் 579)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக