திங்கள், 24 ஜூன், 2013

மருத்துவ படிப்புக்கு உதவுமாறு ஏழை மாணவன் வேண்டுகோள்

மருத்துவ படிப்புக்கு உதவுமாறு ஏழை மாணவன் வேண்டுகோள்


ஊத்தங்கரை: அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க, உதவுமாறு ஏழை மாணவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஊத்தங்கரை அடுத்த, சோளாக்காப்பட்டியை சேர்ந்தவர் சுமதி, 40, சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் ராமகிருஷ்ணன், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஏழ்மையான சூழ்நிலையிலும் சுமதி தன் மகன் சுரேஷ், 17, மகள் சுஷ்மிதா, 15 ஆகியோரை அதியமான் மெட்ரிக் பள்ளியில் படிக்க வைத்தார்.

இவர்களுடைய ஏழ்மை நிலையை பார்த்து, அதியமான் மெட்ரிக் பள்ளி தாளாளர் திருமால் முருகன், சுரேஷ், சுஷ்மிதாவை பள்ளியில் இலவசமாக சேர்த்து கொண்டார். சுரேஷ், எஸ்.எஸ்.எல்.ஸி.,யில், 487 மதிப்பெண் பெற்று பள்ளியில், மூன்றாவது மாணவராக தேர்ச்சி பெற்று, ப்ளஸ் 2 தேர்வில்,1,173 மதிப்பெண் பெற்றுள்ளார். இவருக்கு, கட் ஆப் மதிப்பெண், 198.25 பெற்று, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.
சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வரும் சுமதி, தன் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், ஏழ்மை நிலை காரணமாக, மகனை படிக்க வைக்க முடியாமல், வேதனை அடைந்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் கூறியது:என் தந்தை இறந்து விட்டதால், என்னையும், என் தங்கையையும் தாய் மிகவும் கஷ்டபட்டு படிக்க வைத்தார். ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் பள்ளி நிர்வாகம், எங்களுக்கு இலவசமாக கல்வி அளித்தது. தற்போது, எனக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.ஆனால், ஏழ்மை காரணமாக மருத்துவ கல்லூரியில் சேர முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில், தாராள மனப்பான்மை கொண்ட நல்ல உள்ளம் கொண்டவர்கள் பலர் உள்ளனர். அவர்கள், என் மருத்துவ படிப்புக்கு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். மாணவன் சுரேசுக்கு உதவி செய்ய விரும்புவர்கள், 96297 01481 என்ற மொபைல் ஃபோன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக