இணையப் பயன்பாடு நமக்கு உதவியாகவும்
உள்ளது; தக்கார் பயன்படுத்தும் பொழுது பெருநன்மை விளைவிக்கின்றது. அதுவே
அல்லார் கையில் அகப்படும்பொழுது நல்லவற்றைத் தொலைக்கும் தீய உருவாய்
விளங்குகின்றது. இணையம் இதற்குப் பொறுப்பேற்க இயலாது. ஆனால், இதனைப்
பயன்படுத்துநர் தங்களுக்குள் கட்டுப்பாடு வைத்துக் கொண்டு மனம் போன
போக்கில் எழுதுவதை நிறுத்த வேண்டும். “கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு”
என்பதை உணராமல் முற்றும் அறிந்த முனைவராகக் கருதுவது ஏனோ? ஏதேனும்
சிறிதளவு அறிந்திருந்தாலும் முற்றும் முழுமையாக அறிந்தது போலும், தாம்
அறிந்ததே அல்லது அறிந்ததாய் எண்ணி்க் கொண்டதே – அது மிகப் பெரும் தவறாக
இருந்தாலும் – சரியென எண்ணிக் கொண்டும் பதிவதையும் பகிர்வதையும் நிறுத்த
வேண்டும்.
“தீபத்தை வைத்துக்கொண்டு திருக்குறளும் படிக்கலாம்!
தீயைக்கொண்டு மூட ரெல்லாம் ஊரைக் கூட எரிக்கலாம்!”
என்பது பழந்திரைப்பாடல். பயன்பாடு என்பது
பயன்படுத்துவோரைப் பொறுத்தததே! இணையமும் அப்படித்தான்! இணையத்தின் மூலம்
ஒரு புறம் தமிழ் வளர்ந்து கொண்டுள்ளது. மறுபுறமோ இணையத்தைத் தமிழின்
அழிவுக்குச் செலுத்துகின்றனர் சிலர்.
தமிழ் நெடுங்கணக்கின் செம்மையை –
வரிவடிவங்களின் உயர்வை உணராமலும் உணர்ந்தும் தீங்கிழைக்கும் நோக்கிலும்,
‘ணகர, நகர, னகர’, ‘லகர,ழகர,ளகர’, ‘ரகர, றகர’, வேறுபாடுகள் தேவை இல்லை எனத்
தவறாக எழுதுவோர் ஒருபுறம் உள்ளனர். வல்லினம் மிகுதல், மிகாமை முதலான
புணர்ச்சி விதிகள் தேவையில்லை எனத் தப்பும் தவறுமாக எழுதுநர் மறுபுறம்
திகழ்கின்றனர். கடந்த நூற்றாண்டில், வையாபுரிக் கூட்டத்தார் தமிழ்ச்
சொற்கள் குறித்தும் தமிழ் இலக்கியக்காலங்கள் குறித்தும் மறைத்தும்
திரித்தும் எழுதினர்; அவற்றிற்குத் தமிழ்ப்போராளி பேராசிரியர்
இலக்குவனார், தமிழ் ஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலானோர் தக்க
ஆராய்ச்சியுரைகளை அன்றே எழுதி அவற்றைப் புறந்தள்ளி யுள்ளனர். ஆனால்,
இவற்றை எல்லாம் அறியும் ஆர்வமின்றித் தங்களைச் சொல்லாய்வுப் புலவர்களாகக்
கருதிக் கொண்டு தமிழ்ச் சொற்கள் பிற மொழிச் சொற்களில் இருந்து வந்தன
போன்றும் காலத்தால் தமிழ் இலக்கியங்கள் பிந்தையன என்பன போன்றும் குப்பை
கொட்டுவோர் பெருகி வருகின்றனர். கலந்தாடல் குழுக்கள் மூலமும் முகநூல்
முதலான தளங்கள் மூலமும் தவறான கருத்துகளைப் பரப்புவோருக்குப் பஞ்சமில்லை.
தமிழன்பர்கள் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான்! அறிவை வெளிப்படுத்துங்கள்! அறியாமையை எடுத்துரைக்காதீர்கள்!
உங்களுக்குச் சொல்லாய்வு, கால ஆய்வு,
இலக்கிய ஆய்வு முதலானவற்றில் ஈடுபாடு இருப்பின் அவை குறித்த முன்னோர்
கருத்துகளை முதலில் அறிவதில் கருத்து செலுத்துங்கள்! அவற்றின் அடுத்த
நிலைக்கு மக்களை அழைத்துச் செல்லுங்கள். அவற்றில் குறை இருப்பதாக
எண்ணினால், தக்க ஏதுக்களுடன் விளக்கி உரையுங்கள். ஆம், எதையும் நன்கறிந்து எழுதுங்கள்! இணையம் வழித் தமிழ் அறிய வரும் புதிய தலைமுறையினரைத் திசை திருப்பாதீர்கள்!
“சொல்லுக சொல்லின் பயனுடைய! சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்”
என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறளைக் கட்டளையாக ஏற்று எழுதுங்கள்!
ஆன்றோர் கருத்துகளை அறியாமலும் அறியும் ஆர்வமின்றியும் மனம் போன போக்கில் எழுதித் தமிழுக்குத் தீங்கிழைக்காதீர்! அதுவே தமிழுக்கு நீங்கள் செய்யும் அரும்பணியாகும்! அறப்பணியாகும்! ஆதலின்,
என்றும் எழுதுக நன்கறிந்த பின்பே!
பங்குனி 9, தி.ஆ.2045 / மார்ச்சு 23,2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக